முடிவு உன்னோடது

vetrivendhan.writer
கற்பனை
4.8 out of 5 (21 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

நடுநிசியைத் தாண்டியும் உறக்கம் வரவில்லை சாருவிற்கு. மனம் முழுக்க குழப்பத்தில் இருக்க கண்களில் உறக்கம் வருவேனா என்று இருந்தது.

என்ன செய்வதென்று தெரியாமல் சிந்தித்தபடியே நெடுநேரம் அறைக்குள்ளேயே நடந்தவளுக்கு கால் வலி எடுக்கவும் அமர்ந்தவள் அந்த வலியுடனே உறங்கப் போனாள்.

ஆழ்ந்த உறக்கத்திலும் அவளின் மூளையானது அவளின் சிந்தனையை விடவில்லை.

பழைய நினைவுகளை தோண்டி எடுத்து மனக்கண் முன்னே காட்சிப்படுத்தி கொண்டே வரவும் அவளின் தந்தை சொல்லிச் சென்ற அந்த வார்த்தையும் அந்தக் காட்சியும் வரவே உறக்கம் கலைந்தவளாய் எழுந்து அமர்ந்தாள்.

மாலையில் சாருவின் தாய் கமலா அவளிடம் சொன்ன வார்த்தைகள் அவளுக்கே உவப்பானதாக இல்லை.

அவளின் தாய்மாமனின் இரண்டாவது மகனை அவளுக்கு மணம் முடிக்க இருப்பதாகவும், இதை அவளது தாய்மாமனே வந்து சொன்னதாகவும் கமலா சொல்லி இருந்தார்.

இதுநாள் வரையில் எத்தனையோ தடவை தனது தாய், தந்தை இருவரும் கேட்டுப்பார்த்தும் முடியாது என்று சொன்னவர், தன் தந்தை மரணப்படுக்கையில் இருக்கும் போது கேட்டதற்கும் இல்லை என்று மறுத்தவர் இன்று தானே வந்து சரி என்று சொன்னதை அவளது மனம் ஏற்கவில்லை.

"என்ன காரணம் இருக்கும்?..." என்று யோசித்தவளுக்கு நினைவுகள் சில வருடங்கள் சற்று பின்னோக்கிச் சென்றன.

கல்லூரிப் படிப்பை முடித்தவுடனே சாருவிற்கும் அவளது மாமன் மகனான ராஜேஷிற்கும் திருமணம் முடிக்க வேண்டும் என்று அவளின் தந்தை ராமநாதன் முடிவு செய்திருந்தார்.

ராமநாதன் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக ஒப்பந்த பணியாளாராக பணிபுரிகிறார். பணியில் சேர்ந்து பலவருடங்கள் கடந்தும் இன்னமும் பணி நிரந்தரம் ஆகவில்லை.

கிடைக்கும் வருமானத்தில் பிள்ளைகள் இருவரையும் ஓரளவிற்கு படிக்க வைத்தார். சாரு கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் இருக்கிறாள். அவளின் தம்பி கணேஷ் இப்போது தான் கல்லூரியில் அடியெடுத்து வைத்துள்ளான்.

ராஜேஷ் அவர் மனைவி கமலாவின் உடன் பிறந்த அண்ணனின் மூத்த மகன்.
சென்னையில் ஒரு நல்ல உத்யோகத்தில் இருக்கிறான். அவனுக்கும் வரன் பார்க்கத் துவங்கியிருப்பதையும் அவர் அறிந்திருந்தார்.

தன் மச்சானை விட தான் வசதியில் குறைவாக இருந்தாலும், தனது தங்கை மகளை மச்சான் மறுக்கப் போவதில்லை என்று நினைத்து இம்முடிவை எடுத்தார்.

இதைப் பற்றி அவளிடம் கேட்டபோது, இவளோ "உங்க விருப்பம் அப்பா'' என்று சொல்லவும்,

" சாரு... நாங்க ஆயிரம் சொல்லலாம்... ஆனால் முடிவு உன்னோடது. வாழப்போறது நீ. அதுனால இந்த விஷயம் மட்டுமில்ல வாழ்க்கைல எதுனாலும் முடிவு உன்னோடதாத்தான் இருக்கணும். இதை எப்பவும் மனசுல வச்சுக்க " என்று சொன்னதை நினைத்துப் பார்த்தவளுக்கு கண்களின் ஓரம் கண்ணீர் கசிவதை தவிர்க்க முடியவில்லை.

அதன் பின், எதிர்பாரா விபத்தில் ராமநாதன் படுத்த படுக்கையாகிவிட, தான் இருக்கும் போதே மகளுக்கு திருமணத்தை செய்திட வேண்டும் என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அவர் மனைவியின் அண்ணனும் , மச்சானுமாகிய ராஜரத்தினத்திடம் கேட்டதற்கு, மகனுக்கு இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று ஒரேடியாய் மறுத்துவிட்டார்.

இந்தக் கவலையில் அவரும் இறந்துவிட, வயதுக்கு வந்த மகளோடும், பதின்பருவத்தில் குடும்ப பாரம் சுமக்க இருக்கும் மகனையும் வைத்துக்கொண்டு, கணவனை இழந்த தன் தங்கையை பார்த்தும் ராஜ ரத்தினம் மனம் இளகாது இருந்தார்.

இடையில் இரண்டு முறை சொந்தங்களின் பார்வைக்காக திருமண ஏற்பாடுகள் செய்வதைப் போல் நடித்துப் பின், ஜாதகம் சரியில்லை, பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் இருக்காது என்று காரணங்கள் சொல்லியதால் அதை அப்படியே இருவீட்டாரும் நிராகரித்து விட்டனர்.

இதற்கிடையில் தன் தந்தை இறந்து ஆண்டுகள் நான்காகிய நிலையில், இன்று அவரே வலிய வந்து பெண் கேட்டதை சாருவால் நம்ப முடியவில்லை.

ராஜேஷின் திருமணத்தின் போது, ராஜேஷின் ஜாதகம் கிடைக்கவே, அதை தன் ஜாதகத்தோடு பொருத்தம் பார்த்தவளுக்கு, இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் நன்றாக இருக்கிறது வசதிப்பொருத்தம் தான் இல்லை என்ற உண்மை புலப்பட்டது. அப்படி இருக்கையில் இன்று நம்மிடம் என்ன வசதி வந்துவிட்டதென மாமா வலிய வந்து பெண் கேட்கிறார் என்று யோசித்தாள்.

" இந்த நான்காண்டுகளில் நம் குடும்ப நிலைமை ஒன்றும் அவ்வளவு உயர்ந்து விடவில்லை.

தந்தையின் வாரிசு என்ற முறையில் தனக்கு கிடைக்க வேண்டிய அரசாங்கப் பணியும் கிடைக்கவில்லை. அவரது செட்டில்மெண்ட் பணமும் இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான வழக்கு இன்னமும் நடக்கிறது. ஏதோ இவளது வருவாயில் குடும்பம் நடக்கிறது.

தானும் பெரிதாக சம்பாரிக்கவில்லை. கிடைத்த வேலையைப் பார்த்துக்கொண்டு அதில் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தையுமா தந்தையின் மருத்துவச் செலவிற்கு வாங்கிய கடனையும் திருப்பி செலுத்திக் கொண்டு வருகிறோம்."

எவ்வளவோ யோசித்துப் பார்த்தும் ஒன்றும் பிடிபடாத தால் அதை ஒதுக்கி வைத்துவிட்டு உறங்கச் சென்றாள்.

மறுநாள் வழக்கம் போல் அலுவலகம் சென்று வந்தாள். வீட்டிற்கு வந்த போது
அவள் அப்பாவின் நண்பர் மாணிக்கம் அவர்களைப் பார்க்க வந்திருந்தார்.

மாணிக்கத்தை பல வருடங்களாக அவர்களுக்குத் தெரியும். இவரும் ராமநாதனும் உடன் பணிபுரிபவர்கள். ராமநாதனோடு பேருந்தில் நடத்துனராக பல காலம் பணிபுரிந்தவர். இணை பிரியாத நண்பர்கள் கூட. மரணம் இவர்களைப் பிரித்துவிட்டது.

அப்பாவிற்கு ஏற்பட்ட விபத்தில் இவருக்கு ஏறக்குறைய கால் அகற்றும் படி ஆனது. தற்போது செயற்கை கால் உதவியோடு நடக்கிறார்.

வந்தவர் , குடும்ப நலனை விசாரித்துவிட்டு, அவளின் பணி நியமனத்திற்கான ஆணை மற்றும் ராமநாதனின் செட்டில் மெண்ட்க்கான காசோலை முதலியவற்றை அவளிடம் கொடுத்தார்.

அதை வாங்கியவளுக்கு, நம்ப முடியாத ஆச்சர்யம். நான்காண்டாக இதற்குத்தான் அலைந்து கொண்டிருந்தாள். தற்போது கையில் கிடைக்கவும் தன் அப்பாவை நினைத்து அழத்தொடங்கினாள்.

" ராமநாதன்... உனக்கு நல்ல படியா கல்யாணம் பண்ணி பாக்கணும் தான் மா ஆசைப் பட்டான். ஆனால் அவனுக்கு அது கொடுத்து வைக்கல. இந்த பணத்துலயாவது உனக்கு கல்யாணம் நடந்தாதான் அவன் ஆத்மா சாந்தி அடையும்" என்று சொன்னவர்,

அவளின் திருமண ஏற்பாடுகளை பற்றி கமலத்திடம் கேட்டார்.

" இவளுக்கு எங்க தகுதிக்கு ஏத்த மாதிரி வெளிய எங்கயும் வரன் அமையல. அப்படி அமைஞ்சாலும் இவ ஏதாவது சொல்லி தட்டிக் கழிக்கிறா.நேத்து தான் எங்கண்ணன் வந்து, ராஜேஷூக்கு தான் ஜாதகம் அமையல. அவரோட இரண்டாவது பையன் ரமேஷூக்கு பொருந்துமானு பாக்கலாம் னு இவகிட்ட முடிவு கேட்டுட்டுப் போனார். இவ என்னடானா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறா. அவங்க வீட்ல சம்பந்தம் னா எனக்கு கல்யாணமே வேணாம் னு நேத்தெல்லாம் எங்கூட ஒரே சண்டை" என்று அழுத்துக்கொண்டார்.


"போனவாரம் உங்க அண்ணனை பார்த்தேன் மா. உங்களப் பத்தி விசாரிச்சுட்டு இந்த கேஸ் விஷயமா கேட்டுட்டு, தீர்ப்ப பத்தியெல்லாம் விசாரிச்சாரு. தேவையில்லாம இதுக்கு செலவு பண்றதா சொல்லி சத்தம் போட்டாரு ‌ எப்படியும் நமக்கு சாதகமாக வரும் னு சொன்னதுக்கு அப்பறம் தான் அவரு சமாதானம் ஆனார்".

"அவரோட பாசம் எனக்குப் புரியுது. இவளுக்குப் புரியலயே.".

" ஏன்மா...சாரு. அதான் உங்க மாமாவே வலிய வந்து கேட்குறாருல்ல. அப்பறம் என்னமா. என்ன இருந்தாலும் தாய் மாமன். அவரே இறங்கி வரும் போது நீ இப்படி பண்றது நல்லா இல்லமா.. நாளைப்பின்ன ஏதாவது னா அவருதான் வரணும். நாங்க உன் நல்லதுக்கு தான் சொல்லுவோம். சரினு சொல்லு "

" நான் யோசிச்சு சொல்றேன் மாமா. கொஞ்சம் அவகாசம் கொடுங்க.".

" யோசிச்சு நல்ல முடிவா சொல்லுமா" என்று சொல்லிவிட்டு சென்றார்.


அவர் சென்றதும், கமலம் " ஏன்டி... உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க.?. எங்கண்ணனே வந்து கேட்டும் நீ வேணாம் னு சொல்லிட்டு இருக்க. உன்னய ஏதோ அச வீட்டுல குடுக்கப்போற மாதிரி இப்படி பயப்படுறவ. ஒழுங்கு மரியாதையா சரினு சொல்ற. நாளன்னைக்கு முறைப்படி பொண்ணு பாக்க வரச் சொல்லலாம் னு இருக்கேன். "
என்று கூறி விட்டு தன் வேலைகளை கவனிக்கச் சென்றார்.


அறைக்குள் நுழைந்தவளுக்கு, நேற்றைய சந்தேகத்திற்கான விடை கிடைத்துவிட்டது போல உணர்ந்தாள்.

எப்படியும் நமக்கு அரசாங்கப் பணியும், பணமும் கிடைத்து விடும் என்ற உறுதி கிடைத்தவுடன் தான் தன் மாமா தன்னைப் பெண் கேட்டு வந்துள்ளார் என்ற உண்மை புலப்படவும் தான் செய்ய வேண்டியது என்ன என்று சிந்திக்கத் தொடங்கினாள்.

அப்போது அவளின் கண்களின் ராமநாதனின் படம் பட்டது. கூடவே அவரது வார்த்தைகளும்

" சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க.. ஆனா... முடிவு உன்னோடது"..

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...