“பிரபஞ்சம்” அளவிட இயலாதது. இந்த பூமி இங்கு வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களுக்கு சொந்தமானது. இயற்கையின் ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒரு அறிவியலை நம்மிடம் அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறது. காற்று, ஒளி, வெப்பம் மற்றும் நீர் போன்ற இயற்கை வகையராக்களின் மாறுபட்ட உபயோகத்தின் வாயிலாகவே உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சி தொடர்கிறது. மனிதன் உள்பட ஒவ்வொரு உயிரினமும் தனக்கேயுரிய மாறுபட்ட தகவமைப்பு மற்றும் வாழ்க்கை முறைகளைக் கொண்டவை. இவை அனைத்திற்கும் பூமியே முழுமுதற் காரணமாக உள்ளது. அதே போன்றே மற்ற கிரகங்களின் தோற்றம் மற்றும் காலநிலைகள் குறித்த தகவல்களும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனைவிட அதீத அறிவு படைத்த உயிரினங்கள் வேற்றுகிரகங்களில் வாழ்ந்து வரலாம் எனும் கருத்து விஞ்ஞானிகளால் ஏற்கப்பட்டாலும் அதனை ஆணித்தரமாக நிரூபிக்க இயலாததும் நிதர்சனமே. இந்நூலில் வேற்றுகிரகவாசிகள் குறித்த பல்வேறு தகவல்களை எனக்குக் கிடைத்த ஆராய்ச்சி தகவல்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள் மூலமாக முன்மொழிந்துள்ளேன். இதற்கான ஆதார நூல்களும் வலைதள முகவரிகளும் நூலின் முடிவில் இணைக்கப்பட்டுள்ளன.