JUNE 10th - JULY 10th
நெருப்பு பூத்தது போல வானம் தெரிந்தது. சர்மி தன் குட்டிக் கண்களை வைத்துக் கொண்டு அதையே விடாமல் பார்த்தாள். சூடான கீற்று நீண்டு அவள் கண்களைக் குத்தியது.
"ஆ…!"
என்று முனகியபடி, அவள் மீண்டும் வானத்தையே பார்த்தாள்.
நீல வண்ண கவுன் போட்டிருந்தவள் தலை முடி ஒட்ட வெட்டப்பட்டிருந்தது. உதடுகள் கெட்டியான நெய் மாதிரி திரண்டு ஈரம் பூசி இருந்தன. ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள்.
அதைக் கவனித்த பாக்கியா,
"பாப்பா! அதான் கண்ணு வலிக்குது இல்ல? அப்புறம் ஏன் வெயில பாக்கற?"
என்று அதட்டினாள்.
"இல்லமா! கொஞ்சம் கஷ்டப்பட்டு பாத்தாதான் நெறையா நெறம் தெரியுதுமா."
பாக்யா மகள் சொல்வதைக் கேட்டுச் சிரித்தாள்.
"அடி அசட்டு பொண்ணே!"
"போம்மா!"
சர்மியின் அருகே வந்தவள் பால் குடத்தை எடுப்பது போல அவளை அள்ளி எடுத்தாள். பாக்யா வங்கியில் வேலையில் உள்ளாள். கணவன் இரண்டு வருடத்திற்கு முன் விபத்தில் காலமாகி விட்டான். மகள் மற்றும் மாமியாருடன் வாழ்கின்றாள். இன்று விடுமுறை நாள் என்பதால் வீட்டு வேலைகள் மும்மரமாய் ஓடிக் கொண்டிருந்தன.
தாயின் கழுத்து வளைவில் தலையை விட்டபடி, சர்மி மீண்டும் கண்களைச் சுருக்கி வானத்தையே பார்த்தாள்.
"ஏம்மா! நீ குளிக்கலையா?"
"ஏன் கேக்கற?"
"நாத்தம் அடிக்கற."
"அப்ப இறக்கி விடவா?"
"வேணாம். வேணாம்."
என்றவள் தாயை இன்னும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள். பாக்யா குளிர்ந்து போனாள்.
"இன்னிக்கு யாராச்சு வராங்களாமா?" குழந்தை கன்னத்தைத் தேய்த்தாள்.
"இல்லியே ஏன் கேக்கற?"
"நீ சமைக்கறப்ப வெளிய துணி துவைக்கற கல் மேல ஒரு காக்கா கத்துச்சு. காக்கா கத்துச்சுனா யாராவது வருவாங்கனு சொல்லுவ இல்லம்மா?"
"காக்காக்குப் பசியா கூட இருந்திருக்கும் சர்மி!"
"அவங்க வீட்ல அடுப்பலாம் இருக்காதா? அது சமைச்சுக்காதா?"
பாக்யா கொள்ளெனச் சிரித்தாள்.
"அதெல்லாம் இருக்காது சர்மி! மனுசங்க மட்டும் தான் அடுப்பு வச்சிருப்பாங்க."
"நீ பொய் சொல்றமா. எங்க தமிழ் மேம் சொல்லி தந்தாங்க."
"என்னவாம்?"
"காக்கா தோசை அப்பம் எல்லாம் சுட்டு வித்துச்சுன்னு. அடுப்பு இல்லாம எப்படி செஞ்சதாம்?"
அம்மாவை மடக்கி விட்ட திருப்தியில் சர்மியின் அணில் பற்கள் தெரிந்தன.
"அது கதை. கதையில என்ன வேணா நடக்கும்டி."
முகம் வாட,
"அப்ப எல்லாமே கதையா?"
என்று கேட்டாள்.
"அப்படிச் சொல்ல முடியாது. உண்மை கதை எல்லாம் சேந்திருக்கும்."
குழந்தை மறுபடியும் எதுவும் கேட்கவில்லை.
"என்ன வேற கேள்விய காணோம்."
"எல்லாம் புரிஞ்சுடுச்சு. அப்புறம் கேள்வி கேப்பாங்களா?"
"அடடே எனக்குத் தான் அறிவு போதல. என்ன புரிஞ்சுதாம்?"
"அய்யோ மக்குமா. வானத்துல சூரியன் நிலாலாம் இருக்குல்ல? அப்படி."
பாக்யாவின் கண்கள் மின்னின.
இவர்கள் கொள்ளையிலிருந்து முகப்பு அறைக்கு வந்த போது வாசலில் அமர்ந்திருந்த மாமியார் ராஜவள்ளி திரும்பினாள்.
"சர்மி! இங்கதான் வாயேன். பாட்டிக் கதை சொல்றேன். அம்மாவுக்கு வேலை இருக்கும் இல்ல? நீ வேற இடுப்பில் ஏறிட்ட!"
"பாட்டி! நான் ஒன்னும் ஏறல."
"ஓகோ!"
"ஆமா அத்த! உங்க பேத்தி நல்லா சமர்த்தா பேசறா."
"அவ பொறந்த நேரம் அப்படி. சரஸ்வதி நாக்குல வாசம் செய்வாள். நீ வேணா பாரு இவ ஓகோனு வருவா!"
வள்ளி பெருமையாய் கூறப் பாக்யா நெகிழ்ந்தாள்.
இவர்கள் ஆர்வமாய் பேசிக் கொண்டிருந்த போது, வீட்டிற்கு வயதான ஆண், பெண் மற்றும் ஒரு இளைஞர் வந்தனர்.
"யாரு இவங்க பாக்யா?"
அத்தை கேட்க பாக்யாவிற்குச் சுரீர் என இருந்தது.
"பேங்க்ல என் கூட வேல செய்றவர் அத்தை! அது அவங்க அப்பா அம்மாவா இருக்கும்."
வள்ளி எழுந்து வரவேற்றாள்.
"வாங்க! உட்காருங்க."
"அம்மா! நா அப்பவே சொன்னேன்ல காக்கா.."
என்று ஆரம்பித்த சர்மியை அடக்கினாள்.
"சர்மி! நீ உள்ள போய் வெளையாடு."
"நா இங்கேயே வெளையாடுறேனே."
அது சமயம் வள்ளி நடுவில் புகுந்து,
"சர்மி! நீ கொஞ்சம் பாட்டிக்குச் சங்குப்பூ பறிச்சு தரீயா?"
என்றாள்.
"தரேனே!" என்றவள் கூடையை எடுத்துக் கொண்டு கேட் அருகே ஓடினாள்.
"வந்து நாங்க என்ன சங்கதியா வந்தோம்னா.."
என்று பெரியவர் இழுத்தார்.
"ஏன் தயங்குறீங்க? எதா இருந்தாலும் சொல்லுங்க."
வள்ளி உந்தினாள்.
"பாருங்கம்மா! எம் பேரு கோவிந்தன். ஆசிரியர் பணியில இருந்து ஓய்வு வாங்கிட்டேன். இவ என் மனைவி மல்லிகா. இது எங்க ஒரே மகன் சந்திரன். வங்கியில உங்க மருமகளோடு தான் வேலை."
"நல்லது. நானும் தமிழ் ஆசிரியர்ங்க. ஓய்வுல இருக்கேன்."
"ஓகோ! எந்த பள்ளில இருந்தீங்க?"
"நஞ்சன்குட்டையில."
"ஓ! நா மதுகப்பட்டி. நஞ்சன்குட்டையில மணி அய்யாவ தெரியுமா?"
"என்ன இப்படிக் கேட்டுட்டிங்க? அவரு மாதிரி நல்ல வாத்தியார பாக்க முடியுமா?"
மல்லிகா கணவனிடம் கிசுகிசுத்தாள்.
"ஏங்க வந்த காரியத்த பாக்காம?"
லேசாக நெளிந்தவர் குரலைச் சரி செய்து கொண்டு,
"வந்து நாங்க எதுக்கு வந்தோம்னா? எங்க பையனுக்குப் பாக்யாவ கே..க்கதான். சந்திரனுக்கு நிறைய பொண்ணு பாத்தோம். ஆனா அவன் மனசுல வேற எண்ணம்னு தெரிஞ்சுட்டோம். இவனே பாக்யாகிட்ட கூடப் பேசினானாம். மறத்துட்டாங்கனு கேள்வி. அதான் நேர்லையே பேசிடலாம்னு வந்தாச்சு."
என்று ஒரு வழியாகச் சொல்லி முடித்தார்.
வள்ளி மருமகளை ஆழமாகப் பார்த்தாள். பின் நிதானமாக,
"எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்ல. பாக்யா தான் முடிவு பண்ணனும். நான் இன்னும் கொஞ்ச காலம் இருப்பேன். எங்க பேத்திய பாத்திருப்பீங்களே? அவளோட எதிர்காலத்தையும் கருத்தில் வச்சக்கோங்க."
என்று கூறினாள்.
"குழந்தைய பத்தி கவலை வேணாம். எங்கள நம்பலாம். பாத்துக்கறோம்."
"நல்லது. இனி பாக்யா தான் சொல்லணும்."
எல்லோரும் அவளையே பார்த்தனர். இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமா? எதற்கு? இப்படியே அமைதியாக வாழ்ந்தால் போகிறது.
"எனக்கு என்னவோ சரியாபடலங்க. என் வாழ்க்க முடிஞ்சததான்."
"அப்படிலாம் சொல்லக் கூடாது. இருபத்தெட்டு ஒரு வயசா?"
"நல்ல வாழ்க்க தேடி வரப்போ வேணாம்பாங்களா?"
ஆளாளுக்குப் பாக்யாவின் மனதைக் கரைத்தனர். ஒரு வழியாக அவள் ஒத்துக் கொண்ட போது, சர்மி பூக்கூடையோடு திரும்பினாள்.
"இந்தாங்க பாட்டி!"
"அம்மாட்டதா தங்கம்!"
"நீ தான கேட்ட பாட்டி?" குழந்தை மறுத்தது.
"நான்தான் சொல்றேன் கொடு." நீட்டினாள்.
பாக்யா கொஞ்ச நாட்களில் பரபரவென மாறினாள். அடிக்கடிச் சந்திரன் போன் செய்தான். ஏன் ஒன்றிரண்டு சமயம் வீட்டுக்கும் வந்து அழைத்துச் சென்றான். சர்மிக்கு எல்லாமே வித்தியாசமாய் இருந்தது.
"அம்மா! நீ இப்பலாம் எங்கிட்ட பேசறதே இல்ல."
படுக்கையில் தாய் இடுப்பில் கால் போட்டிருந்த சர்மி சொன்னாள்.
"அப்படிலாம் இல்ல சர்மி!"
"அப்ப எனக்கொரு கதை சொல்றீயா?"
"ஓ! சொல்றேனே. ஒரு ஊர்ல பெரிய வீடாம்.."
அதே சமயம் பளிச்சென வெளிச்சத்தைப் பரப்பிப் போன் அடித்தது. அப்படியே புரண்டு எடுத்தவள் முகத்திலும் அந்த வெளிச்ச கீற்றுத் தொற்றியது.
"சொல்லுங்க சந்திரன்!"
"தூங்கிட்டீயா?"
"இல்ல இல்ல. சொல்லுங்க."
"அ..ம்மா கதை."
"நாளைக்குச் சொல்றேன்டா தூங்கு."
சர்மி அம்மா மீதிருந்த கால்களை எடுத்துக் கொண்டு திரும்பினாள்.
ஒரு நாள் சர்மி பந்து விளையாடிக் கொண்டிருந்த நேரம் சந்திரன் வந்தான்.
"மாமா! நீங்க ஏன் அடிக்கடி வரீங்க?"
சந்திரன் லேசாகச் சிரிக்க முயன்றான்.
"அவர மாமானு கூப்பிடாதே சர்மி!"
பாக்யா அதட்டினாள்.
"வேற என்னனு கூப்பிடறதுமா?"
மௌனம்.
சந்திரனோடு பாக்யா கிளம்பினாள்.
"நானும் வரட்டாமா?"
"நீ பாட்டியோட இருடா."
"போம்மா!"
சர்மி முகத்தைத் திருப்பிக் கொண்டு போனாள். லேசாய் சுட்டது.
ஒரு ஹோட்டலில் இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர். பாக்யாவின் முகம் ஒரு மாதிரி இருந்தது.
"என்னாச்சு?"
"ஒன்னுமில்ல."
"இல்ல சொல்லு."
"சர்மி மனசு பாதிக்கப்படுதோனு இருக்கு. நான் என் சந்தோசத்த பாக்கறதா இல்ல? அவ சந்தோசத்த பாக்கறதா? இதல்லாம்தான் நான் வேண்டாம்னு சொன்னதுக்குக் காரணம்."
"சர்மிக்குப் பழகிடும்."
திக்கென்று முகம் மாற,
"என்னது?"
என்றாள்.
அவன் பதில் சொல்லாமல் பேச்சை மாற்றினான்.
"நமக்கு இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம். கொஞ்சம் சந்தோசமா இரு. உனக்கு வேணா ரெண்டாவது தடவை. எனக்கு முத தடவை தான்மா."
என்று கூறிவிட்டு அவன் சிரித்தபோது அவளுக்கு லேசாய் கண்கள் கரித்தது. அதை சாமர்த்தியமாய் சமாளித்தாள்.
இன்னொரு முறை சந்திரன் பாக்யாவைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
"இது தான் நம்ம அறை. கல்யாணத்துக்கு அப்புறம். அப்புறம்..!"
என்றவன் ஒரு மாதிரிக் குரலில் கூற, இவளுக்கு முகமெல்லாம் சிவந்து விட்டது. மனமெல்லாம் உற்சாக பட்டாசு வெடிக்க வீடு வந்து சேர்ந்தாள். ஆனால் வீட்டில் காய்ச்சலாகப் படுத்திருந்த சர்மியைக் கண்டதும் எல்லாமே மாயமானது. அடுத்த இரண்டு நாட்கள் அவள் குழந்தையை விட்டு நகரவில்லை. சந்திரனிடம் பேசவில்லை. அவன் வெளியே அழைத்த போது மறத்து விட்டாள். ஒரு வழியாய் அடுத்த வாரம் தான் சந்தித்தாள்.
"பாக்யா! நீ இப்படிப் பண்ணலாமா? நா உன்னையே நெனைச்சுட்டு இருக்கேன்."
"சந்திரன்! சர்மிக்குக் காய்ச்சல்னு சொன்னேனே."
"எஸ். பட் சாதாரண காய்ச்சல் தானே? அவங்க பாட்டி இருக்காங்களே."
"நா அவ அம்மா!"
மௌனம்.
"சரி! கல்யாணத்துக்கு அப்புறம் சர்மிய ஹாஸ்டல்ல விட்டுடலாமா? அவங்க பாட்டி சரியா பாக்க மாட்டாங்களா?"
அவன் கேட்கக் கேட்க விதிர்த்துப் போன பாக்யா சட்டென்று எழுந்து விட்டாள்.
"நா உடனே வீட்டுக்குப் போகணும்."
"என்ன அவசரம் பேசிட்டு இருக்கப்ப?"
"போகணும்."
அவள் லேசாகக் கத்தினாள். அவன் கொண்டு போய் விட்டு விட்டான்.
முகம் சோர்ந்து காணப்பட்ட மருமகளைத் தன் அருகே அமர்த்திக் கொண்டாள். பாக்யா அத்தையின் மடியில் சாய்ந்து அழத் தொடங்கினாள். அவள் தலையை மென்மையாகக் கோதினாள்.
"என்னது இது எதுக்கு அழுவானேன்? என்கிட்ட சொல்லுமா!"
அவள் தனது மன பாரத்தைக் கொட்டித் தீர்த்தாள்.
சில கணங்கள் மௌனம் காத்த வள்ளி ஆழ்ந்த குரலில் தொடங்கினாள்.
"பாக்யா! இந்த வாழ்க்கையே ஒரு பொம்மலாட்டம் தான். நாம இயங்கறதுக்கு ஒரு கயிறு வேணும். அந்தக் கயிறு இருக்க வரைக்கும் தான் ஆட்டம். கல்யாணம்ங்கறது கூட அப்படி ஒரு கயிறு தான். தாய்மைங்கறது இன்னொரு கயிறு. இப்படி வேற வேற ரூபத்துல இந்தக் கயிறு இருக்கும். நீ உன் சந்தோசத்த பத்தி யோசிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா சில சொல் வரும். சில காயம் வரத் தான் செய்யும். அத உதறிட்டு பொம்மலாட்டம் போடலாம். இல்ல எனக்கு என் குழந்த சந்தோசம்தான் முக்கியம்னு நினைச்சனா இப்படியே இரு. ஆனா அவ வளந்த பின்னாடி அவ கயிறதான் பிடிப்பா. அப்ப நீ தனியா நின்னுட்டு வேதனைப்படக் கூடாது. சில சமயம் நாம என்ன தவறு செஞ்சோம்னு கூடத் தெரியாது. ஆனா தண்டனை பலமா தான் இருக்கும். தவறு செய்யாம இருக்கறதும் இங்க தவறாகத் தான் பதிவு ஆகுது. காலம் தான் விடை பாக்யா!"
அத்தை பேசப் பேச பாக்யாவிற்குப் புரிதல் அகலமானது. வள்ளியின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள்.
"சரி அத்த! எனக்குக் கல்யாண கயிறு வேணாம். பாப்பா வளர்ந்து நல்ல நிலைக்கு வரட்டும். அதுக்குப் பிறகு எனக்குப் பிடிச்ச வேற கயிற வாழ்க்க தரும்."
வள்ளி மென்மையாய் சிரித்தாள்.
அடுத்த நாள் வாசலில் காக்கா கத்தியது. சர்மி காக்காயைத் துரத்திக் கொண்டிருந்தாள்.
முற்றும்
#606
60,300
300
: 60,000
6
5 (6 )
padmakumarasamy1966
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
senthaanbu
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50