அந்த அழகாக மணம்

கற்பனை
5 out of 5 (5 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

ஆ....ம்..ம்...இந்த அழகான மணம் அந்த வீட்டிலிருந்து தான் வருகிறது. ஒருமுறை மூச்சை இழுத்து அந்த மணத்தை ரசித்தேன். மணத்திலேயே அந்த உணவின் சுவை எனக்கு புரிந்தது. எப்படியாவது அந்த உணவை இன்றே புசித்து விட வேண்டும் என்று என் மனம் ஏங்கியது... காலையிலிருந்தே பசிக்கு ஒரு கவளம் கூட ஆகாரம் கிடைக்காததால் வயிறு கபகபவென எரிந்தது. பசியின் வேதனை ஒரு பக்கம் உணவின் மணம் ஒரு பக்கமாக அந்த உணவைத் தேடி என் கால்கள் அடியெடுத்து வைத்தது.....

ஆசை தான் துன்பத்திற்கு காரணம் என்று சொல்வார்கள். அந்த ஆசை மனதுக்குள் புகுந்துவிட்டால் எதிர் விளைவை பற்றி சிந்திக்காது தான் அதனால் தான் மனிதன் பல நேரங்களில் தன் ஒற்றை ஆசைக்காக வாழ்க்கையையே பணயம் வைக்கிறான்.. அதுபோலத்தான் தான் இன்று நானும் நாவில் ஊறிய எச்சிலை விழுங்க முடியாமலும் அடங்கா பசியாலும் வானுயர உயர்ந்து நின்ற அந்தக் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி உள்ளே குதித்தேன். குதித்த நேரம் கொஞ்சம் நிலைதடுமாறித்தான் போனேன்....

காரணம் கேட்டின் பக்கத்து சுவரில் சாய்ந்து தடியை கையில் ஊன்றியவாறு ஒரு காவலன் தூங்கி கொண்டிருந்தான். நல்ல வேளை அவன் கண் மூடியிருந்தது. பார்த்திருந்தால் அவன் கையிலிருக்கும் தடியால் என்னை உண்டு இல்லை என செய்திருப்பான். என் நல்ல நேரம் அப்படி எதுவும் நடக்கவில்லை. மெதுவாக அடியெடுத்து வைத்து 10 அடி நீங்கி கம்பீரமாய் நின்ற அந்தப் பங்களா நோக்கி நடந்தேன். சும்மா சொல்லக்கூடாது பங்களா அது மிகவும் அழகாக இருந்தது. கட்டிடத் தொழிலாளர்களின் வேலைப்பாடுகள் அட்டகாசமாகவும்.... பெயிண்டர்களின் கை வண்ணத்தால் கலரிலும் படு சூப்பராக இருந்தது. நிச்சயம் கோடிகளில் சம்பாதிப்பவராக தான் இருக்க வேண்டும்... அவ்வளவு அழகாக... நேர்த்தியாக..... நளினமாக வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த வீடு.....

மாட்டிக்கொண்டால் தன் உயிருக்கு நிச்சயமாக உத்திரவாதம் இல்லை என்பது தெரிந்தது. மேலே போகலாமா?... அல்லது திரும்பிப் போய் விடுவோமா?... என என் மனம் ஒரு முறை யோசிப்பதற்குள் அந்த மணம் மறுபடியும் பக்கத்திலிருந்து வர திரும்பி போக வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு மணம் வந்த திசையை நோக்கி என் கால்கள் விரைய ஆரம்பித்தது......

முன் கதவு பூட்டப்பட்டிருந்தது. எப்படி உள்ளே செல்வது கொஞ்சம் நகர்ந்து போய் உள்ளே செல்ல ஏதாவது வழி இருக்கிறதா?... என நோட்டமிட்டேன். வீட்டை பத்து முறை சுற்றி வந்து விட்டேன். துளி அளவு கூட உள்ளே செல்ல வாய்ப்போ, வழியோ எனக்கு கிடைக்கவில்லை. பத்து நிமிடம் பலப்பல யோசனையோடு உள்ளே செல்ல வழியை ஆராய ஆரம்பித்தேன். கடவுள் என் ஆசையில் முழுமையாக மண்ணை அள்ளிப் போட்டு விட்டார். இன்று அந்த உணவு எனக்கு நிச்சயமாக இல்லை.... ஆசைப்படாதே.... அது உனக்கு கிடைக்காது கிடைக்கவே செய்யாது. என மனதை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்....

மனசு ஒருவாறு சமாதானம் ஆனாலும் வயிறு என் சமாதானத்தை கேட்க மறுத்தது. என்ன செய்ய என்று தெரியாமல் சுவரில் சாய்ந்து அமர்ந்தேன்.....

இக்கட்டான நேரத்தில் இறைவனை துணை என்பது அன்று எனக்கு தெளிவாக தெரிந்தது. என்னோட பத்து நிமிட காத்திருப்புக்கு பின் எனக்கு அவ்வழியை இறைவன் காட்டினான்....

ஏதோ ஒரு காரணத்திற்க்காக அவ்வீட்டுத் தலைவன் என நினைக்கிறேன் முன் பக்க கதவை திறந்து முன் கேட்டில் சாய்ந்து தூங்கி கொண்டிருந்த காவலனிடம் போய் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.....

நான் அந்நேரத்தை சரியாகப் பயன்படுத்தி திறந்திருந்த கதவு வழியாக மெதுவாக உள்ளே சென்றேன். இரவு வெளிச்சத்தில் ஹால் நிசப்தமாக இருந்தது. யாராவது இருக்கக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையோடு நிதானமாக சுவற்றை ஒட்டியவாறு மெதுவாக நடந்தேன். யாராவது வந்துவிட்டால் ஒளிந்து கொள்ள ஏதாவது வசதி இருக்கிறதா என நோட்டமிட்டேன். நான் எதிர்பார்த்தது போல பெரிய சோபா ஒன்று ஹாலில் நடுநாயகமாக வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த பின்தான் பயத்தில் வெலவெலத்து போயிருந்த என் உடல் சமாதானம் அடைந்தது. என்றாலும் நான் பயப்படும்படி அங்கு ஒருவருமில்லை வெளியே சென்றவரும் உள்ளே வரவில்லை.

இதுதான் சரி.... என எண்ணியவாறு ஹாலை தாண்டி உள்ளே அடியெடுத்து வைத்தேன் அந்த அறையில் ஒரு குட்டிப் பாப்பாவும் அவனோட அம்மாவும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். சிறு சலசலப்பு கூட ஏற்படாதவாறு மெதுவாக வெளியேறி ஹாலுக்கும் ரூமுக்கும் இடைப்பட்ட இடைவெளி வழியாக உள்ளே போனேன்....

ஆம்....அங்கே தான் நான் தேடி வந்த உணவு இருந்தாக வேண்டும். மணம் பக்கத்தில் வருவது போல் இருந்தது. அந்த இருட்டில் தட்டுத் தடுமாறி அந்த அறைக்குள் நுழைந்த எனக்கு.....ஏமாற்றம் காத்திருந்தது. கதவில் பெரிய பூட்டு ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. பூட்டை கண்டதும் என் கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது. வெளியிலிருந்து எவ்வளவு எதிர்பார்ப்போடு ஆசையோடு வந்தேன். எத்தனை கஷ்டங்களை துன்பங்களையும் தாண்டி வந்தேன். கடைசியில் இப்படி ஆகி விட்டதே....

சோர்ந்துபோய் அந்த அறைச் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து விட்டேன். அதேநேரம் உள் அறையில் பேச்சு குரல் கேட்டது....

“அம்மாவுக்கு சாப்பாடு கொடுத்தியா?...”

“ம்....ம்...”

“ சாப்பிட்டாங்களா?..”

“சாப்பிடாம… அவங்க கேட்ட மட்டன் பிரியாணி வாங்கி கொடுத்தேன். அதுவும் அவங்க சொன்ன பாயோட ஹோட்டல்ல இருந்துலியா வாங்கிட்டு வரச் சொல்லிக் கொடுத்தேன்...”

“அப்படியா….”

“ம்....கொஞ்சம் கூட மீதி வைக்காம முழுசா சாப்பிட்டாங்க.... இப்ப ஒரு பத்து நிமிஷம் தான் இருக்கும்....”

“சரி…. மறக்காம வெளியில பூட்டிட்டாலியா?...

“ம்...பூட்டு போட்டு லாக் பண்ணிட்டேன் போன வாரம் பூட்டாம விட்டு ராத்திரி 11 மணிக்கு எழும்பி வெளியில் போயிட்டாங்கலியா.... அதுனால மறக்காம பூட்டிட்டேன்.....”

அவர்களின் பேச்சைக் கேட்ட எனக்கு எல்லாம் புரிந்தது. கடைசியில் எனக்கு அந்த உணவு கிடைக்கவே கிடைக்காது என்பதும் புரிந்தது. பசியில் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. நேரமாக ஆக பசியின் மயக்கம் வருவது போல இருந்தது. சுவரோரம் அமர்ந்தவாறு கூர்ந்து கவனித்தேன். என் நாவில் ருசிக்கு உணர்வு கிடைக்காவிட்டாலும் என் பசி மயக்கத்திற்காவது ஏதாவது கிடைக்கிறதா.....என நோட்டமிட்டேன்...

இரவு நேரம் என்பதாலும் இது ஒரு தனி அறை என்பதாலும் எந்த ஒரு சிறு வெளிச்சமுமின்றி இருள் முழுமையாக அறையை ஆக்கிரமித்திருந்ததால் எதுவும் கண்ணில் புலப்படவில்லை. என் நிலையை நொந்தவாறு தூரத்தில் என் பார்வையைச் செலுத்தினேன்....

ஆ...என்ன அது.... ஆண்டவன் வழியைக் காட்டி விட்டான்... என்னவாக இருக்கும். ரோஸ் கலரில் தெரிகிறது. எதுவும் உணவாக தான் இருக்கும் பசித்தவன் வயிற்றுக்கு பழைய சாதம்ணா என்ன.... பாயாசம்ணா என்ன.... எது கிடைத்தாலும் ருசித்து விட வேண்டியதுதான்....

எண்ணியவாறு வேகமாக எழும்பி அந்த உணவின் அருகில் சென்றேன். ஒருபுறம் வெளிச்சம் போலவும் மறுபுறம் இருட்டாகவும் தெரிந்தது. என்ன உணவு என என்னால் தீர்மானிக்க முடியவில்லை.... எதுவாக இருந்தாலும் இன்றைக்கு எனக்கான உணவு இதுதான் போலும்.

எண்ணியவாறு கொஞ்சம் கூட தாமதிக்காமல் என் கூரிய பற்களால் ஒருமுறை கடித்தேன்.

உணவு உயிர் பெற்றது போல சட்டென ஆடியது....

என் இதயம் ஒருமுறை துடிப்பை நிறுத்திக் கொண்டது.... உயிருள்ள எதையோ.... உணவு என கடித்து விட்டது புரிந்தது. சட்டென தொப்பை போட்ட ஒரு பெரிய உருவம் என் முன் உருபெற்று நின்றது. அதனால் அந்த இருட்டில் என்னை பார்க்க முடியவில்லை என்பது தெளிவாக எனக்கு தெரிந்தது....

நான் அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஓடி சென்று அந்த அறையில் போடப்பட்டிருந்த அலமாரியின் பின் போய் பதுங்கி நின்றேன்...

ஒரு வயதான தாத்தா தன் கையை உதறியவாறு,....

“ஏதோ.... என் விரலை கடித்துவிட்டது....”

முனகியவாறு எழுந்து நின்று தான் படுத்திருந்த துணியை உதறி எடுத்தது... லைட்டை ஆன் செய்து சுற்றி பார்த்தது.

நான் அவர் கண்ணில் படாதவாறு என் உடம்பை முழுசா பிரோவின் பின்புறம் மறைத்துக் கொண்டேன்...

முதல்முறையாக ஒருவேளை உணவுக்காக தன் உயிரை மாய்க்க துணிந்தேனே...... என மனதுக்குள் எண்ணியவாறு தன் கையால் ஓங்கி அடித்துக் கொண்டது.... அந்த எலி......

முற்றும்.......

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...