கரும்பன்

சாகசம்
4 out of 5 (2 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

கரும்பன் - சிறுகதை- கவிஜி *****************************************
நிஜத்தையே உத்து பாத்திட்டிருந்தா அது பொய்யா மாற தோணும். அதே மாதிரி நிழலையே உத்து பாரு... அதுல நிஜமும் சேரும்.

இப்படி நிஜத்துக்கும் நிழலுக்கும் இடையே நடந்த கதையைத்தான் இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.


இன்னும் சற்று நேரத்தில்... சத்யா சுகர் பேக்டரிக்கு செல்லும் கரும்பு லாரிகள் ஆடி அசைந்து ஆவென.......திறந்த வெளியை அடைத்துக் கொண்டு வந்து விடும்.


பள்ளி விட்டு ஓடி வரும் சிந்தன் வேக வேகமாய் பைக்கட்டை தூக்கி வீசி விட்டு கிழக்கு நோக்கி ஓடினான். ஓட்டம் அவனோடே பிறந்தது. அவனைப் போலவே பல பையன்கள் ஆங்காங்கே நரிகளைப் போல பதுங்கி இருப்பார்கள். இது வழக்கம் தான். பதின்பருவத்து பையன்களின் சாகச நேரங்கள்.


தவிட்டுப்பாளையம் தொட்டு ஆப்பக்கூடல் வழியாக சுகர் பேக்டரிக்கு செல்வது சுலபம். அதனால் வரும் கரும்பு லாரிகளெல்லாம் இந்த வழியில் தான் வரும். முருகன் தியேட்டர் தாண்டியதும்... ஒரு சிறு வளைவு வரும். அங்கே கொஞ்சம் இருள் படர்ந்த புளியமரம் வளைந்து நெளிந்து சூட்சுமமாய் சூழ்ந்திருக்கும். குண்டும் குழியுமான சாலை.... லாரியை ஒரு முப்பது வினாடிகளுக்கு மெல்ல நகர்த்தும். அது தான் நேரம். அது தான் சவால். ஆங்காங்கே பதுங்கி இருக்கும் பையன்கள் சத்தமில்லாமல் வண்டிக்கு பின்னால் ஓடுவார்கள். சரசரவென லாரியின் பின்னால்......முதுகில் கர்ப்பம் தரித்தது போல கட்டப்பட்டிருக்கும்.........கரும்புகளின் இடைவெளியில் பெருவிரல் பதித்து வெறி கொண்டு தொற்றுவார்கள். ஏறும் போதே வண்டியின் வேகத்துக்கு தகுந்தாற் போல மற்றவர்களை விட முந்திக் கொண்டு யார் ஏறுகிறார்களோ அவர்களுக்கு தான் அன்னைக்கு கரும்பு லாட்டரி. ஏற முடியாதவன் சத்தமில்லாமல் பின்னாலயே வண்டியோடு ஓடி அல்லது நின்று அல்லது வழி விட்டு.... ஒதுங்குவானே தவிர வாய் திறந்து எதுவும் பேச மாட்டான். அது...ஒரு மாதிரி வழக்கத்தில் இருக்கும் அக்ரிமெண்ட். ஒரு லாரியைத் தவற விட்டோர் அடுத்த லாரிக்கு காத்திருப்பார்கள். மூச்சு சப்தம் மட்டும் தான். மாறாக பேச்சுக்கு மூச்சிருக்காது.


வண்டி ஓட்டுனருக்கு இந்த விஷயம் தெரியவே கூடாது. சில நேரங்களில் சில ஓட்டுனர்களுக்கு விஷயம் தெரிந்து......வேண்டுமென்றே வண்டியை வேகமாய் ஆட்டி ஓட்டுவதும் உண்டு. வேண்டுமென்றே மெதுவாக......போனா போகட்டும்...... ரெண்டு கரும்புல என்ன வந்துரும் என்பது போல.....சில ஓட்டுனர்கள் விடுவதும் உண்டு. எந்த நாள் யாருக்கென்று யாருக்கும் தெரியாது. கனத்தோடு செல்லும் லாரியை லாவகமாய் கொண்டு சேர்க்க சிலர் சத்தமில்லாமல் மெல்ல நகர்த்தி விடுவார்கள். ஆனால் அந்த முப்பது வினாடிகளில் பல ஓட்டுனர்களுக்கு கரும்பை பறி கொடுக்க கூடாது.....என்பதில் ஈகோ தாறுமாறாய் மண்டைக்குள் ஓடும். எப்படியும் இரண்டு சல்லையாவது உருவி எடுத்திட வேண்டும் இவர்களுக்கு. ஒரு முறை வண்டியை நிறுத்தி அடிக்க வந்த டிரைவரை ஊர் பசங்கள் எல்லாரும் சேர்ந்து புரட்டி எடுத்தது முன்னொரு காலத்துக்கு கதை. ஆக டிரைவர்கள் வண்டியை விட்டு மட்டும் இறங்க மாட்டார்கள். இது ஒரு பலமான......பலவீனமான போட்டி. போட்டியில் யார் இருக்கிறார்கள்.....என்றெல்லாம் தெரியாது. ஆனால் தினமும் இந்த நேரத்துக்கு இந்த போட்டி நடக்கும்.

கரும்பு உருவுவதில் சக்கை போடு போடுவது எப்போதும் சிந்தன்தான். அவனை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இலக்கியன் கூடவே ஓடி வருவான். சில நேரங்களில் முந்தி விடுவான். நான்கு நாள் சிந்தன் நாளென்றால் இரண்டு நாள் இலக்கியன் நாள். உள்ளே இருவருக்குமே புகைச்சல் தான். பனிப்போரைக் கூட நிதானமாகவே கையாள்வார்கள். சிந்தனுக்கு கரும்புகள் கொழிக்கும் நாளில் கூட......ஊருக்கே கொடுத்தாலும் ஒரு துண்டு கூட இலக்கியனுக்கு தர மாட்டான். அது ஒரு போட்டி. இலக்கியனும் அப்படித்தான். இன்னும் ரவீந்திரன்..... ராஜேஷ்குமார்.... கலையன்..... எல்லாருமே போட்டியில் இருக்கிறார்கள்.


சிந்தனின் நண்பன்.......உதவியாள்......அடியாள்....என்று எல்லாமுமாக இருப்பவன் சந்திரன். சிந்தன் உருவி உருவி சாலையில் போடும் கரும்புகளை எல்லாம் மீட்டெடுக்கும் பொறுப்பு சந்திரனுக்கு. கரும்பள்ளி திரும்புகையில் பையன்கள் மத்தியில் வரும் கெத்துக்கு ஈடு எதுவுமில்லை. ஆளாளுக்கு புகழ்வார்கள்.


"அது எப்படி சிந்தா... காத்தா பறந்து....படக்குன்னு வண்டில தொத்திர்ற...." சந்திரனுக்கு கன்னம் சிவக்கும் அளவுக்கு ஆச்சரியம் தான் அது. அவன் கண்கள் எப்போதும் சிந்தனை அரக்க பரக்க தான் பார்க்கும். எப்போதும் அதில் ஒரு பதற்றம் இருக்கும்.


ரோட்டில் கெத்து காட்டி விட்டு அம்மாவிடம் சிந்தன் வாங்கும் அடி கொஞ்ச நஞ்சமல்ல. தின்ற கரும்பெல்லாம் சக்கையாக வந்து விழும் அளவுக்கு அடி பிரித்தெடுப்பாள் அம்பிளி. ஆனாலும் சிந்தன் போக்கு லாரியைப் பார்த்து விட்டால் சித்தன் போக்கு தான்.


அதெப்படி அந்த இடத்தில் மட்டும் இருள் சூந்திருக்கிறது என்று லாரி ஓட்டுனர்களுக்கு குழப்பம் தான்.


ஒவ்வொரு முறையும் கார்ப்பரேஷனில் இருந்து வந்து ரோட்டு லைட்டை மாட்டி விட்டு போன அடுத்த அரைமணி நேரத்தில் குறி பார்த்து கல் கொண்டு உடைப்பான். சகாக்களுடன் சேர்ந்து முப்பது வினாடி நீளத்துக்கு சாலையில் ஆங்காங்கே குழி தோண்டி ரோட்டை உடைத்து பள்ளம் உண்டாக்குவான். கரும்பு உருவுவதில் ஒரு தீவிரம் உண்டு அவனிடம். அவன் தலைமை தாங்க......அந்த வேலைகளுக்கு போட்டி பொறாமை விட்டு...பையன்கள் ஒன்று கூடி விடுவார்கள். இயற்கையாக உருவான குழிகளை முன்னெப்போதோ பார்த்ததை மனக்கண்ணில் மேப் விரித்து.....அதே போல நோண்ட சொல்வான். கட்டுவதற்கு மட்டுமல்ல.....இடிப்பதற்கும் மூளை வேண்டும். கால்களிலேயே கணக்கு போடுவான்.

அப்படி என்னதான்டா அந்த கரும்புல என்று கேட்போருக்கு சிரிப்பு தான் பதில். சட்டென உயர்ந்து நெற்றியில் சிரிப்பான். ஒரு மர்மம் அவன் கன்னத்தில் புன்னகையாக விரியும்.


கொஞ்சம் விபரம் தெரிந்த அண்ணன்களுக்கு ஒரு மாதிரி புலப்பட்டது. அவன் குறி கரும்பு இல்லை. ஓடும் லாரியில் ஏறி இறங்கும் சாகசம் தான். யாரும் செய்ய முடியாததை தன்னால் செய்ய முடியும் என்று காட்டுவது. ஒரு வகையில்.... படிப்பு வராத பையனின் கவன ஈர்ப்பு. உதாசீனத்தின் உச்சத்தில் அமர்ந்து இங்க பாரு இது தான் நான்னு சொல்லும் பழிவாங்கல். மற்ற நேரங்களில் எல்லாம் பூச்சி போல இருப்பவன் லாரியைப் பார்த்து விட்டால் மட்டும் படமெடுப்பது ஏனாம்.


பல நாட்களில் வேர்த்து விறுவிறுத்து... உயிரைப் பணயம் வைத்து.......ஓடும் லாரி பின்னால் ஏறி....... உருவி போட்ட நாலைந்து கரும்பு சல்லைகளையும்......கேட்கும் நண்பர்களுக்கு கொடுத்து போனதும் உண்டு. ஆக அவனுக்கு கரும்பு மேட்டர் இல்லை. அதை உருவும் நேரம் தான். அதில் அவனை ஒரு இதுவாக ஆக்குகிறான். அந்த சாகசத்தில் தன்னை தனக்கே நிரூபிக்கிறான்.


மூச்சை பிடித்துக் கொண்டு வண்டி......முக்கு ரோட்டில் வரும் போதே.......மூச்சில் வேகம் ஏற்றி வீதிக்குள் நுழைந்து.....ஓடி குறுக்கு வழியே கடந்து.... வரிசையில் வாய் திறந்து நீருக்கு குத்த வைத்திருக்கும் வண்ண வண்ண குடங்களைத் தாண்டி.....கண்ணன் வாசல் கயிற்றுக் கட்டிலைத் தாண்டி.... கொல்லாக்காவின் குடிசைக்குள் நுழைந்து அவளிடம் ரெண்டு திட்டு வாங்கி...... சின்ன பாலம் தாண்டுகையில்... ஆடி அசைந்து லெப்ட்டில் சரிந்தபடியே போகும் லாரி இனித்து இளிக்கும்.


வண்டி வளைவில் திரும்புவதற்கும்.......ஓடிய வேகத்தில் சரிவாக இடம் பார்த்து ஏறுவதற்கும் டைமிங் சரியாக இருக்கும். அப்படி தான் கணக்கிட்டிருப்பான். ஏறி விடுவான். ஏறினால் தான் விடுவான்.


முப்பது வினாடிகள் 25 ஆகும். 25.......20 ஆகும். 20......15 ஆகும். இன்னும் 5 நொடிகள் தான் இருக்கிறது. அதற்குள் வண்டி வேகமெடுத்து விடும். அதற்குள் அவன் வேலையை காட்டி விட வேண்டும். உயிரெல்லாம் திரட்டி முகம் உப்பும் எதிர்காற்றில் உருவி கீழே போட்டு உலகை ஓட்டுபவன் போல லாவகமாக குதித்து கையை தட்டிக் கொண்டே சிரிப்பான். ஆனால் அன்று கையில் ஒரு கரும்பும் மாட்டவில்லை. வழக்கமான கட்டில்லையோ என்று கூட தோன்றியது. எத்தனை முயன்றும் உருவ முடியவில்லை. இந்த மாதிரி மற்ற பையன்களுக்குத்தான் ஆகும். சிந்தனுக்கு முதல் முறை. முட்டிக் கொண்டு வந்த கோபத்தோடு இறங்கவும் மனது வரவில்லை. சற்று நொடியில் வண்டி வேகமெடுத்து விடும். அப்புறம் இறங்கவோ குதிக்கவோ முடியாது. இந்த ஏரியாவைத் தாண்டி செங்கல் சூளை பக்கம் சென்று விட்டால்.......ட்ரைவர்கள் ஆளே மாறி விடுவார்கள். இருக்கும் கோபத்தை எல்லாம் சேர்த்து வைத்து செங்கல் சூளையில் போட்டு வாட்டி எடுத்து விடுவார்கள். சீனியர் நீலவாணன் சொன்னது நினைவுக்கு வந்தது. வேறு வழி இல்லை. சக போட்டியாளன் இலக்கியன்.......சிந்தனின் காலைப் பிடித்திழுத்து கீழே விழுக்காட்டி காப்பாற்றினான்.


முதன்முறையாக வண்டி வெற்றி பெற்று டிக்கி ஆட்டி போவது போல இருந்தது. கீழே கிடந்தபடியே பார்த்த சிந்தனின் கண்களில் மிக பெரிய தோல்வியை அது காட்டியது.


ஆக, வேகம் பத்தாது. விவேகத்தோடு செயலாற்ற பயற்சி செய்தான். லாரியின் ஓரங்களில் உருவ கூடாது. இடையில் உருவினான். ஒவ்வொரு முறையும் புது புது வித்தைகளை கற்றான். பிறகு தோல்விகள் பெரிதாக அவனுக்கு வாய்க்கவில்லை. டேய் கரும்பா என்று பெண் பிள்ளைகளிடம் பட்ட பெயர் கூட இருந்தது.


ராயர் தாத்தா கடையில் மூன்று கரும்பு சல்லைகளை கொடுத்து குடல் வாங்கி கொறித்துக் கொண்டே செல்வான். அன்னம்மாக்கா கடையில்..... கரும்பு கொடுத்து பதிலுக்கு கோலி சோடா வாங்கி குடிப்பான். ஏன்டா இப்டி பண்ற என்று கேட்கும் யாருக்கும் கரும்பு தான் பதில். வேட்டை நடக்கும் இடத்துக்கு முன் பின்னாக இருக்கும் கடைகள்......வீடுகள் என்று யாருக்கும் சிந்தனை அவன் முன் திட்டி பேச வாய்ப்பு கொடுத்ததே இல்லை அவன் தரும் கரும்பு சல்லைகள்.

"ஊரே உன்ன திருட்டுப் பையன்னு சொல்லுது. அசிங்கமா இல்ல" என்று அம்பிளி போட்டு தாளிப்பாள்.


"விவசாயிங்ககிட்ட தரை ரேட்டுக்குதான வாங்கிட்டு போறானுங்க... நாலைஞ்சு சல்லை எடுத்தா இப்ப என்னவாம்" - எதிர் வீட்டு பெருசு காத்து வாக்கில் முனங்கும்.


நல்ல பையன் தான். ஆனா இந்த கரும்பு லாரியை பாத்துட்டா மட்டும் புத்தி பிசகிர்றான். காட்டு சாமிகிட்ட போயி விபூதி எல்லாம் அடித்து பார்த்தாயிற்று. லாரியும் கரும்பும்... புளிய மர இருட்டும்.. குண்டு குழி சாலையும் அவன் கனவில் அவனை சரித்து ஓட வைத்துக் கொண்டேயிருந்தது. ரெண்டே எட்டில் எகிறி லாரியில் ஏறி விட செய்தது. ஒற்றைக் கையில் கூட கயிற்றை பிடித்து தொங்கி லாவமாய் குதித்து வண்டியோடு ஓடியபடியே பதமாய் சாலையில் நின்று ராஜ சிரிப்பை சிரிக்க முடிகிறது. எந்த கொம்பன் ஓட்டினாலும் என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாதுன்னு முனங்க செய்தது. அவன் வயது பையன்களுள் அவனே கரும்பு கிங்.


சும்மா சிந்தனை மாதிரி சீன் போடாத. அவன் அளவுக்கெல்லாம் உன்னால ஓடி ஏற முடியாது. இது அடிக்கடி பையன்களிடம் சுழலும் சொலவடை. பையன்கள் அவனை கண்கள் நிறைந்து பார்ப்பார்கள். சிலருக்குத்தான் சந்தோசம் இருக்கும். பலருக்கு எரிச்சல்தான். அவன் மீது பொறாமை பாடாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். ஒண்ணுமில்லாத பையன் இத்தனை சூட்டிப்பா இருக்கான்... எலும்பும் தோலுமா இருந்துகிட்டு எவ்ளோ வேகம் பாரு... பாலும் தயிருமா தின்னுட்டு தத்தியாட்டம் இருக்குதுங்க என்று தம் பிள்ளைகளை சிந்தனை முன் நிறுத்தி திட்டுபவர்களும் உண்டு.

சில ஓட்டுனர்களுக்கு முன்னமே விஷயம் தெரியும். வேண்டுமென்றே வண்டியை இன்னும் வேகமாய் ஓட்டுவார்கள். அந்த சமயங்களில்...30 வினாடிகள் 25 வினாடிகளாக குறையும். அதற்கும் அஞ்ச மாட்டான். இன்னும் வேகம் கூடுவான்.


நிறைய முறை விழுந்தும் எந்திரிச்சு வருவான். அவனுக்கு மட்டுமல்ல. கூட ஓடும் நண்பர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் கை கால் தலை என்று கட்டு போடாத இடம் இருக்காது.


"இப்படியே பண்ணிட்டு இரு... ஒரு நாள் இல்ல ஒரு நா..... லாரி சக்கரத்துல நசுங்கி சாவதான் போற..." என்று சொல்லி அழுத....அம்பிளி.....கடலைக்காட்டில் சிலாகிக்கவும் தவறியதில்லை.


"என்னமா ஓடறான் தெரியுமா.... சினிமா கனக்கா... குதிக்கறான். இப்டிங்கறதுக்குள்ள... ஏறி கரும்பை உருவி போட்டுட்டு காத்தை போல குதிச்சு வந்தர்றான்....!" மடியில் கட்டியிருந்த கரும்பு துண்டை எடுத்து ஒரு கடி கடித்துக் கொண்டே பேசும் அம்பிளிக்கு கணவன் இல்லை. டெல்லிக்கு லாரி டிரைவராக வேலைக்கு போனவன் தான்......திரும்பவேயில்லை. என்ன ஆனது என்று தெரியவில்லை. இருக்கிறானா இல்லையா என்று கூட தெரியவில்லை. அதிலிருந்தே லாரியைப் பார்க்கும் போதெல்லாம்....திட்டி தீர்ப்பாள். சிந்தன் வயிற்றில் இருக்கும் போதிருந்தே இதே பொழப்பு தான். வயிற்றுக்குள்ளிருந்த சிந்தனுக்கு லாரி சத்தம் எந்த மாதிரி கேட்டதென்று தெரியவில்லை. அம்மாவின் புலம்பல் எந்த மொழியிலாவது புரிந்ததா என்றும் தெரியவில்லை.


"லாரி டிரைவர் வேலை ஒசத்தியான வேலைன்னு தான கட்டி வெச்சாங்க. பேசாம செங்கல் சூளைல வேலை செய்யறவன கட்டிருந்தா கூட நிம்மதியா இருந்திருப்பேன்... எங்க போயி தொலைஞ்சான்னே தெர்லயே..."


அழுதழுது.... புலம்பி புலம்பி.....காலங்கள் கடந்து விட்டன.

இப்போதெல்லாம்.. லாரிக்கு பின்னால் யாரும் ஓடுவதில்லை. அங்கே சாலையில் குழிகள் இல்லை. சாலையோர லைட் நன்றாக எரிகிறது. பையன்கள் யாரும் அந்த பக்கம் தலை காட்டுவதில்லை. ஆனால் கரும்பு கொண்டு வரும் லாரிகள்......அந்த இடம் வந்தால் நகர்வதில்லை. எத்தனை முயன்றும் வண்டி ஸ்டார்ட் ஆவதில்லை. கரும்பு லாரியைக் கண்டதுமே அங்கிருக்கும் யாருமே வேக வேகமாய் கடந்து அந்தப் பக்கம் சென்று விடுவார்கள். பெரும்பாலும் டிப்போவில் சொல்லி தான் விடுவார்கள்.


நாலைந்து கரும்பு சல்லைகளை உருவி சாலையில் வீசி விட்ட பிறகுதான் வண்டி நகர ஆரம்பிக்கும்.


யாரும் எடுக்காத அந்த கரும்புகள் சற்று நேரத்தில் அம்பிளி வீட்டு வாசலில் கிடக்கும். அது பற்றி யாரும் பேசிக்கொள்வது கூட கிடையாது. பொது ரகசியம் போல அதில் ஒருவித அமானுஷ்யம் தான் எல்லாருக்கும். எத்தனையைத் தான் தின்ன முடியும். காய வைத்து விறகெரிக்க பயன்படுத்திக் கொள்வாள் அம்பிளி.


நினைத்துக் கொண்டே மடியில் இருந்து எடுத்த கரும்புத் துண்டை இன்னொரு கடி கடித்தபடியே......கண்களில் உப்பு நீர் வடிய...." இல்ல பூமாரி...... என் புள்ள தவறியெல்லாம் விழுந்திருக்கவே மாட்டான். நானே பாத்திருக்கனே.....அவன் ஏறி இறங்கற லாவகத்தை. கண்டிப்பா பொறாமை புடிச்ச யாரோ ஒருத்தன் இழுத்து தான் விட்ருக்கனும். வஞ்சம் வெச்சவன் பண்ணுன காரியம் தான் அது. என்ன செய்ய......கேட்டதுக்கு ஒருத்தனுக்கு தெரியலன்னு சொல்லிட்டானுங்களே. இழுத்து விட்ட அந்த கையைக் காட்டு சிந்தான்னுதான் தினமும் வேண்டறேன்.....கரும்பு தான் கிடைக்குது... கை கிடைக்க மாட்டேங்குது..."


மூக்கை உரிந்தபடியே தோழி பூமாரியிடம் பேசிக்கொண்டே கடலைக்காய் பறிக்கும் அம்பிளியின் அருகே சத்தமில்லாமல் கடலை பறித்துக் கொண்டிருந்த சந்திரனின் கை சட்டென குறுகி கொண்டு நகர்ந்தது.


கவிஜி

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...