அண்டவெளியில் பூமியைத் தவிர மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறார்களா இல்லையா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் நீண்ட காலமாக நடந்து வருகிறது. வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்றும், அடிக்கடி பறக்கும் தட்டுகளில் அவர்கள் பூமிக்கு வந்து செல்கிறார்கள் என்று ஒருதரப்பும், அப்படி எதுவுமே இல்லை என்று மற்றொரு தரப்பும் நீண்டகாலமாக விவாதம் நடத்தி வருகின்றனர். ஆனால் அடிக்கடி வானத்தில் பறந்த மர்ம பொருட்கள் பற்றிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு. அடையாளம் தெரியாத அவற்றை UFO எனவும் தமிழில் பறக்கும் தட்டுகள் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர். மனிதன் அறிவு வளர்ச்சியை எட்டிய காலம் முதலிருந்தே தம்மை போல வேறு உலகங்கள், வேற்று உலக ஜீவராசிகள் இருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து சிந்தித்து வருகிறான்.
ஏலியன் எனப்படும் வெளிக்கிரக உயிரினங்கள் குறித்து உலக மக்களிடையே நீண்ட காலமாக பல்வேறு நம்பிக்கைகள், கட்டுக்கதைகள், விவாதங்கள் நடந்து வருகின்றன.