தென்னக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. ஒரு காலத்தில் இந்தியாவிலேயே பெரிய நகரமாகக் கருதப்பட்ட செஞ்சியானது, இன்று, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரகமாவே அறியப்படுகிறது.செஞ்சியிலுள்ள, செஞ்சி கோட்டை என்றாலே நமது நினைவுக்கு வருவது ராஜா தேசிங்கு தான். ஆனால் இதைப் போலவே இன்னும் பல சரித்திரம் படைத்த நிகழ்வுகள் அங்கே நடந்தேறியிருக்கின்றன. பல கோட்டைகளை வென்ற சத்ரபதி சிவாஜியால் "இது எவரும் உட்புகமுடியாத கோட்டை" என்றும், ஆங்கிலேயர்களால் "கிழக்கின் ட்ரோய்" என்றும் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையான செஞ்சி கோட்டை, பல வரலாற்று நிகழ்வுகளையும் தன்னுள் கொண்டு, மௌன சாட்சியாய், பல்வேறு படையெடுப்புகளையும் கண்டு கம்பீராமாய் காட்சி தருகிறது.
விஜயநகர நாயக்கர்கள், இஸ்லாமிய சுல்தான்கள், மராத்தியர்கள், வலிமை வாய்ந்த முகலாயர்கள், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் என்று பல சாம்ராஜ்ஜியங்களின் பல்வேறு படையெடுப்புகளையும் போர்களையும் பார்த்து காட்சி தந்துகொண்டிருக்கும் செஞ்சிகோட்டையானது, ஐரோப்பியர்களையே பயமுறச் செய்திருக்கிறது என்றால் அது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. புகழ்மிக்க செஞ்சியின் மகத்துவத்தை நினைவு கூறுவதே இந்நூலின் நோக்கமாகும்.