மண(ன)ம்

Priyaalbatross
பெண்மையக் கதைகள்
5 out of 5 (2 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

*மண(ன)ம்*

"கடவுளே!

எல்லோரையும் நல்லா வச்சிக்கோப்பா."

சந்தனம் தடவிய உடலோடும், நெற்றியில் பட்டையோடும் பூஜையறையிலிருந்து வெளியில் வந்தார் மருதநாயகம். கடவுள் பக்தியிலும், மூட நம்பிக்கையிலும் ஊரியவர். பெரிய தொழிலதிபர்.

தனது மாலை நேர பூஜையை முடித்துக்கொண்டு, வீட்டின் கூடத்தில் அமர்ந்தவரைக் கொலைவெறியுடன் முறைத்தான் உதய். அவன் மருதநாயகத்தின் மூத்த மகன்.

மகனின் கோபத்தைக் கருத்தில் கொள்ளாதவர், சமையலறையை நோக்கி குரல் கொடுத்தார்.

"நாயகி, கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வாம்மா."

தந்தை தன்னைக் கண்டும் காணததைப் போல் நடந்துக்கொள்வதில் வெகுண்டவன், "அப்பா..." என அதிக அழுத்தத்துடன், சத்தமாக விளித்தான்.

சிறு அதிர்வுமில்லாமல் "சொல்லுப்பா, கூப்பிட்டியா?" என்று அமைதியாகக் கேட்டவரின் மீது உதய்க்கு ஆத்திரம் அதிகமாகியது.

"வித்யாவை ஏதுக்குப்பா அவங்க கூட அனுப்பி வச்சீங்க.." தனது ஆத்திரம் சற்றும் அடங்காமல் கேட்டிருந்தான்.

"அவ, அவங்க புகுந்த வீட்டுக்குப் போறது தானே சரி."

"எதுப்பா, அவ புகுந்த வீடு? ஒண்ணும் தெரியாத அஞ்சு வயசுல அவளுக்கு நடந்ததுக்குப் பேரு கல்யாணமா!!!.. அதைக் கல்யாணம்ன்னு நீங்க ஏத்துக்கிறீங்களா?"

"ஒரு பெண்ணுக்கு எப்போ எந்த வயசுல நடந்தாலும் அதுக்குப் பேரு கல்யாணம் தான்ப்பா."

தனது மகன் கேட்டக் கேள்விக்குச் சற்றும் அசராது பதிலளித்தார்.

"ஏன்ப்பா இப்படி இருக்கீங்க, சரி இத்தனை வருஷம் இல்லாமல் இப்போ எதுக்கு வந்து கூட்டிட்டுப் போயிருக்காங்க?"

"அவங்களா வந்து கூட்டிட்டுப் போகலை... நான் தான் உங்க வீட்டுப் பொண்ணை வந்து அழைச்சிட்டுப் போங்கன்னு சொன்னேன்."

"ஏன்?"

"அவள் இவ்வளவு நாள் இங்கிருந்தது சரி, ஆனால் இப்போது அவள் வயதுக்கு வந்த பெண்... இனியும் நம் வீட்டில் வித்யா இருப்பது சரி வராது. ஊரும் பல விதமாகப் பேசும்." மருதநாயகம் தன் கருத்தை எடுத்துக் கூறினார்.

"நீங்க புரிஞ்சி தான் பேசுறீங்களா? உங்க தொழில் லாபத்திற்கு ஏதோ ஒரு சாமியார் சொன்னான்னு... மிட்டாய் சாப்பிடுற வயசுல அவளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி, இப்போ வயதுக்கு வந்துட்டான்னு அவங்கக் கூட அனுப்பி வச்சிருக்கீங்க... எல்லாம் உங்களுடைய லாபத்திற்கும், சுய கௌரவத்திற்கும்.. அவன் உயிரோடு இருந்தாலும் பரவாயில்லை, நீங்க செய்து வைத்த குழந்தைத் திருமணம் அந்தக் கடவுளுக்கே பிடிக்கைவில்லை.. அதான் கல்யாணம் பண்ண அன்னைக்கே விளையாடப் போனவன் கிணத்துல தவறி விழுந்து செத்துப்போய்ட்டான். பதினெட்டு வயதுக்கு முன்பு ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்தாலே, அது குழந்தைத் திருமணம் எனவும்... மிகப்பெரிய குற்றம் எனவும் சட்டம் கூறுகிறது. நீங்க பண்ணிட்டு இருக்கிறதை வைத்து உங்க மேல் வழக்குப்பதிவு செய்யலாம், ஒழுங்கா வித்யாவை கூட்டிட்டு வாங்க." கோபத்தில் வெடித்தவன் இறுதியில் கெஞ்சலாக முடித்தான்.

"என்னால் முடியாது." என்றவரை முறைத்துப் பார்த்தவன்,

"அவ வயதுக்கு வந்து விட்டதால் அங்கு அனுப்பிட்டேன்னு நீங்க சொல்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது தான் காரணமென்றால் வித்யாவை ஒன்பது வருடங்களுக்கு முன்பே, அதாவது அவள் வயதுக்கு வந்த பதிமூன்று வயதிலே.. அவளுடைய புகுந்த வீடுன்னு சொல்றீங்களே, அங்கு அனுப்பியிருக்கனும்.. இப்போ அனுப்பியிருக்கீங்கன்னா வேற ஏதோ இருக்கு. அதைக் கண்டுபிடித்து என் தங்கையின் திருமணச் செய்தியோடு வருகிறேன்" என்றவன் விறுவிறுவென வெளியேறினான்.

உதய் வந்து சேர்ந்த இடம் அவனது தங்கை வித்யாவின் புகுந்த வீடு என மருதநாயகம் சொல்லிக்கொள்ளும் வீடு.

அதிரடியாக உள்ளே நுழைந்தவன் வீட்டின் தாழ்வாரத்தில் நாய்க் கட்டிபோட்டிருக்கும் இடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்த தனது தங்கையைக் கண்டு துடிதுடித்துப் போனான்.

கால்களைக் கட்டிக்கொண்டு தலைக் கவிழ்ந்து அமர்ந்திருந்தவளைத் தூக்கி நிற்க வைத்தவன், "வீட்டில் யாருமில்லையா?" என்று வீடே அதிரக் கத்தினான்.

நடுத்தர வயதுடைய பெண்மணி ஒருவர் வீட்டிற்குள்ளிருந்து வந்தார். தனது கொண்டையை முடிந்தபடி, "யாருடா அது என் வீட்டு கூடத்தில நின்னுட்டு இம்புட்டுச் சத்தம் போடுறது?" என்றவர் அங்கு நின்றிருந்த உதைய்யைப் பார்த்து... "நீ எதுக்கு இங்கன வந்திருக்க.. இந்த மூளிக்கு துணையா உங்க அப்பன் உன்னையும் அனுப்பி வச்சீட்டான?" அவர்களது வார்த்தையில் வித்யாவின் மனது கதறியது. இதயத்தில் யாரோ கத்தியை சொருகியதைப் போன்று வலியை அனுபவித்தாள்.

உதய் அப்பெண்மணியை அடிக்கக் கையினை ஓங்கி விட்டான்... கண்களில் நீருடன் "அண்ணா" என்று பதறியழைத்த தங்கையைத் திரும்பி பார்த்தவன், வேண்டாமென்பதைப் போல் வித்யா தலையசைக்க ஓங்கிய கரத்தினைக் கீழே இறக்கினான்.

"நான் இப்போ என்னத்த சொல்லிட்டேன்னு இந்த ஆட்டம் போடுற... உண்மையத்தானே சொன்னேன், உன் தங்கச்சிக் கழுத்துல தாலி கட்டுன நாலு மணி நேரத்துல என் பையனை முழுங்கிட்டு என்னை அனாதையாக்கிட்டா, கொலைகாரி.. ராசிக்கெட்டவ, கல்யாணம் பண்ண அன்னைக்கே புருஷனை முழுங்கிட்டா(ள்)."

அவர் வாயிற்கு வந்ததையெல்லாம் வசைப்பாட,

"போதும் நிறுத்துங்க... அவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை, இனியொரு வார்த்தை பேசுனீங்க நான் மனுஷனா இருக்க மாட்டேன். இவ்வளவு பேசுறவங்க எதுக்கு என் தங்கச்சியைக் கூட்டிட்டு வந்தீங்க?" காட்டமாக அவனது வார்த்தைகள் வெளி வந்தன.

"இந்த ராசியில்லாதவளை, என் மகனைக் கொன்ற கொலைகாரியை நானா வந்து கூட்டிட்டு வரலை, உன் அப்பன் தான்... தாலி அறுத்தவன்னு ஞாபகம் இல்லாமல் என் பொண்ணு ஒருத்தன் கூடச் சுத்திட்டு இருக்கா, இனியும் அவளை வச்சு என்னால காப்பாத்து முடியாது. ஊர் தப்பா பேசறதுக்குள்ள உங்க மருமகளை நீங்களே வந்து கூட்டிட்டுப் போங்கன்னு கெஞ்சினாறு.. அதான் என் வீட்டுல வேலைக்காரியாக இருந்துட்டு போகட்டும்மேன்னு கூட்டிட்டு வந்தேன்" என்று ஏளனமாக உரைத்தார்.

கொதிக்கும் மனதினை முயன்றுக் கட்டுப்படுத்தியவன், "என் தங்கச்சி எங்க வீட்டு இளவரசி அவ எதுக்கு இங்கே இருக்கணும்.. நான் அழைச்சிட்டுப் போறேன்" எனக் கூறிய உதய்யை இகழ்ச்சிப் புன்னகையுடன் நோக்கிய பெண்மணி, "இந்த அதிர்ஷ்டம் கெட்டவள் எனக்குத் தேவையில்லை நீயே வச்சிக்கோ" எனக் கூறி வீட்டினுள் சென்று கதவினை அறைந்து சாற்றினார்.

கண்களில் நிற்காமல் வழியும் கண்ணீருடன், கலங்கிய முகத்துடன் நின்றிருந்தவளை கரம் பற்றி உதய் அழைத்து வந்த இடம் சார்பதிவாளர் அலுவலகம். வித்யா புரியாதுக் குழப்பத்துடன் தனது அண்ணனை எறிட, அவனோ "உனக்குத் திருமணம்" என்றான்.

அதில், பதறியவள்...

"அண்ணா... நான் ஒரு, வித.....வை."

அந்த வார்த்தையைக் கூறுவதற்குள் அவள் பலமுறை மரித்து விட்டாள்.

"யார் சொன்னது? அன்று நடந்தது திருமணமே இல்லை. சிறு வயதில் பொம்மை கல்யாணம் செய்து விளையாடுவோமே, அது போல் தான்.. அன்று உனக்கு நடந்ததும்." அதிக அழுத்தத்துடன் உரைத்தான்.

"ஆனால், அண்ணா... இந்தச் சமூகம்?"

"சமூகம் என்பது நீயும், நானும் தான். ஒரு பெண்ணாக உனக்கு நீயே போராடாமல் இப்படியே வீட்டிற்குள் அடைந்துக்கிடக்கப் போகிறாயா?"

உதய்யின் கேள்வி அவளைச் சிந்திக்க வைத்தது. தூற்றும் சமூகத்தில் தானும் ஒரு மதிப்பு மிக்கவளாக வலம் வர வேண்டுமென்று நினைத்தாள்.

அதற்காக உதய் கூறிய மறுமணத்திற்குச் சரியெனக் கூறியவள், "தனக்கு ஒருவர் மீது விருப்பம் இருக்கின்றது" என்றாள் திணறலுடன்.

"தெரியும்" என்றவன், "நவீன் அனைத்தும் கூறிவிட்டான். அவன் காதலை சொல்லி நீ மறுத்ததால் நேரடியாக அப்பாவிடமே சென்று உன்னைப் பெண் கேட்டிருக்கிறான். அதனால் தான் அவர் உன்னை அங்கு அனுப்பி வைத்துவிட்டார்" எனக் கூறினான்.

சிறிது நேரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை முடித்த வித்யா மற்றும் நவீனை நேராக வீட்டிற்கு அழைத்து வந்தான் உதய்.

அவர்களைக் கண்டதும் வாசலிலே நிற்க வைத்த மருதநாயகம்... "என் மானத்தை வாங்கிட்டியேடி பாவி... பாவி... ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சும் எப்படிடி இப்படியொரு பாவத்தை உன்னால பண்ண முடிஞ்சிது." அவர் வித்யாவை அடித்தே விட்டார்.

நவீனும், உதய்யும் அவரைத் தடுக்க முயல்கையில் அவர்களைத் தடுத்த வித்யா, "இது என் வாழ்க்கை நானே பேசிக்கொள்கிறேன்" என்றாள்.

"என்னடி பேசப் போற... ஏற்கனவே ஒருத்தன்கூடக் கல்யாணமாகி, தாலியை இழந்துட்டுக் கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் இப்போ இன்னொருத்தன் கூட வாழப் போறேன்னு சொல்றீயே இது உனக்கு அசிங்கமாகத் தெரியலையா?"

மங்கிய அறிவுடன் இருந்தது மருதுவின் வார்த்தைகள்.

"எதுப்பா அசிங்கம்? நான் ஏன் வெட்கப்படனும். நீங்க தான் வெட்கப்படனும். ஒழுங்கா நடக்கக் கூடத் தெரியாத வயசுல எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சதுக்கு,

நீங்க உங்க விருப்பத்திற்குப் பண்ண ஒரு காரியத்தால், ஒரு பெண்ணாக நான் அனுபவித்த வலிகள், வேதனைகள் ஏராளம். அறியாத வயதில் நடந்த திருமணமாகவே இருந்தாலும், இந்த ஊர் அதை வேறு கண்ணோட்டத்தில் தானே பார்த்தது. எங்குப் போனாலும் நடந்து முடிந்த ஒன்றை வைத்து தானே என்னை அடையாளப்படுத்தினார்கள், தாலி என்றால் என்னவென்றே தெரியாத வயதில் தாலியை இழந்தவள் என்று எல்லோரும் கூறும் போது எப்படி இருக்கும் தெரியுமா? என் வயது பெண்கள் எல்லோரும் தலை நிறையப் பூ வைத்து பொட்டு வைத்து பார்க்கும் போது மனதில் ஒரு வலியெழும்பும் அதை வார்த்தைகளால் சொல்ல முடியாதுப்பா. நான் குறுக்கே சென்றாலே அந்தக் காரியம் நடக்காது, புருஷனைக் கொன்னவன்னு என் காதுபடவே பேசுவாங்க.. யாரோ உயிரைக் கையால் பிடுங்குவது போல் இருக்கும். உலகம் புரிய ஆரம்பித்ததிலிருந்து, இதனால் எனக்கு ஏற்பட்ட துன்பங்கள் மிக அதிகம்ப்பா... நீங்களே நான் முன்னால் வந்தால் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வெளியே செல்வீர்கள், அதெல்லாம் புரிந்தும் புரியாததைப் போன்று வலியுடன் கடந்து விடுவேன். வீட்டிலே உங்களது ஒதுக்கத்தைப் பார்த்து பழகியதால் வெளியில் அனைவரும் என்னை விதவையென்று தள்ளி வைக்கும் போது ஒன்றும் பெரியதாகத் தெரியவில்லை. ஆனால், அந்த ஒதுக்கம் செத்துப் போயிடலாம் போல இருக்கும். எத்தனையோ முறை நாம ஏன் உயிரோடு இருக்கணும் நினைச்சு அழுது இருக்கேன். அப்போலாம் எனக்குள்ளத் தோன்றியது ஒன்றே ஒன்று தான்... நான் என்னப்பா தப்பு செய்தேன். குழந்தைப் பருவத்தில் நானா திருமணம் வேண்டுமெனக் கேட்டேன். அவனாகத் தவறி விழுந்து இறந்து போனதுக்கு நான் என்ன செய்வேன் அப்பா. இனியாவது என்னை என் சுயத்தை இழக்காமல் வாழ விடுங்கள்." தனது கரங்களைக் கூப்பி மன்றாடினாள்.

இத்தனை வருட வலிகளையும், ஏக்கங்களையும் ஒரே மூச்சாகக் கொட்டித் தீர்த்தவள், தரையிலே மடங்கியமர்ந்து கண்ணீர் சிந்தினாள்.

வித்யா தான் பட்ட வேதனைகளை ஒவ்வொன்றாகக் கூறும் போதே மருது ஒரு தந்தையாக அவள் மீது இரக்கம் கொள்ள ஆரம்பித்தார். அவளது இதயம் கசியும் வார்த்தைகளில் தான் செய்த தவறு புரிய உள்ளுக்குள் குன்றிப் போனார். இறுதியில் என்னை வாழ விடுங்கள் என்ற அவளது வார்த்தையில் வெளிப்படையாகவே கண்களில் நீர் இறங்க தன் மகளைத் தொட்டு தூக்கியவர் அவளிடம் மன்னிப்பு வேண்டி, நவீனுடன் இணைந்து நிற்க வைத்து நலமுடன் வாழ ஆசிர்வதித்தார்.

அதில் அனைவரது மனமும் நிறைந்துவிட்டது.

இன்றும் எங்கோ ஒரு மூலையில் பெண் குழந்தைத் திருமணம் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ஒரு வருடத்திற்கு 12 மில்லியன் குழந்தைத் திருமணங்கள் நடக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது பெண்களே அதிகம்.

"மாற்றங்கள் மாற்றம் பெற சிறு அளவிலாவது முயற்சி செய்வோம்."

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...