விமோச்சனம்

பயண இலக்கியம்
5 out of 5 (28 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

ஐந்து மணிநேரம் ஆகிவிட்டது எந்த நேரத்திலும் கேட்டைத் திறந்துவிடலாம். "இன்கா என்செப்பு சார் அவ்னு" வெளியே
செந்தூர சீருடை அணிந்து, நடந்து கொண்டிருந்த கோவில்
பணியாளிடம் கேட்டான் ஒருவன்.

கோவில் பணியாள் "எண்ணி சாரி அடுகுதுவு கொன்ச்ச wait ச்செய்"
"கோபா படகாண்டி sir கொன்ச்சம் செப்பண்டி sir" என்று மீண்டும்

அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென ஒரு பெரிய எலெக்ட்ரிக் மணியோசை கேட்க சீருடை அணிந்தவர் அங்கிருந்து நகர்ந்தார்.

இவர்கள் பேசுவதை பின்னாலிருந்து கேட்டுக்கொண்டிருந்த பன்னீர் மீண்டும் தன் மனைவி குழந்தை அமர்ந்திருந்த இடத்தை நோக்கிச் சென்றான்.

பெரிய அகல படிக்கட்டுகள் போல், மேலே ஏறியிருந்த அறையின் கடைசியில் அவன் மனைவி அமர்ந்திருந்தாள். அருகிலிருந்த மூன்று இளைஞர்களிடம்

மனைவி பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த பன்னீர் வேகமாக முன்னேற முயற்சித்தான். முந்நூறு பேருக்கு மேல்

அடைக்கப்பட்டிருந்த இடத்தில் இருபக்கச் சுவற்றில் பல மின்விசிறிகள் இருந்தது,

ஆனால் அதில் நான்கோ ஐந்தோ தான் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த பெரிய gateஇன் மேலே ஒரு பழைய டிவி அதில் ராமாயணம்
தெலுங்கில் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தை ஒன்று புழுக்கம் தாங்காமல் அடித்தொண்டையிலிருந்து ’க்ரீச்’ குரலில் கத்திக்கொண்டிருந்தது.

அங்கே பலமணிநேரம் காத்திருந்து சோர்வுற்றவர்களுக்கு மேலும் எரிச்சலூட்டியது. அந்த அறையின் உள்ளே பல மொழிகள் ஒரே நேரத்தில்

பேசப்பட்டதால் தங்கள் அருகில் இருப்பவர்களின் உரையாடல்களைக் கூட கடக்கமுடியாமல் பொறுமை இழந்த வண்ணம் இருந்தனர்.

பன்னீர் தட்டுத் தடுமாறி மெல்ல படுத்திருந்த சிலரைக் கடந்து
முன்னேறி சென்று கொண்டிருக்க, வழியில் ஒரு வாடா இந்திய பெண்ணை மித்தித்து திட்டுவாங்கி, மன்னிப்புகேட்டு,

எப்படியோ மாணவி மகளிடம் வந்தான்.

கடைசியாகக் கூட்டத்தைக் கடந்து தன் மனைவி குழந்தையிடம் வந்து அமர்ந்தான்.
பன்னீரின் மனைவி "எவ்ளோ நேரம் ஆகுங்க"
பன்னீர் "இன்னும் ஒருமணி நேரம் ஆவுமா"
"இன்னும் ஒரு மணி நேரமா" என சோர்வாகக் கேட்டு உச்சு
கொட்டினாள் பன்னீரின் மனைவி லல்லி.
"அந்த பசங்க கிட்ட என்ன பேசிட்டிருந்த"
"தமிழ் பசங்க தாங்க, காஞ்சிபுரமா" லல்லி கூற
பன்னீர் அருகிலிருந்த பேக்கிலிருந்து ஒரு டவல் எடுத்து
அவன் முன் இருந்த சின்ன இடத்தில் விரித்து, அதுவரை
லல்லியின் மடியில் படுத்திருந்த மகளை தூக்கி முன்னால் படுக்க
வைத்தான். பேக்கை எடுத்து தலைக்கு வைத்தான்.

பெருமூச்சு விட்டபடி "ப்பா மூச்சே விட முடியல செமையா weight
போட்டா" என்று விலகியிருந்த புடவையை சரிசெய்து பன்னீரின்
மடியில் தலையை சாய்த்துப் படுத்தாள். லல்லியின் கால் அந்த
மூன்று இளைஞர்களின் பக்கம் இருந்தது. பன்னீர் அவளின்
கால்களையும் அந்த இளைஞர்களையும் பார்த்தான். அவர்கள்
எதோ மும்முரமாக பேசிக் கொண்டிருந்தனர்.
"இந்த பக்கம் தல வச்சி படு" என்று கூறினான் பன்னீர்.
"அந்த பக்கம் தலைவச்சி படுத்தா கால் நீட்ட முடியாது, அங்க
பாருங்க" என்று பன்னீர் அருகே கீழே படுத்திருந்த பருமனான
பெரியவரை காட்டினாள் லல்லி.

ஏதோ யோசித்த லல்லி "தயவு செஞ்சு ஊருக்குப் போனதும் காசு
ஆனாலும் பரவாலன்னு, அத வாரி clean பண்ணிடுங்க" லல்லி
படுத்தவாறே கூறினாள்.
"எங்க உக்காந்துட்டு என்னடி பேசுற, இதான் அத பேசற எடமா"
என்றான்.

"நீங்க இப்டி சொல்லுவீங்கன்னு தெரியும் அதான் நான் செப்டிக் டேங்க்னு சொல்லல" என்று கூறி அவனைப் பார்த்தாள்.

உதட்டைக் கடித்துக்கொண்டாள். அவன் முறைத்துக் கொண்டிருந்தான், உடனே அமைதியானாள்.
பன்னீர் அவளின் கைகளில் நறுக்கென கிள்ளினாள். லல்லியின்
இறுக்கமான ஜாக்கெட்டினால் ரத்த ஓட்டம் கம்மியாகி சற்றே
வெளிறியிருந்த அவளின் கைகளில், பன்னீர் கிள்ளிய இடம்
சிவந்தது.

உச்சு கொட்டியவாறு லல்லி "யோவ் பன்னீரு"
திடுக்கிட்டான். பன்னீர் அருகிலிருக்கும் எவரேனும்
கவனித்தார்களா எனப் பார்த்தான். அந்த மூன்று இளைஞர்கள்
அவர்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

"யாரும் கேக்கல" என்று கூறி கைகளைத் தேய்த்துக் கொண்டிருந்தாள் லல்லி. லல்லி தன் கணவனை தனியாக இருக்கும் நேரம் பெயர்
சொல்லியே அழைப்பாள். பன்னீரின் உறவினர்கள் முன்னால்
மட்டும் மரியாதையைக் கொடுத்துவிட வேண்டுமென்பது பன்னீரின் வேண்டுகோள்.

"உன்ன, வீட்டுக்கு வாடி நீ" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

"இங்க பார் செவந்துடுச்சு அதான் கத்துனன். எதுக்கு இப்டி
கில்ற.... கில்றீங்க. உங்க கிட்ட இருந்துதான் இந்த கில்ற பழக்கத்த இவளும் கத்துக்கிட்டா" என்று கூறி கைகளை மீண்டும்
தேய்த்துவிட்டாள்.

பின் பன்னீரும் அவள் முகத்தைப் பார்க்காமல்
கோபமாகவே அவள் கைகளை மெல்ல தேய்த்துவிட்டான்.
பன்னீரின் பார்வை முழுவதும் கேட்டிலேயே இருந்தது.
அதுவரை அருகில் உறங்கிக் கொண்டிருந்த பெரியவர், எழுந்து
உட்கார்ந்தார். நீண்ட வெள்ளைநிற சட்டை அணிந்திருந்தார்.
லேசாக அழுக்காகி இருந்தது. பாக்கெட் லேசாக துருத்திக்கொண்டு ஒரு புகைப்படம் வைத்திருப்பது சட்டையைத் தாண்டி

வெளியே தெரிந்தது. தலைக்கு வைத்திருந்த பையை எடுத்துத் திறந்தார். ஒரு

தண்ணீர் பாட்டிலை எடுத்து வெளியே சிதறும் வண்ணம்

பருகினார். சுற்றி முற்றி மக்களை கவனித்தவரின் கண்களில்

மொட்டை அடித்த குடும்பம் ஒன்று அவருக்கு முன்னால் கீழே

ஏதோ சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பெரியவர் அந்த பையை துழாவி ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்தார்.

பிஸ்கட் கவரை பிரிக்கும் சத்தம் கேட்டு பன்னீரின் மகள் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்ப்பதைப் பார்த்த பெரியவர்,

பிரித்த பாக்கெட்டை அவளிடம் நீட்டினார், "லெலெ லெலெ".

மதி எடுக்க மறுப்பதாய் தலையாட்டி தன் தந்தையைப்

பார்த்தாள். லல்லி மதியை எடுத்துக் கொள்ளக் கூறி செய்கை

செய்தாள். முதலில் ஒன்று எடுக்க பின் இன்னொன்றும் சேர்த்து

எடுத்தாள்.

"தேங்க் யு சொல்லு மதி"
"தங்க் யு"

இதனை கவனித்த பன்னீர் ஏதும் கூறாமல் மீண்டும் கேட்டை
நோக்கித் திரும்பிக் கொண்டான்.
லேசாக புன்னைகைத்தார். சாந்தமான முகம். மீசை வெட்டாமல்
கீழ் உதடுவரை மறைத்திருந்தது. அவர் பேசும்பொழுது தான் உதடு
இருப்பதே தெரிந்தது. தாடி மட்டும் சவரம் செய்து சில நாட்கள்
இருக்கலாம். தாடி முழுதும் நரைத்து சீராக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

"உமர் கியா” தலையை சாய்த்து அவள் கண்களைப் பார்த்துக்
கேட்டார் பெரியவர். அவர் மதியிடம் பெயரை தான் கேட்கிறார் என தானாக யூகித்துக் கொண்டு
"பேரு சொல்லு மதி" என்றால் லல்லி.
"my name.......is மதியழகி"

இன்னும் கொஞ்சம் அதிகமாக புன்னைகத்தார். பின் ஒரு
பிஸ்கட்டை எடுத்து உதட்டினை மறைத்துக்கொண்டிருந்த மீசையைத் தாண்டி வாயில் முழுதாகப் போட்டார்.

குச்சு குச்சாய் நீட்டிக் கொண்டிருந்த அவரின் மீசை சிரிக்கும் பொழுது அவரை இன்னும் சாந்தமாகக் காட்டியது. பிஸ்கட்டை முழுதும் பிரித்திருந்தார்.

பக்கத்தில் அந்த காஞ்சிபுரம் இளைஞர்களைப் பார்த்து
அவர்களிடமும் அதை நீட்டினார். மறுத்தார்கள்.
"ம்ம்...... லெ..லெ லெலெ"
சில பிஸ்கட்களை சாப்பிட்டவர் மீதியை அவர்களிடம்
கொடுத்துவிட்டார். சாப்பிட்டவாறு மேலே ஓடாமல் இருந்த மின்
விசிறிகளைப் பார்த்து
"பசினபசின ஹோரே" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.

அவருக்கு நன்றாக வியர்த்திருந்தது. சட்டையின் பின்னாலும் வியர்த்து ஈரமாகியிருந்தது. சாப்பிட்டு முடித்தவர்

மற்றொரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்தார். மதி பிஸ்கட் கவர் சத்தம் கேட்டு அவரை பார்த்தாள். அதை அவர் கவனித்துவிட்டார்.

மதியிடம் அந்த பாக்கெட்டை அப்படியே பிரிக்காமல் நீட்டினார்.

லல்லி "இல்ல இல்ல வேண்டாம் ங்க"
ஒரு பெரிய எலெக்ட்ரிக் மணி சத்தம் கேட்க மக்கள் ஒருநிமிடம்
கப்சிப் என்றானார்கள். சீருடை அணிந்த ஒருவர் வேகமாக வந்து
பன்னீர் இருக்கும் கூடாரத்தின் பெரிய இரும்பு கம்பிகளால் ஆன
கதவைத் திறக்க ஆயத்தமாக, "கோவிந்தா, கோவிந்தா.....கோவிந்தா, கோவிந்தா...நடுவே ஒரு
கோயிந்தோ வந்தபடி இருந்தது. வேகமாக ஒரு பெரிய சாவியோடு வந்த கோவில் பணியாள் அந்த பெரிய இரும்பு கேட்டைத் திறந்தார்.

மக்கள் மூர்க்கமாக தள்ளிவிட்டபடி முந்திக் கொண்டிருந்தனர். மக்கள் கூட்டம் கேட்டை நோக்கி மொத்தமாக நகர்ந்தது.
பன்னீர் மதியை தூக்கிக்கொண்டு எழுந்தான். பெரியவர் லல்லியின் கைகளில் அந்த பிஸ்கட்டை திணித்து கூட்டத்தை நோக்கி வேகமாக நகர்ந்தார்.

லல்லி முன்னால் சென்றாள். பன்னீர் குழந்தையோடு பின்னால் சென்றான். கூட்டத்தில் சென்று
ஐக்கியமானார்கள். பெரியவரும் கூட்டத்தில் சென்று கலந்தார்.

சில கால் மிதிகள், சில இடிகள், சில உச்சுக்கள், கொயிந்தோ...கோவிந்தா, சில திட்டுக்கள் என அந்த கூட்ட நெரிசலில்,

பலமணி நேர காத்திருப்புக்குப் பிறகு
கர்ப்பக்கிருகத்தை அடைந்தார்கள் மக்கள்.

கர்ப்பக்கிருகத்தின் அருகே செல்ல செல்ல மக்களின் பக்தி பலமடங்காகக் கூடியது.

"கோவிந்தா, கோ...விந்தா.....கோவிந்தா, கோவிந்தா... நடுவே கொயிந்தோ.....சில வினாடி தரிசனத்தோடு தங்கள் வாழ்வின்சுமையை அங்கே இறக்கிவிட முயற்சி செய்தனர்.

தங்களின் எல்லா வேண்டுதல்களையும் அங்கே வைத்து மக்கள் நகர்ந்து கொண்டே இருந்தனர். வாழ்வின் சுமை அதிகமாக இருந்த மக்களில் சிலர் கூடுதலாக ஓரிரு வினாடிகள்

எடுத்த போது கோவில் பணியாட்கள் "ஜருகண்டி" என்று அவர்களின் முதுகில் கைவைத்து மூர்க்கமாக முன்னால் தள்ள சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

லல்லியின் முன்னால் சென்ற பெரியவர் இரு வினாடி சேர்த்து அதிகமாக எடுத்துக்கொள்ள கோவில் பணியாள் அவரை முதுகில் கைவைத்துப் போகச்சொல்லித் தள்ளினார்.

ஆனால் பெரியவர் திடீரென சுயநினைவிழந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் பின்னால் வந்த லல்லி உடனே அவரை முன்னால் வந்து தாங்கினாள்.

சலசலப்பு ஏற்பட அதுவரை ஓரமாக இருந்த ஒரு பாதுகாப்பு

போலீஸ் லல்லி அருகே வந்து அவரை ஒருபுறம் தாங்கி ஓரமாக

அமரவைத்தார். உடனடியாக வேறு சில போலீசார் அங்கே
வந்தார்கள், பன்னீரை முன்னால் தள்ளிப் போகச் சொல்லி செய்கை
செய்தனர். கையில் மகளோடு கடவுள் முன் நின்ற பன்னீர், என்ன
செய்வதென்றரியாது உடனே கடவுளைப் பார்த்து அந்த நான்கு
வினாடியில் எல்லா வேண்டுதல்களையும் முடித்து, கோவிலுக்கு
வர வாங்கிய கடனுக்கு ஒரு வழியை காட்ட சொல்லி, பின்
அப்படியே அந்த செப்டிக்டேங்க் "ஜருகண்டி ஜருகண்டி" என பின்னாலிருந்து தள்ளினான் கோயில் ஊழியன்.

கண்திறக்கும் பொழுது லல்லி கர்ப்பக்கிருகத்திலிருந்து வெளியே
பெரியவரை தாங்கியவாறு சென்றாள். உடன் அவர்கள் அருகிலிருந்த இளைஞர்களும் சென்றார்கள். பன்னீர் லல்லியின் மேல் மிகுந்த கோபமடைந்தான்.
அதற்குள் லல்லி அருகில் கோவில் பணிப்பெண்ணிடம் தண்ணீர்
கேட்டுக் கொண்டுவர சொல்லி அவரை மடியில் கிடத்தி முகத்தில்
தண்ணீரை தெளித்தாள்.

"பெரியவரே, ஐயா"
கண்கள் திறக்க முயன்று கொண்டிருந்தார்
"லல்லி" அவளருகே வந்த பன்னீர் சற்று குரலை உயர்த்தினான்.

வெளியே வந்து கொண்டிருந்தவர்களில் சிலர் கவனித்தார்கள்.
"ஏங்க சோடா கீடா கெடைக்குமா கேளுங்க" என்று கோபம் கூடிக் கொண்டிருந்த பன்னீரிடமே கேட்டாள்.
"பக்கத்துல hospital" என்று கூறி அருகிலிருந்த போலிசைப்
பார்த்தாள்.

"லல்லி" மீண்டும் முறைத்தவாறு அழைத்தான் பன்னீர்.

லல்லி அவனை கவனிக்காமல் அருகில் நின்ற போலிசிடம் மொழி புரியாமல் அவருக்கு மருத்துவ உதவி தேவை எனக் கூறிக்
கொண்டிருந்தாள், கோவில் பணியாட்கள் இருவர் உடனே அங்கே
வந்து மக்களின் சலசலப்பு கூடுவதைத் தவிர்க்க அந்தப் பெரியவரைத் தூக்கினார்கள்.

குரலை உயர்த்தி நன்றாக கத்திவிட்டான் பன்னீர்
"ஏய் லல்லி" சுற்றி எல்லோரும் அவர்களைப் பார்த்தார்கள்.
நிமிர்ந்து கணவனைப் பார்த்தாள். அவன் கோபத்தில் இருப்பதை
உணர்ந்தாள். அதற்குள் இரு பணியாட்கள் வந்து பெரியவரை
தூக்கினார்கள். லல்லி எழுந்தாள். பன்னீரை கவனித்த இளைஞர்களில் ஒருவன்,
"அக்கா நாங்க பாத்துக்குறோம்கா நீங்க போங்க" என்று கூறி
பெரியவர் பின்னால் சென்றார்கள். உடனிருந்த இன்னொரு
இளைஞன் மயங்கிய பெரியவரின் பையை எடுத்துக் கொண்டு
நகர்ந்தான்.

லல்லி எழுந்து பெரியவரை பார்த்தவாறு நிற்க, பன்னீர் சுற்றி மக்கள் கவனிப்பதை உணர்ந்தும் அவளருகே சென்று,

"சாமி கும்புட வந்தியா இல்ல எழவுக்கு வந்தியாடி" அழுத்தமாகக் கேட்டவன் உடனே கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

பன்னீர் கத்தியதை விட இப்பொழுது கூறியது அவளுக்கு கோபமூட்டியது. சுற்றி மக்கள் கவனிப்பதைப் பார்த்தவள் மகளை

அவனிடமிருந்து வெடுக்கென வாங்கி வேகமாக முன்னால் சென்றாள்.

பன்னீர் வேகமாக அவளை பின் தொடர்ந்தான். பன்னீர் மட்டும்
உண்டியல் இருக்கும் இடைத்தை நோக்கிச் சென்று கையில் வைத்திருந்த சிறிய சில்லறை பையிலிருந்து ஐநூற்று ஒன்றை

உள்ளே போட்டான். லல்லி கோவில் பிரகாரத்தைச் சுற்றாமல் கர்ப்பக்கிருகம் அருகிருந்த மண்டபத்தில் அமர்ந்தாள்.

அவளின் சிந்தனைகள் தன் குழந்தைக்கு பிஸ்கட் கொடுத்த அந்த வயதானவரைப் பற்றியே இருந்தது.

"கோவில் சுத்தலயா"

அவள் எதுவும் கூறாமல் அமைதியாகவே
இருந்தாள். பன்னீர் வெடுக்கென மகளை அவளிடமிருந்து வாங்கி
தனியாகச் சுற்றினான். கோயில் பிரகாரத்தைச் சுற்றி முடித்து
வெளியே வந்து சேர்ந்தார்கள். பன்னீரின் மகள் அப்பாவின்
தோளில் சாய்ந்து பெருமூச்சு விட்டாள்.

"அப்டியே அப்பன தூக்கிட்டு கோயில சுத்தி வந்த மாதிரி பெருமூச்ச பாரு"
"அசதில பெருமூச்சு விட்ரா, எனக்கே அடிச்சிப் போட்ட மாறிதான்
இருக்கு" எரிச்சலாகக் கூறினாள்.
பன்னீர் அவள் பேசியதில் எரிச்சலானான். தரிசனம்
முடிந்து அப்படி பேசுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. இப்படி சில
இன்னல்களைக் கடந்து கடவுளை வழிபடுவதுதான் பலன்களை
அளிக்கும் என தீர்க்கமாக நம்பினான்.

"அவ்ளோ முடியலைன நான் தனியாவே வந்திருப்பன் எதுக்கு
உங்கள கூட கூட்டி வரணும்"
லல்லி நிமிர்ந்து அவனை லேசாக முறைத்தவாரே பார்த்தாள்.
உண்மையில் லல்லியிடம் பள்ளிக்கு திங்கட்கிழமை மருத்துவ
விடுப்பு போட்டு வருமாறு வற்புருத்தியதே பன்னீர்தான்.
லல்லி முறைப்பதை உணர்ந்தவன் உடனே பேச்சை
மாற்றியவனாய்

"சரி சாப்டுவோமா, மதி கண்ணு சாப்டுவோமா அப்பா சோலா பூரி
வாங்கி தரன்"
மூவரும் சோலா பூரி தேடி நடந்தார்கள். ஓரிரு கடைகளில் சோலா பூரி இல்லை என கூற பன்னீர் இன்று சோலா பூரி சாப்பிட
முடியாமல் போய்விடுமோ என சற்றே பயந்தான். இந்த
சாயுங்கால நேரத்தில் சோலா பூரி கிடைக்குமா என சந்தேகித்தான் .

லல்லி இன்னும் கொஞ்சம் கோபமாகவே இருந்தாள். கடவுளின்
அருளில் ஒரு சோலா பூரி வேண்டிக்கொண்டான் பன்னீர்.
ஒரு கடையை கண்டுபிடித்து மூவரும் சாப்பிட்டார்கள். லல்லிக்கு
முதல் பூரி சாப்பிட்டதும் வயிறு அடைத்துவிட்டது. அவள் அந்த பெரியவரை நினைத்துக் கொண்டிருந்தாள். பன்னீர் மட்டும் இரண்டு செட்டு வாங்கி சாப்பிட்டான்.

மகளும் அசதியில் லல்லியின் மடியிலேயே உறங்கினாள். லல்லி, பன்னீர் சாப்பிட்டு முடிக்க காத்துக் கொண்டிருந்தாள்.
இருட்டி விட்டிருந்தது. மக்கள் அந்த ரோட்டில் வரிசையாக இருந்த கடைகளில் பொம்மைகள், ஸ்வெட்டர், ஷால், கருப்பு கயிறு, செப்பு மோதிரங்கள், குள்ளாக்கள் என வாங்கிக் கொண்டிருந்தனர்.
ஏதோ ஒரு பாட்டு ஒன்று தொடர்ந்து அந்த சூழலை நிரப்பிக்கொண்டே இருந்தது.

பன்னீராகவே ஒரு கடையில் நின்று
"மதிக்கு என்ன பொம்ம வேணும்"
"அப்பா எலிகாப்டர் அது அது" உயரமாக மேலே வைக்கப்பட்டிருந்த பொம்மையைக் காட்டினாள்.
அதன் விலையை கேட்டவன் அடுத்த முறை அதை வாங்கித்
தருவதாக அவளை சமாதானம் செய்தான். அதே போல் ஒரு சின்ன
எலிகாப்டரை வாங்கித் தந்தான்.

"லல்லி உனக்கு எதும் வாங்கிக்கோ"
லல்லி எதுவும் பேசவில்லை.
"அந்த மேல வச்சிருக்க கரடி பொம்ம, அது பக்கத்துல ரெட்
கலர். அதான் எடுங்க"
"நான் உங்கிட்ட கேட்டனா, எனக்கு வேண்டாம்" கடையைத் தாண்டி
வெளியே சென்றாள். பன்னீர் மகளோடு பின்னால் சென்றான்.
மக்களின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.

அதே ரோட்டில் பேருந்து நிலையம் நோக்கி நடந்தார்கள் லல்லியும் பன்னீரும். லல்லி கோபமாக இருப்பதை உணர்ந்த பன்னீர், "எதுக்கு இப்போ மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்க"
இப்பொழுதும் லல்லி எதுவும் பேசவில்லை.

"ஏய் உன்கிட்ட தான்டி பேசிட்டு இருக்கன்"
"எனக்கு நல்லாவே கேக்குது, நீ தான் புதுசா கத்திட்டு இருக்க"
"கத்தறனா"
லல்லி நடந்தவாறே அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
"சரி கத்தன தான், நீ என்ன பண்ண"
அவள் பதில் கூறவில்லை. காலையில் வகுடு எடுத்து வாரியிருந்த லல்லியின் தலை களைந்து காற்றில் முகத்தை முடி
மறைத்தவாறே இருந்தது. லல்லியும் முடியை பின்னால் தள்ளிக்
கொண்டே இருந்தாள்.

"ஏன் கத்துன, கோவிலுக்கு சாமி கும்பிட வந்த எடத்துல உனக்கு
எதுக்கு தேவையில்லாத வேலலாம். மத்தவங்க அவங்க பாட்டுக்கு சாமி தான கும்பிட்டுட்டு இருந்தாங்க"

"நான் அங்க மயங்கி இருந்தா சாமி தான் கும்பிட்டு இருப்பியா"
"என்னடி சம்மந்தமே இல்லாம பேசுற"
லல்லி எதுவும் பேசவில்லை.
"இப்டி சும்மா வீம்பு பண்ணாத லல்லி" குரலை உயர்த்தினான்.
பஸ் ஸ்டாண்டின் எதிரே ரோட்டினைக் கடக்க நின்றார்கள்.
"இப்டி பண்ணாதடி எதாவது பேசு"
ரோட்டினைக் கடக்க லல்லி முன்னால் செல்ல, பன்னீர் அவள்
கையைப் பிடித்து நிறுத்தினான்.
"என்ன தான்டி பிரெச்சன உனக்கு" அவளை முறைத்தவாறு
கேட்டான். சுற்றி சிலர் அதை கவனித்தார்கள்.
அவன் தோளில் சற்றே அசந்து கண் அயர்ந்த மகள் "ப்பா"
கண்களைத் திறந்தாள்.

லல்லி அவனை தீர்க்கமாகப் பார்த்தாள்.

"இன்னைக்கு எங்கூட நிக்கறது நா லவ் பண்ண பன்னீர்தானா இல்ல என் புருஷனா, பன்னீர் இல்லையோனு எனக்கு தோணுது" லல்லியின்

கண்கள் லேசாக சிவந்திருந்தது. மதி நடப்பதரியாமல் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தாள்.

"கீழ விழுந்த அந்த பெரியவருக்கு எங்க அப்பா வயசு இருக்கும், என்ன வேற ஊரு வேற மொழி ஆனா வயசானவருதான"

பன்னீர் "இல்லடி சாமி கும்புட" முடிப்பதற்குள் அவனை முறைத்தாள்.

லல்லி "வார கூலிதான், ஆனா நமக்கு குடுக்க ஆள் இருக்கு, இல்லாதவன் என்னடி பண்ணுவான். ஒரு சாப்பாட்டு பொட்டலத்துல என்ன கொறஞ்சிட போது,

இது நீ நமக்கு சோத்துக்கே இல்லாத அப்போ, முடியாதவங்கள தேடிபோய் நீ குடுக்கும்போது சொன்னது. ஆனா இன்னைக்கு நீ என்ன பேசினனு யோசிச்சு பாரு.

நான் லவ் பண்ண பன்னீர் ஒன்னும் அவ்ளோ மோசமான பக்திமான்லாம் கெடையாது"

அவன் கையை உதறியவள் மகளை அவனிடமிருந்து வாங்கி
ரோட்டினைக் கடந்து சென்றாள். பன்னீர் பதில் கூற முடியாமல் அங்கேயே நின்றான். வாகனங்களைக் கடந்து பஸ் ஸ்டான்டிர்க்குள் நுழைந்து

கொண்டிருந்த மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ தவறு செய்ததாய் தோன்றியது.

பலதரப்பட்ட மக்கள் பஸ்களில் சீட்டு ஓரங்களில் அசதியாய்
தூங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் லல்லி. பஸ்களும் அவர்களை லேசான குலுக்கல்களோடு சுமந்து சென்று
கொண்டிருந்தது. வரிசையாக இருந்த சிமெண்ட்டுக் கட்டைகளில் ஒன்றில் லல்லி அமர்ந்திருந்தாள். அருகே அதுவரை அவளிடம்
எப்படி பேசுவது என நினைத்து நின்று கொண்டிருந்த பன்னீர்,
மெல்ல அவளருகில் அமர்ந்தான்.

அவளிடம் ஏதோ பேச நினைத்து திரும்பினான்.
"இந்தா கொழந்தைய ஒரு நிமிஷம் புடி" சட்டென கூறி, எழுந்து சற்றுத் தூரத்தில் இருந்த டீக்கடை நோக்கி நடந்தாள் லல்லி. பன்னீரும் அவள் பின்னால் நடந்தான்.

கோவிலில் பார்த்த இளைஞர்கள் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்றாள் லல்லி
"தம்பி"
அவளை கவனித்தவர்கள் "அக்கா, என்ன பஸ்சுக்கா வெயிட் பண்றீங்க, டீ சாப்பட்ரிங்களா" கேட்டவனுக்கு கண்கள் லேசாக சிவந்திருந்தது.
"இல்ல வேணாம்ப்பா, அந்த பெரியவருக்கு எப்டி இருக்கு"
அவர்கள் சற்றே அமைதியானார்கள், பின் அவர்களில் ஒருவன்
"அட்டாக்கான் கா, இங்க ஹாஸ்பிட்டல் போன கொஞ்ச நேரத்துல
எறந்துட்டாப்ள" அவன் குரல் உடைந்தது.

லல்லி முகம் இறுகி கண்கள் கலங்கியது.
குரல் தழுதழுக்க "அவர் போன்ல இருந்த நம்பர்க்கு போலீஸ்
போன் பண்ணுச்சு, ஊர்ல ஒத்த ஆளாத்தான் இருந்திருக்காரு, யாரும் இல்லையாம். போலிசும் நீங்க கெளம்புங்க நாங்க பாத்துக்குரோம்னு சொல்லிடுச்சு."

லல்லி பன்னீரின் கைகளைப் பற்றினாள். குற்ற உணர்ச்சியாய்
இருந்தது பன்னீருக்கு.
"எந்த ஹாஸ்பிட்டல்" அவர்களைப் பார்த்துக் கேட்டான் பன்னீர்.
அந்த டீக்கடை ஒரு பெரிய ஆலமரத்தின் அருகே அமைந்திருந்தது, ஆல இலைகள் காற்றில் உரசும் சத்தம் அதிகமாகக் கேட்டது, கோவிலுக்குள் கேட்டுக்கொண்டிருந்த

ஏதோ ஒரு பக்தி பாடல் இலைகளின் சத்தத்தில் மங்கிப் போனது.

அந்த ஹாஸ்பிட்டலின் நீண்ட வராண்டாவில் ஒரு செவிலியரிடம் பேசிக்கொண்டிருந்தான் பன்னீர். லல்லியும் அந்த இளைஞர்களும்

அந்த வராண்டாவில் பன்னீர் அருகே நின்று கொண்டிருந்தனர். அவர்களைத் தவிர அங்கே யாருமில்லை. பின் ஒரு ஆட்டோ மக்கள் நடமாட்டமில்லாத வீடுகள் நிறைந்தப் பகுதிக்குள் சென்று கொண்டிருந்தது.
ஆட்டோவில் எலக்ட்ரிக் மயானத்தை வந்தடைந்தார்கள்.
பன்னீரின் கைகளில் ஒரு பூ மாலை இருந்தது. அவர்கள்
ஆட்டோவில் இருந்து இறங்க, ஒரு அமரர் ஊர்தியும், பைக்
ஒன்றில் இரு போலிசும், அவர்களைக் கடந்து அந்த கட்டிட
நுழைவாயிலை விட்டு வெளியேறினார்கள்.

சிறிய தார் ரோடு ஒன்று உள்ளே வளைந்து சென்றது.
அந்த இடம் முழுவதும் மஞ்சள் நிற வெளிச்சம் நிரம்பியிருந்தது. சிறிது தூரம் நடந்த பின் ஒரு சிறிய கட்டிடத்தை அடைந்தார்கள்.

பன்னீரும் இளைஞர்களும் உள்ளே சென்றார்கள்.
லல்லியும் மகளோடு வெளியே நிற்க பன்னீர் மட்டும் உள்ளே
சென்றான்.
உள்ளே ஒரு வயதானவர் தகனத்திற்காக உடலை தயார்
செய்து கொண்டிருந்தார். பன்னீர் முன்னால் சென்று அவரை
அழைத்தான். வெளியே தரையோடு பொருத்தப்பட்டிருந்த இரும்பு நாற்காலியில் அமர்ந்து ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருந்தாள் லல்லி. பன்னீர் மாலையோடு

முன்னால் செல்வதை ஜன்னல் வழியே பார்த்தாள். ஜன்னல் வழியே நடப்பதைப் பார்க்க மேலும் பாரமாக இருந்தது லல்லிக்கு.

சில நிமிடங்கள் ஆனது. அங்கே சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஒரு நாய் தன் குட்டிகளோடு லல்லி அருகே வந்தது. லல்லி அதை கவனிக்கவில்லை. மதி லல்லியிடம்

இருந்த பையில் கையை விட்டு ஒரு பிஸ்கட் பாக்கெட்டை திறந்தாள். சில பிஸ்கட்களை அந்த நாய் குட்டிகளிடம் நீட்ட, முகர்ந்து பார்த்த குட்டிகள் அதை வாங்கவில்லை.

அந்த குட்டிகளின் அம்மா வந்து பிஸ்கட்டை கவ்விக்
கொண்டது. சில நிமிடங்களில் தகன அறையில் ஒரு பெரிய
வெளிச்சம் தோன்றியது.

கீழே படுத்தவாறே பிஸ்கட்டுகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த அம்மாவின் மடியில் நாய் குட்டிகள் பால் குடித்துக் கொண்டிருந்தது.

லல்லியின் முகத்தில் வெளிச்சம் வந்து வந்து தொட்டுச் சென்றது. கலைந்திருந்த லல்லியின் முடி அவளின் முகத்தில் விழுந்து கொண்டே இருந்தது.

பஸ் ஒன்று நிழலாய் தெரிந்த மலைகளின் நடுவே சிறிய வெளிச்சத்தொடு கீழே இறங்கிக் கொண்டிருந்தது. லல்லியும் மதியும் உறங்கி விட்டிருந்தார்கள்.

டிரைவர் சீட்டின் பின்னால் அமர்ந்திருந்த பன்னீர், பஸ்சின் வெளிச்சம் வளைந்து நெளிந்துப் போன ரோட்டினைக் கண்டுபிடித்துக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தவாறு இருந்தான்.

காற்றில் லல்லியின் முடி அவள் முகத்தில் விழுந்ததை கவனித்த பன்னீர் அவளில் கலைந்த முடியை மெல்ல முகத்திலிருந்து எடுத்துப் பின்னால் காதருகே சொருகினான்.

பஸ்ஸில் பெரும்பாலானோர் தரிசன அசதியில் தூங்கிக் கொண்டிருக்க பன்னீர் மட்டும் முழித்திருந்தான். டிரைவர் தனக்கு மட்டும் கேட்கும்படி வைத்திருந்த பாடல் அவரின் பின்னால் அமர்ந்ததால் பன்னீருக்கும்
கேட்டது. ஆனால் அவனுக்கு அந்த பாடல் புரியவில்லை. அந்த பாடலை அதன் போக்கில் விட்டு, முன்னால் விரிந்து வழி தேடிக் கொண்டிருந்த பஸ்சின் வெளிச்சத்தை மீண்டும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான்.

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...