JUNE 10th - JULY 10th
மாநகரமே இருளில் மூழ்கி உறக்கத்தை தேடிக்கொண்டிருந்தவேளை . மஞ்சள் விளக்குகள் வழி காட்ட ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளை இறக்கிவிட்டு பேரம் பேசத் தொடங்கினார் அப்பா .
"70 ரூபா தர்றியே ..கொஞ்சம் போட்டுக் குடு சார் ..பாரு சார் புள்ள குட்டிக்காரன் .." என அப்பா கை காட்ட , ஆட்டோவின் உள்ளே இருந்து புகைப்படத்திற்கு முகம் காட்டுவது போல மெல்ல புன்னகைத்தேன் .
"புள்ளய காட்டி மனச கலைச்சிட்ட, புடி நூற ," என அப்பாவின் கைகளில் திணித்து விட்டு , உள்ளே இருந்த என்னை பார்த்து , "தங்கம் நல்ல படிச்சு எம்புள்ள மாதிரி அமெரிக்கா போயி நெறய சம்பாரிச்சு அப்பாவ நல்லா பாத்துக்கணும் என்ன.."
"நா இங்க இருந்தே அப்பா வ பாத்துக்கிறேன் மாமா .." என்ற பதிலுக்கு ம்ம் என தலையாட்டி விட்டு நிலையம் உள்ளே சென்றவர் புள்ளியாய் மறைந்து போனார் .அப்பா ஆட்டோ கம்பியை பிடித்து ஆட்டோவை பின்னால் தள்ளியபடி ," டேய் அப்பேன் பொழப்ப பாக்குறியில ..நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும் , இல்லைனா அப்பனா மாதிரி தராதரம் இல்லாதவனை எல்லாம் சார்னு கூப்டு தொலைக்க வேண்டியதை இருக்கும் ' . வண்டி வீட்டை நோக்கி சீரான திசையில் நிறுத்தப்பட்டது .
நகரத்தின் பிரதான சாலையில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு கிளை சாலையில் ஆட்டோ சென்றது.எனக்கு பரிட்சயம் இல்லாத சாலை தான்.பயம் வரும்போதெல்லாம் ஆத்திகர். மத்தபடி கடவுள் மறுப்பாளரே.
"அம்மா என்ன சொல்லிட்டு இருந்த டா"
"அது தாத்தாவுக்கு சாமி கும்பிட்டா நல்லதுன்னு சொன்னாங்க ..அவ்ளோதான்"
"க்கும்..பாடியே கிடைக்காத மாதிரி படகுல இருந்து தவறி விழுந்து வருஷம் போனவருக்கு சாமி கும்பிடணுமாக்கும்..சாமி கும்பிடும்போது திடீர்னு எங்க அப்பா வந்து நினா என்ன பண்ணுவாளுங்கலாம் ..முட்டா சிறுக்கிக "
பதிலளிக்க இயலாமல் தெருவில் ஒட்டி இருந்த சினிமா போஸ்டர்கள் மீது கண்ணோட்டம் பாய்ச்சினேன் .இரவுக் குளிரிலும் தைரியமாய் யாருக்கும் பயப்படாமல் நாயகர்கள் நாயகிகளுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தனர் .ஆட்டோ டாப் கியரில் பறந்து கொண்டு இருந்தது . ஏன் இவ்வளவு வேகம் ??எனக் கேட்க நினைத்து மெளவுனமாய் சிரிப்போடு மூவர் சீட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தேன் . எனக்கு பரிட்சயம் இல்லாத ரோடுகளில் வேகவேகமாய் ஆட்டோ திரும்பிச் சென்ற வேளையில் சட்டென பெரும் சத்தத்தோடு ஆட்டோவின் கண்ணாடியில் எதோ ஒன்று மடேரென அடித்து வீசப்பட்டது .நொடியில் ஆட்டோ நிறுத்தப்பட்டு நிதானமானது . அப்பா பதட்டமானார் . சட்டென சீட்டில் இருந்து இறங்கி முன் ஓடினார் . பின் சீட்டில் இருந்து நான் தவ்வி சென்றேன் . தூரத்தில் இருந்து பார்க்க ஏதோ குழந்தை போல தோற்றம் அளிக்க அருகில் சென்றேன் .அப்பாவின் காக்கி பேண்டின் கீழ் பல வண்ணங்களில் கொண்ட முருகனின் வாகனம் எங்கள் வாகனத்தில் அடிபட்டு மரண வாக்குமூலத்தை என் தந்தையிடம் கூறிக்கொண்டு இருந்தது .
அப்பா முன்பை விட இன்னும் பதட்டம் ஆனார் . கண்கள் திசைக்கொன்றாய் திரும்பின . சாலை யாரையும் ஏற்றுக்கொள்ளாமல் வெறுமையாய் இருந்தது .ஒரே ஒரு திசையில் மட்டும் தள்ளுவண்டி கடைக்காரர் வேலை எல்லாம் முடித்துக்கொண்டு வண்டியை தள்ளியபடி வந்து கொண்டிருந்தார் .
அப்பா என்ன நினைத்தார் என தெரியவில்லை சட்டென மயிலை கையில் ஏந்தி நின்றார் . நான் பிறந்த பொது அப்பா இப்படி தான் என்னை ஏந்தி இருப்பார் போல என நினைத்துக்கொண்டேன் .
"ரோட்டோராமா இருக்க மண்ண அள்ளி இதுமேல போடு டா..." என அப்பா கட்டளையிட, கட்டளை இட்டப்படி செயல்பட்டு தடத்தை அழித்தேன்.
"டேய் வண்டில பொய் உக்காரு " குரலில் பட்டமும் அதட்டலும் கலந்திருந்தது .நான் துள்ளிக்குதித்து ஓடி வண்டியில் ஏறினேன் .மயிலை சீட்டின் பின்னால் தூக்கி போட்டுவிட்டு டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார் அப்பா .
கண்ணாடியின் உட்புறம் அருள்பாலித்த 5 ரூபாய் முருகனை தொட்டு பாவமன்னிப்பு கேட்டார் அப்பா . மயிலின் ரத்தம் முருகனின் மேல் பூசப்பட்டது .ஆட்டோவின் நிதானத்தை கலைத்து பதட்டடப்படுத்தினார் .ஆட்டோ கிளம்பியது .கொட்டிய ரத்தத்தின் மேல் ஆட்டோ டயர் தடம் போட்டது .ஆட்டோவை யாரும் பின்தொடரவில்லை முருகனை தவிர .
எனக்கு தெரிந்து ஊரோரம் இருக்கும் குப்பை கிடங்கில் மயிலை தகனம் செய்ய அப்பா நினைத்திருப்பார் . ஆட்டோ வேகமாய் சென்றது .என் யூகம் ஊர்ஜிதமானது .குப்பை கிடங்கை நெருங்கி வந்துவிட்டோம் .எனக்கு பின்னால் இருக்கும் மயிலை பார்க்க ஆர்வம் தூண்டிற்று . அதிகாலை என்றாவது எழுகையில் சுவற்றின் மேலோ , வேகமாய் வண்டியில் சென்றபோது , என தூரமாய் பார்த்த மயிலை இவ்வளவு அருகில் பார்க்க இனி வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ .பார்க்கும் பொது சட்டென கொத்தி விட்டால் நாளை அவளிடம் எப்படி என் முகத்தை காட்டுவது , வருத்தப்படுவாள்.என்ன செய்யலாம் என எண்ணிய வேளையில் ஆட்டோ பல வளைவுகளை கடந்து சென்றது .கையை மட்டும் அனுப்பி தொட்டுப்பார்க்கலாம் என எண்ணி கையாய் பின்னால் வைத்தேன் .சுள்ளிக்கட்டிற்குள் கைவிட்டார் போல் உணர்வு , இறகில் கை வைத்தேன் போல. மேலே சென்றேன் . சுள்ளியை தாண்டி உடலை தொட்டேன்.தயிர் கட்டியை தொட்டார் போல் மொழுமொழுவென இருந்தது .மேலே செல்ல மயிலின் கழுத்து. அது ஒரு துணி போல , அவளின் கன்னம் போல அவ்வளவு மென்மையாய் மெலிதாய் இருந்தது . முருகனை எப்படி தான் தாங்கி இருக்குமோ என ஐயமுற செய்தது. ஆண் மயிலெனினும் பெண்ணாக தோற்றமுற செய்தது . எதோ ஒரு வித உணர முடியாத நாற்றம் ஆட்டோவை சூழ்ந்தது .மூக்கைப் பொத்திக்கொண்டேன் .அப்பா பதட்டம் அடங்காமல் வேகமானார் . கிடங்கை நெருங்கிய வேளையில் போலீஸ் சைரன் விளக்கு சிவப்பு நீலமாய் எங்கள் கன்னத்தில் அறைந்தது . அப்பாவை நன்றாகவே .
" என்னப்பா ..குப்பைதொட்டில போட்டுட்டு போய்டுவோமா.."
"டேய் அங்கப்பாரு போலீஸ் நிக்கிறாங்க.."
"ஏம்பா அவங்க குப்பைல போட்ட திட்டுவாங்களா "
"டேய் நாம மயிலை கொன்னுருக்கோம்..இது தேச துரோகம் ட..இங்க கொல செஞ்சத சாட்சி சொல்லப்போனாலே நாம தான் கொல பண்ணோம்னு சொல்லிடுவானுங்க… இப்போ இந்த நெலமைல… வேணாம்..அம்மா..இதெல்லாம் உனக்கு சொல்லி தரவே மாட்டாளா "
"ஏம்பா மயில் முருகன் வாகனம் அதனாலேயே..அப்போ போன வாரம் அம்மா சேவக்கொழம்பு வச்சீச்சு ..அப்போ அம்மாவையும் போலீஸ் புடிச்சிட்டு போய்டுமா .." என வெங்காயம் போல் பேசிய எனக்கு அறை ஒன்றை கன்னத்தில் பதிலாய் தந்துவிட்டு வண்டி மாற்று வழியில் சென்றது .தந்தையின் கோபம் புரியாமல் விசுமிக்கொண்டே தூங்கிய எனக்கு விடியல் ரொம்ப புதிதாக இருந்தது .
அப்பா வெள்ளை பனியன் வெள்ளை வேட்டி இடுப்பில் வெள்ளை துண்டு என தேவதையை போல் காட்சி அளித்தார் .ரென்டே அறை கொண்ட வீட்டில் அங்கும்,இங்கும் ஓடிக்கொண்டிருந்தார் .கண்ணை துடைத்த வேளையில் வீடே வெறுமென இருந்தது .கொல்லையில் கொஞ்சம் சத்தம் கேட்க போய் பார்த்தேன் .சிறுவன் என்பதை எனக்கு மட்டும் குளிப்பதில் இருந்து விலக்கு . விபூதி , ரெட்டை வாழைப்பழத்தில் குத்திட்ட ஊதுபத்தி என எதோ ஒரு நிகழ்வு என்னை கேக்காமலேயே அரங்கேறிக்கொண்டிருந்தது .அனைவரும் கொல்லையில் புதிதாய் முளைத்த மணல் மேட்டை கும்பிட்டுக்கொண்டிருந்தனர் .நானும் அவர்களோடு கும்பிட்டேன் மூடத்தனமாக .எல்லாம் முடிந்து எனக்கு அப்பா விபூதி இட்டார். கும்பிட்ட கையை இறக்காமல் வீட்டின் உள்ளே சென்றோம் .உள்ளே தாத்தா அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தார் . தோற்றம் 1950 மறைவு 2022 என குறிப்பிட்டு இருந்தனர் . திரு மு.மயில்வாகனம் என பெயரைக் கொஞ்சம் பெரிதாகவே போட்டு இருந்தனர் .
#632
தற்போதைய தரவரிசை
40,250
புள்ளிகள்
Reader Points 250
Editor Points : 40,000
5 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 5 (5 ரேட்டிங்க்ஸ்)
shyamchithu2000
vadivelsptc
thaslimabanu031
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்