ஆண்டாளு இப்ப நம்மாளு

பெண்மையக் கதைகள்
4.9 out of 5 (149 )

ஆண்டாளு இப்ப நம்மாளு

என்னங்க… என்று பலமுறை கணவனை கூப்பிட்டுப் பார்த்த ஆண்டாள் அவர் வராததால் யோவ்…. என்னய்யா செய்யற என்று ஆத்திரத்துடன் கத்தினாள். சொல்லும்மா என்றபடியே வந்து நின்ற குணசீலனிடம், உன்னோட நாய் கத்திகிட்டே இருக்குது பாரு, கொண்டு போய் தோட்டத்தில் கட்டிட்டு வா என்று சலிப்பாக கூறினாள்.

அது வந்தும்மா . . . தோட்டத்தில் பன்டி தூங்கிக்கொண்டு இருந்த பொழுது தேள் கடித்து விட்டது, வலி தாங்காமல் கத்திக் கொண்டிருக்கிறது என்றார். அதற்காக வீட்டுக்குள்ளே அழைத்து வந்து விட்டாயா? அது கத்தறது என் காதுக்கு நாரசமாய் இருக்குது என்றாள். நான் டாக்டரிடம் அழைத்துப்போய் வருகிறேன் என்று குணசீலன் கூற, சுண்ணாம்பு பத்து போடுங்க சரியாகி விடும் என்றாள்.

இதுவே ஒரு தண்டத்தீனி. இதுக்குப்போய் வைத்தியம் பார்க்கணுமாம் என்று வெறுப்பை உமிழ்ந்தாள். பன்டி போயும் போயும் அவளைப் பார்த்து அழுகிறாயே ஐந்தறிவுக்கும் ஆறறிவுக்கும் வித்தியாசம் தெரியாதவள். உன் வேதனை அவளுக்கு புரியாது என்றபடி தூக்கி மடியில் வைத்துக் கொண்டு தலையைத் தடவினார். பன்டியை தூக்கிச்சென்று தோட்டத்தில் உள்ள பெஞ்சு மேல் படுக்க வைத்துவிட்டு பிஸ்கெட் கொண்டு வர வீட்டிற்குள் சென்றார்.

கணவன் கையிலிருந்த பிஸ்கெட்டைப் பார்த்ததும், ஏங்க மனுசன் திங்கிற பிஸ்கெட்டை எல்லாம் நாய்க்கு போடுவீங்களா? அதுக்குனு ஒரு பிஸ்கெட் விக்குதாமே அதை வாங்கிப் போடுங்களேன் என்றாள் ஆண்டாள். பன்டி பிஸ்கெட்டை சாப்பிட மறுத்தது. என்னடா ரோசம் வந்துடுச்சா, இன்னைக்கு மட்டுமா திட்டுறா, நீ இந்த வீட்டுக்கு வந்த நாள் முதலாகத்தானே உன்னைத் திட்டுகிறாள். திருமணமான நாளில் இருந்து அவளிடம் ஏச்சு பேச்சு வாங்கி எனக்கே உடல் மரத்துப் போய் விட்டது என்றார்.

நல்லதோ கெட்டதோ என் புலம்பலை உன்னிடம்தானே கொட்டுகிறேன். டேய் பன்டி கத்தாதடா மனது வலிக்குது என்றார். நாயைக் கொஞ்சினது போதும், பேரனை டியூசனிலிருந்து கூட்டிட்டு வாங்க என்று குரல் கொடுத்தாள். வரும்போது அப்படியே கத்தரிக்காயும் வாழைக்காயும் வாங்கியாந்துடுங்க,. என்றவளைப் பார்த்து உம்… சரி என்று கூறிவிட்டு குணசீலன் பையை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

என்ன தாத்தா, பாட்டி ஏதாவது டோஸ் விட்டுச்சா ? என்று பேரன் கேட்டான். டேய்… மாறா.!... பாட்டியை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது என்றார். ஏன் தாத்தா ஒரு நாளாவது பாட்டியை எதிர்த்துக் கேள்வி கேட்கமாட்டீங்களா? அப்பாவையும் சித்தப்பாவையும் பாருங்க, அவங்க மனைவியை எப்படியெல்லாம் மிரட்டி மீன் பிடிக்கறாங்க என்று கூறி சிரித்தான்.

பேரனின் வயசுக்கு மீறிய பேச்சை கேட்டவர், இது எங்கு போய் முடியுமோ என்று முனகினார். தாத்தா, பாவ்பாஜி சாப்பிடலாமா? என்று கேட்டான். பணம் கொண்டு வரவில்லையே என்றவரை பார்த்து, உங்க பென்சன் பணத்தை ஜாலியா செலவழிக்காம பாட்டிகிட்ட கணக்கு சொல்லிக்கொண்டு இருந்தால் இப்படித்தான் என்றான்.

தாத்தா, நான் உங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தருகிறேன் என்றான். டேய் உன்னிடம் ஏது பணம் என்று தாத்தா கேட்க, சிரித்துக்கொண்டே பாட்டியிடம் எது கேட்டாலும் எனக்கு கிடைக்கும். அதுவுமில்லாமல் அம்மாவும் என் கை செலவுக்கு பணம் தருவார்கள் என்றான். உன் பாட்டி என்னிடம் தான் குரங்காட்டியாக நடந்து கொள்கிறாள் போல என்று மனதிற்குள் மருகினார்.

வீட்டிற்குள் நுழைந்த குணசீலனின் செவியில் தோட்டத்தில் பன்டி அழும் சத்தம் கேட்டது. விரைந்து சென்றவர், பன்டியின் காலில் ரத்தம் வடிவதைப் பார்த்தார். துடைத்து, மருந்து போட்டுக்கொண்டே ஆண்டாள் அடித்தாளா? என்று கேட்டதற்கு ஆமாம் என்று தலையை ஆட்டியது. அடியேய் ஆண்டாளு… ஆண்டாளு… என்று உரக்கக் கத்தினார்.

எதற்கு என் பேரை ஏலம் போடுறீங்க,? யார் கொடுத்த தைரியம் ? என்று பலம் கொண்ட மட்டும் அவளும் கத்தினாள். சும்மா கத்தாதடி, நான் வெளியே சென்றபின் இந்த வாயில்லா சீவனை அடித்தாயா? என்று கேட்டார். ஊம்… கத்திட்டே கிடந்தது, அதனால கம்பெடுத்து ஒரு அடி விட்டேன் என்று தெனாவட்டாக பதில் கூறினாள்.

நானும் உன்னை அடிக்கிறேன் பார் என்று கீழே ஏதாவது பொருள் தென்படுகிறதா என்று தேடினார். அப்பாவா இப்படி சத்தம் போடுவது என்று வீட்டிலிருந்த எல்லோரும் அங்கு ஓடி வந்தனர். அப்பா! என்று பிள்ளைகள் பேச வந்தபொழுது அவர்களை அடக்கியவர், இவளுக்கு வயதுதான் கூடிவிட்டதே தவிர வலியின் உணர்வுகளை புரிந்து கொள்ளாதவள். இன்றுவரை என் வாயை அடக்கியே வாழ்ந்துவிட்டாள், என்று கத்தினார்.

அவளும் உங்களை சரியாக வளர்க்கவில்லை, நீங்களும் அவளைப் போலவே மனைவியை மிரட்டி உருட்டி வாழ்கிறீர்கள். நீங்கள் என்னிடம் பேசும் தகுதியை இழந்து நீண்ட நாட்கள் ஆகின்றது அம்மாவுக்கு வக்காலத்து வாங்க வருகிறீர்களா? என்று பிள்ளைகளை அடக்கினார்.

ஒரு வாயில்லா சீவன் எதற்காக கத்துகிறது என்று கூட தெரியாமல் அதனை மேலும் அடித்திருக்கிறாய்… த்தூ… நீயெல்லாம் ஒரு மனுசியா என்று மனைவியை பார்த்து கத்திவிட்டு பன்டியை தூக்கிக்கொண்டு டாக்டரிடம் ஓடினார்.

இல்லற வாழ்வில் இன்றுதான் கணவன் தன்னை முதன்முதலாக திட்டுகிறார் என்பதை உணர்ந்த ஆண்டாள் வாயடைத்து நின்றாள். மகன்களும் விக்கித்துப்போய் தம்தம் அறைக்குள் நுழைந்து கொண்டனர்.

டாக்டர் பன்டியின் காயத்திற்கு மருந்து போட்டு, தேள் விஷத்திற்கு ஊசி மூலம் மருந்தை செலுத்தினார். வீட்டிற்கு வந்த குணசீலன், பன்டி உன்னுடைய வலிக்கு நான் அழவும் மனவேதனை அடையவும்தான் முடியும் என்று கூறியபடி அதை தூங்க வைத்துவிட்டு தானும் உறங்கச் சென்றார்.

குணசீலனுக்கு உறக்கம் வரவில்லை. வாயில்லா சீவன் படும் வேதனை ஒரு புறம் வாட்டியது, மறுபுறம் கட்டிய மனைவியிடம் கோபம் கொண்டதை எண்ணி மனம் கலங்கியது.

பெற்றோர்களின் ஒரே செல்லப்பிள்ளையாய், உல்லாசமாக வலம் வந்தவர் குணசீலன். வங்கியில் காரியதரிசி. ஒரு நாள் பூங்காவில் நடைபயிற்சிக்கு பின் குணசீலன் உட்கார்ந்தபோது முறுக்கு மீசையோடு மிடுக்கான தோற்றத்தில் இருந்த பெரியவர் ஒருவர் அவனருகில் வந்து தம்பி உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று பக்கத்தில் உட்கார்ந்தார்.

குணசீலன் கேள்விக்குறியோடு அவரை நோக்க, தம்பி நீங்கள் யாரென்று எனக்கு தெரியும், ஆனால் உங்களுக்கு என்னை தெரியாது.

உங்க பெயருக்கு ஏற்றார் போல் நல்ல குணமுள்ளவனாக இருக்கின்றாய். என்னுடைய பெண்ணை உனக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன். எனக்கு வசதிக்கு குறைவில்லை. என் மகள் பெயரில் ஒரு வீட்டை எழுதி வைத்து சீர் செனத்திகள் நிறைய செய்கிறேன். நான் உன்னுடைய பெற்றோரிடம் வந்து பேசலாமா ? என்று கேட்டார்..

என் பெற்றோர்களும், நிறைய சீரோடு அழகான பெண் உன்னைத் தானாகவே தேடிவருகிறாள் திருமணம் செய்துகொள் என்றனர். நானும் அவளுடைய அழகைப் பார்த்து சம்மதித்தேன். திருமணத்திற்கு பின்தான் தெரிந்தது ஆண்டாள் அடுத்தவர்களை அடக்கி ஆளப்பிறந்தவள் என்பது.

‘குணா இல்லம்’ என்ற பெயர்ப்பலகை மிளிரும் அடுக்கு மாடி வீடு குணசீலனின் அப்பா கட்டியது. அங்கு நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் வாடகைக்கு குடியிருக்கிறார்கள். மக்கள் சட்டென்று ஒட்டிக்கொள்ளவும் பட்டென்று வெட்டிக்கொள்ளவும் செய்பவர்கள். குணசீலனின் அப்பா அவர்களின் குணம் தெரிந்து வளைந்து கொடுப்பார். நகரின் மையத்தில் தன் அப்பா சீராக தனக்கு தந்த வீட்டை வாடகைக்கு விட்டு உனக்கு நான் எதிலும் சளைத்தவள் இல்லை என்பது போல் ஆண்டாள் என்னை ஏளனமாக பார்ப்பாள்.

ஆண்டாள் பெற்ற இரண்டு ஆண் பிள்ளைகளும் அவள் குணத்தை நகல் எடுத்தது போலவே வளர்ந்தனர். திருமணம் என்ற பெயரில் அவர்களுக்கும் வரதட்சணையாக நிறைய சொத்துக்களை வாங்கி குவித்து விட்டாள். ஒழுக்கத்தை கடைபிடித்த ஆண்டாள் நாவடக்கத்தை மட்டும் தொலைத்து விட்டாள். எப்போதும் அவளது பேச்சில் அகங்காரம் ஆணவம், அலட்சியம், வெளிப்படும்.

குடும்ப கெளரவம் கருதி கணவனாகிய நானும், அம்மாவை தெய்வமாக மதிக்கும் பிள்ளைகளும் அவளுக்கு அடங்கிப் போனதால் ‘தொடை நடுங்கிகள்’ என்ற பெயரை எங்களுக்கு சம்பாதித்து தந்தது. மூன்று பேரையும் பாசக்கயிற்றால் பிணைத்து குடும்பத்தலைவனான என்னை பின்னுக்கு தள்ளிவிட்டு தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டாள்.

சில நேரம் அவள் ஆணாகவும் நான் பெண்ணாகவும் பிறந்திருக்கக் கூடாதா? என்று நினைப்பேன். நாற்பது வருடங்களாக அவளுக்கு அடிமையாக வாழ்ந்து வரும் நான் இப்போது பன்டியின் பிரச்சனையால் ஆண்டாளை எதிர்த்து குரலை உயர்த்துகிறேன்..

பல வருடங்களுக்கு ஆண்டாளை தொல்லை செய்யாமலும் அவள் இருக்கும் இடத்திற்கு போகாமலும் பன்டியை பழக்கி வைத்திருக்கிறேன். அந்த வாயில்லா சீவன்கூட தன் வசமாக வேண்டும் என்று நினைக்கிறாளே என எண்ணியபடியே உறங்க முயற்சித்தார்.

காலையில் எழுந்ததும் பன்டியை காணச் சென்றார். வாலை ஆட்டியபடி தன் மேல் பாய வருபவன் ஏன் படுத்துக்கொண்டிருக்கிறான் என்று பதட்டமாக பன்டி என்று உரக்கக் கூப்பிட்டார்.

அசைவில்லாமல் இருந்தவனை பயத்துடன் தொட்டுப் பார்த்தபோது பன்டி இறந்துவிட்டதை உணர்ந்தார். நெஞ்சைப் பிடித்தபடி தரையில் உட்கார்ந்து கதறி அழுதார். பன்டியின் இறப்பு மனைவி மீது வெறுப்பை ஏற்படுத்தியது. பிள்ளைகளிடமும் பேச்சை குறைத்துக் கொண்டார்.

பன்டியின் இறப்பு ஆண்டாள் தலையில் பேரிடியாய் விழுந்தது. நான்கு மாதம் கழித்து பன்டியைப்போல் உறக்கத்திலேயே குணசீலன் உயிரை விட்டுவிட்டார். குணசீலனுடன் இருபத்தி ஐந்து ஆண்டுகள் பழகிய அவருடைய வீட்டிலேயே குடியிருந்த துரைக்கண்ணும் அவர் மனைவி பஞ்சவர்ணமும் அவர் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இறந்தவர் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு ஆண்டாளை கட்டியணைத்து அழாமல் வந்துவிட்டாயே ஏன்? என்று துரைக்கண்ணு மனைவியிடம் கோபமுற்றார்.

கவலை தோய்ந்த குரலுடன் அதற்கு பதிலளிக்கும் விதமாக அவள் ஆண்டாளின் கம்பீரத்தை வர்ணித்தாள்.

மஞ்சள் பூசிய முகத்தில் கால் காசு சைசில் குங்குமப் பொட்டும், நெற்றி வகிட்டில் திலகமும், பின்னந்தலையில் பூச்சரங்களும் அவளுடைய அழகை மேலும் மெருகூட்டும். காதில் ஓட்டைகள் பல போட்டு விதவிதமான கம்மல்கள் அணிந்திருப்பாள்

சுண்டு விரல் கனத்திற்கு தாலிச்சரடும், துணையாக அணிந்திருக்கும் பதக்கம் வைத்த மூன்றுவடச் சங்கிலியும், அவளுடைய கழுத்துக்கு அழகு சேர்க்கும். கையில் போட்டிருக்கும் வண்ணக் கற்கள் பதித்த வளையல்கள் அவளுடைய கை வீச்சுக்கேற்ப மோதி விளையாடும். தண்டையும், வேலங்காய் கொலுசும், முத்து வைத்த கால் செயினும், அவள் நடக்கும் போது சிறு சிறு சத்தங்களை உண்டாக்கி,. அவள் வருகையை தெரிவிக்கும். கால் விரல்கள் மூன்றில் வெவ்வேறு டிசைனில் மெட்டி போட்டிருப்பாள்.

அழகில் மகாலட்சுமியாக தோன்றினாலும், பூமாதேவிக்கு

வலிக்குமாறு அதிகார தோரணையில் அதிர்ந்தபடிதான் நடப்பாள். ஆண்டாள் தெருவில் நடந்தால் பெண்களே சற்று பயம் கலந்த பார்வையோடுதான் அவளை பார்ப்பார்கள். பெண் சிங்கம் போல இருந்தவளை கட்டியணைத்து அழ என் மனம் சஞ்சலப்பட்டது என்றாள்.

குணசீலன் இறந்த அன்று இரவு ஆண்டாள் மனதில் தெருவாசிகள் இனி என்னை எப்படி பார்ப்பார்கள்? ஏளனமாகவா ? இல்லை பரிதாபமாகவா? என்ற கேள்வி எழுந்தது. வீதியில் நான் தேர்போல ஆடி அசைந்து நடக்க, கணவர் என்னுடன் சிலைபோல அடக்கமாக நடந்து வருவாரே இனி நான் சிலை இல்லாத தேர் போல் வீதியில் சென்றால் எல்லோரும் என்னை எப்படி பார்ப்பார்கள் என எண்ணி கண்ணீர் சிந்தினாள். டாம்பீகமாக வாழ்ந்த வாழ்க்கை இனி டம்மி வாழ்க்கை ஆகிவிடுமோ? என்று கவலை கொண்டாள்.

கணவன் இறந்த துயரம், மனஉளைச்சல், ஆண்டாளை படுக்கையில் தள்ளிவிட்டது. உறவுகள் ஆண்டாளிடம் பேச்சைக் குறைத்துக் கொண்டனர். கடமையே என்று வேளா வேளைக்கு டிபனும், சாப்பாடும் படுக்கைக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டன. சிங்கம் படுத்துக் கொண்டாலும் அதன் சீற்றம் குறையாது இல்லையா? கர்ஜனையை வெளிக்காட்டாத்தானே செய்யும்.

ஆண்டாள் மருமகள்களை மிரட்டி உருட்டி வேலை வாங்கலாம் என்று நினைக்க, ஏமாற்றமே மிஞ்சியது. அப்பாதான் நீங்கள் ஊதிய மகுடிக்கு பெட்டிப் பாம்பாக ஆடிக் கொண்டிருந்தார், எங்களிடம் உங்க அதிகாரத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்று மகன்கள் கூறியபோது ஆண்டாளுக்கு நெஞ்சு வலித்தது. ஆண்டாள் எது பேசினாலும் வாயை அடக்கிக் கொண்டிருந்த உறவுகள் எதிர்வாதம் செய்தது.

பாட்டி உங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கப்போவதாக வீட்டில் பேசிக் கோண்டிருக்கிறார்கள் என்றான் பேரன் மாறன். அப்படிச் சென்றால், அங்கு நீங்கள்தான் எல்லாம் பாட்டிகளுக்கும் லீடர் என்று கூறிவிட்டுச் சிரித்தான்.

நான் ஏன் போக வேண்டும்? இது என் வீடு! அனாதைகள் ஆதரவற்றவர்களை தானே முதியோர் இல்லத்தில் சேர்ப்பார்கள். என் பிள்ளைகள் அப்படி செய்யமாட்டார்கள் என்று ஆண்டாள் தனக்குத்தானே புலம்பினாள்.

தேநீர் அருந்தியபடி தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவளை, அதில் பெண்மணி ஒருவரை பேட்டி காணும் நிகழ்ச்சி வெகுவாக கவர்ந்தது.

கை, கால்கள் நன்றாக இருந்தும் நம்மில் பலர் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். ஆனால் ஊனமுள்ள இந்தப் பெண்மணி இரண்டு கைகளாலும் ஓவியம் வரைகிறார், ஓவியக் கண்காட்சிகளை நடத்துகிறார். அவருடைய ஓவியங்களைப் பலர் நல்ல விலை கொடுத்து வாங்குகிறார்கள் என பேட்டியெடுத்தவர் அப்பெண்மணியை அறிமுகப்படுத்தினார். நான் என்னுடைய ஓவியங்கள் மூலம் இவ்வளவு வருமானம் ஈட்டுகிறேன், யாரையும் சார்ந்து வாழவில்லை என்று அப்பெண்மணி புன்னகைத்தபடி பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.

நமக்குதான் எந்தக் குறையும் இல்லையே, சமையல் செய்வதையே பெரிய வேலையாக நினைத்துக்கொண்டு மருமகள்களிடம் கையேந்தப் பார்த்தோமே. காலப்போக்கில், என்னால் தொல்லைகள் வரக் கூடுமென்று முன்னரே என்னை முதியோர் இல்லத்தில் சேர்க்க நினைக்கிறார்களே, இனி இவர்களோடு இருந்தால் மானக்கேடு நமக்கு மரியாதை கிடைக்காது என்றெண்ணிய ஆண்டாள் உடனே குணா இல்லத்திற்கு போன் செய்தாள்.

எதிர்முனையில் துரைக்கண்ணுவின் குரல் கேட்டதும், அண்ணா ஐந்தாம் நம்பர் வீடு காலியாகத்தானே இருக்கிறது என்று கேட்டாள். ஆமாம் என்றவரிடம் அந்த வீட்டுக்கு பெயின்ட் அடித்து தயார் செய்யுங்கள் என்றாள். யாராவது குடி வருகிறார்களா? என்று துரைக்கண்ணு கேட்க, இல்லை, இல்லை நானே குடிவரப்போகிறேன் என்றாள். ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் சரிம்மா என்று கூறி போனை வைத்து விட்டார்.

குணசீலனும் அவர் அப்பாவும் வாடகைதாரர்களுக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டார்கள். குடும்பத்தில் கொஞ்சம் பிரச்சனை, சிக்கல், என்று வாடகைதாரர்கள் கூறினால் பரவியில்லை அடுத்த மாதம் சேர்த்துக் கொடுங்கள் என்று கூறும் தயாள குணம் கொண்டவர்கள். ஆண்டாள் அப்படியில்லை கண்டிப்பும் கறாரும் நிறைந்தவள், அவள் இங்கு குடிவந்தால் இங்கிருப்பவர்கள் நிம்மதி கெடுமோ? என்று துரைக்கண்ணு நினைத்தார்.

அம்மா தங்களை விட்டு பிரிந்து தனியே செல்வதற்கு மகன்கள் மறுத்தனர். ஆண்டாள் சற்று கோபமாக, இனி உங்களோடு இருந்தால் தினம் தினம் சண்டை சச்சரவுதான், எல்லோர் நிம்மதியும் பறிபோகும், நான் தனியே இருப்பதுதான் எல்லோருக்கும் நல்லது, குணா இல்லத்திற்கு செல்கிறேன் என்றாள். அம்மாவா இப்படி பேசுவது என்று பிள்ளைகள் வியப்படைந்தனர்.

ஆண்டாள் குணா இல்லத்திற்கு குடி வந்த நாள் முதல், குடித்தனக்காரர்கள் அவளிடம் அடக்கி வாசித்தனர். பெண்கள் பத்தடி தள்ளி நின்றே பேசினர். சில மாதங்கள் கடந்து போயின, ஆண்டாள் யாருக்கும் தொல்லை தராமல் மெளனமாக இருந்தாள். மெளனம் கூட ஒருவகையில் திமிர் என்றுதான் எடுத்துக் கொள்வார்கள்.

ஆண்டாளுக்கு ஏதோ பிரச்சனை என்று உணர்ந்த துரைக்கண்ணு, நம்மால் முடிந்த உதவியை அவருக்கு செய்வோம் என்று அவளிடம் பேச்சுக் கொடுத்தார்.

குணசீலனின் மறைவிற்குப் பின் உங்க முகத்தில் குற்ற உணர்ச்சி தெரிகிறது. பழைய மிடுக்கில்லாமல் உடல் சோர்ந்தும் நடை தளர்ந்தும் காணப்படுகிறீர்கள், ஏன்? என்ன காரணம்.? நண்பனின் மனைவி என்ற உரிமையில் கேட்கின்றேன், தவறில்லையே என்று கேட்டார்.

நீண்டதொரு பெருமூச்சை இழுத்து விட்ட ஆண்டாள், நம் மனச்சுமையை, வேதனையை இவரிடம் கூறுவதால் எந்த பாதிப்பும் வராது, நம் மனபாரமும் சற்று குறையும் என்று எண்ணி பொங்கி வந்த கண்ணீரை துடைத்தபடி பேச ஆரம்பித்தாள்.

திருமணத்திற்கு முன், பிறந்த வீட்டில் நான் சில பாதிப்புகளுக்கு ஆளானேன். அப்பா, அம்மாவைத் தவிர வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்ததை தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். அம்மா, எதிர்த்துக் கேள்விகள் கேட்டால் அப்பாவிடம் இருந்து வன்சொல்லும், அடி உதையும்தான் பதிலாக கிடைக்கும்.

அம்மாவைப் போல் எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு வேதனையோடு நாம் வாழக்கூடாது என்று அப்போதே முடிவெடுத்தேன்.

என் கணவர் என்னைத் தவிர வேறொரு பெண்ணை தீண்டக்கூடாது, ஏன்? நினைக்கவே கூடாது. என் பேச்சுக்கு மறுசொல் கூறக் கூடாது, கணவரை அடக்கியாள வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்தேன்

என் எண்ணம் நிறைவேறியது என்று கூறுவதைவிட, அவர் என்னை புரிந்துக்கொண்டு என்னை அனுசரித்து வாழ்ந்தார் என்று தான் கூற வேண்டும்.

என்னைப் போன்ற அதிர்ஷ்டசாலி யாரும் இருக்கமாட்டார்கள் என்ற மமதை என்னிடம் இருந்தது. ஆனால் அந்த எண்ணம் அவர் செல்லமாக வளர்த்த நாயின் இறப்பிற்கு பிறகு தவிடு பொடியாகி விட்டது. இனி நம்மை திருத்திக்கொண்டு வாழலாம் என நினைத்த பொழுது நான் பெற்ற பிள்ளைகளின் உதாசீனம் என்னை வெகுவாய் பாதித்தது. இனி வாழப்போகும் காலம்வரை யாருக்கும் பாரமாக இல்லாமல் ஒதுங்கி வாழலாம் என்று இங்கு வந்து விட்டேன்.

நான் கணவனையும் பிள்ளைகளையும் கையாண்ட விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால், மூவரையும் நல்ல விதமாக வழி நடத்திச்சென்றேன் என்ற திருப்தி எனக்கு உண்டு.

அண்ணா, எல்லா வசதிகளோடு மகிழ்ச்சியாக வாழ்க்கையை இதுநாள் வரை அனுபவித்து விட்டேன். எல்லோரையும் போல கடைசியில் நானும் ஆறடி மண்ணில்தான் விழப்போகிறேன். இனி யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம், நாலு பேருக்கு உதவியாக, நல்லது செய்து வாழலாம் என முடிவெடுத்துத்தான் இங்கு வந்தேன். நான் எடுத்த முடிவு சரிதானே? என்று கேட்டாள்.

துரைக்கண்ணு தம்பதிக்கு ஆண்டாள் கூறியதை கேட்டபிறகு அவள்மேல் அனுதாபம் பிறந்தது. ஆண்டாளம்மா இந்த உலகத்தில் நமக்கென்று யார் இருக்கிறார்கள்? என்று யோசிப்பதை விட நம்மை நம்பி யார் இருக்கிறார்கள்? என்று யோசியுங்கள், வாழ்க்கை சரியாகும் என்றார். பிள்ளைகள், உங்களை புரிந்துகொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றார்.

பலகாரம் கொடுத்துவிட்டு அம்மாவை பார்த்து வரலாம் என்று அங்கு வந்த மணிவண்ணன் அம்மா பேசியதை கேட்டு மெய் சிலிர்த்துப்போனான். தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், பிள்ளைகள் வாழ்க்கை நிலைத்து நிற்க வேண்டுமென்று அம்மா தனக்குத் தெரிந்த யுக்தியை கையாண்டிருக்கிறாள்.

முகங்கள் ரசிக்கப் படுவதில்லை, முகமூடியைத்தான் எல்லோரும் ரசிக்கிறார்கள் என்பதை அம்மா புரிந்து செயல்பட்டிருக்கிறார். அம்மா இப்பொழுது தன்னுடைய முகத்திரையை கிழித்தெறிந்து விட்டாள்.

மனமுடைந்த அம்மாவின் மனதை எப்படி சரிசெய்யலாம் என்று எண்ணியபடியே அம்மாவிடம் பேசச் சென்றான்.

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...