அவள்(அது) அவன்

ghanapriya24
பெண்மையக் கதைகள்
4 out of 5 (52 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

அத்தியாயம் 1 : அவள் உலகம்

"தெய்வசெஞ்சு அக்காவ திட்டாதீங்கப்பா.. அவ எந்தத் தப்பும் பண்ணல. அவளை புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்கப்பா ப்ளீஸ்..!"

கண்களோடு கட்டியணைத்த நீரை வெளியேற்றியபடி வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தன் அக்காவிற்காக அப்பாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள் பவித்ரா.

"நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன். நீதான். இன்னும் உலகம் தெரியாம சின்ன குழந்தையாவே இருக்க பவித்ரா. அவ..." என்று ஆவேசமாக எழுந்த மாணிக்கத்தின் குரலில், கோவம், நடுக்கம், பயம் என அத்தனையும் ஒட்டிக்கொள்ள, பேசுவதரியாது ஆசுவாசப்படுத்திக்கொண்டார். இந்த நொடி நேர மௌனத்தைப் பயன்படுத்திக்கொண்ட பவி,

"அக்கா எனக்கு வேணும்ப்பா. ப்ளீஸ்.. அவள வீட்டுக்கு கூப்பிடுங்கப்பா. நம்மள விட்டு அவ எங்க போவா சொல்லுங்க. அவளோட ஒட்டுமொத்த உலகமும் நாமதானப்பா. அவளுக்கு வேற என்ன தெரியும் சொல்லுங்.." என்று சொல்லி முடிப்பதற்குள்,

"அவளுக்கு எல்லாம் தெரியும் பவித்ரா. அவளே அவ உனக்கு அக்கா இல்லன்னுதானே சொல்றா. இனிமேல் இது பத்தி பேச ஒண்ணுமில்ல. உன் அக்காவா மட்டும் இருக்குறதுனா இந்த வீட்டுக்குள்ள வரட்டும். அப்படி இல்லனா எனக்கு ஒரே ஒரு பொண்ணுதான். நான் திரும்பி வர்றப்போ அவ சம்பந்தப்பட்ட எந்த பொருளும் இந்த வீட்டுக்குள்ள இருக்கக்கூடாது" என்றபடி வேட்டியை மடித்துக்கட்டி கடுங்கோபத்தோடு வெளியேறினார் மாணிக்கம்.

அக்கா வெளியேறிய வாசலில் அப்பாவும் வெளியேறிவிட, திறந்திருந்த வாசலைப் பார்த்தபடியே ஜீவனற்ற வீட்டிற்குள் தனி ஆளாக நின்று தன் அக்காவுடனான நினைவலைகளில் பயணிக்கத் தொடங்கினாள் பவி. டெங்கு நோய் காரணமாக தன்னுடைய ஐந்து வயதில் அம்மாவை இழந்த பவித்ராவிற்கு அம்மாவாகவும், நல்ல தோழியாகவும் சொல்லப்போனால் உலகமாகவும் இருந்தது அவளுடைய அக்கா, கவிதா.

எத்தனை முறை துப்பினாலும், பொறுமையுடனும் அன்புடனும் தன் தங்கைக்கு உணவு ஊட்டுவது முதல் பள்ளிக்கூடத்திற்குக் கூட்டிச் செல்வது, பாடம் சொல்லிக்கொடுப்பது என அத்தனை வேலைகளையும் தன் ஒரே தங்கைக்காகப் பார்த்துப்பார்த்துச் செய்பவள் கவிதா.

இப்படி சிறுவயதிலிருந்து தன்னுடைய முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்த அக்காவை எப்படி மீண்டும் வீட்டிற்குள் அழைப்பது? அப்பாவை எப்படி சமாதானம் செய்வது? அவருக்கு எப்படிப் புரிய வைப்பது? ஒருவேளை அக்கா மீது தவறு இருக்கிறதோ? என்று ஆயிரம் சிந்தனைகள் உதிக்க, மறுமுனையிலிருந்து வந்த மொபைல் தாளம் அத்தனையையும் சிதைத்தது.

"அவ பொருளெல்லாம் வீட்டை விட்டு வெளில போயிடுச்சா? எதுவும் இருக்கக்கூடாது பாத்துக்கோ" என்றபடி மறுமுனையிலிருந்து பதில் வருவதற்குள்ளேயே இணைப்பைத் துண்டித்தார் மாணிக்கம். கோபம் கலந்த வருத்தத்தோடு அக்காவின் பெட்டியைத் தூசி தட்டினாள் பவி. பீரோவில் உறங்கிக்கொண்டிருந்த கவிதாவின் சுடிதார், புடவை ஆகியவற்றை எடுத்து கண்களில் நீர் உருண்டோடியபடி மடித்து பெட்டியின் பக்கத்தில் வைத்தாள். நம்பர் லாக் போடப்பட்டிருந்த கவிதா பெட்டியின் பாஸ்கோட், தங்கள் அம்மாவின் பிறந்தநாள் தேதி. வேகவேகமாக அந்தப் பாஸ்கோடை அமைத்து, பெட்டியை திறந்து பார்த்த பவித்ராவின் ஈரமான கண்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயின.

அத்தியாயம் 2 : இருள்

"உனக்குதான் பிங்க் கலர்ல ஸ்டைலிஷான ஸ்கூட்டி வாங்கிகொடுத்திருக்கேன்ல. என்னவோ பஞ்ச பரதேசிக்கு பொறந்தவ போல பக்கத்து வீட்டு பையனோட பைக்க ஓட்டிட்டு சுத்திட்டு இருக்க. என்ன ரெண்டு பேரும் காதலிக்குறீங்களா?" என மாணிக்கத்தைக் கோபத்தின் எல்லைக்கே கூட்டிச் சென்றது கவிதா பக்கத்து வீட்டு வருணின் RX 100 வண்டியை ஒட்டிச் சென்ற காட்சி.

"ஐயோ... அப்படியெல்லாம் இல்லப்பா. ஆனா, எனக்கு அந்த வண்டியை ஓட்டத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு" என்ற கவிதாவின் பதிலைக் கேட்டபிறகு நாடி நரம்பெல்லாம் புடைத்து வெளியேறிவிடும் அளவிற்குக் கோபமடைந்தார் மாணிக்கம். "அம்மா இல்லாத பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாப் போச்சு. ஒழுங்கா இந்த விளையாட்டு எல்லாத்தையும் மூட்டக் கட்டி வெச்சிட்டு, நான் பாத்து வைக்குற பையன கல்யாணம் பண்ணிக்குற வழிய பாரு" என்றபடி கவிதாவின் அறை விளக்கை அணைத்துவிட்டு வெளியேறினார் மாணிக்கம்.

அத்தியாயம் 3: வியாதி

'பளார்!' எனும் சத்தம் கேட்டு பதறியடித்து பவித்ரா ஓடி வர, 'இன்னும்கூட அடித்துக்கொள்ளுங்கள், அவ்வளவு ஏன் கொன்றும்விடுங்கள்' என்கிற உடல்மொழியில் தன் தந்தையின் அத்தனை அடிகளையும் பரிசுகளைப்போல் பெற்றுக்கொண்டிருந்தாள் கவிதா. "தெய்வசெய்து அக்காவ அடிக்காதிங்கப்பா" என்று தந்தையின் கால்களை பிடித்து கெஞ்சியபடி இறுக்கிக்கொண்டாள் பவி.

பவியை உதறிவிட்டு, "வேற என்ன பண்ணச்சொல்லுற? ஏதோ வெள்ளைக்காரன் வியாதியை வாங்கிட்டு வந்திருக்கா இவ. அவ என்ன சொன்னான்னு கேட்டல்ல. பையன் மாதிரி சுதந்திரமா வளர்த்துவிட்டா, நான் பையன்தான்னு கத.. கத சொல்லிட்டு இருக்கா" என்று மீண்டும் அடிக்க கையோங்கிய மாணிக்கம், அங்கும் இங்கும் தேடி நீண்ட அரிவாளைக் கையில் ஏந்தியபடி கவிதாவை நோக்கி வந்தார்.

இந்த நேரத்திலும் கவிதாவின் முகத்தில் பயமோ, பதற்றமோ எதுவுமில்லாமல் வாடிய பூவைப்போலவே காட்சியளித்தாள். இப்படி உணர்ச்சியற்று நின்ற கவிதாவைப் பார்த்து நொந்துகொண்ட மாணிக்கம், "ஒழுங்கா நான் பாத்து வெச்சிருக்க பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்க இருக்குறதுனா இரு. இல்ல..." என்றபடி கையில் ஏந்திய அரிவாளை வாசற்கதவு முன்பு வீசிவிட்டு தன் அறைக்குள் சென்றார் மாணிக்கம்.

அத்தியாயம் 4 : வெளிச்சத்தில் அவள்

சிகரெட் பாக்கெட், லைட்டர், மீசை தாடி அகற்றும் ரேசர், ட்ரிம்மர், பெரிய டயல் கொண்ட ஆண்கள் பயன்படுத்தும் கைக்கடிகாரம், ஆண்களுக்கான ஃபேஸ் வாஷ் என கவிதாவின் பெட்டிக்குள் இருந்தவை அனைத்தும் அதிர்ச்சியின் போனஸாக பவித்ராவுக்கு இருந்தன. தன் அக்கா மறைத்து வைத்திருந்த ப்ளேசர், ஆண்கள் அணியும் பனியன் ஆகிய ஆடைகளைப் பார்த்தபோது, மாடர்ன் உடைகள்- கலாச்சார சீர்கேடு என்று குரல் எழுப்பிக்கொண்டிருந்த தன் தந்தையை எதிர்த்தும், வெஸ்டர்ன் உடைகளின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த தன் தங்கையின் ஆசையை நிறைவேற்றவும், வீட்டிற்குள் கவிதா அரங்கேற்றிய சிறிய உண்ணாவிரதப் போராட்டம் பவித்ராவின் நினைவிற்கு வந்தது.

"பிடிச்ச உடைகளை நாம போட்டுக்கக்கூட நமக்கு உரிமை இல்லையா என்ன? உனக்கு எது பிடிச்சிருக்கோ அதெல்லாம் போட்டுக்கோ. இனிமே அப்பா ஏதாவது பேசுனா நான் பாத்துக்குறேன்" என்று பவித்ராவிற்காக அன்று பேசிய கவிதாவின் இந்த இருண்ட வாழ்க்கையை பவித்ராவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஹேர்கட் செய்துகொள்வது சாதாரண விஷயமாக இருந்தாலும், பெண்களுக்கு அதிலும் சில வரையறை இருக்கிறது அல்லவா? அதையும் கவிதா உடைக்க முயற்சி செய்யாமல் இல்லை. ஆனால், பெண்கள் என்றால் இவ்வ்வ்வ்வளவு நீள கூந்தல் இருந்தே ஆகவேண்டும் என்று மாணிக்கம் போராட்டம் செய்ததால் அதில் தோற்றுப்போனாள் கவிதா. அந்த ஏமாற்றம் எவ்வளவு பெரிய வடுவாய் தன் அக்கா மனதிலிருந்திருக்கும் என்பதை எண்ணி உடைந்துபோனாள் பவி.

அத்தியாயம் 5 : வெளியேற்றம்

"என்ன அவ வந்துட்டாளா?" என்று தொலைபேசியின் மறுமுனையிலிருந்து ஆர்வமாய் மாணிக்கம் கேட்க, பீரோவிலிருந்து சுடிதார், புடவைகளை பெட்டிக்குள் அடுக்கியபடி பேசத் தொடங்கினாள் பவித்ரா.

"உங்களுக்கெல்லாம் ஆம்பளப்புள்ளன்னா பெரிய வரம். அப்படியே தப்பி தவறி பொம்பளப்புள்ள பொறந்துட்டாலும் அவளையும் ஆம்பளப்புள்ள மாதிரி கெத்தா வளர்த்திருக்கேன்னு ஊரு முழுக்க தம்பட்டம். பொண்ணுங்க கைநிறைய சம்பாதிச்சாக்கூட ஆம்பள மாதிரி சம்பாதிக்குறானு பெருமை. ஆனா, மனரீதியாவும் உடல்ரீதியாவும் என்னோட இயல்பே ஆம்பளப்புள்ள மாதிரி இருக்கு, இதுதான் நான்னு சொல்லி ஒரு பொண்ணு வந்து நின்னா மட்டும் அதுக்கு பேரு வியாதி. உண்மையிலேயே இங்க யாருக்கு வியாதி?" என்றபடி தேங்காய் எண்ணெய், லிப்ஸ்டிக், பவுடர், ஐ-லைனர் என ஒப்பனை பொருள்கள் அனைத்தையும் அந்த பெட்டிற்குள் அடைத்தாள் பவி.

"ஆணோ பெண்ணோ, அவ உங்களுக்கு பொறந்தவதான. அதுல எந்த சந்தேகமும் இல்லையே?" என்று எழுப்பிய கேள்வியைக் கேட்டதும், "பவித்ரா.." என்று கூச்சலிட்டார் மாணிக்கம். ஏற்கெனவே வாசலில் வைக்கப்பட்ட பெட்டியோடு இன்னொரு பெட்டியும் இணைந்தது.

"உங்களுக்கு இப்போ கவி அக்..." என்றதும் கண்களில் நீரேற சிறிய இடைவெளியில் மீண்டும் தொடர்ந்தாள் பவி. "சாரி கவி உங்களுக்கு பொண்ணு இல்லாம போகலாம். ஆனா, எனக்கு வேணும். ஏன்னா, அவன் என் கவி அண்ணா" என்றபடி ஜீவனற்ற வீட்டின் கதவைப் பூட்டியபடி தொலைப்பேசியைத் துண்டித்தாள் பவி.

அனைத்து மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் சமர்ப்பணமும் நன்றியும்!

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...