JUNE 10th - JULY 10th
அன்று காலை அலாரம் வைத்து படிப்பதற்காக எழுந்த இந்திராவின் முயற்சி முறிந்து போனது அம்மா அபிராமியின் புண்ணியத்தில் .
விஷயம் ஒன்றும் பெரிதேயில்லை. அதிகாலை நடை பயிற்சி முடிந்து திரும்பியிருந்த அப்பா வரும் வழியில் கீரைக்காரியிடம் கீரைக்கட்டுகள் இரண்டினை வாங்கி வந்திருக்க, அம்மா ஆரம்பித்துவிட்டாள் தன் விடியற்காலை பூபாலத்தை.
"உங்களை நான் கீரை வாங்கிட்டு வரச் சொன்னேனா? நேற்றுத் தானே மூளைக்கீரை மசியல் பண்ணினேன். மறுபடியும் இன்னிக்கு என்னத்துக்கு கீரை? அதுவும் இரண்டு கட்டு தேவையா? கீரைன்னா பச்சைப்பசேல்னு எப்படியிருக்கனும்? உங்க மூஞ்சியிலேயே இளிச்ச வாய்னு எழுதி ஒட்டியிருக்கோ என்னவோ உங்களைக் கண்ட உடனேயே இருக்கறதிலேயே பழசா துவண்டு போனதா உங்க தலையிலே கட்டிடறா அந்த கீரைக்காரி....... ம் தனக்காவும் தெரியாத எடுத்துச் சொன்னாலும் புரியாத ஒரு மனுஷனைக் கொண்டு வந்து என் தலையில கட்டின எங்கப்பாவைச் சொல்லனும். எல்லாம் என் தலையெழுத்து......."
"இல்லே அபிராமி கீரை பார்க்க நல்லா தானிருந்தது. தினமும் கீரை சமைச்சு சாப்பிட்டா உடம்புக்கு நல்லது தானே. அதான் வாங்கிட்டு வந்தேன்......."
அப்பா மெல்லிய குரலில் அம்மாவிடம் சமாதானம் சொல்வதும் அம்மா அவருடைய சமாதானத்தைக் காதிலேயே வாங்காமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வதும் இந்திராவின் காதில் விழவும், அதற்கு மேல் தாங்க மாட்டாமல் இந்திரா எழுந்து வந்தாள்.
"அம்மா இப்ப என்ன குடி முழுகிப் போச்சுன்னு இந்தக் கத்து கத்துறே. ஆஃப்டர்ஆல் இருபது ரூபா கீரைக்கட்டு அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?"
"வந்துட்டியா? எங்கடா அப்பாவுக்கு சப்போர்ட்டா பொண்ணு இன்னும் எழுந்திரிச்சு வரலையேன்னு பார்த்தேன். ஆமாடி இருபது ரூபா கீரைக்கட்டுதான் உள்ளே குப்பையும் களையுமா வெச்சுக் கட்டியிருக்கா. உட்கார்ந்து ஆயறவளுக்குத் தான் கஷ்டம் தெரியும். இவ்வளவு பேசறியே.? உட்கார்ந்து இந்த கீரைக்கட்டை ஆயறதுக்கு உன் உடம்பு வணங்குமா?"
"அவ்வளவு தானே? இந்தக் கீரைக்கட்டு ரெண்டையும் ஆயறது தானே இப்போ உன் பிரச்னை அதற்கு ஏன் அபி படிக்கற புள்ளையப் போய் வேலை ஏவிகிட்டு? இதோ கால் மணியில் நானே சுத்தம் பண்ணி அரிஞ்சு கொடுக்கறேன்........"
இது தான் இந்த மென்மையும் பெருந்தன்மையும் தான் அப்பா சுந்தரேசன். எதற்கெடுத்தாலும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிற அம்மாவிற்கும், ஆளையே அசரடிக்கும் விஷயத்திற்குக் கூட, அரண்டு போகாமல் அமைதி காக்கும் அப்பாவிற்கும் எப்படித் தான் ஒத்துப் போகிறதோ என்று இந்திரா இன்றைக்கும் ஆச்சரியப்படுவாள். ஏன் வெளிப்படையாகவே அப்பாவிடம் கேட்டும் இருக்கிறாள்.
"நீ அறிவியல் பாடத்தில் படித்திருப்பாயே இந்தும்மா..... எதிரெதிர் துருவங்களுக்குத் தானே ஈர்ப்பு சக்தி அதிகம்..........."
அப்பா விளையாட்டாய் குறும்புடன் கண்சிமிட்டுவார்.
அப்பா அவளைப் பொறுத்தவரை ஒரு இனிய சினேகிதர். இந்திரா எந்த வித தயக்கமுமின்றி அப்பாவிடம் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வாள். வகுப்பறையில் நடக்கும் விஷயங்கள், தோழியரின் கலாட்டாக்கள் இவ்வளவு ஏன் கூடப் படிக்கும் சக மாணவர்கள் தன்னை சைட் அடிப்பது முதற்கொண்டு,
எதையும் அப்பாவிடம் இந்திரா மறைப்பதில்லை.
அப்பாவிடம் இருக்கும் தோழமை உணர்வு இந்திராவிற்கு அம்மாவிடம் இருந்ததில்லை.சதா சிடுசிடுக்கும் அபிராமியின் குணம் கூட அதற்குக் காரணமாயிருக்கலாம்.
"ஏம்ப்பா அம்மா இப்படிக் கத்திகிட்டே இருக்காங்க? என்னவோ தாத்தா அவங்களைக் கொண்டு வந்து உங்க தலையிலே கட்டிட்ட மாதிரி சதா குத்திக் காட்டிப் பேசிட்டேயிருக்காளே. உங்களுக்கு இனசல்ட்டிங்காயில்லையாப்பா?"
"இல்லடா...... அம்மாவை அப்படியெல்லாம் தப்பாய் நினைக்காதே. அவ வேணும்னு எதையும் செய்யறதில்லடா என்னவோ வேறு இடத்தில் வாழ்க்கைப்பட்டிருந்தால் இன்னும் வசதியாக இருந்திருக்கலாமேன்னு அவ மனசுல ஒரு ஆதங்கம். என்னோட சம்பாத்யம் அவளுக்குப் போதாதுன்னு நெனைக்கறா. அதை அப்பப்போ சொல்லிட்டிருந்தாலாவது எனக்கு ரோஷம் வந்து எதாவது பெரிசா பண்ணி பணம் சம்பாதிக்க மாட்டேனான்னு ஆசைப்படறா. ஆனால் அவ ஆசையை. நிறைவேற்றும் சக்தி எனக்கில்லே இந்து…"
அப்பாவின் முகத்தில் இயலாமையும் வேதனையும் பிரதிபலிக்க, மகள் அதைத் தாங்க மாட்டாதவளாய் அவசரமாய் அவர் கைகளைப் பற்றிக் கொண்டு வாஞ்சையுடன் சொன்னாள்.
" வாழ்க்கையில் பணமாப்பா முக்கியம்? உங்க குணத்துக்கு முன்னால பணமெல்லாம் ஒண்ணுமேயில்லைன்னு அம்மா ஒரு நாள் தெரிஞ்சுக்குவாப்பா. "
அபிராமி தெரிந்து கொண்டாளோ இல்லையோ, இந்திரா தெரிந்து கொண்டாள். தம்பதியர் இருவரில் யாரேனும் ஒருவராவது தணிந்து போனால் தான் இல்லற வாழ்க்கை சிக்கலின்றிப் போகும் என்ற உண்மையை அந்த இளம் வயதிலேயே இந்திரா தெரிந்து கொண்டாள்.
கண் முன்னே வாழும் உதாரணமாய் தாய் தந்தை மட்டுமில்லை,அவளுடைய சித்தப்பா சித்தியின் வாழ்க்கை கூட கிட்டத்தட்ட இதே ரீதியில்.......என்ன ஒரே ஒரு வித்தியாசம் இங்கே மீனாட்சி ஆட்சியென்றால் அங்கே சித்தப்பா வீட்டில் சிதம்பர ஆட்சி.
வீட்டில் கிளி மாதிரி பெண்டாட்டி இருக்க, குரங்கு போல் வெளியே ஒரு வைப்பாட்டியைத் தேடுவதாகச் சொல்லும் பழமொழி சீனு சித்தப்பாவிற்குச் சாலப் பொருந்தும்.
" சித்தி கிட்ட என்ன குறைன்னு இந்த சித்தப்பாவிற்கு இப்படி புத்தி போகுது? சித்திக்குத் தையல் கத்துக் கொடுக்க வந்த பொண்ணு கிட்டப் போய் மையலாகி...........சீ சீ..... அசிங்கமாயில்லே? "
இந்திரா அருவெறுப்புடன் முகம் சுளித்தபொழுது, சுந்தரேசன் தன் ஸ்பாவப்படியே அலட்டிக் கொள்ளாமல் சிரித்தார்.
"என்னம்மா பண்றது? பரந்து விரிந்த அந்த சந்திர மண்டலத்தையே கையடக்க ரிமோட்ல கட்டுப்படுத்தற மனுஷன் தான் கையளவு மனசைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் தவிக்கிறான்."
இந்திரா அப்பாவை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்? எல்லோரையும் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் இந்த உன்னத மனிதரின் பெருந்தன்மையை என்றாவது அம்மா புரிந்து கொள்வாளா?
"கண்ணு முன்னாலயே சீனு சித்தப்பாவைப் பார்த்தும் உங்க அருமை அம்மாவிற்கு ஏம்ப்பா இன்னும் புரியலே? "
இந்திரா சொல்லிசொல்லி மாய்ந்து போவாள்.
அபிராமியோ நொடித்துக் கொள்வாள்.
"அந்த மாதிரி வப்பாட்டி வெச்சுக்கறதுக்கும் தனி சாமர்த்தியம் வேணும். அதெல்லாம் உங்கப்பாவுக்கு ஏது?"
அபிராமியின் வாய்க்கு பயந்தே இந்திராவும் சுந்தரேசனும் பெரும்பாலும்
அடங்கிப் போவார்கள்.
கொரோனா பயத்தில் கடந்த இரண்டு வருடங்களாக வீட்டில் அடைந்து கிடந்தவர்கள் இந்த வருடம் தான் கோடை விடுமுறையில் குடும்பமாக வட இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்தார்கள்
"இந்து.....உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? என்னுடைய செல்போன்ல ரிங்டொன் மாத்திட்டேன்.."........சீனிவாசன் உற்சாகமாய் கூவினான்.
உலக அதிசயமான தாஜ்மகாலின் அழகைத் தன் செல்போஃன் காமிராவில் படம் பிடித்துக் கொண்டிருந்த இந்திரா திரும்பினாள்.
" அப்படியா? என்ன பாட்டுப் போட்டிருக்கிங்க சித்தப்பா?"
"அவள் பறந்து போனாளே....என்னை மறந்து போனாளே......"
சீனூ வேண்டுமென்றே முகத்தைச் சோகமாய் வைத்துக் கொண்டு பாடினான். கூடியிருந்த அத்தனை பேரும் குபீரென்று சிரிக்க ,சீனு கோபத்துடன் அதட்டினான்.
"என்ன சிரிப்பாயிருக்கா? நீங்க எல்லாருமா சேர்ந்து என் விஜியை எங்கிட்டருந்து பிரிச்சதுமில்லாமல் இப்ப சிரிக்க வேற செய்றிங்களா? எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் புரியவே மாட்டேங்குது. நான் பெண்டாட்டியைத் தவிர வேறு ஒரு பெண்ணுடன் சினேகமாயிருந்தேன்றதால வம்படியா அவளை என்னிடமிருந்து பிரிச்சிங்க . இதே நம்ம சொந்தத்தில் பங்காளிப் பெரிய மனுஷன் ஒருவர் வேறொரு ஜாதிப் பெண்ணை இரண்டாம் தாரமாய் கல்யாணமே பண்ணிக் கூட்டி வந்திருக்கார். .ஊர் பெரிய மனுஷங்க பண்ணினால் தப்பில்லே. அதையே சாதாரண மனுஷன் நான் பண்ணினால் தப்பா? இது எந்த ஊர் நியாயம்? "
"கரெக்டா பாயிண்டைப் பிடிச்சுட்டிங்க சித்தப்பா........அப்பா எல்லாரையும் நியாயப்படுத்துவிங்களே? இப்போ சித்தப்பாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறிங்க?"
"சும்மாயிரு இந்து..... அவன் தான் வம்படியா வம்புக்கிழுக்கிறான்னா நீயும் அவனுக்கு ஒத்தூதிகிட்டு இருக்கியே. ஏய் சீனு சின்னப்பொண்ணு கிட்ட விவஸ்தையில்லாமல் என்ன பேச்சு இது?"
சுந்தரேசனின் அதட்டலில் சீனு வாயில் கை வைத்துப் பொத்தினான்.
"சின்னப்பெண்ணா? இவளா? விட்டா உன்னையும் என்னையும் கடைவாயில் போட்டு மென்னு துப்பிடுவா உன் பொண்ணு தெரியுமா?"
சீனு சித்தப்பாவின் இந்த வாயரட்டையும் வம்புப் பேச்சும் சித்தி அகிலாவின் அடக்கத்துக்கும் அமைதிக்கும் எட்டாத தூரம் தான் .ஏழாம் பொருத்தம் தான்
ஆனாலும் எதிரெதிர் குணாதிசயங்களை இல்லறத்தில் இணைக்கும் காரணம் அதன் கர்த்தாவான இறைவனுக்கே வெளிச்சம்.
குடும்பம் மொத்தமும் குதூகலத்துடன் சிரித்ததை ரசித்துப் பார்த்துக் கொண்டே அருகில் வந்த பெரியவர் ஒருவர் சட்டென்று நின்றார்.
"சுந்தரேசா! என்னை ஞாபகம் இருக்கா?"
அவரை நிமிர்ந்து பார்த்து தன் நினைவு அடுக்குகளில் தேடிய சுந்தரேசன்,
புன்னகையுடன் பேசினார்.
"நல்லா ஞாபகம் இருக்குங்கய்யா. இந்திராவோட தகப்பனார் தானே?"
"பரவாயில்லையே. என் பெயரை விட என் பொண்ணோட பெயரை நல்லா ஞாபகம் வெச்சுருக்கியே?"
அப்பாவின் முகத்தில் சின்னதாய் ஒரு தர்மசங்கடத்தையும் மீறிய வெட்கம் தெரிவதை வியப்புடன் பார்த்தாள் இந்திரா.
"இதாரு உன் பொண்ணா நல்லா ஆளு களையாய் அழகாய் இருக்காளே.
உன் பேரென்னம்மா?"
வாத்சல்யத்துடன் கேட்டப் பெரியவரை ஆச்சரியமாய் பார்த்த இந்திரா தன் பெயரைச் சொன்ன மறு வினாடி பெரியவரின் முகத்தில் மெலிதாக ஒரு புன்முறுவல் படர்ந்தது. விழியோரம் துளிர்த்த நீரைத் துடைத்துக் கொண்டே பேசினார்.
"உங்கப்பா மாதிரி ஒரு உத்தம புருஷனை உன்னத மனுஷனை இந்த உலகத்தில பார்க்கவே முடியாது தாயி. என் பொண்ணு இவனை விரும்பறது தெரிஞ்சு உன் தாத்தா கிட்ட நான் சம்பந்தம் பேச வந்தப்போ, அவர் ஒரேயடியாய் மறுத்துட்டார். சொந்தம் விட்டுப் போகக்கூடாதுன்னு அவங்க அத்தை பொண்ணைப் பேசி முடிச்சுட்டதாய் சொல்லிட்டார். தகப்பனார் சொல் மீறாத பிள்ளையாய் உங்கப்பாவும் என் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கல. உங்க தாத்தாவையோ அப்பாவையோ அப்போ என்னால சம்மதிக்க வைக்க முடியல. உங்கப்பா அப்போ சம்மதிக்கலேன்னாலும்
என் பொண்ணு இந்திராவை மறக்கலேன்றது இப்போ உன்னைப் பார்த்தப்புறம் தெரியுது...."
தந்தையைப் பற்றிய மலரும் நினைவுகள் மனதைச் சற்றே மருட்டினாலும் இந்திராவின் ஆர்வம் எல்லையைத் தாண்டியது.
"தாத்தா, உங்க பொண்ணு இப்போ எங்கேயிருக்காங்க?"
தயக்கத்துடன் கேட்டவளை நிமிர்ந்து பார்த்த பெரியவர் ஆகாயம் பார்த்து கைகளை விரித்தார்.
"அவளுக்கு மனசுக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணிப் பார்க்கனும்னு ஆசைப்பட்டேன். ஆனால் அவளுக்கு கருமாதி பண்ண வெச்சிடுச்சும்மா விதி. எனக்கு மருமகப்பிள்ளையாய் வந்து வாய்ச்சவனோட சந்தேகபுத்தியால என் மகள் தீக்குளிச்சாளோ இல்ல அவனே தான் பற்ற வைத்தானோ, ஒரு சின்ன தீக்குச்சி என் மகளை காவு வாங்கிடுச்சும்மா.வருசங்கள் கடந்து போனாலும் நினைவுகளால் நெஞ்சு பாரமாத்தானிருக்கு."
நெஞ்சில் தாங்க முடியாத பாரத்தைச் சுமந்து கொண்டிருந்தவர் இப்பொழுது
லேசாகிப் போன மனதுடன் அவள் புறமாய் திரும்பினார்.
"இத்தனை காலமாய் என் மகளை இழந்த துக்கத்தில் இருந்தேன்மா. ஆனால் இப்போ என் பேத்தியைப் பார்த்துட்ட மகிழ்ச்சியில் போறேன். நீ நல்லாயிருக்கனும் தாயி."
தள்ளாத வயதில் தடுமாற்றத்துடன் நடந்து அவர்களைக் கடந்து செல்லும் பெரியவரைப் பார்க்கையில் மனதில் சொல்ல முடியாத துயரமாய் ஏதோ பொங்கியது.
"அப்பா!....."
கண் கலங்கி பரிதவித்து நின்ற பெண்ணை சுந்தரேசன் ஆதரவாய் அணைத்துக் கொண்டார். எப்பொழுதும் எடக்கு மடக்காய் எகத்தாளமாய் பேசும் அபிராமியும் சீனுவும் கூட இப்பொழுது விழியோரங்களில் பெருகும் கண்ணீரை மறைக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
அம்மாவிற்கு அப்பாவின் அருமை புரிய வேண்டும் என்று இந்திரா ஆசைப்பட்டாள் தான். ஆனால் அந்த ஆசை நிறைவேறியபொழுது மகிழ்ச்சியில் மத்தளம் கொட்ட வேண்டிய மனசு ஆழிப் பேரலையாய் ஆர்ப்பரிக்கிறதே. ஏன்?
முரண்பாடே! உன் பெயர் தான் வாழ்க்கையா?
"முட்டாள் பெரிய மனுஷர் .அவர் மனபாரத்தை இறக்க நல்ல நேரமும் இடமும் பார்த்தார்.அவர் துக்கத்தை தோள் மாற்றி விட்டுப் போய்ட்டார்.சின்னப் பொண்ணு பாவம் தாங்குவாளான்ற யோசனை வேணாம்…"
சற்றே கோபத்துடன் முணுமுணுத்த சுந்தரேசனை இடைமறித்தான் சீனு.
"பாவம்ணா பெரியவர். எத்தனை வருச துக்கமோ? நம்ம கிட்ட வடிகால் தேடியிருக்கார். ஆனால் உங்களுக்கு இப்படியொரு ப்ளாஸ்பேக் இருக்கும்னு நான் நெனச்சுக் கூட பார்க்கல. காதலின் நினைவுச்சின்னம் தாஜ்மகால்னா உங்க காதலின் நினைவாய் நீங்கள் உங்க பெண்ணுக்கு வைத்த பெயர்.இது ரெண்டுல எது பெரிசுன்னு சொல்லுங்க பார்ப்போம்."
"ஏண்டா பட்டிமன்றமா நடத்தற? கடுப்பை கிளப்பாத சொல்லிட்டேன்."
"அட சும்மா சொல்லுங்கண்ணா. எல்லா நியாய வெங்காயமும் நம்ம குடும்பத்தில் நீங்க தானே பேசுவிங்க.உங்களுக்கு ஒண்ணுன்னா மட்டும் வாய் அடைச்சு போயிருமாக்கும்? பாருங்க உங்க பதிலுக்காக நம்ம குடும்பமே வெய்டிங்…"
உண்மையில் குடும்பம் மொத்தமும் அவர் வாய் பார்த்திருக்க, தவிர்க்க முடியாமல் சுந்தரேசன் மெதுவாகச் சொன்னார்
"சந்தேகமே வேண்டாம்.எனக்கு என் பொண்ணு தான் உசத்தி. தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கலாம்.அதன் கட்டுமானத்தையும் கலையம்சத்தையும் பார்த்து ரசிக்கலாமே தவிர அது ஒரு ஜீவசமாதி என்பதை தாண்டி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் என் பெண் இந்திரா உயிரும் உணர்வும் உள்ள ஒரு ஜீவன்.அப்போ அந்தப் பெண்ணின் காதலை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் என்னால் கௌரவிக்க முடியவில்லை.அதற்குப் பிராயச்சித்தமாய் என் பெண் இந்திராவின் ஆசைகளை நான் என்னால் முடிந்த வரை நிறைவேற்றுவேன்."
சுந்தரேசனின் பதிலில் குடும்பத்தினர் அனைவரும் முறுவலிக்க, அபிராமியின் பார்வையில் மட்டும் ஒரு வெப்ப சலனம்.
மெதுவாக கணவனின் அருகில் வந்தவள் வழக்கத்தை விட நிதானமாக கேட்டாள்.
"இதே நம்ம கல்யாணத்திற்கு முன்னால ஒருவன் என்னை விரும்பியிருந்தால், அந்த விருப்பம் நிறைவேறாமல், நம் கல்யாணம் நடந்து நமக்கொரு பிள்ளையும் பிறந்து அந்தப் பிள்ளைக்கு அவன் பெயரை வைக்க நீங்க சம்மதிச்சிருப்பிங்களா? சம்மதிப்பது இருக்கட்டும்.அந்த பிள்ளையே அவனுடையதோன்னு சந்தேகப்படமாட்டிங்க.?"
நெத்தியடியாய் வந்த அந்தக் கேள்வியில் சாட்டை பிரம்படியின் வீரியம் குறைவின்றி இருக்க,எப்பொழுதும் அப்பாவிற்கு ஆதரவாய் பேசும் இந்திராவால் கூட பதில் சொல்ல முடியவில்லை. சுந்தரேசனோ மௌனகுருவாய் நின்றார்.
"யாராலயும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.ஆண்களில் தாயுமானவர்கள் இருக்கலாம்.தகப்பன்சாமிகள் கூட இருப்பதுண்டு. ஆனால் சந்தர்ப்பவசத்தால் மனைவியை சந்தேகப்படாத ஆண்கள் மிகவும் குறைவு. புராணகாலத்தில் இராமாயணத்தில் சீதையை தீக்குளிக்கச் செய்த இராமரில் தொடங்கி மகாபாரதத்தில் பரபுருசனின் நிழல் பார்த்து வியந்ததற்கே மகன் பரசுராமனை ஏவி கொலை செய்யச் சொன்ன ஜமதக்னி முனிவர் வரை.ஏன் காரணமேயின்றி மது போதையில் மனைவியை அடித்து அசிங்கமாய் பேசும் இந்த இருபதாம் நூற்றாண்டின் குடிமகன்கள் கூட இதற்கு விதிவிலக்கில்லை. நெருப்பென்று சொன்னால் வாய் வெந்து விடாது. நம்ம குடும்பத்திலேயே சீனு செய்த தவறை அகிலா செய்திருந்தால் சீனுவை மன்னித்து ஏற்றுக் கொண்டதைப் போல் அகிலாவை நாம் ஏற்றுக் கொண்டிருப்போமா? என்னை தவறாக நினைக்காதே அகிலா நான் ஒரு உதாரணத்திற்கு தான் சொன்னேன். உங்கப்பா நல்லவர் தான். எல்லாவற்றையும் நேர்மறையாகவே பார்க்கும் உத்தமர் தான். ஆனால் இந்த விஷயத்தில் அவரால் கூட சட்டுனு பதில் சொல்ல முடியல பாரு. அது…அது தான் இன்னிக்கும் பெண்களோட நிலைமை. பெண் என்று பூமி தனில் பிறந்து விட்டால் மிகப் பீழை இருக்குதடி தங்கமேன்னு சும்மாவா பாடினாங்க…"
பெருமூச்செறிந்தபடி நிதானமாய் பேசும் இந்த அபிராமி அந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரை ரொம்பவே புதுசு.
இவ்வளவு தெளிவாய் பேசுவது அம்மா தானா என்று இந்திராவிற்கே வியப்பாய் தானிருந்தது.ஆனால் ஏனோ தெரியவில்லை.இந்த அம்மாவை இந்திராவிற்கு மிகவும் பிடித்திருந்தது மட்டுமின்றி பெருமையாகவும் இருந்தது.
#218
Current Rank
53,737
Points
Reader Points 2,070
Editor Points : 51,667
43 readers have supported this story
Ratings & Reviews 4.8 (43 Ratings)
m.jayamohansrirajan
உங்களின் படித்தேன், கதை மிகவும் அருமையாக உள்ளது.நான் உங்களுக்கு 5 star கொடுத்துள்ளேன் .படித்து பார்க்கும் பொழுது நன்றாக இருந்தாலும் நிறைய பேர் ரேட்டிங்ஸ் தருவதில்லை. என்னுடைய கதையின் பெயர் லீகார் ஒரே ஒரு கார். இந்த கதைக்கு ஆதரவு தாருங்கள். ஒரு எழுத்தாளராக பெருந்தன்மையுடன் எனது கதைக்கு ரேட்டிங்ஸ் தாருங்கள் நன்றி MJMS !! கிளிக் செய்து ஆதரவு தாருங்கள் https://bit.ly/3caKy2F
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
visalakshi.jayayaman
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points