JUNE 10th - JULY 10th
உயிர்த் தோழன்…….
ஒரு நாள் நம் பூனையும் ஆட்டுக்குட்டியும் ஒரு குப்பை மேட்டில் சந்தித்துக்கொண்டன. அன்றைய தினம் வெய்யில் கடுமையாக காய்ந்து கொண்டிருந்தது. எங்கும் வெப்ப அலைகள் எழுந்து மண்ணை சூடாக்கிக் கொண்டிருந்தன. குப்பை மேட்டில் என்ன பெரிய அதிசயம் நடந்து விடப்போகிறது? எனவே அசிரத்தையாக குப்பையை கிளறிக்கொண்டிருந்த பூனையும் யார் வீட்டிலோ இலைகளை கிள்ளி விட்டு போட்டிருந்த கீரைத்தண்டுகளை சுகமாக மென்று கொண்டிருந்த ஆடும் ஒரு கணம் நேருக்கு நேராய் பார்த்துக்கொண்டன.
அவைகளுக்கு தோன்றிய முதல் எண்ணம் எதிரில் நிற்பவனால் நமது உணவு பறிபோய் விடுமா என்பது தான். இல்லை என்று தெரிந்தவுடன் இரண்டும் மெதுவாக தங்கள் வேலையைத் தொடர்ந்தன. பூனைக்குத் தெரிந்திருந்தது ஒரு நாள் இந்த ஆடு பிரியாணி வழியாக தன் வாய்க்கு வந்து சேரும் என்று. அந்த தெருவில் இருந்த வாணியம்பாடி பிரியாணிக் கடையை நடத்திய பாய் நம் பூனைக்கு நண்பர். எப்போது போனாலும் போதும் போதும் என்று சொல்லுமளவிற்கு பிரியாணியை பூனைக்கு படையலிடுவார். நல்ல கறித்துண்டுகளுடன் மென்று தின்று விட்டு பாயைப் பார்த்து ‘என்ன இருந்தாலும் ஒரு வறுத்த மீன் துண்டிற்கு இணையாகுமா ? ‘ என்று கேட்டு விட்டு திருவாரூர் தேர் போல அசைந்து அசைந்து மொட்டை மாடிக்கு வந்து விடுவார் நம் பூனையார்.
இன்று பிரியாணிக்கடை விடுமுறை என்பதாலும் அந்த தெருவின் குப்பை மேட்டிலேயே பிறந்து வளர்ந்த காரணத்தாலும் வழக்கம் போல் பூனை அங்கு வந்திருந்தது.அது மட்டுமில்லை ஒரு நாள் இப்படி வெளியே வந்து எல்லோரையும் பார்த்து விட்டு தன் பிறந்த வீட்டின் இண்டு இடுக்குகளில் சுற்றி விட்டு வந்தால் தான் நம் பூனைக்கு திருப்தியாக இருக்கும். யார் கண்டார்கள் பூனை ஏதேனும் புதையலை அந்த குப்பை மேட்டில் ஒளித்து வைத்து விட்டு அடிக்கடி வந்து கண்காணித்து விட்டு கூட செல்லலாம். யாரிடம் என்ன இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்?
இப்போது தான் அது அந்த ஆட்டை நன்றாக கவனித்தது. ஆடு நல்ல போஷாக்காகத்தான் இருந்தது. இருப்பினும் அதன் முகம் வாட்டமாக இருந்ததை கவனித்த பூனை மெதுவாக பேச்சு கொடுத்தது. ‘நல்ல வெயில் .. ஸ்…. எங்கயாவது ஒரு இடத்தில தண்ணி கிடைக்குதா?” பூனையின் குரல் கேட்டு திரும்பிய ஆடு “ ஆமாம் இந்த மனுஷப்பயலுங்க எங்க தண்ணி வைக்கிறானுங்க?”
உனக்கு ரொம்ப தாகமாயிருந்தா அதோ அந்த கொட்டாங்குச்சியில கொஞ்சம் மழத்தண்ணி இருக்கு அத வேணா குடிச்சிக்கோ “ என்றது ஆடு.
“ஓ.. ரொம்ப நன்றி” பூனை தண்ணீரை குடித்து விட்டு தன் மீசையை நாக்கால் நக்கிக் கொண்டது. தனக்கு உடனே உதவி செய்ததால் ஆட்டின் மீது ஒரு கருணை ஏற்பட்டதை பூனை கவனித்தது.
“ நீ இங்கு எப்படி வந்தாய்? உன்னை நான் இதற்கு முன் இங்கு பார்த்ததில்லையே?” என்றது பூனை.
“ நானும் தான் உன்னை பார்த்ததில்லை.” என்றபடி தள்ளிப் போய் கிளறிக்கொண்டிருந்தது ஆடு.
சரியான விவகாரம் பிடித்தவன் போலிருக்கிறதே என்று எண்ணமிட்டபடி பூனை தன் கழுத்தைத் திருப்பி யாரும் வருகிறார்களா என்று கவனித்தது. அதுவும் அந்த போக்கிரி நாய் வந்து விட்டால் அவ்வளவு தான் தலை தெறிக்க ஓடி விடும் நம் பூனை. எப்போதும் துஷ்டனைக்கண்டால் தூரப்போய் விட வேண்டும் என்று அதன் அம்மா சொல்லியிருக்கிறது. அப்போதெல்லாம் அம்மா சொன்னதை கண்டு கொள்ளாது. போகப்போக அதன் அறிவிற்கு தெரிகிறது அம்மா சொல்லியதெல்லாம் சரிதானென்று.
ஆனால் ஆடுகளைப்பற்றி பெரிதாக கவலைப்பட எதுவுமில்லை. அதுவும் இந்த மதிய நேரத்தில் பொழுது போக வேண்டுமே. இன்னும் கொஞ்சம் கிட்டே போய் ஆட்டிடம் பேச்சு கொடுத்தது. “இங்கே ஒரு போக்கிரி நாய் இருக்குமே அதனிடம் எப்படி தப்பிக்கிறாய்? “
“ அவனா, அவன் என்னிடம் வாலாட்ட மாட்டான். ஒரு தடவை என் தலையால் அவன் பின்புறத்தில் ஒரு எத்து எத்தியிருக்கிறேன்.” ஆடு எதையோ மென்றபடி சொல்லியது.
“அப்படியென்றால் நீ பெரிய தைரியசாலி தான்” பூனையும் நகர்ந்து வந்தது.
தெருவோரம் இருந்த சீத்தா மரத்தின் நிழலில் ஒதுங்கியது ஆடு. இப்போது தான் மிக அருகில் ஒரு ஆட்டை பார்த்தது பூனை.
“ மியாவ்! மியாவ்! “ என்று தன் குரலை உயர்த்தியபடி ஆட்டின் கண்களை நேருக்கு நேராக பார்த்தது. ஆட்டின் கண்கள் பிதுங்கி வெளியே வந்து விட்டிருந்தன. அதன் முகமோ கேட்கவே வேண்டாம், ஒடுங்கிச் சப்பையான அலுமினிய பாத்திரம் போல் இருந்தது.
“ என்ன ரொம்ப கவனிக்கிற? நான் நல்லவனா கெட்டவனான்னு பாக்கிறயா?” என்றது ஆடு.
“ அதெல்லாமில்ல… உன் கண்ணு ஏன் இப்பிடி பிதுங்கி வெளிய தள்ளியிருக்குன்னு யோசிக்கிறன்…”
“எதுக்கு உனக்கு இந்த தேவையில்லாத வேல? நான் எப்படி இருந்தா உனக்கென்னா?” சூடானது ஆடு.
“ இல்ல சும்மா ஒரு பேச்சுக்கு…….”
“ என்ன சும்மா , கும்மான்னு…. அடுத்தவன் எப்பிடி இருக்கான்னு பார்க்கறது மனுஷப்பயலுங்க வேல . அத ஏன் நீ செய்யற? வந்தியா குப்பய கிண்டனயா போய்க்கிட்டேயிரு” என்ற படி தெருவில் நடக்க ஆரம்பித்தது ஆடு.
“எம்மாடி!! சரியான சண்டக்காரனா இருப்பான் போல “ மெதுவாக பூனையும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.
தான் வசிக்கும் மொட்டை மாடிக்கு வந்து வசதியான ஒரு இடத்தில் சுருண்டு படுத்துக் கொண்டது. அது மூன்று முறை குட்டி போட்டிருக்கிறது. ஒவ்வொரு தடவையும் நாலு அல்லது ஐந்து குட்டிகள் போட்டிருக்கும். அதில் பாதி போய்விடும். மீதி இருக்கிற ஒன்றும் அம்மா என்றெல்லாம் உட்கார்ந்திருக்காது. அதன் வழி அதற்கு.
அதனாலெல்லாம் பூனை சோர்ந்து விடாது. இந்த குட்டிகளை பராமரிப்பதெல்லாம் வெட்டி வேலை என்று தான் அது நினைத்தது. பத்து வருடங்களுக்கும் மேலாக அது மனிதர்களுடன் தான் வசித்து வருகிறது. மனிதர்களைப் போல் குழந்தைகளை பெற்று அவர்களை சாகும் வரையில் பராமரிப்பதெல்லாம் வேலையற்ற வேலை என்று தான் அது கணித்திருந்தது.
அப்போது பக்கத்து வீட்டு நாய்கள் குரைத்தபடி எதையோ துரத்திச் சென்றன. நாய்களால் எப்போதும் இம்சைதான். அவை அளவுக்கு அதிகமாக மனிதர்களிடம் குழைவதும் எப்போதும் வாலை ஆட்டிக்கொண்டு அவர்கள் பின்னாலேயே திரிவதும் நம் பூனைக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை. இது என்ன மானமில்லா பிழைப்பு என்று காட்டமாக கேட்கும். வாக்கிங் வரும் சார்லி என்ற நாய் ஒரு முறை கேட்டது “ மனிதர்கள் அன்பாக இருப்பதால் தான் நம்மால் பிழைக்க முடிகிறது இல்லாவிட்டால் சோத்துக்கு என்ன பண்றது?”
அதற்காக நாய்களை எப்படி குற்றம் சொல்ல முடியும்? வெகு காலத்திற்கு முன்பே அவ்வாறிருக்க நாய்களை அவர்கள் பழக்கி விட்டார்கள். எனவே பூனை அது குறித்து அதிகம் விவாதிப்பதில்லை.
அப்போது பக்கத்திலிருந்த அபார்ட்மெண்ட் வீட்டு கதவு திறந்தது. ஒல்லியாக ஒரு உருவம் தலையில் ஸ்கார்ஃப் கட்டிக்கொண்டு வெளியே வந்தது. அது வேறு யாருமில்லை அந்த வீட்டில் வசிக்கும் கௌரியம்மாவின் மகள் தான். முகத்தையும் சேர்த்து மறைத்த படி ஏன் அந்தப் பெண் மறைந்து கொண்டு இருக்கிறாள் என்று அதற்கு புரியவில்லை. அவர்களது வீடு எப்போதும் பூட்டியே இருக்கிறது. பூனை அந்தப் பெண்ணை ஏற்கெனவே பார்த்திருக்கிறது. அழகாக அறிவுக்களையுடன் இருப்பாள். அவள் ஏன் முகத்தை மறைத்துக் கொண்டிருக்கிறாள்?
மனிதர்களின் பல நடவடிக்கைகள் அதற்குப் புரிவதில்லை. எனவே அது அடுத்த கட்ட யோசனைக்கு போய்விட்டது. எப்போது பார்த்தாலும் சிந்திப்பது தான் அதன் வேலை. “சிந்திப்பதால் நான் இருக்கிறேன் “ என்று சொல்லிக்கொள்ளும். அதை சொன்னவர் தெகார்தே என்ற கணிதவியலாளராம். கீழ் வீட்டில் ஒரு வாத்தியார் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் போது சொல்லிக் கொண்டிருந்தார். பூனை இந்த மாதிரி வாசகங்களை உடனே மனப்பாடம் செய்து விடும். சரி பூனை எதற்கு வகுப்பறைக்கு செல்கிறது என்று தானே கேட்கிறீர்கள்? நிச்சயமாக படிப்பதற்கு அல்ல.
அந்த வீட்டிற்கு ஒரு மீன் கார பாட்டி வரும். கூன் வளைந்த போதும் ஒரு அலுமினிய டபராவில் கொஞ்சமாக மீன் வாங்கிக் கொண்டு வந்து விற்கும். பரவாயில்லை உழைச்சி சாப்பிடுதே என்று பூனை அந்த பாட்டியிடம் நெருக்கமாக பழகும். பாட்டி ஒரு நாள் வரவில்லையென்றாலும் பூனைக்கு ஏக்கமாகி விடும். பாட்டி கொடுக்கும் மீனுக்காக இல்லை. அந்த பல்லு போன பாட்டி மட்டும் தான் பூனையிடம் ஒரு சொந்தக் காரியைப் போல் பேசும்.
கொஞ்சம் தாமதமாக போனால் ‘ என்ன ஆடி அசஞ்சு வர!! உனக்காக நான் உக்காந்திருக்க முடியுமா? வா இன்னிக்கு எறா தோலு இருக்கு சாப்பிடு. சாப்பிட்டுட்டு போய் சுருண்டுக்காத. அப்புறம் செரிக்காது. “ இப்படி பேசும் பாட்டியை நீங்கள் எங்காவது பார்த்ததுண்டா? பாட்டி போன பிறகு அப்படியே குப்பை மேட்டு பக்கம் பார்வையை ஓட்டியது. இன்றும் அந்த முரட்டு ஆடு அங்கே மேய்ந்து கொண்டிருந்தது. சரி வந்தது தான் வந்தோம் போய் ஒரு வணக்கம் சொல்லிட்டு போவோம் என்று நினைத்துக் கொண்டு ஐயர் வீட்டிற்கு எதிரில் இருந்த சந்திற்குள் நுழைந்தது. ஓரமாக நடக்க முடியவில்லை. ஒரே மூத்திர நாத்தம்.
இந்த மனுஷனுங்களுக்கு புத்தியே இருக்காதா? ஆடு மாடு பூனையான என் மாதிரி நல்லவங்க நடக்கற பாதையாச்சேன்னு இல்லாம ஒரு சந்த பாத்தா உடனே மூத்திரமடிக்கிறானுங்க. இவனுங்கள இந்த சந்திலயே தலை குப்புற உருட்டி விடணும். அப்பத்தான் என் மனசு ஆறும். கோபமாக எண்ணமிட்ட படி பூனை வேகமாக நடந்தது.
ஆடு முழுவதுமாக நனைந்திருந்தது. பூனையைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டது. எதுவும் பேசவில்லை. பூனை அப்படி விட்டு விடவில்லை.
“ வணக்கம். உன்னை பார்த்து நாளாகி விட்டது. எங்கே போயிருந்தாய்?”
ஆடு சொன்னது “ நான் எங்கும் போகவில்லை. என்னை வைத்து பூட்டி விட்டு என் வீட்டுக்காரன் தான் ஊருக்கு போய்விட்டான்.”
“சரி தான். அப்போ சாப்பாட்டுக்கு என்ன செய்தாய்?”
“வேறென்ன ? அவன் போட்டு விட்டு போனதை தின்றேன். “
ஆடு குளிரில் நடுங்கியது. இந்த வருடம் தொடர்ந்து மழையும் வெள்ளமுமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. ஐப்பசி தாண்டி கார்த்திகையிலும் கடும் மழைப் பொழிவு இருக்கிறது. இப்படி ஒரு அடை மழையை அது பார்த்ததேயில்லை. எங்கும் காலை வைக்க முடியவில்லை. சேறும் சகதியுமாய் குப்பைகளுடன் கலந்து குழம்பிக் கிடக்கிறது. எவ்வளவு கிண்டினாலும் சாப்பிடும் அளவிற்கு ஒன்றும் தேறவில்லை. அது பூனையை கவனிக்க வில்லை. பூனை போல் சத்தமில்லாமல் வருகிறாய் என்று மனிதர்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. ஆடு பூனையை பெரிதாக மதிப்பதில்லை. என்னன்னா என்ன அவ்வளவுதான். இருந்தாலும் தன்னை மதித்துப் பேசும் பூனையை அது குற்றம் சொல்ல முடியாது அல்லவா?
அதற்குப் பிறகு வந்த நாட்களில் பூனையும் ஆடும் சந்தித்துக் கொள்வதும் அக்கம் பக்கத்தினரைப் பற்றி உரையாடுவதும் தொடர்ந்து நடந்தது. ஒரு சமயம் கௌரியம்மாவின் மகளைப் பற்றி ஆடு தான் உண்மையைக் கண்டறிந்து சொன்னது. அந்தப் பெண்ணை எவனோ ஒரு பையன் காதலித்ததாகவும் இந்த பெண் மசியவில்லை என்று தெரிந்ததும் அதன் முகத்தில் அவன் ஆசிட் ஊற்றியதாகவும் போலீசில் புகார் அளித்தும் அந்தப் பையன் மேல் வழக்கெல்லாம் பதியவில்லை என்றும் ஆடு கூறியது. அடிக்கடி தயிர் சாதம் கொடுக்கும் கௌரியம்மாவிற்கு இப்படி ஆகி விட்டதே என்று பூனைக்கு வருத்தமாகப் போய்விட்டது. என்ன செய்வது அவர்கள் வீட்டின் முன் நின்று ஆறுதல் சொல்லி விட்டு வந்தது பூனை. அவர்களுக்கு தான் சொல்வது புரியாது என்றாலும் சொல்ல வேண்டிய கடமை அதற்கு இருந்தது.
ஒரு நாள் மதிய வேளை பூனை கிளம்பி அடுத்த வீட்டு மாடியை அடைந்தது. கௌரியம்மாள் வீட்டிலிருந்து ஒரே சத்தம். அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதாக எல்லோரும் பேசிக்கொண்டார்கள். பூனைக்கு மிகவும் வருத்தமாக இருந்தது, அப்படியே யோசித்த படி குப்பை மேட்டிற்கு வந்து சேர்ந்தது. அங்கு ஆட்டைக் காணவில்லை. ஆனால் பூனையை கடந்து சென்ற வண்டியிலிருந்து ஈனக்குரலில் ஆடு கத்திக் கொண்டே சென்றது. பிரியாணிக்கடை பாய் தான் ஆட்டை பிடித்துச் செல்கிறான். ஆடு என்ன சொல்கிறது என்று பூனைக்குப் புரியவில்லை. அது அப்படியே நின்று விட்டது. ஆல்பர்ட் காம்யூ சொல்வது போல் வாழ்க்கையில் எல்லாமே அபத்தமாகத்தானிருக்கிறது.
அன்றிலிருந்து பூனை பிரியாணிக்கடைக்குச் செல்வதில்லை.
#601
தற்போதைய தரவரிசை
58,633
புள்ளிகள்
Reader Points 300
Editor Points : 58,333
6 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 5 (6 ரேட்டிங்க்ஸ்)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
mail4arunsam
bas6471
என்ன இருந்தாலும் ஒரு வறுத்த மீன் துண்டிற்கு இணையாகுமா? மனிதர்களோடு பழகியதின் விளைவு.அருமை
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்