JUNE 10th - JULY 10th
காட்சிப்பிழையாயின்... செவி கேள்!!!
அர்ஜூன் மிகவும் சிரமப்பட்டு விழிகளைத் திறந்தான். அப்போது அவனது தலையில் சுளீரென்று வலி எழுந்தது. அந்த வலியை தாங்க இயலாது அவன் மீண்டும் தனது விழிகளை மூடி கொண்டான்.
"ரொம்ப ஸ்ட்ரையின் பண்ணிக்காதீங்க மிஸ்டர் அர்ஜூன்... உங்க தலையைத் துப்பாக்கி குண்டு துளைத்து இருந்தது. ஆபரேசன் பண்ணி அதை அகற்றி இருக்கின்றோம். மிகவும் ஆபத்தான ஆபரேசன். நல்லவேளை நீங்கள் பிழைத்து விட்டீர்கள்." மருத்துவர் புன்னகையுடன் சொல்லியபடி அர்ஜூனின் உடல்நிலையைப் பரிசோதித்தான்.
அர்ஜூன் அசதியுடன் மீண்டும் விழிகளை மூடி கொண்டான். அவன் நினைவுகளில் ஏதேதோ தெளிவில்லாத நிகழ்வுகள், அதன் கொடுத்த தாக்கத்தில் அவன் வியர்த்து வழிய அதிர்ச்சியோடு எழுந்து அமர்ந்தான்.
"அர்ஜூன், நீ கண் முழிச்சிட்டேன்னு நியூஸ் கேட்டதும் முதல் ஆளா ஓடி வந்தேன்..." என்று மகிழ்ச்சியுடன் சொன்னபடி கண்ணன் உள்ளே நுழைந்தான்.
அர்ஜூன் அவனை விழிகளைச் சுருக்கி கொண்டு பார்த்தான்.
"எப்படிடா இருக்க?" கண்ணன் கேட்டுக் கொண்டே அவன் அருகில் அமர்ந்தான்.
"நீங்க... நீங்க யாரு?" என்று அர்ஜூன் குழப்பத்துடன் கேட்டான்.
"வாட்? அர்ஜூன் என்னை உனக்குத் தெரியலையா? நான் தான்டா உன் பிரெண்ட் கண்ணன்..." கண்ணன் அர்ஜூனின் வார்த்தைகளைக் கேட்டு பதற்றமாகி விட்டான்.
"கண்ணன்? பிரெண்ட்?" அர்ஜூன் தனக்குள் யோசித்தபடி அமர்ந்து இருந்தான்.
அர்ஜூனுக்குத் தன்னை ஞாபகம் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட கண்ணன், அர்ஜூனுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவரை அணுகினான். அவரும் விரைந்து வந்து அவனைப் பரிசோதித்துப் பார்த்தார். பிறகு அவர் அர்ஜூனுக்குப் பழைய விசயங்கள் எல்லாம் மறந்து போய்விட்டது என்று கூற... கண்ணனுக்கு அதைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சி...
********************************
"இங்கே தான் நான் இருந்தேனா?" அர்ஜூன் காரிலிருந்து இறங்கியபடி கண்ணனிடம் கேட்டான்.
"இல்லைடா... இது நான் குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட்... இங்கே தான் என்னுடைய வீடு இருக்கு." கண்ணன் அவனை அழைத்துக் கொண்டு மின்தூக்கி நோக்கி சென்றான்.
"என்னோட வீடு எங்கே இருக்கு?" என்று அர்ஜூன் கேட்டான்.
"உன் வீட்டுக்கு பிறகு போகலாம். இப்போது என் கூட வா..." கண்ணன் அர்ஜூனை மின்தூக்கியினுள் அழைத்துச் சென்றான்.
கடந்த ஒரு மாத காலமாக மோசமாக இருந்த அர்ஜூனின் உடல்நிலை இப்போது தான் தேறி இருந்தது. அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர் கூறி விட்டார். அதான் கண்ணன் அவனைத் தனது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.
மின்தூக்கி மேலே சென்று திறந்ததும் வெளியில் வந்த இருவரும் அங்கிருந்த இரண்டாவது வீட்டிற்குச் சென்றனர். கண்ணன் அழைப்பு மணி அழுத்தியதும் அவனது மனைவி கதவினை திறந்தாள். அர்ஜூன் ராதாவை புதிதாய்ப் பார்ப்பது போல் பார்த்து வைத்தான். அவனைப் பற்றிக் கண்ணன் ஏற்கெனவே அவளிடம் சொல்லி இருந்ததால் அவள் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாது முகம் மலர்ந்தவளாய்,
"வாங்கண்ணா..." என்று வரவேற்றாள்.
இருவரும் வீட்டினுள் நுழைந்தனர். அங்கிருந்த வரவேற்பறையில் அவர்களது ஒன்றரை வயது மகன் ரிஷி விளையாண்டு கொண்டு இருந்தான். கம்பு மாதிரி ஒன்று இருந்தது. அதில் வண்ண வண்ண பிளாஸ்ட்டிக் வளையங்களைச் சரியாகப் போட வேண்டும். எளிதான ஒன்றை அவன் மிகவும் சிரமப்பட்டுச் செய்து கொண்டு இருந்தான். அர்ஜூன் அவனையே பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டு கண்ணன் அவனிடம்,
"ரிஷிக்கு ஆட்டிசம்... அதனால் தான் இப்படி..." என்று விளக்கம் கொடுத்தான்.
"ஆட்டிசம்ன்னா என்ன?" அர்ஜூன் கேள்வி கேட்கவும்,
"ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் ஒரு சிக்கலான நோய். கற்றலில் ஏற்படும் தாமதக் குறைபாடு..." ராதா விளக்கம் கொடுத்தாள்.
அர்ஜூன் ரிஷியை பார்த்தான். அப்போது கண்ணன் ரிஷியிடம், "அப்பா சொல்லு... அப்பா சொல்லு..." என்று சொல்ல...
ரிஷியோ, "ம்மா..." என்று கூறி கை கொட்டி சிரித்தான். அதைக் கண்டு ராதா மகனை வாரியணைத்து முத்தமிட்டவள் மகனிடம் அர்ஜூனை கட்டி,
"ரிஷி, இங்கே பார்... அர்ஜூன் அங்கிள் வந்திருக்காங்க..." என்று சொல்ல...
அப்போது தான் ரிஷி அர்ஜூன் என்ற ஒருவன் இருப்பதைக் கண்டு ஏறிட்டுப் பார்த்தான். பின்பு சிறிது நேரத்திற்குப் பிறகே அவன் அர்ஜூனை கண்டு சிரித்தான்.
அர்ஜூனும் 'வா' என்பது போல் இரு கரங்களையும் விரித்து ரிஷியை அழைத்தான். ரிஷி ஓடி வந்து அவனது கரங்களில் அடைக்கலம் புகுந்தான். அர்ஜூன் அவனை இறுக அணைத்துக் கொண்டான். அவனையும் அறியாது அவனது விழிகள் கலங்கியது.
*************************
அர்ஜூன் பால்கனியில் நின்றிருந்தபடி வெளியில் வெறித்துக் கொண்டிருந்தான். அப்போது கண்ணன் வந்து அவனது தோளை தொட்டான். திரும்பி பார்த்த அர்ஜூன் அவனைக் கண்டு புன்னகைத்தான்.
"சாப்பிட்டியா அர்ஜூன்..."
"ம்... நான் என்னோட வீட்டுக்கு போகணும்..."
"அதுக்குள்ள என்ன அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருந்துட்டு..."
"இல்லை... இப்பவே போகணும்." அர்ஜூன் முடித்துக் கொண்டான்.
அர்ஜூன் இங்கே இருந்த நாட்களில் கண்ணன் மற்றும் ராதா இருவரும் அவனைப் பற்றி அவனிடம் விளக்கமாகச் சொல்லி இருந்தனர். அவன் ஒரு நேர்மை தவறாத காவல்துறை அதிகாரி என்று... அர்ஜூன், கண்ணன் இருவருமே ஒரே நேரத்தில் பயிற்சி முடிந்து பணியில் சேர்ந்தவர்கள். அர்ஜூன் தனது திறமையில் பதவி உயர்வு பெற்று கண்ணனுக்கே மேலதிகாரியாக வந்தான். இது குறித்துக் கண்ணனுக்குப் பெருமை தான்.
"என்னோட குடும்பம்..." அர்ஜூன் கேட்டதும் இருவரும் அமைதியாகினர்.
"என்னோட குடும்பத்துக்கு என்னவாயிற்று?" அர்ஜூன் கண்ணனை பற்றி உலுக்கி கேட்க...
"அர்ஜூன் நீ அநாதை ஆசிரமத்தில் பிறந்து வளர்ந்தவன், உன் மனைவி மீராவும் உன்னைப் போல் தான். நீ விரும்பித்தான் மீராவை கல்யாணம் பண்ணிக்கிட்ட... உங்க சந்தோசமான மணவாழ்க்கைக்கு அடையாளமாய் உனக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் சிமி... மூன்று வயது." கண்ணன் வேறுவழியின்றி நடந்ததைச் சொல்ல... அதைக் கேட்டு அர்ஜூனின் விழிகள் கலங்கியது.
"இருந்தாள் என்றால்? இப்போது அவங்க எங்கே?" அர்ஜூன் பதட்டத்துடன் கேட்டதும்... சிறிது நேரம் மௌனமாக இருந்த கண்ணன் பிறகு,
"யாரோ அவங்களைக் கொன்னுட்டாங்க..." என்க...
"என்னது?" அர்ஜூன் திக்பிரம்மை பிடித்தார் போன்று நின்றிருந்தான்.
"ஆமா... உன்னை, மீராவை, சிமியை யாரோ துப்பாக்கியால் சுட்டுட்டாங்க... அவங்க ரெண்டு பேரும் ஸ்பாட்லேயே இறந்துட்டாங்க... நீ மட்டும் தான் தலையில் புல்லட் பட்டு மயங்கி கிடந்த... டாக்டர்ஸ் எப்படியோ உன்னைப் போராடி காப்பாத்திட்டாங்க." கண்ணன் சொன்னதைக் கேட்டு அர்ஜூனின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அன்று விசயம் கேள்விப்பட்டதில் இருந்து அர்ஜூனுக்குத் தனது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் பெரும் ஆவலாக மாறிப் போனது. இதோ இன்று அவன் கண்ணனிடம் வாய்விட்டு கேட்டும் விட்டான். வேறுவழியின்றிக் கண்ணன் அவனை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
அர்ஜூன் தனது வீட்டிற்குள் நுழைந்ததும் அங்கு வரவேற்பறையில் அவர்களது குடும்பப் புகைப்படம் மாட்டப்பட்டு இருந்தது. அவன் நேரே சென்று அதை வருடி கொடுத்தான். இரு தேவதைகளைக் கொல்ல அந்தக் கயவனுக்கு எப்படி மனது வந்தது?
"அர்ஜூன், நீ இங்கே இருந்தால் இதையே நினைச்சு வருந்திட்டு இருப்ப... அங்கே என்னுடன் வந்து இரு." கண்ணன் சொல்லவும்...
"இல்லை கண்ணா... நான் இங்கேயே இருக்கிறேன்."
"இருந்தாலும் அர்ஜூன்..."
"ப்ளீஸ், வற்புறுத்தாதே கண்ணா..." அர்ஜூன் பிடிவாதமாய் மறுத்ததும் கண்ணன் அவனை அப்படியே விட்டு விட்டு தனது வீட்டிற்குச் சென்றுவிட்டான்.
அர்ஜூன் மனைவி, மகளின் புகைப்படத்தைப் பார்த்தபடி அப்படியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்து இருந்தான். மருத்துவமனையில் இருந்த போது அவனுள் எழுந்த தெளிவில்லாத நிகழ்வுகள் மீண்டும் அவனுக்குத் தோன்றியது. அவன் தனது தலையைப் பிடித்துக் கொண்டான்.
அப்போது அர்ஜூனின் வீடு திறந்திருப்பதைக் கண்டு அவனது பக்கத்தில் வீட்டில் குடியிருக்கும் அம்புஜம் அவனது வீட்டினுள் நுழைந்தார். அவரைக் கண்டு அவன் புருவங்களை யோசனையாய் சுளித்தான்.
"அர்ஜூன் அம்பி..." அவரது குரலில் அவனுக்கு அவரை அடையாளம் தெரிந்தது.
"அம்புஜம் மாமி..." என்றான் முகம் மலர...
"இப்படியாகி போச்சே அம்பி..." என்று அவர் துக்கம் விசாரித்துக் கொண்டிருக்க...
அர்ஜூனோ தனக்குள் திகைத்தபடி அமர்ந்து இருந்தான். அவனுள் ஏற்பட்ட மாற்றம் அவனுக்கே வித்தியாசமாய் இருந்தது. அம்புஜம் மாமி புலம்பியபடி எழுந்து சென்று விட... அவன் கதவை சாற்றி விட்டுச் சோபாவில் அமர்ந்தவன் நிதானமாய் யோசிக்கத் துவங்கினான். பின்பு ஒரு நோட்டு, பேனா எடுத்து மருத்துவமனையில் கண்விழித்ததில் இருந்து இப்போது நடந்தது வரை எல்லாவற்றையும் எழுதியவன் பின்பு அதை நிதானமாகப் படித்துப் பார்த்தான். அப்போது தான் அவனுக்கு ஒரு விசயம் புலப்பட்டது. அது அவனுக்கு ஆச்சிரியத்தை அளித்தது.
அவன் உடனே மருத்துவமனைக்குச் சென்றான். அங்கு அவன் மருத்துவரை சந்தித்துத் தனது அனுபவத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டான்.
"டாக்டர், எனக்கு ஒருத்தரை பார்க்கும் போது அவரது முகம் ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவரது குரலை கேட்கும் போது அவரைப் பற்றிய ஞாபகம் வந்து விடுகிறது. இது எதனால் டாக்டர்?"
மருத்துவர் அர்ஜூன் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு அவனுக்குச் சில பரிசோதனைகளை எழுதி கொடுத்தார். பின்பு அவனிடம்,
"ரிசல்ட் வந்ததும் நாம் இது பற்றிப் பேசலாம்." என்க...
அர்ஜூன் சரியென்று விட்டு அவரது அறையை விட்டு வெளியில் வந்தவன் மருத்துவர் சொன்ன பரிசோதனைகள் செய்துவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியில் வந்தான். அப்போது கண்ணன் அவனை நோக்கி வேகமாக வந்தான்.
"என்னடா திடீர்ன்னு இங்கே வந்திருக்க...?"
"இல்லை சும்மா தான்டா... அடிக்கடி தலைவலி வருது... அதான் டாக்டர் கிட்ட கேட்க வந்தேன்."
"ஓ, நான் கூடப் பயந்து போயிட்டேன்." என்ற கண்ணன் அவனைப் பத்திரமாக அழைத்துச் சென்று வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்குக் கிளம்பி சென்றான்.
****************************
அர்ஜூன் தனது மடிகணினியை திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தான். சில நொடிகளில் அவனுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் காணொளி மூலம் அழைப்பில் வந்தார். அவர் ஏற்கெனவே அவனது அலைப்பேசியில் தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறி, அதன் பிறகே அழைப்பில் வந்தார்.
"நான் யார் என்று தெரிகிறதா?"
மருத்துவர் கேட்டதும் அவரது குரலை வைத்து அவனால் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.
"டாக்டர், ரிசெல்ட் என்னவாயிற்று?"
"உங்களுக்கு ஏற்பட்டு இருப்பது புரோசோபக்னோசியா, முகக் குருட்டுத்தன்மை என்று சொல்வாங்க. இது முக அடையாளத்தை அங்கீகரிப்பதில் ஒரு குறைபாடு ஆகும். குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் தங்களைக் கூட அடையாளம் காண்பதில் புரோசோபாக்னோசிக்ஸ் பெரும்பாலும் சிரமம் உள்ளது."
"டாக்டர்..." அவன் அதிர்ந்து விட்டான். அவனுக்கு இந்த விசயம் புதிது...
"இது ஜீரணிப்பதற்குக் கஷ்டம் தான். ஆனால் இதை நீங்கள் தாண்டி தான் வரணும்." என்றவர் அந்த நோயை பற்றி விளக்கலானார்.
"நரம்பியல் ரீதியாகச் சேதமடையும் பல காரணங்களின் விளைவாகப் புரோசோபக்னோசியா உருவாகலாம். புரோசோபாக்னோசியாவின் வாஸ்குலர் காரணங்களில் பின்பக்க பெருமூளை தமனி இன்ஃபார்க்ட்கள் (PCAIs) மற்றும் டெம்போரோ-ஆக்ஸிபிடல் பகுதியின் இன்ஃபெரோ-மெடியல் பகுதியில் இரத்தக்கசிவுகள் ஆகியவை அடங்கும். இவை இருதரப்பு அல்லது ஒருதலைப்பட்சமாக இருக்கலாம், ஆனால் அவை ஒருதலைப்பட்சமாக இருந்தால், அவை எப்போதும் வலது அரைக்கோளத்தில் இருக்கும். மேலே குறிப்பிட்டுள்ள குறிப்பிட்ட டெம்போரோ-ஆக்ஸிபிடல் பகுதிகளுக்கு வலது அரைக்கோளத்தில் ஏற்படும் சேதம் புரோசோபக்னோசியாவைத் தூண்டுவதற்குப் போதுமானது."
"உங்கள் தலையைத் துளைத்த துப்பாக்கி குண்டு இந்தச் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் விளைவு தான் உங்களுக்குப் புரோசோபக்னோசியா வந்து இருக்கிறது."
மருத்துவர் சொல்லி முடித்ததும் அர்ஜூன் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தான். பின்பு மெல்ல சுதாரித்துக் கொண்டவன்,
"இதற்கு மெடிசின் கிடையாதா?" என்று கேட்க...
"நோ அர்ஜூன்... இதுவரை இதற்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை." அவர் சொன்னதும்... அவனது விழிகள் வலியை பிரதிபலித்தது.
"என் மனைவி, மகளைக் கொன்றவர்களை நான் எப்படிக் கண்டுபிடிப்பது? என்னால் கடந்த காலத்தைக் கூடச் சரியாக ஞாபகப்படுத்த முடியவில்லை. கண்ணனும், அவனது மனைவி ராதாவும் தான் எனக்கு எல்லாவற்றையும் சொன்னார்கள். இதுவும் இதனுடைய குறைபாடுகள் தானா?"
"இல்லை அர்ஜூன்... இந்த நோய் முகத்தின் அடையாளத்தை மட்டுமே மறக்க செய்யும். மற்றபடி உங்களது பழைய நினைவுகளை மறக்கடிக்காது. உங்களுக்கு மூளையில் நடந்த ஆபரேசன் விளைவாக அது செயல்படத் தாமதாகி இருக்கலாம். மற்றபடி நீங்கள் நார்மல்... நீங்க நிதானமா பழசை எல்லாம் யோசிச்சு பாருங்க... உங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமா ஞாபகத்துக்கு வரும்."
"அப்போ கொலையாளி யாருன்னு ஞாபகத்துக்கு வருமா டாக்டர்?"
"கொலையாளி முகம் ஞாபகத்துக்கு வரலைன்னாலும்... அவனோட குரல், அவனது நடை, உடை, பாவனை இப்படி ஏதாவது உங்களுக்கு ஞாபகத்துக்கு வரலாம். அதை நீங்கள் இப்போது சந்திக்கும் மனிதர்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள். நிச்சயம் உங்களால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியும்."
மருத்துவர் விடைபெற்றுச் சென்றதும் அவன் மடிகணினியை அணைத்து விட்டு அவர் சொன்னதை மெல்ல அசை போட்டான்.
அடுத்து வந்த நாட்களில் அர்ஜூன் மெல்ல மெல்ல தனது ஞாபக சக்தியை மீட்டெடுத்து நினைவில் வந்ததை எல்லாம் குறித்து வைத்துக் கொள்ளத் துவங்கினான். இறுதியாக அவன் கொலையாளியை கண்டுபிடித்து விட்டான்.
"என் மனைவி, மகளைத் துடிக்கத் துடிக்கக் கொன்ன உன்னை நான் சும்மா விட மாட்டேன்." அவன் ஆத்திரத்துடன் கத்தினான்.
**************************
கண்ணன் மெல்ல தனது விழிகளைத் திறந்து பார்த்தான். அப்போது அவன் எதிரே அவனது மனைவி ராதா மற்றும் அர்ஜூன் நின்றிருந்தனர்.
"ராதா, அர்ஜூன்... யாரோ என்னைக் கடத்திட்டு வந்துட்டாங்க... சீக்கிரம் என்னைக் காப்பாத்துங்க..." என்று கண்ணன் பயத்தில் அலறினான்.
கண்ணன் எப்போதும் போல் நள்ளிரவில் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது எதிரே கார் ஒன்று வந்து அவனது வண்டியின் மீது மோதியது. அவன் காரை நோக்கி சத்தம் போட்டபடி வண்டியில் இருந்து இறங்க... அப்போது யாரோ அவனது பின்னந்தலையில் தாக்கியது மட்டுமே அவனுக்கு ஞாபகத்தில் இருந்தது.
"இப்படித்தானே நானும், என் மனைவியும், குழந்தையும் கெஞ்சினோம்... நீ எங்களுக்காக இரங்கினாயா?"
"அர்ஜூன் உனக்கு எல்லாம் ஞாபகம் வந்துவிட்டதா?" கண்ணன் திகைப்புடன் அர்ஜூனிடம் கேட்க...
"அப்போ அவருக்கு ஞாபகமே வராதுன்னு நினைச்சு சந்தோசமா இருந்தீங்களா?" ராதா கேட்டதும் மனைவி பக்கம் திரும்பிய கண்ணன்,
"ராதா, அர்ஜூன் பொய் சொல்றான்... நீ நம்பாதே... நான் அப்படிப்பட்டவனா ராதா...?" என்க...
"நீங்க தாதா கிட்ட ஃபோனில் பேசியதை நான் கேட்டுட்டேன்ங்க..."
"ராதா..."
"உங்களுக்கு எதுக்குங்க இத்தனை பணத்தாசை? எங்கே இருந்து இப்படி ஒரு அரக்க குணம் உங்களுக்கு வந்தது? அதுவும் உங்க பெஸ்ட் பிரெண்ட்டை கொலை செய்யும் அளவுக்கு...? நீங்க தாதா கிட்ட பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்டுட்டு நான் அர்ஜூன் அண்ணா கிட்ட விசயத்தைச் சொல்ல போனேன். ஆனா அதுக்குள்ள அவர் அவரோட குடும்பத்தைக் கொன்னது நீங்க தான்னு கண்டுபிடிச்சிட்டார்."
ராதாவை தொடர்ந்து அர்ஜூன் தொடர்ந்தான்.
"நான் ஹாஸ்பிட்டல் போனப்போ நீயும் பின்தொடர்ந்து வந்தப்பவே எனக்குச் சந்தேகம். அதனால் தான் ரிசல்ட்க்காக டாக்டரை நேரே சந்திக்கப் போகாம வீடியோ ஃகாலில் சந்தித்துப் பேசினேன். அவர் என்னோட நிலையைத் தெளிவுப்படுத்திப் பழசை ஞாபகப்படுத்திப் பார்க்க சொன்னார். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திப் பார்க்க முயன்ற போது தான் எல்லாம் தெரிய வந்தது."
"ஹாஸ்பிட்டலில் முதல் முதலா நீ பார்க்க வந்தப்போ உன்னோட குரல் தான் என்னுள் எதிரொலிச்சிட்டு இருந்தது. 'உன்னைக் கொல்லாம விட மாட்டேன்' இது தான் நீ என்னைப் பார்த்துக் கடைசியா சொன்ன வார்த்தைகள். ஹாஸ்பிட்டலில் உன் முகம் ஞாபகத்துக்கு வரலை. ஆனால் உன் குரலை கேட்டதும் எனக்கு உன்னை அடையாளம் தெரிஞ்சது. ஆனாலும் சில விசயங்கள் தெளிவில்லாமல் இருந்தது. அதற்காகத் தான் இவ்வளவு நாள் காத்திருந்து ஞாபகப்படுத்திப் பார்த்து நீ தான் கொலையாளின்னு கண்டுபிடிச்சேன். எனக்குக் காட்சி தான் பிழை... ஆனால் எனக்குச் செவி கேட்கும் திறன் நன்றாக உள்ளது..."
அர்ஜூன் சொன்னது கேட்டு கண்ணன் மிரட்சியுடன் பார்த்தான்.
"ஏன்டா இப்படிப் பண்ணின? நான் உனக்கு என்ன துரோகம் பண்ணினேன்?" கேட்கும் போதே அர்ஜூனின் விழிகள் கலங்கியது.
"நீயும், நானும் ஒரே மாதிரி தான் வேலைக்குச் சேர்ந்தோம். ஆனா நீ ப்ரோமோசன் வாங்கி எனக்கே மேலதிகாரியா வந்த... அநாதையான உனக்கு அறிவாளியான மனைவி, புத்திசாலியான குழந்தை... ஆனால் எனக்கு??? உன்னை விட நான் எந்த விதத்தில் குறைஞ்சு போனேன்டா... எனக்குள் பொறாமை இருந்துட்டே இருந்தது. அப்போ தான் தாதா என் கிட்ட பிசினஸ் டீல் பேச கூப்பிட்டான். எத்தனை நாளைக்கு இப்படி ஐஞ்சுக்கும், பத்துக்கும் அலையறது? அதான் மொத்தமா டீல் பேசி செட்டிலாகிரலாம் முடிவு பண்ணினேன். ஆனால் நீ அதையும் கெடுத்த... என்னைக் காட்டி கொடுக்க நினைச்ச... உன்னை உயிரோடு விட்டால் நீ என்னை அழிச்சிருவன்னு எண்ணி நான் உன்னை அழிக்க நினைச்சேன். நீ தலையில் புல்லட் தாங்கி கீழே விழுந்ததைப் பார்த்து செத்து போயிட்டேன்னு நினைச்சேன்... ஆனா இப்படி உயிரோடு வந்து என் உயிரை வாங்குவேன்னு எனக்குத் தெரியாம போச்சு..."
"என்னைக் கொல்ல திட்டம் போட்ட நீ என்னை அப்படியே விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது. எரிச்சு இருந்திருக்கணும்."
"செஞ்சிருக்கணும்... அதைச் செய்யாம போனது என்னோட தப்பு..."
"இந்தக் கொலையைக் காரணமாக்கி அந்தத் தாதாவோட எதிரியை உள்ளே தூக்கி போட்டு உன்னோட விசுவாசத்தைக் காட்ட நினைச்சு நீ என்னை அப்படியே போட்டுட்டு போயிட்ட... எல்லாத்திலும் ஆதாயம் பார்க்கிறவன் தானேடா நீ..."
"எதுக்குண்ணா பேசிட்டு, சுடுங்க..." ராதா வெறுப்புடன் சொன்னாள். அவளது மனக்கண்ணில் இரத்த வெள்ளத்தில் மிதந்த மீரா, சிமியே வலம் வந்தார்கள்.
"நீ எல்லாம் நல்ல பொண்டாட்டியாடி?" கண்ணன் ராதாவை கண்டு கத்தினான்.
"நான் நல்லவளான்னு எனக்குத் தெரியாது. ஆனா மனசாட்சி உள்ளவள்."
அடுத்து நொடி நேரம் கூடத் தாமதம் செய்யாது அர்ஜூன் கண்ணனை சுட்டுக் கொன்றான். இரத்த வெள்ளித்தில் மிதந்த கண்ணனை இருவரும் உணர்ச்சி இல்லாது பார்த்திருந்தனர்.
மறுநாள் செய்தித்தாளில் ராதா கணவனைக் கொலை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டு இருந்தாள். கண்ணன் அவளைத் தாதாவிற்கு இரையாகச் சொன்னதால் அவள் தனது கணவனைத் துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டதாக அவள் கூறியதாக அதில் சொல்லப்பட்டு இருந்தது. அர்ஜூன் அவளைத் தேடி சிறைக்குச் சென்றான்.
"ஏன் இப்படிப் பண்ணின?"
"அவனை என் கையால் கொன்னு இருக்கணும். ஆனால் இழப்பினால் வருந்துபவர் நீங்க... அதான் தீர்ப்பை உங்கள் கையில் விட்டு விட்டேன். ஆனால் தண்டனை எனக்குக் கிடைக்கட்டும். குடும்பத்தை இழந்து தவிக்கும் உங்களுக்கு மேலும் தண்டனை வேண்டாம்."
"ரிஷியை மறந்து போனாயே ராதா..."
"நீங்க இல்லையாண்ணா?" என்றவளை கண்டு அர்ஜூன் கண்ணீர் மல்க ஆமென்பது போல் தலையசைத்தான்.
************************
"ரிஷி கண்ணா, சமத்தா ஸ்கூல்ல இருக்கணும். அங்கிள் வேலை முடிஞ்சு வந்து உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்." அர்ஜூன் ரிஷியை ஆட்டிசம் குழந்தைகளுக்கு என்று இருக்கும் பள்ளியில் விட வந்திருந்தான்.
ரிஷி புரிந்தார் போன்று தலையாட்ட... அர்ஜூன் கிளம்புவதற்காகத் திரும்பினான். அப்போது ரிஷி அவனது கால்களைப் பிடித்துக் கொண்டு,
"ப்பா..." என்றான்...
அதைக் கேட்டு அர்ஷூன் ஆனந்த கண்ணீர் மல்க ரிஷி உயரத்திற்குக் குனிந்தவன் அவனை அள்ளி அணைத்துக் கொண்டான்.
காட்சிப்பிழையாய் மாறி போன மகவு... ஆம், அவனது மகளுக்குப் பதிலாக ரிஷி... ஆனால் செவி கேட்கும் வார்த்தை ஒன்றே...
அது 'அப்பா' என்னும் மந்திரச்சொல்...
ஒருவிதத்தில் அர்ஜூனும், ரிஷியும் ஒன்றே... ஆட்டிசம் உள்ளவர்களில் பெரும்பாலானோர் புரோசோபக்னோசியா நோயால் பாதிக்கப்பட்டவர்களே! இனி இருவரும் தங்களது தனி உலகத்தில் மகிழ்ச்சியாய்..!!!
சுபம் *_*
ReplyForward
#33
தற்போதைய தரவரிசை
78,083
புள்ளிகள்
Reader Points 12,250
Editor Points : 65,833
256 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 4.8 (256 ரேட்டிங்க்ஸ்)
Svrevathi0605
kalaipriya1993
அழகான நடை. மனத்தைத் தொட்ட கதை.
ushasendil1966
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்