கர்வம்

அறிவியல் புனைவு
5 out of 5 (8 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

"மிஸ்டர் சவரி முத்து. உலக மெமரி சாம்பியன்ஷிப்பை உங்க பையன் தேவா தொடர்ந்து ரெண்டு தடவை ஜெயிச்சிட்டாரு. இந்த வருஷமும் ஜெயிப்பார்னு நம்புறீங்களா?"


கேள்வி கேட்ட அந்த நிருபரை நான் ஏளனமா பார்த்தேன்.


"ஜூனியர் சாம்பியன்ஷிப்ல அவன ஜெயிக்க இந்த உலகத்திலேயே ஆள் கிடையாது."


"அவரோட டேலண்ட'ட ஷோ'வா மக்களுக்கு காமிக்கிற ஐடியா ஏதாவது இருக்கா உங்களுக்கு?"


"இப்போதைக்கு இல்ல. அவன் வெறும் ஜூனியர் சாம்பியன்ஷிப் டைட்டில் தான் வின் பண்ணி இருக்கான். 13 வயசு தான் ஆகுதுன்னு, அவன சீனியர்ஸ் காம்படிஷன்ல அலோ பண்ண மாட்டேங்கிறாங்க, ஆனா அவன் அதுக்குமே ஏற்கனவே ரெடி, எப்ப அவன் அந்த டைட்டில் அடிக்கிறானோ, அதுக்கப்புறம் அவன் எவ்வளவு பெரிய டேலண்ட்னு மக்களுக்கு காட்டுறேன்."


"உங்க மகனை எந்த ஸ்கூல்ல படிக்க வைக்கிறீங்க?"


"நான் எந்த ஸ்கூலுக்கும் போக வேண்டிய அவசியம் இல்லை" நறுக்குன்னு தேவா'வே அந்த நிருபருக்கு மூஞ்சில அடிச்ச மாதிரி பதில் சொன்னான். பாக்கவே பெருமையாகவும், கர்வமாகவும் இருந்துச்சு. அந்த நிருபரோட முகத்துல அவமானமும் கோவமும் தெரிஞ்சுது. அவர இக்னோர் பண்ணிட்டு அடுத்து கேள்வி கேட்டவர கவனிச்சேன்.


"அவருக்கு என்ன மாதிரி பயிற்சி எல்லாம் கொடுக்குறீங்க?"


"அத புரிஞ்சுக்கணும்னா, ஐ க்யூ லெவல் 120க்கு மேல இங்க யாருக்காவது இருந்தா, இன்டர்வியூக்கு அப்புறம் வந்து கேளுங்க. தனியா எக்ஸ்பிளைன் பண்றோம்."


நிருபர்களுக்கு நடுவில் கொஞ்சம் சலசலப்பு கேட்டது, ஒருவர் முன்னாடி வந்தார்.


"தலைக்கணத்துல ஆடாதீங்க சார். முதல்ல சொல்லுங்க. புரியுதா இல்லையான்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம்,"


குழந்தைத்தனமா கேக்குற அவர பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது.


"ஓகே. அவனுக்கு கொடுக்கிற டிரெய்னிங் இஸ் நாட் ஒன்லி அபௌட் ரிட்டைய்னிங் ஷார்ட் டெர்ம் ஆர் லாங் டெர்ம் மெமரி, இட் இஸ் ஆல்சோ அபௌட் கிளாரிட்டி. மீனிங், அவனோட மூளை சின்னச் சின்ன விஷயங்கள்'ல நடக்குற மாறுதல்களை கவனிச்சு, அது தேவையா இல்லையான்னு பிராசஸ் பண்ணி, தேவைனா அப்கிரேட் பண்ணி சேவ் பண்ணிக்கவும், தேவையில்லை'ன்னா திராஷ் பண்ணவும் ட்ரெயின் பண்ணி இருக்கோம்."


கேட்ட நிருபர் முழித்து, மேலும் கேள்வி கேட்க முடியாத கோபத்தால் முறைத்துப் பார்த்தார்.


"உங்க பையன, ஆர்ட்டிஃபிஷியலி இன்டெல்லிஜன்ட் ஹியூமனாய்டா ஆக்க பாக்கறீங்களா? அப்படி பண்ணா, வில் ஹி நாட் லூஸ் ஹீஸ் கேரக்டர்ஸ் ஆப் எ ஹியூமன்?"


யார்ரா இவ்வளவு இன்டெலிஜெண்டா கேக்குறாங்கன்னு, அந்த நிருபர் கூட்டத்துக்குள்ள எட்டிப் பார்த்தேன். ஒரு 70 வயசு பெரியவரு, பயங்கர ஒல்லியான உடம்போட, ஆனா அந்த ரிப்போர்ட்டர் சேர்ல, சமணக்கால் போட்டு உக்காந்துட்டு இருந்தார். அவர் கேட்ட கேள்விக்கும், வேஷ்டி சட்டைக்கும் சம்பந்தமே இல்லாம இருந்தது.


"பிரில்லியன் கொஸ்டின். இதற்கான பதிலை அவனே தீர்மானிக்கட்டும்னு என் பையன் கிட்ட தான் விட்டு இருக்கேன். மேபி காலம் தான் அதுக்கான பதிலை அவனுக்கு கொடுக்கும்னு நினைக்கிறேன். இதோட, இந்த பேட்டிய முடிச்சுக்கலாம். அடுத்த வாரம் சாம்பியன்ஷிப் போயிட்டு வந்து, திரும்பவும் பேசலாம்."


சொல்லிட்டு, நானும் தேவாவும் அந்த மீட்டிங் ரூம் விட்டு வெளிய வந்தோம். நான் அந்த பெரியவர் தென்படுறாரான்னு பார்த்தேன்.


வெளியே வெயிட் பண்ணிட்டு இருந்த என்னோட மனைவி கலையரசி,


"கற்றது கள்ளளவு, கல்லாதது உலகளவு'ன்னு சொல்லுவாங்க. என்ன இருந்தாலும் இவ்வளவு ஆணவத்தோட பேசி இருக்க வேணாங்க. நிருபர்களுக்கு நடுவுல, நம்ம பையன சாபம் விடுற மாதிரி கூட திட்டிட்டு இருந்தாங்க."


சின்னப்புள்ளத்தனமா பேசிட்டு இருந்த அவளுக்கு, எனக்கு பதில் சொல்ல தோணல. என்னமோ என்னோட மனசும் கண்ணும் அந்த பெரியவர தான் தேடிட்டு இருந்துச்சு.


"என்னங்க" னு திரும்பவும், அவள் இழுக்க.


"கம்முனு இரும்மா. இவங்க எல்லாம் ஒரு ஆளுன்னு, அவங்க சொல்றதை பத்தி பேசி எங்க டைம் வேஸ்ட் பண்ணாத” னு சொன்ன தேவா, “அந்த ஹ்யூமனாய்ட் பத்தி கேள்வி கேட்டவர'யா பா தேடுறீங்க?" னும் கேட்டான்.


நான் அவனை ஆச்சரியமா பார்த்தேன். நான் அவன் அம்மாவுக்கு குடுக்க வேண்டிய சரியான பதிலை குடுத்துட்டு, என்னை மாதிரியே யோசிச்சு, அந்த பெரியவரை தேடறானே.


என்னோட சூப்பர் ஜெராக்ஸ் டா நீ. நான் வாழ்க்கையில சாதிக்க முடியாதது எல்லாத்தையும், உன்ன வச்சு சாதிச்சு இந்த உலகத்துக்கு நம்ம யாருன்னு காட்டணும்டா"னு மனசுக்குள்ள யோசிச்சுட்டு,


"ஆமா. தேவா, அவரோட கேள்வியை விட அவரோட அப்பியரன்ஸ் என்னை ஏதோ டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கு, நீ அவரை எங்கேயாவது பார்த்தேன்னா சொல்லு"


அவர தேடிட்டே, அவளை திரும்பிப் பார்க்காம மனைவி கிட்ட கேஷுவலா கேட்டேன்.


"எங்க பிளைட் டிக்கெட்டை, பிசினஸ் கிளாசுக்கு அப்கிரேட் பண்ண சொன்னேனே. பண்ணிட்டியா?"


கொஞ்ச நேரம் கழிச்சும் பதில் வராததால, நின்னு திரும்பி பார்த்தேன். எங்க கூட நடந்துக்கிட்டே, அவசர அவசரமா போன்ல எதையோ தேட ஆரம்பிச்சா. நான் நின்னப்புறமும், அவ பாட்டுக்கு நடந்து முன்னாடி போயிட்டே இருந்தா.


"குடுத்த ஒரு சின்ன வேலையையும் மறந்துட்டியா?"


குரல் அவளுக்கு பின்னாடி வருதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், நின்னு திரும்பி பார்த்தா. குடுகுடுன்னு கிட்ட ஓடி வந்தா.


"இல்லங்க. நீங்க டிக்கெட் ஃபார்வேர்ட் பண்ண இமெயில்'ல காணோம்'ங்க. அதைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன். டிக்கெட் நம்பர் இல்ல பாஸ்போர்ட் கேக்குறாங்க, அப்கிரேட் பண்றதுக்கு."


"டிக்கெட் நம்பர் ஏ46சி2டி. பாஸ்போர்ட் நம்பர் பி665437789" னு ஞாபகத்தில இருந்து டக்குனு சொன்னேன்.


"உனக்கு ஒரு வேலைய குடுத்துட்டு, உன் பின்னாடியே வந்து, நீ செஞ்சிட்டியான்னு பாக்குறதுக்கு பேசாம நானே அந்த வேலையை செஞ்சிடலாம் போல."


நான் சொன்னதை பார்த்து தேவா மட்டும் லைட்டா ஸ்மைல் பண்ணான். கலையரசி இன்னமும் போன்ல எதையோ நோண்டிட்டு இருந்தா. அவள பக்கத்துல இருக்க சேர்ல கூட்டிட்டு போய் உட்கார வச்ச அவன்,


"ஏர்லைன்ஸ் போன் நம்பர் வேணுமா மா?" னு கேட்டான்.


"இல்லப்பா. எடுத்துட்டேன். இதோ கால் பண்றேன்" னு போனை எடுத்தாள்.


டைம் வேஸ்ட் பண்ண வேணாம்னு, நானும் போன எடுத்து பி ஏ க்கு கால் பண்ணேன்.


"தேஜு. 6:30 மணி மீட்டிங்க நாளைக்கு ரெண்டு மணிக்கு மூவ் பண்ணிடு."


" ஒன் மினிட் சார். " சில நொடிகளுக்குப் பிறகு, "எந்த மீட்டிங் சார்? உங்க காலண்டர்ல எதுவுமே காமிக்கலையே?"


மறுபடியும் எரிச்சல் ஆனேன். "அப்ப நேத்து ஈவினிங், அந்த டெக்ஸ்ட் ஸ்டார்ட் அப் பிரபு கூட மீட்டிங் கன்ஃபார்ம் ஆயிடுச்சுன்னு உனக்கு கால் பண்ணி சொன்னேனே. அதை நீ காலண்டர்ல அப்டேட் பண்ணலையா?"


"சாரி சார். ரிமைண்டர்ல் போட்டு வச்சிருந்தேன். மறந்துட்டேன்."


"ஆயிரம் டெக்னாலஜி டூல்ஸ் வந்தாலும், அத ஒழுங்கா யூஸ் பண்ண தெரியாத உங்களையெல்லாம் வசசிக்கிட்டு நான் மாரடிக்கிறேன் பாரு. அட்லீஸ்ட், என்னோட ஷேர் காண்டாக்ட் லிஸ்ட்ல இருந்து பிரபு'வ எடுத்து காண்டாக்ட் பண்ணி நாளைக்கு மீட்டிங் யாவது ஒழுங்கா ஷெட்யூல் பண்றீங்களா, இல்ல அதையும் நானே பண்ணிக்கவா?"


"இல்ல சாரி சார். இதோ பண்ணிடறேன்" னு அவ சொல்லும்போதே, அந்த வயசானவர் தூரமா கேட்டுக்கு பக்கத்துல தெரிஞ்சார். நான் வேகமா அவர நோக்கி நடக்க ஆரம்பிச்சேன்.


"நானும் வரவாப்பா" னு தேவா எழுந்தான்.


"இல்ல. நீ இங்கேயே அம்மாக்கு துணையா இரு. தொலைஞ்சு போயிட்டா, இவள வேற இந்த கூட்டத்துல தேடிட்டு இருக்கணும். நான் திரும்ப வந்து என்ன பேசுனோம்னு சொல்றேன்"


சொல்லிட்டு நான் வேகமா ஓடுனேன். கேட்டைத் திறந்து வெளியில வந்து, ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் பார்த்தா ஆள காணோம்.


"கொய்யா பழம் சாப்பிடுறீங்களா?" னு ஒரு குரல்.


பக்கத்து பில்டிங் காம்பவுண்டு ஒரமா வெளியில தொங்கிட்டு இருந்த பழத்த சாப்பிட்டுக்கிட்டே, என்கிட்ட ஒரு பழத்தை நீட்டுனாரு, அதே பெரியவர். அவர் பண்ற ஒவ்வொரு விஷயமும், அவர் கேட்ட கேள்விக்கு சம்பந்தமே இல்லாம, வினோதமாவே இருந்துச்சு. இவர்தான் அந்த கேள்வியை கேட்டாரான்னு திரும்பவும் சந்தேகம் வந்துச்சு.


"இல்ல பரவால்ல சார். நீங்க சாப்பிடுங்க" னு சொன்னதும்.


சிரிச்சுகிட்டே "சரி நீங்க சொல்லுங்க. மூச்சரைக்க ஓடி வந்திருக்கீங்களே. என்ன விஷயம்?"


"எல்லாம் நீங்க கேட்ட கேள்வி தான் சார். ஏன் என் பையன ஹ்யூமன் உணர்ச்சிகளை இழந்துருவானான்னு கேட்டீங்க? அந்த கேள்வி எனக்குள்ள ஒரு உறுத்தலான பயத்தை குடுத்துட்டே இருக்கு. அதனாலதான் கேட்டேன்."


அவர் சிரிச்சிட்டு என்ன பார்த்தாரு.


"நான் ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன். வரிங்களா?"


"எங்கே? எப்போ?" னு கேட்டேன்.


அவரு சிரிச்சுக்கிட்டே. "அங்க வந்தா, உலகத்தையே புரட்டி போடறேன். எல்லாத்தையும் மாத்தி காட்டுறேன்'னு சொல்ல மாட்டீங்க இல்ல?"


அவரு சொன்னதுல நக்கல் தெரியல. அதனால அமைதியா இருந்தேன்.


சாப்பிட்டுட்டு இருந்த பழத்த முடிச்சிட்டு, இன்னொன்னை சர்ட் பாக்கெட்ல போட்டுட்டு.


"ஏன்னா. எதையும் மாத்த முடியாது. வேடிக்கை மட்டும் வேணும்னா பாக்கலாம். என்ன வரிங்களா?


எனக்கு ஒரு மாதிரி உடம்பெல்லாம் சில்லுனு ஆச்சு. டைம் ட்ராவல் ஆ? நெஜமாவா? தேவா, ஃபியூச்சர்ல என்ன எல்லாம் சாதிச்சிருக்கான்னு பாத்துட்டு வரலாமேன்னு டக்குன்னு தோணுச்சு.


யோசிச்ச அடுத்த நிமிஷமே எனக்கு என் மேலயே சிரிப்பு தான் வந்தது. அதுக்குள்ள என்ன நம்ப வச்சிட்டாரே இந்த மனுஷன். இருந்தாலும், "ஓகே" ன்னு சொன்னேன். என்னதான் நடக்குது பார்த்துடலாம்.


கையை தட்டிட்டு என் பக்கத்துல வந்தாரு. அவரோட வலது கையால, என்னோட கையை புடிச்சாரு.


புடிச்ச அடுத்த நிமிஷம், சர்ன்னு தலை வரைக்கும் கரண்ட் ஷாக் அடிச்சா மாதிரி இருந்துச்சு. ஒரு செகண்ட்ல, பூமியிலிருந்து என்னை வானத்துக்குள்ள புடிச்சு உரிஞ்சுகிட்ட மாதிரி. பிளைட்ல இருந்து கீழ தள்ளிவிட்ட மாதிரி, வானத்துக்கு நடுவுலயும் ஒரு லிப்ட்ல போற மாதிரி, காது ஃபுல்லா பக்குனு அடைச்சு, மூச்சு விடவும் முடியாம நான் கேவி கேவி, டக்குனு எல்லாம் ஒரு நொடியில ரிலீஸ் ஆயிடுச்சு.


—------—------—------—------—------—------—------—------—------—------—------—------—------—------—------—---


"என்னங்க சொல்றீங்க? வீட்டுக்கு வர்றதுக்கு உங்களுக்கு வழி மறந்து போயிடுச்சா?" கலையரசியோட குரல்.


நான் சுத்தியும் பார்த்தேன். கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும், கடையோ பெட்ரோல் பங்கோ ஒண்ணுமே தெரியல.


"என்னங்க. என்னங்க?" திரும்பவும் கலையரசியோட குரல்.


"இல்லம்மா. வண்டி ஓட்டிட்டு வந்துட்டே இருந்தேன். ஏதோ திடீர்னு பிளாங்க் ஆனா மாதிரி இருந்துச்சு. என்னன்னு ஒன்னும் புரியல."


"கூகுள் மேப்பில் தான் வீட்டு அட்ரஸ் சேவ் பண்ணி இருப்பீங்களே. அத போடறதுக்கு, இன்டர்நெட் இல்லையா?"


மேல மேல, கேள்வி கேட்ட அவளை,


"என்னம்மா இது. பிளாங்க் ஆயிடுச்சுன்னு சொல்றேனே, உனக்கு புரியலையா? போன எப்படி ஆப்ரேட் பண்றதுன்னே மறந்து போச்சு. உன்னோட கால் எப்படி அட்டென்ட் பண்ணேன்னு எனக்கு தெரியல"


எதுக்கு அவகிட்ட சத்தமாக கத்தறேன்னு தெரியலை. எரிச்சல் கலந்த பயத்தொட உடம்பு நடுங்க ஆரம்பிச்சுது.


அவள் இப்போது சத்தமாக அழ ஆரம்பித்தாள்.


"ஏங்க, கார் எப்படி ஓட்டுறதுன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கு இல்ல?"


அவள் கேட்டதும், இன்னமும் மைண்ட் பிளாங்க் ஆனது. பிரேக்கில் இருந்து, காலை எடுத்தேன், வண்டி மெதுவாக நகர்ந்தது. அவசரமாக பார்க் கியரில் போட்டேன்.


"ஞாபகம் இருக்குமா. நல்ல வேளை" னு சொன்னேன்.


"கடவுளே நன்றி கடவுளே. அப்படியே வண்டிய மெதுவா ஓட்டிட்டே வாங்க. வழியில் என்ன எல்லாம் பாக்குறீங்களோ, அப்படியே சொல்லிட்டே வாங்க."


"சரிம்மா. இப்பத்திக்கு கடை, பெட்ரோல் பங்க் எதுவுமே தெரியல. ஏதோ கரும்பு காடு மாதிரி இருக்கு."


"பரவா இல்லைங்க. ஓட்டிட்டே வாங்க. ஏதாவது வீடோ, இல்ல ஆள் நடமாட்டம் தெரிஞ்சாலோ சொல்லுங்க. எந்த பக்கம் வண்டி போனாலும், உங்க வண்டியில் இருந்து இறங்கி உடனே அந்த வண்டியை நிறுத்துங்க."


"சரிம்மா. சரிம்மா."


கார் போயிட்டே இருந்துச்சு. ம்ஊம். ஒரே வனாந்தரம். கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம், அங்கங்க பன மரம், நடுவுல ஃபுல்லா வறண்ட காடு,


"என்னங்க. ஏதாவது தெரிஞ்சுதா?"


"இல்ல மா.'


"அம்மா. சமயபுரத்தாளே. எப்படியாவது என் வீட்டுக்காரரை இன்னைக்கு பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சேத்துரு. அடுத்த வாரமே உன்னோட கோயிலுக்கு வந்து புடவை சாத்தி அங்க பிரதட்சணை செய்றேன். அதுக்கப்புறம் அவரை என் கூடவே வச்சு பத்திரமா பாத்துக்கிறேன்"


அவ வேண்ட வேண்ட, எனக்கு வயித்துல புலியை கரைக்க ஆரம்பிச்சது. வண்டியில ஏதோ பீப் சத்தம் கேட்க ஆரம்பிச்சது. 'ஐயையோ. பெட்ரோல் ரிசர்வ் ஆயிடுச்சு போல". எனக்கு இன்னும் பயம் அதிகமாகி, கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சது. எதுவும் கிடைக்காம, பட்டினில எங்கேயோ ஒரு காட்டுக்குள்ள சாகப் போறேனோ?"


"என்னங்க இருக்கீங்களா?"


"இருக்க மா இருக்கேன். இப்பத்திக்கு இருக்கேன். இந்த பெட்ரோல் வேற காலி ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். அது வேற சத்தம் போடுது."


"அய்யய்யோ…" னு அவ சத்தமா அழ ஆரம்பிச்சா.


"நீ வேற அழுது அழுது என்னை இன்னும் பயமுறுத்தாதம்மா. அனாதையா எங்கேயோ காட்டுல சாகப் போறேனான்னு நானே பயந்து நடுங்கிட்டு இருக்கேன்.


அந்தப் பக்கம் அவள் அமைதியானாள்.


"பயப்படாதீங்க. ஒன்னும் பிரச்சனை இல்ல. உங்களை எப்படியாவது வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடறேன். சரி போன்ல சார்ஜ் இருக்கான்னு பாருங்க."


"பாக்க தெரியலையே மா."


"சரி பரவாயில்லைங்க. டேஷ் போர்டுக்கு கீழ ஒரு வயர் போயிட்டு இருக்கும். அதை எடுத்து போனுக்கு கீழே சொருகுங்க."


"இங்கே ஏதோ சர்ச் மாதிரி இருக்குமா. ஆனா மூடி இருக்கு. 'சாப்பல் ஆஃப் குயின் மேரி'னு போட்டு இருக்குமா."


"சூப்பருங்க. அப்படியே பக்கத்துல வேற ஏதாவது வருதான்னு பார்த்துட்டே இருங்க. நான் அதுக்குள்ள இந்த சர்ச் எங்க இருக்குன்னு பாக்குறேன்"


சர்ச்சை தாண்டுனதுக்கு அப்புறம், அதே வறண்ட நிலம். கொஞ்ச தூரத்தில் போனா ஒரு மலையில போய் ரோடு முடிஞ்சிடுச்சு. இரண்டு பக்கமும் திரும்ப வழி இல்ல. வந்த வழியிலேயே ஓட்டுறது தான், திரும்ப ஒரே வழி.


"என்னம்மா ஏதாவது கண்டுபிடிச்சியா?"


"இல்லயேங்க" திரும்ப அழுகை அவள் குரலில் சேர்ந்து கொண்டது. "நீங்க சொல்ற சர்ச் எல்லாமே, 500 கிலோ மீட்டர் தாண்டி தான் காட்டுது"


பயமும் கோபமும் ஜாஸ்தியாகி, கார் கண்ணாடியை ஓங்கி குத்தினேன்.


"என்னம்மா நீ? இங்க ரோடு வேற முடிஞ்சு போச்சு. வேற எந்த பக்கமும் வழி இல்ல. வந்த வழியிலேயே திருப்பி எவ்வளவு தூரம் ஓட்டுறது? பெட்ரோல் தாக்குப்பிடிக்குமானு வேற தெரியல"


"ஒன்னும் பிரச்சனை இல்லைங்க. நான் தேடிட்டே இருக்கேன். நீங்க பேசாம வண்டிய நிறுத்திட்டு, வெயிட் பண்ணுங்க."


பெருமூச்சுடன், வண்டியில் இருந்து சாவியை எடுத்தேன்.


"சாரே. குடிக்க தண்ணீ இருக்குமா?" ன்னு பக்கத்துல ஒரு குரல். உடம்பெல்லாம் சிலிர்த்து திரும்பி பார்த்தேன்.


"எங்க யாருங்க அது பக்கத்துல?" போன்ல இருந்து மனைவி சத்தமா கத்தினா.


மொபட் வண்டியில ஒரு பேன்சி ஷாப்ப செட் பண்ணி வியாபாரம் பண்ற அவர்கிட்ட, அமைதியா என்னோட போன கொடுத்தேன்.


"ஹலோ. ஐயா!!! சாமி மாதிரி வந்து அவர காப்பாத்தி இருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றி." னு ஆரம்பிச்ச கலையரசி, ரொம்ப நேரம் பேசினதுக்கு எல்லாம் அந்த மனுஷன் தலைய ஆட்டிட்டே இருந்தாரு.


போன வச்ச அப்புறம், அவரோட கடை செட்டப்ப கழட்டி காருக்குள்ள பத்திரமா வச்சுட்டு, என்ன பைக்ல ஏத்திக்கிட்டு கிளம்புனாரு.


கஷ்டப்பட்டு இன்னைக்கு என்ன நாள், கிழமை, எங்க இருந்து எங்க போயிட்டு இருந்தேன்னு யோசிச்சு ஞாபகப்படுத்த பார்த்தேன். மேல மேல யோசிக்க, சர்ச் கட்டிடம், பெட்ரோல் ரிசர்வ் ஆகி கார் போட்ட பீப் சத்தம், கண்ணு முன்னாடி பிரம்மாண்டமா தெரிஞ்ச அந்த மலைன்னு, திரும்பத் திரும்ப இந்த விஷயங்களே ஞாபகத்துக்கு வந்தது.


எவ்வளவு நேரம் மொபட் ஓடுச்சுன்னு தெரியல. அந்த வீட்டு வாசலுக்கு வந்து, கலையரசி ஓடிவந்து என்ன கட்டிப்புடிச்சு அழுததுக்கு அப்புறம் தான், அந்த வீட்டைப் பற்றிய ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமா திரும்ப வர ஆரம்பிச்சு, மறந்து போன வீட்டு அட்ரஸ் இப்ப தெளிவா ஞாபகத்துக்கு வந்தது.


பேன்சி கடைக்காரரை, உள்ள கூட்டிட்டு போய் பயங்கரமா கவனிச்ச கலையரசி. திரும்பத் திரும்ப நன்றி சொல்லிட்டே இருந்தா.


நான் தன்னிச்சையா ஹால்ல பெருசா தொங்க விட்டிருந்த அந்த போட்டோ பிரேமுக்கு முன்னாடி போய் நின்னேன். கோட் சூட் எல்லாம் மாட்டிட்டு இருந்த அந்த 30 வயசு கப்பு'லோட போட்டோவ பார்த்து யாருன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.


பின்னாடி வந்த கலையரசி "தேவா'க்கு பண்ணி சொல்லிட்டேங்க. டிமன்ஷியா'னு தெரிஞ்சதுக்கப்புறம், எதுக்கு வீட்டை விட்டு தனியா வெளியே அனுப்புறேன்னு எனக்குத்தான் பயங்கர திட்டு,"


நான் திரும்பவும் போட்டோவ பாத்துட்டே, "தேவா?".........னு அவள கேள்விக்குறியோட பார்த்தேன்.


"தேவா, நம்ம பையங்க. அவனையுமா மறந்துட்டீங்க?"


அந்த போட்டோவ பாத்துட்டே, அதிர்ச்சியோட கண்ண மூடுனேன். சர்' ருன்னு திரும்ப மூளை வரைக்கும், கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி ஒரு உணர்வு,


—------------


"என்னங்க என்னங்க" மறுபடியும் கலையரசியோட குரல், கண்ண திறந்து பார்த்தா, அவ என் தோள பிடிச்சு உலுக்கிட்டே இருந்தா.


"ஏம்பா. அந்த கொய்யா மரத்தை வெறிக்க பாத்துட்டே இருந்தே?"


"நல்ல வேளை. கண்ணை அந்த மரத்தை விட்டு எடுத்தீங்களே. வெறிக்க பாத்துட்டு, அசைவே இல்லாம இருந்த உங்கள பார்த்த உடனே நான் பயந்தே போயிட்டேன். சரி வாங்க போகலாம்"


காரை நோக்கி நடந்துட்டே "ஆமா தேவா. இது எந்த வருஷம்?"


சைடுல திரும்பி என்னை வினோதமா பார்த்த அவன்,


"என்னப்பா ஆச்சு உனக்கு? 2022 பா!"


"இல்ல தேவா. உன்னை சீனியர் சாம்பியன்ஷிப்ல எந்த வருஷம் கலந்துக்க விடுவாங்கன்னு கால்குலேட் பண்றதுக்காக கேட்டேன்."


அவன் இன்னும் என்ன வினோதமா பாத்துக்கிட்டே காரோட பின்னாடி சீட்ல ஏறுனான்.


நல்ல வேலை!! அவனும் என் கூட டைம் ட்ராவல் பண்ணி வந்து இந்த அதிர்ச்சியான விஷயத்தை தெரிஞ்சுக்கல.


யோசிச்சுட்டே காரை ஸ்டார்ட் பண்ணேன்.


ஆமா. இது நிஜமாவே டைம் ட்ராவல் தானா?


உடனே பளிச்சுன்னு அந்த பெரியவரோட வாய்ஸ் கேட்டது,


"ஏன்னா. எதையும் மாத்த முடியாது. வேடிக்கை மட்டும் வேணும்னா பாக்கலாம். என்ன வரிங்களா?"


அப்படின்னா? நான் பிரசண்ட்ல என்ன பண்ணாலும், பியூச்சர்ல வரப்போற டிமன்சியாவ தடுக்க முடியாது. ஓ மை காட். எந்த வருஷம்னு தெரியலையே. ஆனா இன்னும் பத்து வருஷத்துல, நான் சேர்த்து வச்ச எல்லா ஞாபகங்களும் அழிய போகுதா?


என்னோட ஞாபக சக்தி, என்னோட அணுக்கள்’ல இருந்து உருவான தேவாவோட ஞாபக சக்தி, இது எல்லாத்தையும் பத்தி எல்லார்கிட்டயும் கர்வமா பேசிட்டு இருந்தேனே. அது எல்லாமே அவ்வளவு தானா?


இந்த ஞாபக சக்தி'ன்ற ஒரு விஷயம் இல்லனா, நான்'னு ஒரு ஆளே இல்லையே. இந்த ஞாபக சக்தியை வச்சு, எனக்கும் சரி மத்தவங்களுக்கும் சரி எவ்வளவு விஷயம் பண்றேன். இது இல்லாத ஒரு வாழ்க்கையை எப்படி? என்னால நெனச்சு கூட பாக்க முடியலையே!!


யோசிச்சிட்டு இருக்கிற உண்மையோட ஆதிக்கம், என்ன கழுத்துல மேல மேல நெருக்க, காரை கண்ட்ரோல் பண்ண முடியாம, பக்கத்துல இருந்த பிளாட்பார்ம் சைடுல இடிச்சு காரை நிறுத்தினேன்.


"அப்பா" ன்னு அலறுனான் தேவா.


கலையரசி "இறங்கி பின்னாடி சீட்டுக்கு வாங்க முதல்ல. நான் ஓட்டுறேன். என்னமோ சரியா இல்ல. மரியாதையா ரெண்டு நாள் லேப்டாப்பை எல்லாம் ஆஃப் பண்ணி வச்சுட்டு ரெஸ்ட் எடுங்க"


பின்னாடி சீட்டுக்கு வந்த உடனே, கை தன்னிச்சையா போனை எடுத்துச்சு. ஏர்லைன்ஸ் வெப்சைட்டுக்கு போய், ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டை கன்ஃபார்ம் பண்ணிட்டாளான்னு பார்க்க தோணுச்சு. ஏதாவது பண்ணி மைண்ட டிஸ்ட்ராக் பண்ணனும்'ல.


"அப்பா. அம்மா சொன்னது தான் நானும் சொல்றேன். எல்லாத்தையும் ஆஃப் பண்ணிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. நீங்க லேப்டாப்பை எடுக்கலைன்னா, பூமி சுத்துறது ஒண்ணும் நின்னுட போறது இல்ல,"


கண் மூடி சாஞ்சேன். திரும்பவும் பெரியவரோட சிரிச்ச முகம் தான் ஞாபகம் வந்தது.


"அங்க வந்தா, உலகத்தையே புரட்டி போடறேன். எல்லாத்தையும் மாத்தி காட்டுறேன்'னு சொல்ல மாட்டீங்க இல்ல?"


பளீர்னு முகத்தில அறைஞ்சா மாதிரி இருந்துச்சு.


இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த ஞாபக சக்தி'ன்ற பவர் என்கிட்ட இருக்கப் போகுதுன்னு தெரியல. இருக்கிற வரைக்கும், அத மத்தவங்களுக்கும் யூஸ்ஃபுல்லா ஆக்கறது எப்படின்னு நாளையிலிருந்து பார்க்கணும், மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கணும்,


தேவா இயல்பாவே நல்லவனா தான் இருக்கான். அவனுக்குள்ள தன்னைப் பத்தில இந்த கர்வம் வரதுக்கு நான் தான் முக்கியமான காரணம். அதையும் வேரோட புடுங்கணும்.


எல்லாத்துக்கும் மேல, என்னோட மூளைக்கு மறதி'ன்ற விஷயம் நார்மல்னு புரிய வைக்கணும். மத்தவங்க ஒரு விஷயத்தை மறக்கும் போதும், அவங்களுக்கு நம்மளோட ஞாபக சக்தியை வச்சு எப்படி உபயோகமா இருக்கிறது'ன்னு பார்க்கணும். நம்மளையும் மீறி ஒரு விஷயத்தை நம்ம மறக்கும் போது, என்ன பெருசா ஆகிட போகுது? லைஃப் வில் ஸ்டில் கோ ஆன். ரைட்?


கார் ஒடுற சின்ன தாலாட்டுல, நாளைக்கு வரப்போற நல்ல நாளை யோசிச்சுக்கிட்டே தூங்கிப் போனேன்.

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...