முரண் ஏன்? மனமே!

காதல்
5 out of 5 (7 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர


"அக்கா இந்தக் கதைய கேளேன் !!"

" இந்தச் சீதாவுக்கு இன்னொரு கல்யாணம் வேண்டாமாம்... !" தங்கை கூற,

"ம்" என சலுப்பாகக் கூறினாள் தமக்கை.

"இவ பிள்ளைகள பாத்துக்கறது பிடிச்சு போய், எதிர்த்த வீட்டுக்காரன் அவள இரண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்கறேனு கேட்டா இவ வேணாம்னு சொல்லிட்டா!!" என்று தங்கை தொடர்ந்து பேச,


"ம்" என்றாள் அவள் மீண்டும் அதே சலிப்புடன்.


"ஆமா.... நீ படிக்கும்போது உனக்கு இந்தக் கதை வரலயா?"

" இல்ல!!"

" வரலயா? உனக்கு நியாபகம் இல்லையா?"

" ஏய்!" கண்கள் உருட்டி மிரட்டும் தோரணையில் பார்த்தவளைப் பார்த்து பயப்படுவது போல் பம்மி விட்டு, சிறிது நேரம் மௌனியாக இருந்துவிட்டு,

" சரி சரி அத விடு!!! நான் சொல்லறத நல்லா கேளு!" என்றாள் தங்கை.

" என்ன சொல்லனும் டி உனக்கு! சொல்லித் தொலை!!"

"கொஞ்ச நாள் தான் ஆச்சாம் அவளுக்குக் கல்யாணமாகி, அவ வீட்டுக்காரன் செத்துட்டானாம்... பாவமில்ல!! இன்னும் எத்தன நாள் தனியா அந்தப் பொண்ணு இருப்பா? கல்யாணம் பண்ணியிருந்தா அவளுக்கும் நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கும், அவனோட பிள்ளைகளுக்கும் அம்மா கிடைச்சிருக்கும்!!"


" ஓ!!"

" என்ன ஓ!!"


"நான் சொன்னது கரக்ட் தானே!"

" பெரிய மனுசி நீங்க சொல்லிட்டீங்கல்ல.... அப்ப சரியா தான் இருக்கும்!"


" அக்கா!"

" என்ன டி ?"

" அவ அவன மேரேஜ் பண்ணிருக்கலாமில்ல? அத விட்டுட்டு டயலாக் பேசறா!!"


" நீ நினைக்கற மாதிரி அவ நினைக்கலயே! என்ன பண்ணறது?"

" அவ நினைக்கிறத பத்தி விடு ... நீ என்ன நினைக்கற?"

" என்ன நினைக்கனும்?"

" ஐய்யோ? அக்கா!! நான் என்ன கேக்கறேனு உனக்குத் தெரியுது தானே? பதில் சொல்லு?"

" ம்ஹும்.. தெரியல!"


" இப்ப நீ சீதா இடத்துலே இருந்திருந்தா என்ன செஞ்சிருப்ப?"

" அவ சொன்னதத் தான் நானும் சொல்லியிருப்பேன்!"


" என்னது!"

" காது கேக்கலயா?"


" இல்..ல கா..து நல்...லா தா...ன் கேட்டுச்சு... ஆனா நீ சொன்ன பதில் தான் எனக்கு விளங்கல!"


"தெளிவா.. தமிழ்ல்ல.. புரியற மாதிரி தானே சொன்னேன்!!" எனக் கூறிவிட்டு பேந்த பேந்த முழித்த தன் தங்கையைப் பார்த்து,

" மனசு ஒருத்தர் கிட்ட இருக்கும் போது வேற ஒருத்தர ஏத்துக்கலாமானு யோசிச்சாலே, நாம இப்ப வாழ்ற வாழ்க்கைக்குப் பொருள் இல்லாம போயிடும் டி!" தங்கையின் கேள்விக்கு மனதிலிருந்த பதிலைக் கூறிவிட்டு அடுக்கறையில் புகுந்து கொண்டாள் தமக்கை.


' என்ன அர்த்தம் இதுக்கு.. !! புரியற மாதிரி எதாவது சொல்லாம .. உங்கிட்ட போய்க் கேட்டேன் பாரு!' மூத்தவள் கூறியதை விளங்கிக் கொள்ள முடியாதவள், மனதுக்குள் அவளைத் திட்டிவிட்டு தனது கருத்துக்கு 'ஆமாம்' போட யார் சிக்குவார் என அடுத்த வீட்டை தேடி ஓடினாள்.

பத்தாம் வகுப்பு துணைபாட புத்தகத்தில் வந்திருந்த "மறுமணம்" கதையைப் படித்து விட்டு சீதாவின் முடிவை முட்டாள்தனம் என்றெண்ணிய தனது மடந்தை பருவ அறிவை நினைவுக்கூர்ந்த அரிவையவள் வெற்றுச் சிரிப்பை உதிர்த்தாள்.

" வித்யா.."

தோராயமாக 8 வருடங்களுக்கு முன் சென்றிருந்த தன் நினைவுகளிலிருந்து தமக்கையின் குரல் கேட்டு மீண்டாள் வித்யா.


" சொல்லுக்கா!!" தங்கையின் மனமும் முகமும் சரியில்லை என தமக்கை அறிந்தே இருந்தாள். அவள் என்ன நினைத்து வருந்தி, தன்னை வதைத்துக் கொள்கிறாள் என இவளுக்கு புரியாமல் இல்லை. ஆனால், தற்போது அதற்கெல்லாம் இடம் கொடுக்க முடியாதே!


"நேரமாச்சு வா மாப்பிள்ள வீட்டுக்கு போகனும்" தன் தங்கையை அவள் அவசரப்படுத்த,

" ம்..போலாம்!!" தமக்கையின் அவசரத்தை பொருட்படுத்தாமல், அமர்ந்திருந்த இடத்தை விட்டு சிறிதும் நகராமல் நிதானமாகக் கூறினாள் வித்யா.

இரண்டு நாட்களாகத் தான் இட்ட கட்டளையை இயந்திரமாய் மாறி நிறைவேற்றிய தன் தங்கையைப் பார்க்க அவளுக்கே பரிதாபமாக இருக்க, அவள் எடுத்துக் கொள்ள நினைத்த நேரத்தைக் கொடுத்துக் காத்திருந்தாள் வினயா.

" உனக்குச் சீதா நியாபகம் இருக்கா அக்கா?" கண்களில் தேங்கி நின்ற கண்ணீருடன் வித்யா வினவ,

" நீ என்ன சொல்ல வர்றேனு தெரியுது.. ஆனா அதெல்லாம் பேச இப்ப நேரமுமில்ல, அவசியமுமில்ல !"

" தெரிஞ்சும் எப்படிக்கா இந்தக் கல்யாணத்த என்னை ஏத்துக்கச் சொல்ற?"

" நீ பண்ணிக்கிட்டது மறுமணம் இல்ல வித்யா... திருமணம்!"

" இல்லக்கா என்னைப் பொறுத்தவரைக்கும்...." கண்ணீர் வழிய வித்யா பேச ஆரம்பிக்க,

" வினயா, பொண்ணுபிள்ளைய கையோட கூட்டிட்டு வர்றேனு வந்துட்டு நீயும் அவ கூட நின்னு கதை பேசிட்டு இருந்தா எப்படி மா? " திருமணத்திற்கு வந்திருந்த உறவுக்கார அத்தை வினயாவை வினவியபடியே வந்தார்.

அவர் இருவர் அருகிலும் வருவதற்குள்,
" அத்தை.. இரண்டே நிமிசம் தான்.. வந்தடறோம்.. நீங்க முன்னாடி போங்க!"
என்று கூறி அவசரமாக அவரை அங்கிருந்து அனுப்ப முயற்சிக்க இருவர் முகத்தைச் சில நொடிகள் ஆராய்ந்தவிட்டு
"என்னத்த தான் அப்படி இரகசியமா பேசுவாளுங்களோ அக்காளும் தங்கச்சியும் !" ராகத்துடன் இருவருக்கும் கேட்கும் படி வாய்விட்டு முணுமுணுத்தபடியே அந்த இடம்
விட்டு அகன்றார் அவர்.

திருமணம் முடிந்து பிறந்த வீட்டை விட்டு பிரிந்து செல்லும் புதுமணப்பெண் கண்ணீருக்குக் காரணம் சொல்ல தேவையில்லை தான். ஆனால், வித்யாவின் கண்ணீருக்கு அந்தக் காரணமெல்லாம் செல்லுபடியாகாதே! எதிர்வீட்டை புகுந்த வீடாகக் கொண்ட ஒருத்தி அழுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா?


" அழாத வித்யா!"

" அன்னைக்கு நீ சொன்னதுக்கு அர்த்தம் எனக்குப் புரிஞ்சதே 'அவ'ராலதான்... அவர மறந்துட்டு இந்த வாழ்க்கைய என்னால ஏத்துக்க முடியும்னு எனக்கு நம்பிக்கையில்லக்கா!"


" விருப்பம் வேற வாழ்க்கை வேற..வித்யா!"

" அன்னைக்குச் சீதா இடத்துல உன்னை நிறுத்தி யோசிச்சுப் பதில் சொல்ல கூட நீ தயாரா இல்ல.. ஆனா நான் மட்டும், மனசுல இருக்கறவர மறந்துட்டு புதுசா ஒருத்தன ஏத்துக்கனுமா?"

"கல்யாணம் பண்ணி நான் உங்க மாமா கூட நாலு வருசம் வாழ்ந்துட்டுச் சொன்னதும்... ஆறு மாசம் ஒருத்தன காதலனா நெனச்சு நீ மனசுல ஆசைய வளத்துக்கிட்டதும் ஒன்னில்ல!"

" இரண்டுக்குமே அடிப்படை ஒன்னுதானே கா!"


வித்யா காதலின் அகவை ஆறு மாதங்கள் மட்டும் தான் என்றாலும் அவள் தன் காதலன் மேல் கொண்டிருந்த ஆழமான நேசத்தை வினயா நன்றாக அறிவாள். பெற்றோரிடம் பேசி அவள் திருமணத்தை நடத்த நினைத்திருந்த தருணம், வித்யா காதலனின் விதி முடிந்து போனது. தேற்றுவாரின்றி அழுது தீர்த்தாள் வித்யா. அவள் பெற்றோர் அறியாவண்ணம் தன் வீட்டிற்குத் தங்கையை அழைத்துக் கொண்ட வினயா, தங்கையின் சோகத்தில் தானும் மூழ்கினாள்.

ஒரு வருடம் கடந்த பின்னும் வித்யாவின் பாரம் குறைந்த பாடில்லை, மனம் மாறவில்லை.
அந்தச் சமயத்தில், வித்யாவின் எதிர் வீட்டில் குடியிருந்தவன் அவளைப் பெண் கேட்க அவன் நற்குணம் தெரிந்த அவள் பெற்றோர் வித்யாவின் சம்மதம் கூடக் கேட்காமல் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டனர்.

வினயாவிடம் தகவலைக் கூறி வித்யாவை திருமணத்திற்குத் தயாராக்க பணித்தனர். தங்கையின் அப்போதைய நிலையில் அந்தத் திருமணம் பெரிய வேதனையைத் தரும் என்பதால், அவளைப் பெண் கேட்டு வந்தவனிடம் திருமணத்தை நிறுத்த வேண்டலாம் என்றெண்ணி அவனை அலைபேசியில் தொடர்புக் கொண்டாள் வினயா.

" உங்க தங்கச்சிய பத்தி எனக்கு முழுசா தெரியும்.. அவள ஆறு வருஷமா பாத்துட்டு இருக்கேன்... அவ காதலும் தெரியும் அவ கேரக்டரும் தெரியும், கவல படாதீங்க அவள நல்லா பாத்துக்குவேன்... அவ மனசு மாற வெயிட் பண்ணுவேன்... !"

" அவ .. "

" அவ மேல இரக்கப்பட்டு அவள ஏத்துக்கறேன்னு சொல்லல...அவள எனக்கு ரொம்பப் பிடிக்கும்... முடிஞ்சு போன அவ காதல காரணமா வைச்சு என் காதலையும் முடிச்சு வைச்சிடாதீங்க! அவ கண்டிப்பா மாறிடுவா!!! பிளிஸ் அவள எப்படியாவது சம்மதிக்க வைங்க!"

எப்படியாவது வித்யாவை தன் துணையாக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவனது முனைப்பு அவள் தங்கை மேல் அவன் கொண்ட காதலை வினயாவிற்குத் தெள்ள தெளிவாக விளக்கியது. அவளுக்குப் பேச நா எழவில்லை. பதில் எதுவும் கூறாமல் அழைப்பைத் துண்டித்து விட்டாள்.


அவன் கூறிய அனைத்தையும் கேட்ட பிறகு வினயா மனம் அவன் பக்க நியாயத்தையே அவளிடம் கூறி வாதிட்டது. மனித மனம் எப்போதுமே தான் விரும்பும் ஒன்றின் பக்க நியாயங்களைத் தானே பட்டியலிடும். வினயா மனமும் அவள் தங்கை வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையே சுமந்து நின்றது. இன்னும் வாழவே ஆரம்பிக்காத அவள் வாழ்க்கையை முடித்து வைப்பது எப்படி நியாயமாகும்?

காலம் முழுக்கக் காதலனையே நினைத்து உருகி, ஒற்றை மரமாய் அவள் தங்கை நிற்பதை சிந்திக்கக் கூடச் சகிக்கவில்லை வினயாவிற்கு.

கதைகளில் தியாகச் செம்மலாக வலம் வரலாம், ஆனால் எதார்த்தத்தில்?

அன்று சீதா செய்தது முட்டாள்தனம் என வாதிட்டவளோ இன்று அவள் பாதையில் தான் நடப்பேன் என முரண்டு பிடிக்க, அதைச் சரி என்று ஏற்றுக் கொண்டவளோ இன்று தங்கையின் முடிவுக்கு முரண்பட்டு நிற்கின்றாள்.

இன்று கசக்கும் இந்த வாழ்க்கை, நாளை தன் தங்கை மனதில் இருக்கும் வடுக்களுக்கு அருமருந்தாகும் என வினயா நன்கு அறிவாள்.
கடவுள் மேல் அத்தனை சுமைகளையும் இறக்கிவிட்டு, தங்கையைக் கட்டாயப்படுத்தி அவள் திருமணத்தை நடத்தினாள்.

உள்ளத்தின் பெரு வலியை நயனங்கள் நன்கு உரைக்க, நடக்கும் எந்தச் சடங்குகளிலும் ஈடுபாடின்றிப் பங்கு கொண்ட தங்கையைப் பார்த்து மனம் ரணமானாலும் அது எதையும் பொருட்படுத்தாது, துளி நீர் கூடக் கண்களிலிருந்து வழிய விடாமல் மிக இயல்பாய் வலம் வந்து அவளும் பெரும்பாடு பட்டு தான் காலை நேர முகூர்த்தை கடந்து வந்தாள்.

தங்கை வாழ்க்கை நன்றாக இருக்க இன்று அவள் அழுகைக்குக் கரைய கூடாது. சுய நினைவிற்கு வந்தவள்,

"வித்யா.. அழறத நிறுத்து... முகத்த கழுவி தொடச்சிட்டுச் சீக்கிரம் வா... நான் சொன்ன வார்த்தைக்காகத் தானே இந்தக் கல்யாணத்த பண்ணிக்கிட்ட, நான் நிம்மதியா இருக்கனும்னு நினைச்சா என் பின்னாடி வா... மாப்பிள்ளை வீட்டுக்குப் போகனும் நேரமாகுது!" உறுதியாகக் கூறிவிட்டு வித்யாவிற்கு வாய் பேச வாய்ப்பளிக்காமல் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாள்.


தங்கையைப் புகுந்த வீட்டில் விட்டுவிட்டு வீடு திரும்ப எத்தனித்த அவளை, அவள் தங்கை வந்து அணைத்துக் கொண்டு அழ,
" நான் எப்பவும் உனக்குத் துணையா தான் இருப்பேன்... என்னை நம்பு டி... முரண்டு பிடிக்காத கண்மணி... இந்த வாழ்க்கைய வாழ முயற்சி பண்ணு!!" எனக் கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை வலுக்கட்டாயமாக விடுவித்து விட்டு தன் பிறந்த இல்லம் நோக்கி வந்தவள், யாரும் தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கட்டளையிட்டுவிட்டு தன் மனபாரம் நீங்கும் வரை அழுது தீர்த்தாள்.

நம் மனதில் தோன்றும் எண்ணங்களின் முரண், சூழ்நிலையின் கையில்லவா!

நன்றி

S விநோதினி

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...