JUNE 10th - JULY 10th
“அந்த சம்பவம் நடந்து நாளையோடு இருபது வருஷமாகிறது. அது மட்டும் நடக்கவில்லையென்றால்.... ஹூம்.... நானும் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்திருப்பேன். இப்படி ஒரு மகனை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டிருக்க வேண்டியதில்லை.”
பாத்திமாவுக்கு பழைய நினைவுகள் மனதில் நிழலாடியது. கணவன் ரகீம் உறவுக்கார பையன், அவளுக்கு 18 வயது முடிந்தவுடன் திருமணம். ரகீமிற்கு தொழில் பெருமாள் கோவில் வாசலில் பூஜை சாமான்கள் விற்கும் கடை. பூ, பழம், கற்பூரம், சாம்பிராணி, ஊதுபத்தி, தேங்காய் ஆகியவற்றுடன் கனிவான பேச்சும் நயமான விலையும், பல கடைகள் இருந்தாலும் தேனீக்கள் போல ரகீமின் கடையில் எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டிருக்கும். கணவனுக்கு ஒத்தாசையாக பாத்திமாவும் கடையை பார்த்துக் கொள்வாள்.
கல்யாணமாகி சரியாக ஒரு வருடத்தில் பாத்திமாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ரகீமிற்கு மகிழ்ச்சி கொள்ளவில்லை.
“பையன் பொறந்த பொறவு என்னால கடைக்கி வர முடியல. ஒங்களுக்கு தான் வேலை அதிகம்.”
“அதெல்லாம் ஒன்னுமில்ல பாத்திமா. இன்னியும் ரண்டு வருஷமானாலும் பரவாயில்ல, கையோட ஒரு பொண்ணயும் பெத்து குடுத்துடு.”
“ஏன், பொண்ணுன்னா அவ்வளவு இஷ்டமா.”
“எத்தனை தான் பசங்க இருந்தாலும் ஒரு பொண்ணு பொறந்தா தான் வாழ்க்கை முழுமையடையும்”.
சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென சூறாவளியாய் வந்தது மதக் கலவரம். சிறு பிரச்சனையில் ஆரம்பித்தது, அண்ணன் தம்பியாக பழகிக்கொண்டிருந்த இரு மதத்தவரையும் இரு பிரிவுகளாக்கியது. சில சுயநலவாதிகள் இரு பிரிவினரையும் தூண்டிவிட்டு மதக்கலவரமாக மாற்றி குளிர் காய்ந்தனர். அதில் பெரியசாமியும் ஒருவர், ரகீமை தொழில்முறை போட்டியாக கருதி வந்த அவர், ரகீமை கோவிலுக்கு அருகிலேயே வெட்டிக் கொன்றார்.
போலீஸ் உதவியுடன் கலவரம் அடக்கப்பட்டது. இரு தரப்பிலும் சில உயிர்களும் பல உடமைகளும் சிதைக்கப்பட்டன. கலவரத்திற்கு மூல காரணம் தொழில் போட்டி என்று கண்டறியப்பட்டதால் கோவிலுக்கருகில் யாரும் கடை வைக்க அனுமதிக்கப்படவில்லை. மத நல்லிணக்கத்தை கடைபிடித்தல் போன்ற தீர்மானங்கள் ஊர் மக்களால் மாவட்ட ஆட்சியர் முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆயிரம் இருந்தும் என்ன, பாத்திமாவின் இழப்பு ஈடு செய்ய முடியா இழப்பே அல்லவா? “பெண் குழந்தை வேண்டுமென்றீர்களே, இப்படி எங்களையே அனாதையாக்கிவிட்டீர்களே” என்று தலையில் அடித்துக் கொண்டு பாத்திமா அழுதது கல் நெஞ்சையும் கரைத்தது. ஊர் மக்கள் செய்வதறியாது நின்றனர்.
அன்வரை தனியாக நின்று வளர்க்கும் சுமை பாத்திமாவை அழுத்தியது. கலவரத்திற்குப் பின் கடையும் இல்லாததால், தனக்கு தெரிந்த ஒரே தொழிலான பூஜை சாமான் வியாபாரத்தை வீட்டிலிருந்தே செய்தாள் பாத்திமா. சொற்ப வருமானத்தில் மகனையும் படிக்க வைத்தாள். உள்ளூரில் இருந்தால் பழைய பகை அன்வரை கவர்ந்துவிடும் என்பதால் அவனை வெளியூரில் விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்தாள்.
அன்வரும் அம்மாவின் கஷ்டங்களை உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்தினான். கல்லூரி படிப்பைக் கூட ஊக்கத் தொகையை கொண்டே முடித்தான். இருபத்தியோரு வருடங்கள் உருண்டோடியிருந்தன. படிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருந்தான். இத்தனை வருடத்தில் பாத்திமா தோல் சுருங்கி முடி நரைத்து தனது பொலிவை இழந்திருந்தாள்.
அன்வர் வந்ததிலிருந்து அவள் முகம் மலரத்தொடங்கியது. அவனுக்கு பிடித்ததை பார்த்து பார்த்து செய்தாள். மகனுக்கு பிடிக்கும் என்பதால் அவளது கையாலேயே பிரியாணி சமைத்திருந்தால். மகன் சாப்பிடுவதை திருப்தியாக கண்டு ஆனந்தித்தாள்.
“நீயும் சாப்பிடு அம்மி”
“நீ சாப்பிட்டு முடிப்பா, நான் மெதுவா சாப்பிட்டுக்குறேன்”
“எனக்கு தெரியாதா, பிரியாணி மொத்தத்தையும் எனக்கே போட்டுட்டு, நீ ரசம் சாப்பிடப் போறே”
பாத்திமா மெலிதாக சிரித்தாள். “ஒனக்கு தெரியாதா அன்வர், ரத்தத்துல கொழுப்பு இருக்கதால கவுச்சி சாப்பிடக்கூடாதுன்னு டாக்டரு சொல்லிருக்காருல்ல.”
“ஒரு நாள் சாப்பிட்றதால ஒன்னுமாயிடாது அம்மீ”
“இல்லப்பா, டாக்டரு சொன்னத கேக்காட்டி பின்னால நமக்கு தான் கஷ்டம்.”
சாப்பிட்டு விட்டு பூஜை சாமான்கள் கொண்ட பையை எடுத்துக்கொண்டு பாத்திமா கிளம்பினாள்.
“பை ரொம்ப வெயிட்டா இருக்குமாட்ருக்கு.”
“பாத்திமா சிரித்துக்கொண்டே, “அடப்போடா! இருபது வருஷமா இத வெச்சித்தான் ஒன்ன வளத்துருக்கேன். இன்னும் எத்தன நாள், மிஞ்சிப் போனா ஆறு மாசம். பொறவு நீ வேலைக்கி போயிட்டா பைய ஓரமா வெச்சிட்டு ஒன் கையால சாப்பிட்டுக்கிறேன்.”
அம்மா செல்வதை பார்த்துக் கொண்டு நின்றான் அன்வர். சிறிது நேரத்தில் இமாமும் பாபரும் வந்தனர்.
இமாம், “பிளான் ரெடி, நாளைக்கி நீ தயாரா?"
“நான் எப்பவோ தயார், இதுக்காகத் தான் காத்துகிட்டிருந்தேன் இத்தன வருஷமா. ஆனா எனக்கப்பொறம் அம்மீய நெனச்சாதான் கவலையா இருக்கு.”
பாபர், “நாங்க விட்றுவோமா. நம்ம சமூகத்துக்காக எவ்வளவு பெரிய தியாகத்தை பன்ற. உங்க வாப்பா சாவுக்கு பழி வாங்க வேணாமா?”
அன்வர், "அதுக்குத் தான் மனித வெடிகுண்டா மாறியிருக்கேன். எங்கப்பாவுக்கு நடந்த அநியாயத்தை கேக்கும் போதெல்லாம் ரத்தம் கொதிக்கும். நாளைக்கி அவரோட இருபதாவது நினைவு நாள். எந்த கோவில் முன்னாடி எங்கப்பாவ வெட்டி கொன்னாங்களோ, அந்த கோவிலும், அத தடுக்காத ஊரும் நாளைக்கி வெடிச்சி சிதறட்டும்.”
"அந்த கலவரத்தில நம்ம சமூகத்தாளுங்களோட கடைங்க எல்லாத்தையும் சூறையாடிட்டாங்க, அதுல சிக்குனவங்க இன்னும் எத்தனையோ பேர் மேல வர முடியாம திண்டாடிகிட்டிருக்காங்க.” - இது இமாம்.
“இதுக்கெல்லாம் பழி வாங்கணும். ஆனா நாங்க உள்ளூர் ஆளுங்க, சந்தேகம் வராம செய்ய முடியாது. நீ வெளியூருலயே இருந்தவன், யாருக்கும் அடையாளம் தெரியாது. நீ இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். உன்னோட தியாகம் தான் நம்ம சமூகத்த பாத்து ஒத்தொருத்தனும் பயப்படச் செய்யப் போகுது.” – பாபர்
அன்வர், "அப்ப சரி, காலையில அஞ்சு மணிக்கெல்லாம் வந்திடுங்க."
அவர்கள் கொடுத்த பெல்ட்டை வாங்கி சோதித்து அவர்களிடமே திருப்பிக் கொடுத்தான்.
அவர்கள் இருவரும் புறப்பட்டனர்.
படுக்கையில் விழுந்தபடி அன்வர் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
“அம்மீ, நான் இல்லாட்டியும் நீ கஷ்டப்பட மாட்டே, நம்ம மக்கள் ஒன்னய நல்லா பாத்துக்குவாங்க. நம்மள இந்த நெலமைக்கி ஆளாக்கின ஒவ்வொருத்தனும் நாளைக்கி பதில் சொல்லியே ஆகணும். வாப்பாவோட ரத்தத்துக்கு பழி வாங்கியே தீருவேன்”
அந்த எண்ண ஓட்டத்திலேயே உறங்கிப் போயிருந்தான்.
மாலையில் வியாபாரத்தை முடித்துவிட்டு பாத்திமா வீடு திரும்புகையில் அன்வருக்கு பிடிக்குமென்று இனிப்பும் காராசேவும் வாங்கி வந்தாள். சற்றே ஓய்வெடுத்தபின் இரவு தோசை சுட்டு அன்வருக்கு தன் கையாலேயே ஊட்டிவிட்டாள் பாத்திமா.
“வாப்பாவோட ஆசை, ஒரு பொண்ணு பெத்துக்கணும்ன்னு. அப்ப தான் வாழ்க்கை முழுமையடையும்ன்னு சொல்லுவாரு. ஹூம்....எங்களுக்கு தான் அந்த குடுப்பினை இல்ல. ஒனக்கு ஒரு நிக்காஹ் செஞ்சி வெச்சிட்டா, நீ ஒரு பொண்ண பெத்து குடுக்க மாட்டியா, என்ன?”
நாளை இறப்பவனைப் பார்த்து இதை சொல்லும் அம்மாவை பார்க்கும் போது பாவமாக இருந்தது.
இரவு படுக்கையில் புரண்டபடி அன்வர் சிந்தித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை.
"என்னப்பா தூக்கம் வர்லியா"
“இல்ல அம்மீ, மத்தியானம் தூங்கினேனா, அதான்.”
சரியாக ஐந்து மணிக்கு இமாமும் பாபரும் வந்தனர். அவர்களுக்காகவே காத்துக் கொண்டிருந்த அன்வர், அம்மா தூங்கியிருப்பதை உறுதி செய்து கொண்டு வெளியே வந்தான். இமாம் கொடுத்த பெல்ட்டை அன்வர் மாட்டிக்கொண்டான்.
இமாம், “இன்னிக்கி மார்கழி கடைசி நாள், அஞ்சறை மணிக்கி பூஜை நடக்கும். சரியா கோவிலுக்குள்ள போய் குண்ட வெடிக்க வெச்சேன்னா நெறய பேர் செத்றுவாங்க. உன்னோட பரிசுக்காக நாங்க காத்துகிட்டிருப்போம்.”
இருவரும் கிளம்பியவுடன் அன்வர் வீட்டிற்குள் திரும்ப எத்தனித்த போது பாத்திமா மெதுவாக வெளியே வந்தாள்.
“முழிச்சிட்டியாம்…”
அன்வர் பேசி முடிப்பதற்குள் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. பாத்திமாவின் மிருதுவான கைகளுக்கு அவ்வளவு வலுவிருக்குமென்று அன்வர் கற்பனை கூட செய்ததில்லை.
“ஒனக்கு இந்த பகை வளரக்கூடாதுன்னு தானே எல்லா கஷ்டத்தையும் தாங்கிட்டு ஒன்ன வெளியூர்ல படிக்க வெச்சேன். நல்லா ஒழச்சி ரகீமோட புள்ளன்னு பேர் எடுப்பேன்னு நெனச்சேன், ஆனா தீவிரவாதியோட அம்மான்னு பேரு வாங்கி வெச்சிடுவியோ?”
பாத்திமாவின் ஆவேசம் அன்வரை ஒரு கணம் திகைக்க வைத்தது.
"அம்மீ, என்னை மனித வெடிகுண்டா மாத்தினது இந்த ஊர். அப்பாவை கொன்னது இந்த ஊர். ஒன்ன மூட்டையோட தெருத்தெருவா அலைய விட்டது இந்த ஊர்.”
“யாரோ ஒருத்தன் செஞ்ச தப்புக்கு ஊர் என்னடா குத்தம் செஞ்சிச்சி .“
“இந்த ஊர் ஒனக்காக என்ன செஞ்சிச்சி. நாம ஏன் ஊர பத்தி கவல படணும்.”
“இந்த ஊர் என்னா செஞ்சிச்சின்னா கேக்குற. உங்க வாப்பா போன பெறகு ஒன்னையும் என்னையும் நடுத்தெருவில நிக்க வெக்காம பாத்துகிட்டது இந்த ஊர் தான்டா. கை குழந்தையோட நாதியத்து நின்னப்ப நம்ம சமூகத்தாளுங்க உதவி செஞ்சாங்க, ஆனா வாழ்வாதாரம் தந்தது யாரு தெரியுமா? இன்னிக்கு நீ வெடி வெக்க போறியே, அந்த பெருமாள் கோவில் அய்யர் ராமச்சந்திரன் தான். நம்ம கடையில என்ன வியாபாரம் நடந்துகிட்டிருந்துச்சோ அத அப்டியே நேரடியா அவரே வந்து வாங்கிக்கிறேன்னு சொன்னாரு. இத வெளிய சொன்னா அதுக்கும் மத சாயம் பூசிடுவாங்கன்னு சொன்னதால தான் இன்னிக்கி வரைக்கும் நான் யாருகிட்டயும் சொன்னதில்ல. கொஞ்ச கொஞ்சமா அக்ரகாரத்துல உள்ள அத்தனை வீட்டுலயும் நம்ம தயார் பன்ற பூஜை சாமான் தான் வாங்குறாங்க. நான் இன்னிக்கி தன்மானத்தோட நிக்கிறேன்னா அது அவர் செஞ்ச இந்த ஏற்பாட்டுனாலதான்.”
அன்வர் செய்வதறியாது நின்றான்.
“இத்தன வருஷமா நான் தயாரிக்கிறதுல முக்கால்வாசி அவங்களே வாங்கிக்கிறாங்க. அந்த கோவில்லேருந்த வர்ற வருமானத்துல நம்ம வீட்டு அடுப்பு எரியுது, அதுல தான் ஒன்ன படிக்க வெச்சேன். நம்ம ரத்ததிலேயே அந்த காசு ஓடும் போது ஒனக்கு மட்டும் ஏன்டா இப்டி புத்தி போச்சி”.
அன்வர் மெல்ல தலை குனிந்தான்.
“இன்னொன்னும் சொல்றேன் கேட்டுக்க. நான் கரி மீன் சாப்பிடாதது டாக்டர் சொன்னதால இல்ல. அய்யமாருங்களே வெளிய நின்னுதான் சாமி கும்பிடுவாங்க. ஆனா நான் குடுக்குற பூஜ சாமான் எல்லாம் சாமிகிட்டயே போகுது. அதனால தான் நானே சாப்பிட்றத நிறுத்திட்டேன். இதப்பத்தி அவங்களும் கேட்டதில்ல, நானும் சொன்னதில்ல.”
“நீ இன்னைக்கி கோவிலுக்கு குண்டு வெப்பே, நாளைக்கி அவங்க மசூதிய இடிப்பாங்க. யாரோ சில பேரோட சுய நலத்துக்காக நாம ஏன்டா அடிச்சிக்கணும், ஏன் அப்பாவிங்க கஷ்டப்படணும். இந்து முஸ்லிம் எல்லாம் வெவ்வேறா தெரியும். பக்கத்து பக்கத்துல இருக்க ரெண்டு செடியில பூக்குற பூ சிவப்பு வெள்ளையா இருக்கும். ஆனா பூமிக்கடியில ரெண்டு செடிகளோட வேர்களும் பின்னிப் பெணஞ்சிருக்கும். நீ மதம்ங்கிற பூவை பாக்குற. நான் மனித நேயம்கிற வேரா பாக்குறேன். இதுக்கப்பறமும் நீ குண்டு வெக்க போறதா இருந்தா, நானும் கோவிலுக்கு வர்றேன். ரெண்டு பேரும் ஒன்னா சாவோம்.”
சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் பாத்திமா விறுவிறுவென்று கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அன்வர் நிர்ச்சலனமாக நின்றான். "குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா” வடக்கிலிருந்து பெருமாள் கோவில் ஒலிபெருக்கியில் பாடல் ஒலித்தது. அதே வேளையில் வலது புறத்திலிருந்து மசூதியில் தொழுகை ஆரம்பித்தது. மார்கழி மாத பனிக்காற்றில் இரண்டற கலந்து அன்வரை கடந்து செல்ல உடல் சிலிர்த்தது.
#742
தற்போதைய தரவரிசை
55,100
புள்ளிகள்
Reader Points 100
Editor Points : 55,000
2 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 5 (2 ரேட்டிங்க்ஸ்)
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
shajiraj2010
மதம் எதுவாக இருந்தாலும் மனிதனாக இருப்பதே மேல்.
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்