JUNE 10th - JULY 10th
"மௌனத்தின் பின்னால்"
அன்று காலையில்தான் அவ்வீட்டு இளவரசியின் திருமணம் சொந்தங்களுடன் கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது.
ஆம்! சொந்தங்கள் மட்டுமே நடத்திய திருமணம் அது! திருமணம் முடிந்த கையோடு மணமக்களும் சொந்தபந்தங்களும் பெண்ணைப் பெற்றவளைக் காண அவளது வீட்டிற்குச் சென்றனர்.
அங்கே…!!
"சாரி மிஸ்டர் தேவராஜ்! உங்க மனைவி கடைசி நிமிஷங்களை எண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்ககிட்ட ஏதாவது பேசணும்னா இப்பவே பேசிடுங்க" என்று மருத்துவர் தோளில் ஆதரவாக அழுத்தி விட்டுச் சென்று விட, தேவராஜின் முகமோ உணர்ச்சிகளைத் தொலைத்திருந்தது.
அந்நேரம் அவரது மகள் மாலையும் கழுத்துமாகத் தன் இணையுடன் உள்ளே நுழைய, மகளின் திருமணக் கோலத்தைக் கண்ணாரக் கண்டு களித்தவர், அதை மனதிற்குள்ளும் நிரப்பிக் கொண்டார்.
ஆனால் அவரது மகளோ, தந்தையின் முகபாவனையில் இருந்தே சூழ்நிலையை உணர்ந்து கொண்டவள், பொங்கி வந்த அழுகையோடு தாயின் அறைக்குச் சென்று, இறக்கும் தருவாயில் இருந்த அன்னையைக் கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள்.
மகளின் ஸ்பரிசத்தில் லேசாகக் கண் விழித்த தேவகியின் முகம் பளிச்சென்று மின்னியது. இந்தக் காட்சியைக் காணத்தானே காலனிடமிருந்து அவர் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்!!
நிறைந்த புன்னகையுடன் அவர் தன் கணவனைக் காண, மனைவியின் பார்வையைப் புரிந்து கொண்ட தேவராஜ், தேவகியின் அருகில் சென்று, மனைவியின் கையைத் தூக்கி மகளின் தலையில் வைத்தவர், தானும் மனைவியின் கை மேல் கை வைத்து,
"நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்டா!! கல்யாணத்தப்ப அப்பாவும் அம்மாவும் பக்கத்துல இல்லன்னு கஷ்டப்படாதே! நாங்க இல்லன்னாலும்
எங்களோட ஆசீர்வாதம் என்னைக்கும் உனக்கு உண்டு" என்ற கணவனை அதிர்ச்சியுடன் பார்த்தார் தேவகி.
அவரோ அழுத்தமாக தன் மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தார். இருவரின் விழிகளும் மௌனமாக ஆயிரம் கதை பேசிக் கொண்டிருந்தது.
பெற்றவர்களின் மௌனத்தில் தன் துக்கத்தை அடக்கிக் கொண்ட அவர்களது மகளோ, அவர்களுக்குத் தனிமை கொடுக்க எண்ணியவள், தன் கணவனை அழைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறி விட, தேவராஜ் கட்டிலின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு மனைவியின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
அந்த அழுத்தமே கூறியது, அவரது உள்ளத்தவிப்பை! அதைப் புரிந்து கொண்ட அவரது மனையாளோ, கணவனைத்தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆண்மகன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைக்குள் வளர்க்கப்பட்டவர் தேவராஜ். அப்படித்தான் அவரும் இன்று வரை இருந்தும் வந்துள்ளார்.
சிறு வயது முதலே, "நீ ஆம்பளை பையன்டா! நீ எது செய்தாலும் சரியாதான் இருக்கும்" என்று சொல்லி சொல்லியே ஆணாதிக்கம் என்ற விதையை விதைத்தே வளர்த்தார்கள், அவனது பெற்றவர்கள். அதையே பருவ வயதிலும் பற்றிக் கொண்டான் தேவராஜ்.
வாலிப வயதில் ஒரு பெண்ணைக் காதலித்து, அந்தப் பெண் இவனது குணத்தைச் சுட்டிக்காட்டி நிராகரித்தது, அவனது ஆணவத்திற்கு விழுந்த முதல் அடி!
அந்த வலியைத் தன் மனைவியான தேவகிக்கு திருப்பிக் கொடுத்தான் தேவராஜ். ஆம்! 'ஒரு பெண் தன்னை நிராகரிப்பதா??' என்ற கோபத்தில் இருந்தவன், திருமண வயது வந்தவுடன், தன் பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணான தேவகியிடம் முதலில் இருந்தே ஆணாதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தான்.
முதலிரவில் பயத்துடன் வந்த பெண்ணிடம், அவளின் உணர்வுகளை மதிக்காமல், வலிக்க வலிக்க ஆண்மையை உணர்த்தினான்.
மனைவி நின்றால் குற்றம்! நடந்தால் குற்றம்! பேசினால் குற்றம்! என அவளை அடக்கி ஒரு மூலையில் முடக்கினான்.
கணவனது செயலைத் தாங்க முடியாமல் கேள்வி கேட்டவளிடம், "நான் இப்படித்தான்!! என்னை எதிர்த்து பேசாதே! மீறினால் விவாகரத்து செய்வேன்!" என்ற வார்த்தையை உதிர்த்து மனைவியின் வாயை அடக்கினான்.
பொறுத்து பொறுத்துப் பார்த்த தேவகி, இனி தன்னால் கணவனுடன் வாழ முடியாது என்று முடிவெடுத்து, பின்பு தஞ்சமடைந்தது, அவளது பெற்றவர்களிடம்! இது தேவராஜின் தன்மானத்திற்கு விழுந்த இரண்டாவது அடி!!
இருந்தும் அவனாகப் போய் மனைவியை அழைக்கவில்லை. போனவளே திரும்பி வரட்டும் என்று வைராக்கியத்துடன் அவன் இருந்து விட, தேவகியும் போன வேகத்திலேயே திரும்பி வந்தாள், கணவனிடமே!
தன்னை விட்டுப் போனவளிடம், "ஏன் விட்டுச் சென்றாய்?" என்றும் அவன் கேட்கவும் இல்லை! திரும்பி வந்தவளிடம், "ஏன் வந்தாய்?" என்றும் அவன் கேட்கவில்லை! மனைவியிடம் ஒரு அழுத்தமான பார்வையை வீச, அவளோ இமை தாழ்த்தி மௌனச்சிறைக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டாள்.
அதற்காக அவர்கள் இருவருக்குள்ளும் தாம்பத்தியம் என்ற ஒன்று இல்லாமல் இல்லை. இரவின் இருளில், அவன் காமம் கொண்டு தன் மனைவியை நாடும் பொழுதெல்லாம், அமைதியாகக் கணவனுக்கு இசைந்து கொடுத்தாள் தேவகி.
வருடங்கள் பல கடந்தும் பிள்ளைப்பேறு மட்டும் அவனுக்குக் கிட்டவில்லை. 'பழி ஓரிடம் பாவம் ஓரிடம்' என்பது போல் ஆண்களைத் தலையில் தூக்கி வைத்து ஆடும் சமூகம், பெண்களை "மலடி" என்று கூறி அவர்களின் மனதை நொடிப்பது போல், அதே சொல் அம்பை தேவகியின் மீதும் பாய்ச்சினர். அதன் வலி தாங்காமல் அவள் வருந்தும் போதெல்லாம், உணர்ச்சியற்ற முகத்துடன் வேடிக்கை பார்ப்பானே தவிர மனைவிக்கு ஆறுதல் அளிக்க மாட்டான் தேவராஜ்.
ஆனால் கணவனின் ஆண்மைக்கு ஓர் இழுக்கு வந்து விடக் கூடாது என்று எண்ணி தேவகி தெய்வத்திடம் பழியாய் கிடக்க, அவளது கண்ணீரைக் கண்டு கரைந்த அந்த தெய்வம், சில மாதங்கள் கழித்து, அவளுக்கு ஓர் பெண்குழந்தை பிறக்க வரமளித்தது.
அக்குழந்தையை கண்டு அவள் மகிழ்ந்தாளோ இல்லையோ, தேவராஜ் தன் மகளைக் கையில் ஏந்தி கொஞ்சிக் கொண்டாடித் தீர்த்தான். ஆடு பகை குட்டி உறவு போல! என்ன இருந்தாலும் அவன் உயிரில் இருந்து வந்த மகளாயிற்றே!!
மகள் என்றதும் அவனும் மாறினான். பெண்கள் அடங்கி ஒடுங்கி இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை மாற்றி, மகளை இளவரசியாக வளர்த்தான். மகளுக்கும் தனக்குமான உலகத்தில் அவன் மனைவியைக் கூட நுழைய விடவில்லை.
தேவைக்கு மட்டுமே பேச்சு மனைவியிடம்.. மற்ற நேரம் ஆண் என்னும் பிம்பத்தை விட்டு அவனால் வெளியே வர முடியவில்லை.
அப்படி அருமை பெருமையாக வளர்த்த பெண்ணின் திருமணத்தைக் கண்ணார காணாமல், தன் அருகிலேயே கணவன் இருந்திருக்கிறான் என்று புரிந்ததும், தேவகியின் முகத்தில் அதிர்ச்சி விலகி, அழகான புன்னகை ஒன்று வந்து போனது.
அந்தப் புன்னகைக்குப் பின்னே இருக்கும் அர்த்தம் அவள் மட்டுமே அறிவாள்! ஆம்! கணவன் தன்னைக் காதலிக்கிறான். மனைவி காண முடியாத தன் மகளின் திருமணத்தை தானும் காணக் கூடாது என்ற எண்ணத்தில் தன்னுடன் இருந்த கணவனின் காதலை எண்ணி மகிழ்ச்சியில் அவளது கண்கள் கலங்கியது.
இன்றல்ல, என்றோ அவள் தன் கணவனின் காதலைக் கண்டுகொண்டு விட்டாள்!
தேவராஜ் தன்னைப் பெண் பார்க்க வந்த போதே அவரது அழகிலும், கம்பீரத்திலும் மயங்கியவள்தான் தேவகி! திருமணமாகப் போகும் பெண்களுக்கே உண்டாகும் மயக்கம் அது!
அந்த மயக்கம் அவன் குணத்தைப் பற்றி உற்றார் உறவினர் கூறிய போதும் கூடத் தெளியவில்லை. ஆனால் முதலிரவின் போது, தாம்பத்தியம் என்ற பெயரில், பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை சிதைத்த போது நிஜமான மயக்கத்திற்கே சென்றாள் பெண்.
காலையில் கண் விழித்ததும், தன் உடலில் உண்டான வலியில், கணவனின் செயலைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை அவளால்! அதைப் பற்றி அவள் கேட்ட போது, "நீ என் மனைவி! என்னை எந்நிலையிலும் தாங்கித்தான் ஆக வேண்டும்!" என்று கூறுபவனிடம்,
'மனைவியா? மனுஷியாக கூட நடத்தவில்லையே?' என்று உள்மனம் கேள்வி கேட்டாலும், இப்படிப் பேசுபவனிடம் மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறிப் போனாள் பெண்ணவள்.
இதே கதை தினமும் தொடர்ந்தாலும், அதை ஏற்றுக் கொண்ட பெண்ணால், அவனது அடக்கு முறையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்குப் பின்னான காரணம் தெரிந்ததும், வேறொரு பெண்ணை நினைத்து தன்னைத் தொட்டவனிடம் இனி வாழ முடியாது என்று கூறி, அவள் பெற்றோரிடம் சென்று விட்டாள்.
தேவராஜ் மனைவியைத் தேடிச் செல்லவில்லை. தேவகியின் பெற்றோர்கள் அவனைத் தேடிச் சென்று மருமகனிடம் சண்டையிட, அவர்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தான். இறுதியாகத் தன் மகளின் மனதில் உள்ள கேள்வியை அவர்கள் கேட்டு விட, விலுக்கென்று அவர்களை நிமிர்ந்து பார்த்தவன்,
"என்னைக் கேள்வி கேட்குற உரிமை என் மனைவியைத் தவிர வேற யாருக்கும் இல்லை! அதே சமயம் எவளையும் நினைச்சு உங்க பொண்ணைத் தொட இந்த தேவராஜ் அசிங்கமானவனும் இல்லை!" என்று உக்கிரமாகச் கூறிச் சென்று விட்டான்.
அந்த ஒரு வார்த்தையே தேவகிக்கு போதுமானதாக இருக்க, போன வேகத்தில் கணவனைக் காண திரும்பி வந்து விட்டாள். வந்தவளை ஏன் வந்தாய் என்றும் கேட்கவில்லை அவன். சொல்லாமல் கொள்ளாமல் மனைவி தன்னை விட்டுச் சென்ற கோபம் அவனுக்கு!
அவளைப் பிடித்துத்தான் திருமணம் செய்தான். கூடலின் போதும் அவளுடன் முழுமனதாகத்தான் கலந்தான். ஆனால் அதில் தன் ஆண்மையை உணர்த்தி விடும் வேகம் இருந்ததே தவிர மனைவியின் வலியை அவன் பொருட்படுத்தவில்லை. அதுதான் அவன் செய்த மாபெரும் தவறு!!
தேவராஜ் மட்டும் அல்ல, நம் நாட்டில் சில ஆண்கள், ஓர் பெண்ணிடம் கட்டிலில் தன் வீரத்தை காட்டுவது தான் ஆண்மையின் இலக்கணம் என்ற தவறான புரிதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தவறை சரியாக்கினால் அவர்கள் வாழ்வு வண்ணமயமாகி விடுகிறது. இல்லையேல் நரகமாகி விடுகிறது. வாழ்க்கையை வரமாக்குவதும், நரகமாக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது. இதில் கணவனோ மனைவியோ, யார் புரிதல் என்னும் இலக்கை நோக்கி முதல் அடி எடுத்து வைப்பது? என்பது தான் இங்கு கேள்விக்குறி??!!
எப்படியும் தேவராஜ் இறங்கி வரப் போவதில்லை. அதனால் தேவகி கணவனைப் புரிந்து கொள்ளும் நோக்கில், அவனது கோபத்தை அமைதியான முறையில் எதிர்கொள்ள ஆரம்பித்தாள். நிறை குறைகளோடு கணவனை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்தாள்.
அவளது முயற்சி வீணாகவில்லை. வலிமையான பேச்சுக்கள் உணர்த்தாத அவளது வலியை, அவளது மௌனம் உணர்த்தியது! அவளது கண்ணீர் உணர்த்தியது!
பெண்கள் தன் உணர்வுகளைக் கண்ணீரில் கரைக்கின்றனர். ஆண்கள் தன் உணர்வுகளைக் காமத்தில் கரைக்கின்றனர். அந்தக் காமம் அப்பெண்களுக்கு வலியை ஏற்படுத்துகிறதா இல்லை பரவசத்தை ஏற்படுத்துகிறதா என்று அவதானிப்பது ஆண்களின் கையில்தான் உள்ளது.
தேவராஜூம் தன் மனைவியின் சத்தமில்லா கண்ணீரில், அவளது வலியில் தன் தவறை உணர்ந்தவன், தன் அன்பையும் காதலையும் சொல்லில் அல்லாமல் செயலில் காட்டினான். கூடல் முடிந்து என்றும் இல்லாமல் அவன் கொடுத்த நெற்றி முத்தத்தில், கணவனின் மாற்றத்தை, மனைவியும் உணர்ந்து கொண்டாள்.
பிள்ளைப்பேறு தள்ளிப் போகும் போதெல்லாம் மலடி என்று மற்றவர்கள் கூறும் போது, கணவனின் அமைதி அவளின் மனதை வாள் கொண்டு அறுக்கும். மௌனமாக அவள் கண்ணீர் வடிக்கும் போது, அதே கணவன், "நான் ஆம்பளையான்னு உனக்கும், நீ மலடி இல்லைன்னு எனக்கும் மட்டும் தெரிந்தால் போதும்! மத்தவங்களைப் பத்தி எனக்குக் கவலையில்லை!" என்று கோபமாகச் சொல்லும் அந்த வார்த்தைகளில், அவளது மனதில் மழைச்சாரல் அடிக்கும்.
கோவிலுக்குச் சென்று பிள்ளை வரத்திற்காக தேவகி விரதம் இருக்கும் போதெல்லாம் நெருப்பாய் காய்வான் தேவராஜ். அந்த நெருப்பில் சுகமாய் குளிர்காய்வாள் தேவகி.. கணவனின் கோபம் தன் மீதான அக்கறையால் என்று தெரிந்து கொண்டதினால்!
பிள்ளை வரம் பெற்ற போது, அவன் அடைந்த மகிழ்ச்சியை விட அவள் அடைந்த மகிழ்ச்சியே அதிகம்! இனி யாரும் தன் கணவனைக் கையாலாகாதவன் என்று தன் காதுபட கூற முடியாதே என்ற கர்வத்தினால்!
பிள்ளைப்பேறு கிடைக்காமல் போனால் பெண்களை மலடி என்று சத்தமாகக் கூறும் அதே சமூகம்தான், ஆண்களைக் கையாலாகாதவன் என்று சத்தமில்லாமல் அவமானப்படுத்தி விடுகிறது. என்ன ஒன்று?? பெண்களின் குறைகள் உரத்து ஒலிக்கும், ஆண்களின் குறைகள் சத்தமில்லாமல் அடங்கி வாசிக்கும்.
தேவராஜையும் விடவில்லை இந்த அவதூறு பேச்சுகள். என்ன ஒன்று?? அதைக் கணவனுக்குத் தெரியமால் மறைத்து விட்டாள் தேவகி.
பிள்ளையைக் கவனிக்கிறேன் என்ற பெயரில் மனைவியையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டான் தேவராஜ்.
அதை உணர்ந்து அவள் கேட்டால், 'உன் மேல் அக்கறை இல்லை' என்று சாதிப்பான். தன்னை விட்டுச் சென்ற கோபம் இன்னும் இருக்கிறது என்பான். அதைக் கேட்டு மனதுக்குள் சிரித்துக் கொள்வாள் தேவகி.
பிரசவவலியில் அவள் துடித்த போது, வெளியே விறைப்பாகக் காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் துடித்தான் தேவராஜ். பிரசவத்தில் சிக்கல் என்று மருத்துவர் கூறி, தாயா சேயா என்ற நிலை வந்த போது, மனைவிதான் வேண்டும் என்று அவன் உறுதியாக கூறி விட, கடவுள் அருளால் சுகப்பிரசவம் நடந்து தாயும், சேயும் காப்பாற்றப்பட்டனர்.
மகளைக் கையில் ஏந்தி பூரிப்படைந்த அதே சமயம் மனைவியையும் விழிகளால் ஸ்பரிசித்துக் கொண்டான் தேவராஜ். பிள்ளையைப் பார்க்க வந்த உறவினர் ஒருவர்,
"என்னப்பா தேவராஜ், இருந்து இருந்து இப்பதான் கடவுள் உனக்கு குழந்தை வரம் கொடுத்திருக்கான். ஒரு நிமிஷத்துல யோசிக்காம அந்தக் குழந்தையை வேணாம்ன்னு சொல்லிட்டியே??" என்று குறைபட்டுக் கொள்ள,
மனைவியை ஒரு பார்வை பார்த்த தேவராஜ், "இந்தக் குழந்தை போனா இன்னொன்னு.. சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும் மாமா" என்றான். அவன் வார்த்தைகளில் பொதிந்திருந்த காதல் அவருக்குப் புரியாவிட்டாலும், அவன் மனைவிக்குப் புரிந்து போனது.. பேச்சு மட்டும் அல்ல, அவனின் சொல்லப்படாத காதலும்..!!
இப்படியே கணவனும், மனைவியும் தங்களது மனதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மௌனமாகக் காதல் செய்தனர்.
என்னதான் தள்ளியிருந்து காதலைப் பரிமாறிக் கொண்டாலும், அவன் காதலும் வெளிப்படும் நாள் ஒன்று வரும் அல்லவா?!
ஒரு நாள் சாலையில் நடந்து போகும் போது, யாரோ கணவன்-மனைவி இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அந்த மனைவியானவள் கணவனிடம், "உனக்கெல்லாம் என்னோட கஷ்டம் இப்ப புரியாதுய்யா. உனக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கணும்! அதுக்கும் உன்னை மாதிரி புருஷன் கிடைச்சு கஷ்டப்படணும்! அதைப் பார்த்து நீ திருந்தணும்!" என்று கணவன் மீதிருந்த கோபத்தில் அவனுக்குச் சாபமிட்டுக் கொண்டிருக்க, அந்த வார்த்தை அவளது கணவனைத் தாக்கியதோ இல்லையோ தேவராஜ் இதயத்தைத் தாக்கியது.
உடனே வீட்டுக்கு வந்தவன், தூங்கிக் கொண்டிருந்த மகளை அள்ளி எடுத்துத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அவன் தன் மனைவிக்குச் செய்த துன்பம் அப்பெண்ணின் வார்த்தையில் உறைத்தது போலும்! அவன் நெஞ்சமெல்லாம் பதறியது.
அவனது மனையாளோ, கணவனின் செயலில் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, அவனோ தன் மனைவியிடம், "நீயும் அப்படித்தான் நினைச்சிருப்பியோ??" என்று கேட்டான்.
கணவனின் கேள்வியில் தேவகி புரியாமல் திருதிருவென முழிக்க, அவனோ மனைவியின் கண்களைப் பார்க்க முடியாமல் வெளியறி விட, குழம்பித் தவித்தது என்னவோ அவன் மனையாள்தான்!
அதன் பிறகு தேவராஜ் மௌனத்தை தத்தெடுத்துக் கொண்டான். மனைவியிடம் பேச விடாமல் குற்றவுணர்ச்சி அவனைத் தடுத்தது. தேவைக்கு மட்டும் பேசியவன், மனைவியையும் குழந்தையையும் நன்றாகப் பார்த்துக் கொண்டான்.
காலங்கள் கடந்து தேவராஜின் மகளும் பருவ வயதை எய்தியதும், ஒருவனைக் காதலிக்கிறேன் என்று வந்து நிற்க, அவருக்கு அதிர்ச்சிதான்! உடனே சம்மதித்து விடவில்லை.
மகள் காதலிக்கும் பையனைப் பற்றிய தகவலைச் சேகரித்தவர், வசதியில் இவரை விட அவர்கள் குடும்பம் குறைவாக இருப்பதைக் கண்டு, தன் மகள் வசதியான வாழ்க்கையைத்தான் வாழ வேண்டும் என்று எண்ணி, மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மகளின் வாடிய முகத்தைக் கண்டு தேவகிதான் பல வருடங்கள் கழித்து தைரியமாக, "பணத்தைப் பார்க்காதீங்க, குணத்தைப் பாருங்க.. அதோட இரண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு. பணத்தைக் காரணம் காட்டி அவங்களைப் பிரிச்சி, இன்னொரு தேவராஜை நீங்களே உருவாக்கிடாதீங்க!" என்று கூற, மனைவியின் பேச்சு அவரது முகத்தில் அறைந்தது.
மனைவின் மனதில் சில வலிகள் ஆறா வடுவாக இருக்கிறது என்பதை அவ்வார்த்தைகளில் புரிந்து கொண்டார். தான் முன்பு போல் அல்ல என்றைக்கோ மாறி விட்டேன் என்று அவர் தன் மனைவிக்கு உணர்த்தும் நேரம், காலன் தேவகியின் உயிரைப் பறிக்கக் காத்திருந்தான்.
ஆம்! பிளட் கேன்சர் நோயால் அவர் மனைவி பாதிக்கப்பட்டிருந்தாள். அதை அறிந்து அதற்கு மருத்துவம் அளிப்பதற்குள் காலம் கடந்திருந்தது. மூன்றே வாரங்கள் ஓர் உயிரை உருக்குலைக்க முடியுமா?? முடிந்தது கேன்சர் என்னும் நோயால்!!
தான் இறப்பதற்கு முன் மகளின் திருமணக் கோலத்தைக் கண்ணார காண வேண்டும் என தேவகி மனதால் நினைத்ததை, நிஜத்தில், நிகழ்த்திக் காட்டினார் தேவராஜ்.
கணவன் மனைவியிடத்தில் பேச்சுக்கள் அதிகம் இல்லை என்றாலும் மனதால் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து வைத்திருந்தனர். அந்தப் புரிதலை வாய் திறந்து சொல்லியிருந்தால், அவர்கள் வாழ்க்கை சிறந்திருக்குமோ என்னமோ??
காலன் கொடுத்த கெடு குறைந்து கொண்டே வருவதை உணர்ந்து கொண்ட தேவகி, மிகவும் சிரமப்பட்டுக் கலங்கிய கண்களுடன், "நான் இல்லாம உங்களால இருந்திட முடியுமா?" என்று குரல் தழுதழுக்க கேட்க, அக்கேள்வியில் மொத்தமாய் உடைந்து போனார் தேவராஜ்!!
மனைவி நோய்வாய்ப்பட்டதில் இருந்தே மனதளவில் துவண்டு போயிருந்தவர், தனது வலியை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தார். மனைவியின் இறப்பை எண்ணி எண்ணியே, அவர் தன் ஆயுளை குறைத்துக் கொண்டே வர, மரணத்தறுவாயிலும் தன் நலனை எண்ணி மனைவி கேட்கும் கேள்விக்குச் சொல்லால் பதிலளிக்காமல் வழக்கம் போல் அவர் செயலால் பதிலளித்திருந்தார்.
ஆம்! இதுநாள் வரை தன்னைத் தாங்கிய மனைவியை, அவளுக்கு முன் உயிர் துறந்து, தன் பின்னால் வந்த மனைவியை இரு கைகள் விரித்து வரவேற்று, தன் நெஞ்சுக்குள் பத்திரமாகப் புதைத்துக் கொண்டார்.
அவ்வுலகத்தில் ஆண்-பெண்ணுக்கான நியதிகளும், கட்டுப்பாடுகளும் இல்லை! இரு மனங்களின் சங்கமமும், அதில் காதலும் மட்டுமே!
தேவகியின் மௌனத்திற்குப் பின்னால் புரிதலான காதல் என்றால், தேவராஜ் மௌனத்திற்குப் பின்னால் ஆழமான காதல்! அதை இருவருமே ஒருவர் அறியாமல் மற்றவர் புரிந்து கொண்டனர்.
தேவராஜ் போல் பல ஆண்களும் இச்சமூகத்தில் உண்டு. ஆண் என்னும் பிம்பத்தை மீறி, அவனுள் இருக்கும் காதலன் வெளிவர நினைக்கும் போதெல்லாம், இச்சமுதாயம் "பொண்டாட்டிதாசன்" என்ற பெயர் சூட்டி, அவனது காதலைச் சொல்ல விடாமல் முடக்கி விடுகிறது. ஊர் உலகத்தின் பேச்சுக்கு செவிமடுத்தே சில ஆண்கள் தன் வாழ்க்கையைக் கொண்டு செல்கிறார்கள்.
ஒத்துக் கொள்ளாவிட்டாலும் இதுதான் நிதர்சனம்!! ஆணுக்கும், பெண்ணுக்கும் கற்பு மட்டும் அல்ல, உணர்வுகளும், அவமானங்களும் சமமானது என்று கூறிக் கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்!
#31
தற்போதைய தரவரிசை
44,600
புள்ளிகள்
Reader Points 14,600
Editor Points : 30,000
296 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 4.9 (296 ரேட்டிங்க்ஸ்)
rani
shivani
manosherin
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்