சகுனம்

பெண்மையக் கதைகள்
5 out of 5 (26 रेटिंग्स)
कहानी को शेयर करें

பூவரசிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்ன செய்வதென்றே‌ தெரியாமல் தவித்தாள். மணியனுக்கு எல்லாம் அப்பட்டமாகவே தெரிந்தது. அவள் காபியில் அவ்வளவு சர்க்கரையைக் கொட்டியிருந்தாள். அதை எடுத்துக் கொண்டு வந்துக் கொடுப்பதற்குள் அத்தனை பதற்றம். நடுக்கம். டம்ளர்க்கு வெளியே வழிந்த காபி அவன் கையில் ஒட்டிக்கொண்டு வடவடவென இருந்தது. அவன் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை.

“கொஞ்சம் இருங்க. அம்மா தோட்டத்துல தா இருக்கு. கூட்டிட்டு வந்தர்றேன்,” என்று ஒருவழியாகச் சொல்லி முடித்தாள் பூவரசி.

“இல்ல, நான் கிளம்பனும். நேரமாச்சு. அதா சொன்னேனே, இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன். அப்படியே பாத்துட்டு போலாம்னு,” என்று இழுத்தான் மணியன். அப்படி எந்த வேலைக்காகவும் அவன் வரவில்லை. இவளை பார்க்கவெனவே தான் வந்திருந்தான்.

மணியன் நிறைய படித்தவன். பேருக்கு என்று ஒரு டிகிரியைப் படித்த தன்னைப் போல அல்ல. எதையும் ஆராய்ந்து நிதானமாக செய்பவன். தன்னால் ஒரு காபியைக் கூட நிதானமாய் கொண்டு வந்துக் கொடுக்க முடியவில்லையே என்று எதை எதையோ நினைத்துக் கொண்டு நின்றாள் பூவரசி. அம்மாவின் மீதும் மற்றவர்கள் மீதும் கோபமாக வந்தது அவளுக்கு. எதையும் பேசவில்லை.

மணியனுக்கு இந்த திருமணத்திலேயே அவ்வளவு நாட்டமில்லை. வற்புறுத்தலின் பெயரில் தான் ஒப்புக்கொண்டிருந்தான். அதனால் தான் தனியே ஒருமுறை பெண்ணைப் பார்த்து விடவேண்டும் என்று வந்திருந்தான். ஆனால் எதை எப்படி பேசுவதென்று தெரியவில்லை அவனுக்கும்.

இருவருக்கும் பதிலாக சுவரில் ஊர்ந்துக் கொண்டிருந்த பல்லி என்னத்தையோ சொல்லிக் கொண்டிருந்தது.

மணியன் பூவரசியைக் கூர்ந்து கவனித்தான். கிராமத்து மண்ணை அதன் வாசத்தோடும் புழுதிகளோடும் இழுத்து புடவையாய் கட்டியிருந்தது போல் பட்டது அவனுக்கு. ‘தரையில் அப்படி என்னத்தை பார்த்துக் கொண்டிருக்கிறாளோ. படித்த பொண்ணு மாறியே இல்லையே. எனக்கு பிடிக்காத, ஒத்துப்போகாத வெட்கமும் குலைவுமாய் வேய்ந்து விட்டவள் போல நிற்கிறாளே.’ என்று யோசித்தவாறே காபியை குடித்து முடித்தான் மணியன். அவன் தன் டம்ளரை கீழே வைத்தது தான் தாமதம், உடனே அதை எடுத்துக் கொண்டுவிட்டாள் பூவரசி. அவனிடமிருந்து நகர வழி பார்த்துக் கொண்டிருக்கிறாளோ என்னவோ.

இதற்கு மேலும் அங்கிருந்து என்ன செய்யப் போகிறான். “அப்போ, நா வரட்டுமா,” என்றபடியே எழுந்தான்.

அவளுக்கு அவன் அதற்குள் போவதாக சொன்னது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இருக்க சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் எதுவும் சொல்லவில்லை அவள். கீழ் உதட்டை கடித்தவாறு தரையைப் பார்த்துக் கொண்டே‌ தலையசைத்தாள். அவன் ஒரு நிமிடம் நின்று பார்த்தான். பூவரசியும் நிமிர்ந்து ஒருமுறை பார்த்தாள். அவன் அவளைப் பார்ப்பது தெரிந்ததும் குனிந்துக் கொண்டாள். ரகசியமாய் ஒரு பெருமூச்சு விட்டு விட்டு வாசல் பக்கம் திரும்பினான் மணியன்.

அவனுக்கு‌, தனக்கு வரப்போகிறவள் இன்ன இன்ன பண்புகளுடன் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தது. அதில் ஒன்றேனும் பூவரசியிடம் இருந்ததா என்றால் சந்தேகம் தான். அவனுக்கு தைரியமான பெண்களை பிடிக்கும். பூவரசியின் வெட்கமும் அவனுக்கு பயமாகவே‌ தோன்றியது. ‘ஒரு வார்த்தை பேச இவ்வளவு யோசிக்கிறாளே. வீட்டிற்குப் போனதும் தனக்கு விருப்பமில்லை என்று திட்டவட்டமாக சொல்லிவிட வேண்டும். அம்மா கொஞ்சம் முரண்டு பிடிப்பாள். அப்பா நிச்சயம் வசை பேசுவார். அதற்கு என்ன செய்வது,’ என்று யோசித்தபோது ஏதோ ஒரு ஓரமாக பூவரசியின்‌ வாடிய முகம் நிழலாடியது. ‘இவளுக்கு என்ன சொல்வது,' நினைத்துக்கொண்டே வாசல் வந்தவன் நிலைப்படியில் இடித்துக் ‌கொண்டான்.

“அய்யோ... உக்காந்து தண்ணீக் குடிச்சிட்டு போங்களேன்,” பதறினாள் பூவரசி.

ஏற்கனவே அவள் அவன் எதிர்ப்பார்த்தபடி‌ இல்லையே என்றிருந்தவனுக்கு‌ இப்போது எரிச்சலாக இருந்தது. ‘இது என்ன அசட்டுத்தனம்!’

ஆனால் எதுவும் பேசாமல் வந்து உட்கார்ந்தான். பூவரசி‌ வேகமாய் உள்ளே சென்றாள். அவளுக்கு அவன் பார்த்த விதத்திலேயே ஒன்று மட்டும் தெளிவாய் தெரிந்திருந்தது. தண்ணீர் மோந்து விட்டு நின்றாள். ஏதோ தீர்மானித்தவள் போல் நிதானமாக மீண்டும் வந்தாள். விருப்பமேயில்லாமல் தான் அவனும் வாங்கிக் குடித்தான்.

“தப்பா நினைச்சுக்காதீங்க, எனக்கு என்னவோ உங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லையோன்னு‌ தோனுது,” என்று அவள் சொன்னதும் புரையேறிவிட்டது அவனுக்கு. இருமிக் கொண்டே அவளைப் பார்த்தான். அவள் உடனே வெட்கப்பட்டு குனிந்து விடவில்லை. பேச்சிலும் கூட முன்னர் இல்லாத ஒரு தெளிவு இருந்தது.

“எனக்கும் இங்க இருக்கவங்களுக்கும் எப்போவும் எதுலயும் ஒத்துப்போறதே இல்லை. அவங்க சொல்றதுப் போல தானோ என்னவோ. இதுவர ஏழு பேரு என்ன பாத்துட்டு போய் வேணாம்னு சொல்லிட்டாங்க. நான் அதிகமா பேசறேன், பொன்னு மாதிரியே இல்லன்னு காரணம் சொல்லுவாங்க. படிச்ச திமிரு, ஒரு டிகிரிக்கே இப்பிடியானு என்ன பேசாம ஒரு‌ பொழுது போனதில்ல, எங்க வீட்டுல. நா கொஞ்சம் அப்படித்தான். எனக்கு என்ன மனசுல பட்டாலும் அப்படியே சொல்லிருவேன். நாலு எழுத்து படிச்சுட்டா எதையும் கேக்கக்கூடாதான்னு இங்க இருக்கவங்கலாம் சொல்லுவாங்க. கேக்க கூடாதுனுலா இல்ல. எதுலயும் பெருசா எனக்கு நம்பிக்கை‌ கிடையாது. இப்போ கூட உங்கள இருக்க சொன்னது சகுனம் அது இதுன்னுலா இல்ல. நீங்க வேணாம்னு தா சொல்ல போறீங்க, எதுனாலன்னு கேக்கனும்னு‌தா. நான் எல்லாம் செரியா தான செஞ்சேன். எல்லாரும் சொன்னப்படித்தான் நடந்துக்கிட்டேன். அப்பறம் ஏன்? காரணம் மட்டும் சொல்லிட்டு போங்களேன்,” என்று அவள் சொல்லி முடித்தப்போது மணியன் புன்னகை பூத்திருந்தான்.

“நான் உங்கள வேணாம்னு சொல்லப்போறன்னு யார் சொன்னது?” அவன் பேச்சில் தானாகவே மரியாதை ஒட்டிக் கொண்டது.

“இல்லியா.” ஒரு நொடி புன்னகை பூத்தவள் அடுத்த நொடி பதறினாள். “அப்போ இப்போ சொல்ல போறீங்களா. ரொம்ப பேசிட்டேனா,” என்றாள்.

“உண்மைய சொல்லனும்னா எனக்கு இப்ப தான் உங்கள புடிச்சுருக்கு,” என்று மனதில் அமைதி படற அத்துனை சந்தோசத்துடன் சொன்னான். இப்போது அவள் பேசியதில் உண்மையும் அவன் கனவின் வாசமும் தெரிந்ததாக தோன்றியது அவனுக்கு. அவள் சேலை புழுதிகளற்று தெரிந்தது.

“உண்மையாவா?” என்றுக் குழந்தையைப் போல் ஆச்சரியமாக கேட்டவளுக்கு ஆமாம் என்று தலையசைத்ததோடு ஒரு புன்னகையும் சேர்த்துக் கொடுத்தான்.

“நான் வாழ்க்க பூரா நடிக்கனுமோன்னு நினைச்சேன். எனக்கு கடவுள் மேல இதுவர நம்பிக்கை இல்ல. ஆனா இப்போ அந்த கடவுள் தான் உங்கள அனுப்பி வெச்சாரோன்னு தோனுது,” என்றுச்‌ சொல்லி சிரித்தாள்.

அந்த சிரிப்பால் பலநாள் சிரிப்புக் கலந்து தெறித்தது. அவனும் காரணம் இல்லாமலேயே சேர்ந்து சிரித்தான். பூவரசி வேறு பெண்போல் தெரிந்தாள். உண்மையில் அவள் வேறு பெண்ணாகத்தான் மாறியிருந்தாள். அம்மா மீதோ ஊர் மீதோ கூட அவளுக்கு கோபம் இல்லை. ஒரு நிம்மதி கலந்த மனநிலை அவளுக்கு இப்போது.

மணியன் உட்காரச் சொல்ல அவளும் தயக்கமே இல்லாமல் உட்கார்ந்தாள். இருவரும் பேசினார்கள். புதிதாக அப்போது தான் சந்தித்துக் கொண்டவர்கள் போல் இருவருக்கும் இருவரும் புதிதாக அறிமுகமாகிக் கொண்டார்கள். தனக்கு இனி வேலை இல்லை என்று தெரிந்ததுபோல் கூரையிலிருந்த ஒரு ஓட்டையினுள் புகுந்தது பல்லி.

சற்று நேரத்திற்கு பிறகு போகலாம் என்று எழுந்தான் மணியன். பூவரசியும் எழுந்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ்,” என்றாள்.

“நீங்க நீங்களா இருக்க யாரோட அனுமதியு தேவையில்லை. நீங்க நீங்களா இருந்தது எனக்கும் பிடிச்சது. இதுல தேங்க்ஸ் சொல்ல என்ன அவசியம்?”

“அதுக்கு இல்ல. அப்போ நான் தண்ணீ குடிச்சிட்டு போக சொன்னப்போ அப்படியே போகாம இருந்தீங்களே, அதுக்கு,” என்றாள்.

“ஐ‌ லைக் திஸ்,” என்றான். உண்மையில் அவன் எதைச் சொன்னானோ, புரிந்தவள் போல் முகம் மலர்ந்தாள் பூவரசி.

“ஐ நோ,” என்றவளின் உச்சரிப்பு அவ்வளவு அழகாக இருந்தது அவனுக்கு. வெளியே செல்லும் போது வேண்டுமென்றே காலை இடித்துக் ‌கொண்டான்.

“பாத்து போங்க,” என்று சத்தம் வந்தது. இந்த ஒருமுறை மட்டும் அவளுக்கு சகுனங்களில் நம்பிக்கை இருக்கக்‌ கூடாதா என்று ஆசைப்பட்டான் மணியன். திரும்பி ஒருமுறை சிரித்துவிட்டு போனான்‌.

-- முற்றும் --

- காயத்ரி தமிழன்

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...