போதிமரத்தில் மரணப்புயல்

அரசியல்
4.8 out of 5 (49 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

நூற்றியைம்பது கோடி ஜனத்தொகையுள்ள சிந்தியா கடந்த எட்டு மாதங்களாக பரஸ்பரஸ் துண்டாய் தீப்பிடித்து எரித்து கொண்டிருக்கிறது. காரணம் சிந்திய அரசாங்கம் போலி குடிமக்கள் களையெடுப்பு சட்டத்தை சிந்தியா முழுக்க அமல்படுத்தியதே.

சிந்தியாவின் இந்த காட்டுமிராண்டி சட்டத்தை உலகநாடுகள் முழுவதும் கடுமையாக எதிர்த்தன. சிந்தியாவின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் பணி செய்து கொண்டிருந்த 32மில்லியன் சிந்தியர்கள் மீண்டும் சிந்தியாவுக்கு துரத்தியடிக்கப்பட்டனர். வெளிநாட்டு வாழ் இந்தியர்களால் கிடைத்துக் கொண்டிருந்த 79மில்லியன் அமெரிக்கன் டாலர் வருமானம் நின்று போனது. சிந்தியாவின் 475பில்லியன் அமெரிக்கன் டாலர் ஏற்றுமதியும் 483பில்லியன் அமெரிக்கன் டாலர் இறக்குமதியும் ஸ்தம்பித்தன. பெட்ரோலும் டீசலும் வாரத்துக்கு ஒரு முறை ரேஷனில் ஒரு லிட்டர் 500ரூபாய்க்கு விற்கபட்டது. அரிசி பருப்பு எண்ணெய் விலைகள் உச்சம் தொட்டன.

பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டன. ஆளும்கட்சி தவிர மீதி அனைத்து இந்தியகட்சிகளும் முடக்கப்பட்டன. ஒரு நாளில் மின்தடை 16மணி நேரம் அமலுக்கு வந்தது.

எட்டுமாதங்களில் ஒரு கோடி பேர் குடிஉரிமை பறிக்கப்பட்டு அகதிகள் முகாமுக்கு தள்ளப்பட்டனர். சிலர் குடியுரிமை ரத்தை எதிர்த்து இராணுவ நீதிமன்றத்துக்கு மனு செய்திருந்தனர்.

குடிஉரிமை பறிப்பிலிருந்து தப்பிக்க கிஸ்லிம்களும் அறிஸ்தவர்களும் தாய்மதத்திற்கு திரும்பும் சடங்கில் ஈடுபட்டிருந்தனர். சடங்கை செய்யும் மதகுருவுக்கு ஒரு நபருக்கு இரண்டு லட்சம் ரூபாய் தட்சணை வழங்கினர். அவர்கள் தாய்மதத்துக்கு திரும்புவதை தாய்மத அமைப்பு விடியோவாக எடுத்தனர். தாய்மதம் திரும்பிய அவர்களுக்கு சிந்துபெயர் சூட்டப்பட்டது. சடங்கு நடக்கும் இடத்தில் கணினியுடன் அமர்ந்திருக்கும் அதிகாரி அம்பதாயிரம் கையூட்டு பெற்றுக்கொண்டு பெயர் மாற்ற சான்றிதழ் அளித்தார்.

“மக்களே! நீங்கள் தாய்மதத்துக்கு திரும்பினாலும் உங்களுக்கு குடிஉரிமை கிடைப்பது குதிரை முட்டை. இருந்தாலும் விடாப்பிடியாக முயற்சி செய்யுங்கள்!”

சாலையோரங்களில் சிலர் கூடாரமிட்டு வழிப்போக்கர்களை அணுகி பேரம் பேசினர். “எங்களுக்கும் மேலிடத்துக்கும் செம அன்டர்ஸ்டான்டிங். நாங்க நினைச்சா உங்களுக்கு குடிஉரிமை வாங்கித் தந்திருவோம். ஒருத்தருக்கு குடிஉரிமை வாங்க அஞ்சு லட்சும் ரூபாய். மொத்தமா நாலஞ்சு பேருக்கு குடிஉரிமை வாங்குனீங்கன்னா தள்ளுபடி உண்டு!”

நாடெங்கும் தனக்கு குடிஉரிமை கிடைக்காது என்கிற அச்சத்தில் ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டனர்.

‘எனக்கு குடிஉரிமை வேணும்!’ என்கிற கூச்சலுடன் பலர் சட்டையை கிழித்துக் கொண்டு பொது இடங்களில் பித்து பிடித்து ஓடினர்.

சாலைகளில் நடந்து போகும் பெண்களை தூக்கி சென்று கூட்டு வன்புணர்வு செய்து படுகொலை செய்தனர் சில விஷமிகள்.

-மகாத்மா காந்தி தெருவில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் மட்டும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன அந்த வீடு ஆதில் முகமதுக்கு உரியது. ஆதிலை பார்க்க அவனது நண்பர்கள் மதுரன் தமிழவேளும் இக்னேஷியஸும் வந்திருந்தனர்.

“ஆதில்! இந்த போலி குடிமக்கள் களையெடுப்பு சட்டத்தால் எங்க சமுதாயத்து மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார்கள். நாங்கள் உன்னையும் உன் குடும்பத்தை நினைத்து வேதனைப்படுகிறோம். உனக்கு என்ன விதத்தில் உதவுவது என பரிதவித்து போயுள்ளோம்!”

“நாங்கள் சிறுபான்மை என்றாலும் எங்களுக்கும் இந்த சட்டத்தால் பிரச்சனை ஏதும் இல்லை. எங்கள் கவலை உன் மீதுதான்!”

“தமிழவேள்! இக்னேஷியஸ்! இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டு எட்டு மாதங்கள் ஆகின்றது. இதன் குறி நாங்கள்தான் என்றாலும் இச்சட்டத்தின் ஆக்டோபஸ் கைகள் சிந்தியாவின் ஒட்டுமொத்த குடிமக்களின் கழுத்துகளை நெரிக்கிறது. யாரும் ஓட முடியாது ஒளிய முடியாது!”

“ஓவ்!”

“சிந்தியா நூறு ஆண்டுகள் பின்னுக்கு போயுள்ளது!”

மூவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே வெளிவாசலில் நூறுடெஸிபல் உலோக இரைச்சல் மிகைத்தது.

வீட்டின் மீது ஒரு வெளிச்ச வட்டம் பதிந்தது.

வீட்டின் முன் வந்து நின்ற இராணுவ ஜீப்புகளிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட இராணுவீரர்கள் இறங்கினர். ஒவ்வொருவர் கையிலும் இன்ப்ராரெட் ஹோமிங் டிவைஸ் உள்ள விசேஷ துப்பாக்கிகள். வீட்டை சுற்றி வளைத்தனர்.

சட்டசெயலாக்க அதிகாரி மிடுக்காய் வீட்டு வாசலுக்கு நடந்தார். அவரது உதவியாளர் கையில் மடிகணினி.

“வீட்டின் குடும்பத்தலைவர் வெளியே வரவும்!”

ஆதில் முகமது வந்து நின்றான். அவனது முதுகுக்கு பின் தமிழவேளும் இக்னேஷியஸும்.

ஆதில் முகமதின் தொப்பியையும் தாடியையும் அருவெறுப்பாக பார்த்தார் செயலாக்க அதிகாரி.

“உன் பெயர் என்ன?”

“ஆதில் முகமது!”

“நீ தமிழ் கிஸ்லிமா, உருது கிஸ்லிமா?”

“தமிழ் கிஸ்லிம்!”

“உன் ஆதார் எண்ணை கூறு!”

கூறினான்.

ஆதில் முகமது பற்றிய முழு விபரங்களும் கணினியில் வந்து விழுந்தன.

“உன் வயதென்ன?”

”முப்பத்தியாறு!”

“நீ என்ன படித்திருக்கிறாய்?”

“முதுகலை விண்வெளி பௌதிகம்!”

“எங்கு வேலை பார்க்கிறாய்?”

“கொடைகானல் விண்வெளி கண்காணிப்பகத்தில்!”

“உன் மனைவி பெயரென்ன?”

“சுபைதா”

“உனக்கு எத்தனை குழந்தைகள்?”

“மகனின் பெயர் சாகுல் ஹமீது. வயது 12. எட்டாம் வகுப்பு படிக்கிறான். மகளின் பெயர் சாய்ரா பானு. வயது 10. ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்!”

“வீட்டில் வேறு யாரார் இருக்கிறார்கள்?”

“என் மாமனார் மாமியார் இருக்கிறார்கள்!”

“அவர்களை பற்றி கூறு!”

“என் மாமனார் பெயர் அஸ்கர். வயது 62. ரயில்வேயில் பணி செய்து ஓய்வு பெற்றவர். என் மாமியாரின் பெயர் ராபியத். வயது 58. இல்லத்தரசி!”

“இந்த வீடு சொந்த வீடா?”

“ஆமாம்!”

“எத்தனை வருஷங்காக இங்கு இருக்கிறீர்கள்?”

“நாற்பது வருஷங்களாக. இந்த வீடு என் தந்தை கட்டின வீடு!”

“உன் தந்தை பெயர் என்ன?”

“முஸ்தபா!”

“உன் தாயாரின் பெயர் என்ன?”

“உம்மசல்மா!”

“உன் பிறப்பு சான்றிதழை காட்டு!”

உள்ளோடி போய் எடுத்து வந்து காட்டினான்.

“உன் தந்தையின் பிறப்பு சான்றிதழ் காட்டு!”

“என் தந்தையின் பிறப்பு சான்றிதழ் என்னிடம் கிடையாது!”

“உனக்கு ஜராஸ்தானிலோ பங்கதேசத்திலோ கிர்மாவிலோ சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா?”

“இல்லை!”

“அங்குள்ள யாரிடமாவது முகநூல் வழியிலாவது பேசி வருகிறாயா?”

“இல்லை!”

தமிழவேள் குறுக்கே புகுந்தான். “என்ன ஆபிஸர் குயுக்தியான கேள்விகளா கேக்றீங்க? அரசாங்கம் கொண்டு வந்த சட்டத்தில் அம்பது சதவீதம் விஷம் இருந்தா உங்க செயல்பாடுகள்ல இருநூறு சதவீதம் விஷம் இருக்கு. அரசாங்கத்துக்கு யதார்த்தத்தை சொல்ல மாட்டிங்களா?”

“நீ யார்?”

“நான் ஆதில் முகமதின் ஆப்த நண்பன் மதுரன் தமிழவேள். இவன் இக்னேஷியஸ் இவனும் ஆதிலுக்கு நண்பன்தான்!”

“எதித்து வாயாடாம ஓடி போயிருங்க. அடுத்து உங்க வீடுகளுக்குதான் வருவோம். அகதிகள் முகாம்ல போய் நட்பு பாராட்டிக்கங்க!”

செயலாக்க அதிகாரி ஆதில் முகமதின் தலைமுடி, உமிழ்நீர், நகம் சேகரித்தார். “டிஎன்ஏ டெஸ்ட்டில் தெரிந்து விடும்… நீ கிங்கோலிய தயாரிப்பா கிரபு தயாரிப்பான்னு..”

“ஆபிஸர்! ஒரு பிரமாண்டமான அரண்மனைக்குள் சிலபல வருடங்களுக்கு முன் சில சுண்டெலிகள் புகுந்துவிட்டதாக கூறி ஒட்டுமொத்த அரண்மனையை வெடி வைத்து தகர்க்கலாமா? அரண்மனைக்குள் இருந்துகொண்டே சுண்டெலிகளை பிடித்து அப்புறப்படுத்தலாமே? நுனிகிளையில் இருந்துகொண்டு முன்கிளையை வெட்டுகிறீர்கள். படகில் நூற்றுக்கணக்கானோர் இருக்க ஓரிருவர் இருக்கும் படகு பக்கம் வெட்டி விட்டால் முழு படகும் நீரில் மூழ்கி விடாதா?” தமிழவேள்.

“ஆட்சியாளர்களிடம் உண்ண உணவு- இருக்க இருப்பிடம்- நோய்க்கு மருத்துவம்- அறிவுக்கு கல்விதான கேட்டோம்? ஏன் மதவெறியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறீர்கள்? மனிதர்கள் இருந்தால்தான் மதத்தின் தேவை இருக்கும். மனிதர்களே இல்லாத சுடுகாட்டில் மதம் எதற்கு? உலகின் எல்லா மதங்களையும் விட உன்னதமானது. மனிதாபிமானம். உலகின் முழு முதற்கடவுள் மனசாட்சி. ஒரே ஒரு கடவுள்-பல கடவுள்கள்– கடவுள் இல்லை என்கிற பல்வேறு சாத்தியங்களை கைபிடித்து தானே இந்த பூமி நகர்கிறது? மதம் அரசியல் கட்சி அல்ல கடவுள் அரசியல்கட்சி தலைவரும் அல்ல. கடவுளை பாதுகாக்க பௌன்ஸர் வேலை எதற்கு பார்க்கிறீர்கள்? நம் நாட்டின் ஜனத்தொகை 150கோடி வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாய் வந்தவர்கள் சில லட்சம் இருக்கலாம். உங்களின் வழக்கமான சட்டதிட்டங்களையும் அதிகாரிகளையும் வைத்து அவர்களை கண்டுபிடிக்க முடியாதா? எதிலும் நாஜிதனமான அணுகுமுறை பேரழிவை தரும்!” என கத்தினான் இக்னேஷியஸ்.

“வாயில் சுட்டு விடுவேன். வாயை மூடுங்கள்!”

ஐந்து நிமிடங்கள் கரைந்தன.

செயலாக்க அதிகாரியின் முகம் கறுத்தது. “உன் டிஎன்ஏ டெஸ்ட் நீ சிந்திய வம்சாவளி இல்லை என ஆணித்தரமாக கூறுகிறது!”

“உங்கள் டிஎன்ஏ சோதனை கருவியில் பழுது இருக்கிறது!”

“இந்த வாதத்தை எல்லாம் இராணுவ நீதிமன்றத்தில் போய் வைத்துக்கொள். உன் ஒட்டுமொத்த குடும்பத்தின் குடிஉரிமை ரத்து செய்யப்படுகிறது. உன்னுடைய அனைத்து வங்கி கணக்குகளும் ப்ரீஸ் செய்யப்படுகின்றன. உன் வேலையிலிருந்து நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுகிறாய். உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தினரின் ஆதார் கார்டு, பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ்,மெடிக்கல் இன்ஷுரன்ஸ் கார்டு பறிமுதல் செய்யப்படுகிறது. இனி இந்த வீடு உங்கள் வீடு அல்ல. இந்த வீட்டிலிருந்து நிரந்தரமாய் துரத்தப்படுகிறீர்கள். அரைமணி நேரம் அவகாசம் தருகிறேன். வேனில் ஏறுங்கள். உங்களை அகதிகள் முகாமில் விட்டுவிடுகிறோம்!”

ஆதில் முகமது தலையில் அடித்துக்கொண்டு கதறினான். “அடப்பாவிகளா… எங்கள் அடையாளங்களை பறித்து விட்டு எங்களை ஏதிலி ஆக்கிவிட்டீர்களே… இந்த நாடு என் நாடு. நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்பது எங்களின் ஒவ்வொரு செல்லிலும் பச்சை குத்தப்பட்டுள்ளது. இந்த வீட்டில் எங்கள் தந்தையாரின் இரத்தமும் வியர்வையும் கலந்துள்ளது!”

“அகதிகள் முகாமுக்கு போக அடம் பிடித்தாய் என்றால் தயங்காமல் உன்னை சுட்டுக் கொன்று விடுவேன்!”

ஆதில் முகமதின் கதறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இக்னேஷியஸும் மதுரன்தமிழவேளும் கூக்குரலிட்டனர். “எல்லாரும் ஓடி வாங்க. இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமில்லையா?”

காலியாகும் வீடுகளை கைப்பற்ற ஒருகூட்டம் முண்டியடித்தது. ‘‘சீக்கிரம் அகதிகள் முகாமுக்கு கிளம்பிப் போங்க. நாங்க இந்த வீட்டை கைப்பத்தனும்!”

நூற்றுக்கணக்கான தெருமக்கள் குழுமினர். “ஆதில் வீட்டை யாராவது கைப்பத்த முயற்சி பண்ணீங்கன்னா காலை உடைச்சிருவோம் எட்டி போங்கடா..”

தெருக்காரர்கள் செயலாக்க அதிகாரியை நெருங்கினர். “நீதான் செயலாக்க அதிகாரியா? உன் பெயர் என்ன? உன் பிறந்த தேதி சான்றிதழைக்காட்டு. உன் தந்தைக்கு உன் பாட்டனுக்கு உன் பூட்டனுக்கு பிறந்ததேதி சான்றிதழ்கள் உள்ளனவா? உனக்கு டிஎன்ஏ டெஸ்ட் செய்யப்பட்டுள்ளதா?”

செயலாக்க அதிகாரி திணறினார்.

“உங்களின் கேள்விகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது!”

“சொல்ல முடியாவிட்டால் இந்த இடத்தை விட்டு ஓடிவிடு. மற்ற செயலாக்க அதிகாரிகளையும் எச்சரிக்கை செய். ஒட்டுமொத்த சிந்தியமக்கள் விழித்துவிட்டார்கள். இனி அவர்களை ஒரு கணமும் ஏமாற்ற முடியாது…”

தெருமக்கள் செயலாக்க அதிகாரிகள் வந்த வாகனங்களை தீக்கிரையாக்கினர்.

“நடந்தே ஓடுங்கடா!”

செயலாக்க அதிகாரியும் அவரது சகாக்களும் பதறிசிதறி ஓடினர்.

தெருமக்கள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்தனர். “மக்கள் சக்தி சேர்வது மகாசிரமம். சிரமங்களை தாண்டி மக்கள் சக்தி ஒரு புள்ளியில் திரண்டு விட்டால் கறுப்பு சட்டங்கள் தூள்தூளாகி விடும்!”

“இனி மக்கள் போராட்டம் தெருக்கு தெரு நகரத்துக்கு நகரம் விஸ்வரூபம் எடுக்கும். அடுத்து பிறந்ததேதி சான்றிதழ் யார் கேட்டு வந்தாலும் விரட்டியடிப்போம். அகதிகள் முகாம்களை கலைத்து அனைவரும் அவரவர் வீடுகளுக்கு திரும்ப செய்வோம். கறுப்பு சட்டங்களை அமுல்படுத்தும் அரசாங்கங்களை திருத்துவோம் அல்லது தூக்கி எறிவோம். மீண்டும் ஜனநாயகத்தை மலர செய்வோம்!” தெருக்காரர்களின் கோஷத்தில் 150கோடி மக்களின் குரல்களும் சேர்ந்தொலித்தன.

ஆதில் முகமதுவும் மதுரன் தமிழவேளும் இக்னேஷியஸும் கைகோர்த்து கை உயர்த்தினர். “சிந்தியதாய் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நீடுழி வாழ்க! மதப்பற்று இருக்கட்டும் மதவெறி ஒழியட்டும்!” சிந்திய தாய் கட்டைவிரல் உயர்த்தினாள்.

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...