மகாலிங்கமும் மண் வளமும்

gjai412
உண்மைக் கதைகள்
4 out of 5 (2 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

விவசாயி மகாலிங்கம் தன் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதால் மிகவும் கவலையில் ஆழ்ந்தார்.

குழந்தைகள் அனுபவித்த வலியும், பட்ட கஷ்டமும் ஒருபுறம் என்றால், அவர்களின் மருத்துவ செலவை ஈடுகட்ட முடியாமல் இவர் திண்டாடியது மறுபுறம்.

ஒரு சிறு காய்கறி விவசாயியாக இருந்த இவருக்கு தினசரி செலவுகளுக்கு பணம் சம்பாதிப்பதே பெரும் விஷயமாக இருந்தது.

இவரது குழந்தைகள் நோய்வயபட்டதற்கான காரணம் அவரது கைகள்தான். அவர் வயலில் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்துவிட்டு. வீட்டிற்கு வந்ததும் கைகளை நன்கு கழுவிவிட்டுதான் குழந்தைகளுடன் விளையாடுவார், அவர்களுக்கு உணவு ஊட்டி விடுவார், அதன் விளைவை உணர்ந்த மகாலிங்கம். இரசாயன உரத்தால் ஆரோக்கியத்திற்கு கேடு மண் வளத்திற்கும் கேடு என்பது உணர்ந்து. மண் வளத்தை பாதுகாக்க என்னதான் தீர்வு என்று தேடிக் கொண்டிருந்தார். அப்போது புரிந்தது இயற்கை விவசாயம் ஒன்றே தீர்வு என்று.

பிறகு மகாலிங்கம் ஊர் ஊராகச் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை ஒன்று எழுதுகிறார். மண் காப்போம் என்ற தலைப்பில். இந்தியாவில் பெரும்பாலும் இரசாயனம் சார்ந்த விவசாயம்தான் கடைபிடிக்கப்படுகிறது. செயற்கை உரம் மிக அதிகளவில் மண்ணில் கலக்கப்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளும்கூட அவற்றின் தரம், பக்கவிளைவுகள் பற்றிய கவனமின்றி பயன்படுத்தப்படுகின்றன. விவசாயிகள் பெரும்பாலும் ஏழைகளாக இருப்பதால், செலவு குறைக்கும் முனைப்பில் அவர்களே செடிகளுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கின்றனர். அதற்கான பாதுகாப்பு ஆடைகளோ, கையுறைகளோ அவர்கள் கவனத்தில் வர வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது.

இந்தளவிற்கு வயலை "பதப்படுத்தினால்" விவசாயத்தில் அமோக இலாபம் பெறலாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால், உண்மை நிலவரமோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது. செயற்கை உரங்களின் விலையும், பூச்சிக்கொல்லிகளின் விலையும் மிக அதிகமாக உள்ளது. முதல் சில வருடங்களில் மகசூல் அதிகமாக இருந்தாலும், நாள் ஆக ஆக மண்ணின் வளம் குன்றிவிடும். மண்ணின் வளம் குறையும்போது மகசூலும் பெருமளவில் குறைந்துவிடும். இந்நிலையில் எப்படியாவது மகசூலை அதிகரிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் செயல்படும் விவசாயி இன்னும் அதிகமாக செயற்கை உரத்தை பயன்படுத்துகிறார். இது செலவை இன்னும் அதிகரிக்கிறது.

அதுமட்டுமல்ல, மெதுவாக பூச்சிகளின் தடுப்பாற்றல் சக்தியும் அதிகரித்து, நாளடைவில் அவை அப்பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு கட்டுப்படாமல் போகிறது. இதனால் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளின் அளவை ஒன்று அதிகரிக்க வேண்டும் அல்லது இன்னும் தீவிரமான வேறு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை வருகிறது. இப்படியே ஒவ்வொரு வருடமும் ஒருபுறம் மகசூல் குறைந்துகொண்டே போகிறது, மறுபுறம் செலவு அதிகரித்துக்கொண்டே போகிறது. வெகுவிரைவில் விவசாயியிடம் வறண்ட பூமியும், கடனும், இருண்ட எதிர்காலமும்தான் மீதமிருக்கும். இந்த சூழலில் 1995ல் இருந்து இதுவரை 3,00,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியமல்ல!

நம் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயம் நடந்திருக்கிறது. ஆனால் பெரும் அளவில் விவசாயி தற்கொலை என்பதை சமீப காலத்தில்தான் நாம் பார்த்து வருகிறோம். அப்படியென்றால் "விவசாயம் ஒரு தொழில்துறையாக மாறுவதற்கு" முன்பெல்லாம் விவசாயிகள் எப்படி பிழைத்தார்கள்? அதற்கான விடை மாட்டு சாணத்தில் உள்ளது.

இக்கால மொழியில் சொல்வதென்றால், "இயற்கை வேளாண்மை" "ஆர்கானிக் கல்டிவேஷன்" என்று பகட்டாக சொல்லலாம் அல்லது மிக சாதாரணமாக நாட்டுரக மாட்டு சாணம் உபயோகிப்பது எனலாம். விலங்குகளின் கழிவுகள் - எருது சாணம், மாட்டு சாணம், ஆட்டு சாணம் ஆகியவற்றை சரியான வகையில் பயன்படுத்தினால், அது மண்ணை அதிகளவில் வளமாக்கும். அதேபோல் மரத்தின் இலை, கிளை ஆகியனவும் மண்வளத்தை அதிகரிக்கும். விலங்கு மற்றும் மரசெடிகளின் கழிவுகள் மண்ணிற்கு கரிம (carbon) சத்தும், தேவையான மற்ற பிறவற்றையும் அளிப்பதால் மண்வளம் அதிகரிப்பதோடு, மண்ணின் தண்ணீர் ஈர்க்கும் சக்தியையும் அதிகரிக்கிறது.

ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தின் மண்-அறிவியல் துறையில் பணியாற்றும் பிரசித்தி பெற்ற பேராசிரியரும், ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைந்த நிர்வாகக் கழக (UNU-FLORES) ஆலோசனைக் குழுவின் தலைவருமான திரு. ரதன் லால் அவர்கள், இந்திய விவசாயம் இன்று சந்தித்து வரும் பிரச்சனைக்கான காரணம் பற்றி விவரிக்கிறார். "மண்ணில் இருக்கும் சத்துக்கள் பயிராக வெளியெடுக்கப் படுகிறது, ஆனால் அதற்கு ஈடாக மீண்டும் மண்ணிற்கு எதுவும் கிடைப்பதில்லை. அதனால் மண்ணின் வளம் குறைகிறது" என்கிறார். விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்தபின், அவற்றின் வேர்களையும், தண்டையும் மீண்டும் மண்ணில் போடாமல் அதை எரித்துவிடும் பழக்கத்தை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு சொல்கிறார். "மண்ணின் மேற்பரப்பில் 100 கிராம் மண்ணில் 2% கரிமச்சத்து இருந்தால்தான் அது வளமான பூமியாக இருக்கும். ஆனால் நாட்டின் உணவுக் களஞ்சியம், பயிர் கருவூலம் என்று கருதப்படும் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மண்ணின் மேற்பரப்பில் இருக்கும் கரிமசத்து வெறும் 0.05% தான்" என்கிறார் திரு.லால் அவர்கள்.

இயற்கை விவசாய முறையில் தான் பின்பற்றிய யுக்தி பற்றி மகாலிங்கம் விவரிக்கிறார். "நான் வெங்காயம் வளர்ப்பேன். பின் நடுவில் முள்ளங்கி, பீட்ரூட், மிளகாய் போன்றவை பயிரிடுவேன். சில சமயத்தில் தொடர்-பயிர் முறையும் பின்பற்றுவேன். இதனால் அறுவடைக்கு முள்ளங்கி தயாராக இருக்கும் நேரத்தில், தக்காளி அப்போதுதான் கனியத் துவங்கும். இதனால் வருடம் முழுவதும் எனக்கு வருவாய் இருந்துகொண்டே இருக்கும். இந்தத் தொடர்-பயிர் முறையைப் பின்பற்றும்போது, பூச்சி அரிப்பால் பயிர்கள் நாசமாவதும், பயிர்கள் நோய்வாய்ப்படுவதும்கூட குறைகிறது." இது மட்டுமல்ல, இயற்கை விவசாய பொருட்கள் விற்கும் கடைகளில் இவரது காய்களுக்கு நல்ல விலையும் கிடைக்கிறது.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி மகாலிங்கத்தின் நிறைவிற்கு முக்கிய காரணம், அவரது குழந்தைகளின் ஆரோக்கியம். "என் தோட்டத்தில் விளைந்த இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்ட காய்களை உண்டபோது, என் பிள்ளைகள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டனர். இப்போது இயற்கை விவசாய முறையில் விளைந்த காய்களை உண்ணும்போது என் குழந்தைகள் மிக ஆரோக்கியமாக இருக்கிறார்கள். முன்போல் அவர்கள் நோய்வயப்படுவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த 9 மாதங்களில் எங்களுக்கு மருத்துவ செலவு வரவேயில்லை.

இதேபோன்ற அதிசயங்கள் மற்ற தோட்டங்களிலும் கூட நிகழ்கிறது. ஒரு சிறு வெங்காயத் தோட்டம் வைத்திருக்கும் தேவி சொல்கிறார், "இருண்ட என் வாழ்வில் பாலேக்கர் ஐயாவின் ரூபத்தில் புது நம்பிக்கை பிறந்தது. இரசாயனங்கள் பயன்படுத்தி விவசாயம் செய்தபோது, 70-நாள் பயிரான வெங்காயத்தை விளைவிக்க நான் 13 முறை இரசாயன உரம் பயன்படுத்த நேரும். இதனால் செலவு அதிகமானது. பலசமயங்களில் வெங்காயம் விற்று வரும் பணமும், அதற்கு நான் செய்த முதலீடும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும். கையில் பணமே இருக்காது. இன்னும் சொல்லப்போனால், மற்ற வழிகளில் எனக்குக் கிடைக்கும் பணத்தையும் அவ்வப்போது நான் இதில் முதலீடு செய்ய நேரும்" இந்த சூழ்நிலையில் "விவசாயத்தை கைவிடுவதே சிறந்ததோ?" என்று தேவி அடிக்கடி தன்னைத்தானே கேட்டுக்கொண்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

ஆனால், இயற்கை விவசாயம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. பொன்முத்துவைப் போல் இவரது வருமானமும் அதிகரித்திருக்கிறது. ஆனால் அது தவிர்த்து இவர் வேறு சில பலன்களையும் பகிர்கிறார். "இரசாயனம் பயன்படுத்தி பயிர் விளைவித்தபோது 15 நாட்களிலேயே வெங்காயம் அழுக ஆரம்பித்துவிடும். ஆனால், இயற்கை முறைகளைக் கையாளும்போது அது 40 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கிறது. தண்ணீர் தேவையும் செலவும் கூட குறைந்திருக்கிறது. செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற தாமதமானாலும் முன்போல் பயிர்கள் கருகுவதில்லை" என்கிறார் தேவி. தேவி வாழும் இடத்தில் அவரது தோட்டம் ஆர்வத்தையும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. "வாகன ஓட்டுநராக வேலை செய்யும் என் கணவர் தன் ஓய்வு நேரத்தில் என் தோட்டத்தில் வேலை செய்ய இப்போது மிக ஆர்வமாக இருக்கிறார். நாங்கள் பின்பற்றும் விவசாய முறைகளைப் பார்வையிட பலர் எங்கள் தோட்டத்திற்கு வருகிறார்கள்" என்கிறார்.

இயற்கை விவசாய முறைகள் மண்வளத்தை அதிகரிப்பதோடு, பயிர்களை அழிக்கும் பூச்சிகள் மற்றும் பிற தொல்லைகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் வழிசெய்கின்றன. இயற்கை விவசாயத்தில் சமீபத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஜகதீஷ் சொல்கிறார், "இரசாயன விவசாயத்தில் செடிகளின் மெல்லிய இலைகளையும் மொட்டுக்களையும் தின்று அழிக்கும் மில்லிமீட்டர் அளவிலான இலைப்பேன்களின் தொல்லை மிக அதிகமாக இருக்கும். பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாவிட்டால் இந்த இலைப்பேன்களிடம் இருந்து செடியைக் காப்பாற்ற முடியாது என்ற நம்பிக்கை நிலவுகிறது." ஆனால், இயற்கை வேளாண்மை யுக்தியில் பரிந்துரைக்கப்படும் வேப்பவிதை சாரைப் பயன்படுத்தி தன் வெங்காயச் செடிகளை இலைப்பேன்களிடம் இருந்து ஜகதீஷ் வெற்றிகரமாக மீட்டெடுத்திருக்கிறார்.

பயிர்களை அழிக்கும் தொல்லைகளை இயற்கை விவசாயம் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான இன்னொரு காரணத்தையும் தேவி விளக்குகிறார். இயற்கை விவசாயம் வயல்முழுவதும் ஒரே பயிரைப் பயிரிடாமல், ஒரே வயலில் பலவிதமான பயிர்களை ஒன்றாக பயிரிட பரிந்துரைக்கிறது. "என் வயலில் ராகி மற்றும் சிறுதானியங்களை வெங்காய செடிகளுடன் சேர்த்து வளர்க்கிறேன். இப்போது தானியங்களை உண்ண வரும் பறவைகள், பயிர்களை அளிக்கும் பல தொல்லைகளையும் சேர்த்தே உண்கின்றன" தொடர்-பயிர் விவசாய முறைகளும் கூட இதற்கு உதவுகின்றன.

ஆனால், இது எல்லாவற்றிற்கும் மேலாக, "விவசாயத்தை நாம் தொடர்ந்து செய்யலாம். அது இலாபகரமாகவும் இருக்கும்" என்ற நம்பிக்கையை இந்த இயற்கை விவசாயம் விவசாயிகளிடம் ஏற்படுத்தி உள்ளது. "இயற்கை விவசாய முறையில் விளைந்த காய்களை இப்போது என் குழந்தைகளுக்கும் மக்களுக்கும் என்னால் கொடுக்க முடிகிறது" என்று மகிழ்கிறார் மகாலிங்கம். விவசாயம் பற்றிய தன் கண்ணோட்டத்தையே இயற்கை விவசாயம் முற்றிலும் மாற்றிவிட்டதாக சொல்கிறார் தேவி. "விவசாயம் செய்தே நான் நன்றாக சம்பாதித்து சௌகரியமாக வாழமுடியும் என்ற நம்பிக்கையை இயற்கை வேளாண்மை எனக்குக் கொடுத்திருக்கிறது".


இயற்கை விவசாயம் செய்வோம், மண் வளம் காப்போம்.

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...