யாரோ ஒருவன்

உண்மைக் கதைகள்
5 out of 5 (7 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

பாதி இரவு கடந்துவிட்டது. தூக்கம் வராத இதை போன்ற இரவுகள் மிக நீளமானவை. இரவில் தூங்குவதற்காக படுக்கையில் படுத்திருக்கும்பொழுது, ஏதோ ஒரு சிறு நினைவால் பற்ற வைக்கப்படும் நெருப்பு அந்த இரவு முழுவதையும் எரித்துவிடுகிறது. இன்றைய இரவு அப்படி அமைந்ததற்கு காரணம் அந்த பிச்சைக்காரன்.

ஒடுங்கிய தேகம், தேங்காய் நார்போல் பின்னி பிணைந்த செம்பட்டை தலைமுடி, ஏறிய நெற்றி, கோழி முட்டை கண்கள், நீளமான மூக்கு, ஒடுங்கிய கன்னங்களை நிரப்பிய தாடி, உதடுகளை மறைத்த மீசை, நீண்ட கழுத்து, உள்வாங்கிய வயிறு என கிட்டத்தட்ட கேலிச்சித்திரங்களில் வரும் ஓவியத்தை போல்தான் இருப்பான்.

அவன் உடைகளின் உண்மையான நிறங்களை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அவை அலுக்கேறி கருப்பாக மாறியிருக்கும். சட்டையில் பட்டன்கள் எதுவும் இல்லாததால் நெஞ்சும் , வயிறும் வெளியில் தெரித்தப்படியே இருக்கும். வலது கால் பேண்ட் முட்டி வரையும், இடது கால் பேண்ட் முழங்கால் வரையும் நீண்டிருக்கும் .

உள்ளங்கைகள் இரண்டையும் பேண்ட் பாக்கெட்டிற்குள் வைத்து, பேன்டை தூக்கி பிடித்திருப்பான். நிற்கையில், நடக்கையில் என எப்பொழுதுமே கைகள் அங்கேதான் இருக்கும். சாப்பிடும் பொழுது கூட வலதுகையை மட்டும்தான் வெளியே எடுப்பான். ஒருவேளை இரண்டு கைகளையும் எடுத்துவிட்டால் பேண்ட் நழுவு விழுந்துவிடும் என நினைக்கிறன்.

மனநலம் பாதிக்கப்பட்டு , தன்னிலை மறந்து , பசி என்ற உணர்வினால் தூண்டப்பட்டு கையேந்துபவர்கள் மட்டுமே பிச்சைக்கு (தானம்பெற) தகுதியான பிச்சைக்காரர்கள் என்பது என் கருத்து. சோம்பேறித்தனம், உடல் ஊனம் , வருமை , இயலாமை என காரணம் சொல்பவர்கள் யாரும் இதற்குள் அடங்கமாட்டார்கள் .

நான் சிறுவனாக இருக்கும் பொழுது எங்கள் ஊரில் இதை போன்று இரண்டு , மூன்று பிச்சைக்காரர்களை பார்த்திருக்கின்றேன் .என்னை போன்ற பெரும்பாலான சிறுவர்களுக்கு "பூச்சாண்டி" என்றே அறிமுகப்படுத்தப் பட்டிருந்தார்கள் .ஒவ்வொரு பிச்சைக்காரனுக்கு பின்னாலும் சுவாரசியமான பல கதைகள் புனையப்பட்டிருக்கும் .

"ஒரு காலத்துல பெரிய பணக்காரணாம் , சொந்தக்காரங்க ஏமாற்றி சொத்தை எழுதிவாங்கிட்டதால இப்படி ஆயிட்டானாம் ..."

"ஒரு காலத்துல பெரிய படிப்பாளியாம் , நிறைய படிச்சு படிச்சு மூளை குழம்பிடுச்சாம் ..."

இந்த பிச்சைக்காரனுக்கு அப்படிப்பட்ட கதைகள் எதுவும் இல்லை . நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து அவனை பார்த்து வருகிறேன் . கம்பெனி அமைந்திருக்கும் தெருவின், கடைசியில் இருக்கும் முட்டுச்சந்தில் அவனை எப்பொழுதும் பார்க்கலாம் . பணம் கொடுத்தால் வாங்க மாட்டான். சாப்பிட எது கொடுத்தாலும் வாங்கி கொள்வான் .

அவன் இதுவரை யாரிடமும் கைநீட்டியோ , பிச்சை கேட்டோ நான் பார்த்ததில்லை . சாப்பிட எதுவும் கிடைக்காவிட்டால் அங்கு இருக்கும் டீக்கடை வாசலின் ஓரத்தில் அமைதியாய் நின்று கொள்வான் . "டீ சாப்பிடுறியா ?", "வடை வேணுமா ?" என யாராவது கேட்டாள் தலையை மட்டும் ஆட்டுவான்.

புதிதாய் வந்திருக்கும் சூப்பர்வைசருக்கும் எனக்கும் ஒத்துப்போகவில்லை. என்னை பழிவாங்குவதற்காகவே கடந்த மூன்று நாட்காளாக இரவு பதினொரு மணிக்கு மேல் அனுப்பிக்கொண்டு இருக்கிறார் . இன்றும் அப்படித்தான் , கம்பெனியில் இருந்து வெளியே வரும் பொழுது வேலையின் மீதும் வாழ்க்கையின் மீதும் வெறுப்பாய் இருந்தது. வழக்கமாக சாப்பிடும் கடையும் அடைத்திருந்ததால் கோபம் உச்சிக்கு ஏறி விட்டது .

தெரு முனையில் இருந்த தள்ளுவண்டி கடையில் லைட் எரிந்துகொண்டு இருந்தது . ஒருவன் சாப்பிட்டு முடித்து கை கழுவிக்கொண்டு இருந்தான் . இதுவரை அந்த கடையில் சாப்பிட்டது இல்லை . வீட்டிற்கு போகும் வழியில் இருக்கும் கடைகள் திறந்திருப்பது சந்தகேம் என்பதால் அங்கேய சாப்பிட்டுவிடலாமென்று பைக்கை நிருத்தினேன். ஐந்து இட்லிகளை தட்டில் வாங்கி கொண்டு ஓரமாக சாப்பிட ஒதுங்கிய பொழுதுதான் அவனை பார்த்தேன் .

கடையின் லைட் வெளிச்சம் முடியும் இடத்தில் நின்று கொண்டிருந்தான். நான் அவனை பார்த்ததும், இடதுகையால் வயிற்றில் அடித்துக்கொண்டு வலதுகை விரல்களை சாப்பிடுவதுபோல் குவித்து வாயருகில் வைத்து சைகை செய்தான். சாப்பிட எதாவது கேட்கிறான் என்று தெரிந்தது ஆனால் எனக்கு இருந்த கோபத்தில், முகத்தை சுளித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து கடைக்கு மறுபுறமாக சென்றுவிட்டேன் .

அதுவரை அமைதியாக இருந்த கடைக்காரர், நான் செய்தததை பார்த்ததும் வண்டியின் கூரை மேல் இருந்த பெரிய கம்பை எடுத்து தரையில் ஓங்கி அடித்து கொண்டே அவனை பார்த்து கத்த ஆரம்பித்தார் "நாயே , போடா அந்த பக்கம் .இங்கவந்து இப்படி நிற்கக்கூடாதுனு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் . இன்னொரு தடவை வந்த காலை உடைச்சுருவேன் ". கடைக்காரர் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, அவன் அந்த இடத்தை விட்டு விலகி முட்டுசந்தை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருந்தான் .

தூங்குவதற்காக படுக்கைக்கு வரும் வரை மனதில் எந்த உருத்தலும் இல்லை. ஆனால் படுத்ததிலிருந்து, அவன் கைகளால் வயிற்றில் அடித்துக்கொண்ட காட்சி நூறு முறையாவது மனதில் தோன்றி மறைந்திருக்கும் . பர்ஸ் நிறைய பணமிருந்தும் மனநிலை சரியில்லாத ஒருவனின் பசிக்கு சாப்பாடு வாங்கி கொடுக்காத குற்ற உணர்ச்சி. பகல் நேரங்களில் செய்த செயல்கள் அனைத்திற்கும் இரவு நேரங்களில் மனசாட்சிக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் போல. பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு மனசாட்சி கொடுக்கும் தண்டனைதான் தூக்கமின்மையோ? .

நாளை அவனுக்கு கண்டிப்பாக பிரியாணி வாங்கி கொடுத்து விட வேண்டும். பிரியாணி.....அவனை சந்தோசப்படுத்தி பார்பதற்காகவா? குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பிப்பதற்காகவா?. எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும் வாங்கி கொடுப்பது எனமுடிவு செய்து விட்டேன். இதோ, செல்போனில் அலாரம் அடிக்க தொடங்கிவிட்டது . படுக்கையில் இருந்து எழவேண்டிய நேரம்.

இரவில் கேள்விகள் கேட்டு துளைக்கும் மனசாட்சி, பகலில் உறங்கி விடும் போல. காலையிலிருந்தே தூங்கி தூங்கி விழுந்து கொண்டிருக்கிறேன். அந்த சூப்பர்வைசர், நான் தூங்குவதை பார்த்துவிட்டால் கண்டிப்பாக என்னை வேலையை விட்டு தூக்கி விடுவான். ஒருவழியாக உணவு இடைவேளை வரை கடத்திவிட்டேன். அவனுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு தான் சாப்பிட வேண்டும் என்று தீர்மானித்து பிரியாணி வாங்கிக்கொண்டு அந்த முட்டுசந்திற்கு சென்றேன்.அங்கு அவன் இல்லை.

அந்த சந்தில் வழக்கமாக இஸ்த்திரி போடும் அயன் வண்டிக்காரரிடம் பார்சலை கொடுத்து "அண்ணா , அந்த பிச்சைக்காரன் வந்தால் இந்த பார்சலை கொஞ்சம் கொடுத்துடுங்க " என்றேன்.

" சார், இனிமேல் அவன் இங்க வரமாட்டான்".

"ஏன்...என்னாச்சு?"

"இந்த தெருவுல ஒரு நொண்டி நாய் சுத்திகிட்டு இருக்கும்ல, அதை நேற்று நைட்டு கொன்னுட்டான். குப்பையெல்லாம் சேர்த்து வைத்து, தீ மூட்டி நாயை அதில் போட்டு இருக்கான். வாடை தாங்க முடியாம தூங்கிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் சேர்ந்து அவனை அடுச்சு துரத்தி விட்டாங்க"

"அப்படியா ! "

"ஆமாம் சார். பைத்தியம் முத்திருச்சுனு நினைக்குறேன்"

அதற்குமேல் பேச வார்த்தை வரவில்லை . மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். மனது கனமாய் இருந்தது. மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் எனக்கு நன்றாக தெரியும், பசி தாங்க முடியாமல் நாயை சாப்பிட முயற்சி செய்திருக்கிறான். கண்ணீர் கன்னங்களின் வழியாக ஓடி சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது. கடைசியாக எப்போது அழுதேன் என்று நினைவில்லை. யாரும் பார்க்கும் முன் கண்ணீரை துடைத்து கொண்டேன்.

மதியத்திற்கு மேல் கம்பெனிக்கு போகவில்லை. அந்த பகுதி முழுவதும் அங்குலம் அங்குலமாக அலசிவிட்டேன் . பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் ,ரயில்வே ஸ்டேஷன், பெரிய ஆஸ்பத்திரி என ஊரின் முக்கியமான இடங்களில் அவனை தேடி நான்கு மணி நேரமாக பைக்கில் சுற்றிக் கொண்டு இருக்கிறேன். வேலைக்கு போகாமல், ஒரு பைத்தியக்காரனை தேடி அலையும் என்னை பார்த்து உங்களில் சிலர் மனதிற்குள் சிரித்துக்கொண்டு இருக்கலாம். எனக்கு கவலை இல்லை, என் மனநிலையை உங்களால் புரிந்து கொள்ள முடியாது.

மணி பத்தை கடந்து விட்டது.மதியமும் சாப்பிடாதாதால் வயிறு பசித்தது. சாப்பிட மனமில்லை. மறுபடியும் ஒரு முறை அவன் இருந்த சந்தை போய் பார்த்தேன், காலியாக தான் இருந்தது. அவனை பற்றிய என் கணிப்பு சரியாக இருந்தால் கண்டிப்பாக இங்கே திரும்ப வரமாட்டான். சில சமயங்களில் நாம் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்யும் வாய்ப்பை கடவுள் தருவதே இல்லை.

இதோ தூங்குவதற்காக படுக்கைக்கு செல்கின்றேன். இன்றைய இரவும் மிக நீளமாக இருக்க போகிறது. மனசாட்சியை எப்படி சமாளிக்கப்போகின்றேன் என்று தெரியவில்லை. சரி, அதை எல்லாம் நான் அனுபவித்து கொள்கிறேன். நீங்கள் எனக்காக ஒரு உதவி செய்யுங்கள் . நான் சொன்ன அடையாளங்களோடு ,உங்கள் தெருக்களில் அந்த பிச்சைக்காரனை பார்த்தால் என் சார்பாக ஒரு சாப்பாடு வாங்கி கொடுத்து விடுங்கள்....

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...