JUNE 10th - JULY 10th
வானில் நிலவும் இல்லை நட்சத்திரங்களும் இல்லை கீற்றோலையும் கைஓடுகளும் கான்கிரீட்டுகளாய் மாறியிருந்த தெருவின் ஏதோவொரு மூலைக்கு மூலை நின்றிருந்த மரங்களின் கிளையிலிருந்த ஒற்றை இலைகூட அசைவற்று ஊரே ஊமையாகியிருந்த இரவு அது. தூரத்திலிருந்து ரேடியோவில் ஒலிக்கும் பழைய பாடல் தெருநாயின் குரைப்பொலி மின்விசிறி கடிகாரம் பக்கத்துவீட்டு சீக்குவந்த கிழவியின் புலம்பல் மட்டுமே விதிவிலக்கு. "செத்துப்போன பறவையின் சிறகை கையில் விரித்துப்பார்த்தால் மீண்டும் கனத்து போர்த்திக்கொண்டு விரைத்திருக்குமே அதுபோலிருந்தது மனம்". உறக்கமற்று உடலை மட்டும் கயிற்றுக்கட்டிலில் கிடத்திப்போட்டிருந்தேன்.
முன்பெல்லாம் கனவில்வந்து தொந்தரவு செய்யும் கன்னிப்பெண்ணின் கால்கொழுசுச் சத்தம் நிஜத்தில் நிகழ்ந்தது போல் இருந்தது சட்டென கதவைத்திறந்து வெளியே வந்து பார்த்தேன் எந்தச் சலனமும் இல்லை.தெருவே தீவாய் இருந்தது அருகிலிருந்த கோயில் கோபுரச் சிலைகள் எல்லாம் அனாதைகளாய் நின்றிருந்தன.நிதானித்துக் கேட்டுணர்ந்தேன் பருவெடித்த இளம்பெண்ணின் பாதம் பதித்த காலடிச்சுவடுக்கு அடையாளமாய் இசைபாடும் வெள்ளிமணிக்கொழுசின் ஓசையாய் என் ஆசை நெஞ்சை சிலாகித்துக் சென்றது அந்த சில்வண்டுகளின் சில்மிசச் சத்தம் தான் என்று. அப்போது வீட்டின் பின்புறம் இருந்த வேப்பமரத்தின் உச்சிக்கொழுந்து விரலசைத்தது தூரத்தில் ஏதோ ஓர் மரக்கிளையில் அமர்ந்திருந்த பறவை விசிலடித்தது காற்று வந்தென்னை காணாமல் ஆக்கியது மூர்ச்சையாகிக் கிடந்தவனை காதோரத்தில் கத்தும் கொசுதான் மீட்டுத்தந்தது .
எப்படி உறங்கினேன் என்று தெரியவில்லை சிட்டுக்குருவிகளின் சத்தம் கேட்டுத்தான் விடிந்தது தெரிந்தது களைப்புடனே எழுந்து "அம்மா டீ " என்று கத்தினேன்.கோடைகாலத்தில் சாலையோரங்களில் கரும்புபால் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பிழிந்தெடுக்கப்பட்டு கீழே விழுந்து குவிந்து கிடக்கும் வெறும் சக்கையைப்போல் அமர்ந்திருந்தேன்."தெனமும் காலைல சோறு திங்கரதே இல்ல இப்படி மத்தியானம் எந்திரிச்சதும் வெறும் வயித்துல டீயக்குடிச்சா ஒடம்புல என்னத்துக்கு ஆதுரது" என்று திட்டியவாரே காலையில் வைத்த டீயில் எனக்கென இருந்த பங்கை சுடவைத்து கொடுத்தாள் அம்மா.பிஸ்கேட்டுகளை தொட்டுத்தின்று தியானம் செய்வதைப் போல மெதுவாக டீ குடித்து முடித்தேன்.சும்மா சொல்லவில்லை உடனே மதம் பிடித்த ஒத்த யானையின் பலம் பொருந்தியவாரு இருந்தது. வாழ்வில் பெரிதாய் எதையாவது சாதித்துவிட வேண்டும் என்று எனக்குள் தோன்றியது. "கேஸ் சிலிண்டர் தீந்துபோரமாறி இருக்கு இப்ப வெலவாசியும் ஏறிப்போச்சு இப்படி லீவு போட்டுட்டு தூங்கிட்டு இருந்தா ஒன்னும் பண்ண முடியாது நீ வேலைக்குப் போனாத்தான்" என்று அம்மா திட்டும் போதுதான் சுயநினைவே வந்தது அதுவரையில் சினிமாக்களில் வருகிறமாதிரி தாய் சொன்ன ஒரு வார்த்தைக்காக ஹீரோயிசம் செய்து பெரிதாய் முன்னேறியதைப்போல கற்பனையுலகில் கரைந்துபோயிருந்தேன்.ஆனால் இயற்கையின் கையில் இருக்கும் சாட்டை நம் வாழ்வை பம்பரமாய் சுழலவைத்து சூழ்நிலைக் கைதிகளாக்கிவிடுகிறது.அப்பாவின் மருத்துவச் செலவுக்கு பணம் வேண்டும் என்பதைத்தவிர வேறு எந்த இலக்குமற்று வேலைக்குச் செல்ல தொடங்கினேன். வேலையல்ல கலை என்றுதான் சொல்லவேண்டும். ஊரவைத்த வாழைநார் கிழித்து நீர்தெளித்து உதிரிப்பூவெடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி நூலெடுத்து நயமாய் மாலை தொடுத்து முடித்தபிறகு தான் பார்த்தேன் இவ்வளவு நேர்த்தியாய் இதைச் செய்தது நான் தானா என்று வியந்து நின்றேன். வார்த்தைகளைக் கோர்த்து கவிதையாக்குவதும் வண்ணங்களைக் குளைத்து ஓவியம் தீட்டுவதும் கலை யென்றால்,பாய்லரில் வெண்ணீர் சுடவைத்து கொதித்த பாலாற்றி நுரைததும்ப சர்க்கரையும் டிக்கேசனும் சேர்த்து டீ போடுவதும் கலைதான்.வாகனம் ஓட்டுவதும் இளநீர் வெட்டுவதும் துணி தைப்பதும் காரை பூசுவதும் இத்யாதி இத்யாதி எல்லாம் கலைதான்."அழகு ரசனை என்பதெல்லாம் பார்ப்பவனின் எண்ணத்தைப் பொறுத்துதானே அமைகிறது".
பூத்துச் சிரித்து புதுமணம் பரப்பி நெஞ்சை மென்மையாக்கியதும் ஒவ்வொரு நாளும் வாட்டிவதைக்கும் இந்த வாழ்வை புன்னகையோடு கடந்து செல்ல கற்றுக்கொடுத்ததும் ஒரேநாளில் வாடிவிடும் இந்தப் பூ தான். பூக்கள் தான் எனக்கு ஆதர்சனம்.
" சபானா" சபிக்கப்பட்ட என் வாழ்வின் விமோட்சனம்.முதளாலி வீட்டுக் குழந்தை பார்த்துப் பழகிய கொஞ்ச நாட்களிலேயே நெருங்கிய நண்பியாகிவிட்டாள் .வானத்திற்கு மேல் இருக்கும் தேவலோக அமுதம் உண்டால் எப்போதுமே இளமையாக இருக்கலாம் என்று பாட்டி சொன்ன கதைகளெல்லாம் உண்மையா எனத்தெரியவில்லை ஆனால் இளந்தாரி இவன் கரடுமுரடான மனதை மென்மையாக்கி என் இருபத்திரண்டு வயதை ஒன்றரையாய் குறைத்து என்னையும் அவளைப் போலவே சிறுபிள்ளையாக்கிய அந்தச் சிரிப்பு மட்டும் நிஜம்.பேர்வைத்தவள் போல் என் பெயரைச் சொல்லி கொஞ்சி அழைக்கும் அந்த பிஞ்சு மொழிக்கு நான் என்றுமே அடிபணிவேன் .அதுதானே இயற்கை. அவளது மழலைக்கரங்களால் அரவணைத்து என் கண்ணத்தில் இடும் ஈரமுத்தத்திற்கு இங்கு எதுவுமே ஈடாகாது என்றுதான் தோன்றுகிறது இந்த உலகமே தகாதுதான்.
பணியிடத்தில் உணவு இடைவேளையின்போது கைப்பேசியில் காலத்தைப் போக்குவது வழக்கம் எந்தவொரு அழைப்புச்செய்தி வரவில்லையானாலும் வெறுமனே பழைய உரையாடலை படித்துச் சிரிப்பதும் சில நேரங்களில் வருந்துவதுமாக நேரம் கழியும். "சந்தோஷமோ துக்கமோ அது நாமாகவே தேடிக்கறதுதானே வழக்கம்". அப்படி ஒருநாள் இராணுவத்தில் இருக்கும் நண்பன் ஒருவன் அனுப்பிய குறுஞ்செய்தியை எதர்ச்சையாக வாசிக்க நேர்ந்தது ."டேய் மாப்ள வெயில் காலம் வந்திருச்சி பறவைகளுக்கு தீணி தண்ணியெல்லாம் வைடா" என்பதுதான் அது. அதற்காகவே மெனக்கெட்டு தேங்காய் தொட்டிகளைக் கொண்டு தராசு வடிவில் செய்து ஒன்றில் தண்ணீரும் மற்றொன்றில் கம்பும் நிரப்பி வீட்டின் ஜன்னலிலும் மாடியில் துணிகாயப்போடும் கம்பியிலும் கட்டி பறவைகளுக்கு இரை வைத்த ஞாபகம்.ஆனால் எந்தப் பயனும் இல்லை ஒரு பறவைகூட வந்து இரையை உண்ணவே இல்லை அதையெண்ணி மேலும் வருத்தமுற்றதுதான் மிச்சம்.இடைவெளி முடிந்து பணி தொடர்ந்தது வெறுமையும் விரக்தியும் உள்ளுக்குள் புரையோடிக்கொண்டிருந்தது.
எதிர்பாராதவிதமாக தாத்தாவிடம் இருந்து அழைப்பு வந்தது எடுத்து பேசினேன் "ஹலோ ம்.....சொல்லு தாத்தா
.ஒன்னும் இல்ல கண்ணு இந்த கம்பு வாங்கிட்டுவந்தல்ல அது எங்க வெச்சிருகனு கேட்டேன் .
அங்க மெத்தபடி ஓரத்துல ஒரு பானைக்குள்ள வெச்சிருக்கேன்தாத்தா.
நீ எரச்சிவிட்ட கம்பெல்லாம் ஒன்னுவுடாம குருவிக பொறுக்கிருச்சி அதான் இப்ப கொஞ்சம் தீணிபோடலாம்னு கேட்டேன்".என்று சொல்லி அழைப்பை துண்டித்தார்.
"தொட்டாண்குச்சில வெச்சா சாப்புடாது சாமி ,நீ கம்பு தெண எதுவா இருந்தாலும் இரச்சிப்போடு அப்பத்தான் குருவியெல்லாம் பொறுக்கி திங்கும் நான் கோழிகளுக்கு அப்படித்தான் தீணி வெக்குறேன்" என்று அக்கா சொன்னதைக் கேட்டு நானும் மொட்டைமாடியில் தானியங்கள் எரச்சிவிட்டதை அவதானித்தேன்."பறவைகளுக்கும் கூட ஒரு நீதி இருக்கிறது அது அடுத்தவர் உழைப்பைச் சுரண்டிப் பிழைப்பதில்லை மனிதர்களைப்போல அனைத்திற்கும் ஆசைப்படுவதில்லை தனக்குத் தேவையானதை மட்டும் தன் அலகால் கொத்திக் கொத்தி எடுத்துக்கொண்டு சுத்திச்சுத்தி பறந்து வாழ்வை கொண்டாடுகிறது". என்ன சொல்வதென்று தெரியவில்லை மனம் சற்று இலகுவாகி கனம் குறைந்தது போல் இருந்தது.வேலை முடிந்த களைப்புடன் வீடு சென்றேன் கைகால் முகம் கழுவியபின் காற்றோட்டமாய் வெளியில் அமர்ந்திருந்தேன்.
பக்கத்து வீட்டு குழந்தை சாப்பிட மறுத்து அடம் பிடித்துக்கொண்டிருந்தாள் நான் அவளுடன் விளையாட்டு காட்டியவாரே கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிடவைத்தேன் அவள் மருத்துவராக நான் நோயாளியாய் ஆக விளையாட்டு தொடர்ந்தது அப்போது தனது வெறும் கையால் எனக்கு ஊசி போடுவது போல பாவனை செய்தாள் நான் வலியில் அழுவது போல் நடித்தேன் பின்பு ஊசி போட்ட இடத்தை தேய்த்துவிட்டே ,தன் அம்மாவிடம் "அம்மா ,மாமாவுக்கு ஒடம்பு சரியில்ல அதான் ஊசி போட்டேன் நீ போயி அந்த புளுகு கலர் மாத்தர எடுத்து குடு" என்றாள்.என்னை வாயைத் திறக்கச்சொல்லி தனது வெறும் கையில் மாத்திரை போட்டு தண்ணீர் ஊற்றுவது போல் சைகை செய்துவிட்டு அந்த குழந்தை டாக்டர் சொன்னாள் ,"மாமா ப்ளூ கலர் மாத்தர போட்டா காய்ச்சல் சரி ஆயிடும்" என்று.அப்போது எந்த மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியாத என் மனக் காயங்களுக்கு கட்டுப்போட்டது மாதிரி இருந்தது.
எதிர்பாராதவிதமாக அந்த வழியே வந்த பழைய நண்பன் எங்கள் விளையாட்டைப் பார்த்துவிட்டு "என்னடா குழந்தையா மாறிட்டியா "என்று கேலியும் கிண்டலுமாக சிரித்தான்.அவன் மனதுக்குள் என்னை கிறுக்கன் என்று நினைத்திருப்பான் என்பது எனக்கு நன்றாகவே விளங்கியது ."குழந்தைகளுடன் விளையாடும்போது நீங்கள் குழந்தையாகவே மாறிவிடுகிறீர்கள்,தவசிகள் ஞானிகளை விட சாப்பிடவும் தூங்கவும் சிரிக்கவும் அழுகவும் மட்டுமே தெரிந்த அதன் போக்கில் திரிகின்ற குழந்தை மனம் பொருந்தியிருப்பது தானே பேரின்பம்".
ஒரு சிறுகதை எழுதலாம் என்று நினைத்துவேறு என்னென்னவோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.நான் இப்படித்தான் சிலரிடம் பேசும்போது ஒரு மையத்தில் தொடங்கி அதனோடு தொடர்புடைய பலவற்றைப் பேசி ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறி முடிவிலியில் முடியும்.இதை எழுதும்போது எனக்கு எதுவும் தோன்றவில்லை வாசிக்கும்போது உங்களுக்கு ஏதாவது தோன்றினால் மகிழ்ச்சி.சரி கதைக்கு வருவோம்,எதுல விட்டேன் ,ம்...... அந்த குழந்தைமருத்துவர் செய்த சிகிச்சையில் என் ஆவி பரிசுத்தமானது.விளையாடிக்கொண்டே "டாக்டர் உங்க பேர் என்ன"என்று கேட்டேன் "சுதர்சனா" என்று சொல்லி விட்டு சிரித்தாள் பேர் மட்டுமல்ல அவள் செய்வது அனுத்தும் சுதர்சனம் தான் என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்.திரும்பவும் ஓடி வந்து "மாத்தர போடனும் ஆ காட்டு "என்று சொன்னாள் அண்ணார்ந்து மேலே பார்த்தேன் மொட்டை மாடியில் இரைக்கப்பட்ட தானியங்களை குருவிகள் கீச்சு கீச்சென்று கத்தியவாரே கொத்திக் கொத்தித் தின்றுகொண்டிருந்தது. மனம் நிறைந்திருந்தேன் அந்தப் பறவைகள் அனைத்தும் சட்டென சிறகசைத்து வானில் பறந்து தொலைந்து போன பிறகும் ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன் அந்த நீலநிற வானம் சிறு பிள்ளையின் விரல் பிடித்து அ ஆ எழுதச் சொல்லித் தருவதைப்போல எனக்கு எதையோ கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது.அதை வெளியிலிருந்து நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன் ."இப்படித்தான் கனத்து மிதந்து பறந்து எது எதுவோ அது அதுவாக நிகழ்த்தருணத்து நிசர்சனங்களை நிர்பந்திக்கிறது வாழ்க்கை"பொதுவாக நீலநிறம் என்றாலே மனதை இலகுவாக்கி ஓர் புத்துணர்வூட்டும் என்கிறது அறிவியல்.அதுபோலத்தான் தற்போது *"எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் இரு நீல நிற(✓✓) டிக் குகள் திருப்திகரமானதாய் இருக்கிறது"*.
#210
தற்போதைய தரவரிசை
52,160
புள்ளிகள்
Reader Points 2,160
Editor Points : 50,000
44 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 4.9 (44 ரேட்டிங்க்ஸ்)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
jaynavin16
mallikavel
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்