கிரகணப் பாம்பு

பெண்மையக் கதைகள்
5 out of 5 (2 )

அருவி, மலையின் பால் போல் சிதறித் தெறிக்கிறது. அதன் பேரிசை கானகத்தை மீட்டியது. காற்றில் புகைபோல் சாரல், பாசி படர்ந்த ஈரப் பாறைகள், அதனிடையே உருண்டோடும் காவிரி. கரையோர மரங்கள் சாரைசாரையாக நடந்துசெல்வதுபோல் பரந்துவிரிந்து உயரும் மலைப் பிரதேசம். இத்தகைய குளிர்ந்த சூழலிலும், முனீஸ்வரியின் சூரியப் பொழுதுகள் மேலும் ஒளி மிகுந்தவையாய் மாறிப் போயிருந்தன.

ஆம், அடுப்பில் விறகுகள் மஞ்சள் தீப்பிழம்புகளோடு முழங்க மண் சட்டியில் மீன்கள் எண்ணெய்யில் நீந்திக்கொண்டிருந்தன. அருகே இணையடுப்பில், வேறு மீன்கள் குழம்பிற்கென உடன்கட்டை ஏறியிருந்தன. அவள் தணலின் வெம்மை தாளாமல், முந்தானையைச் சுழற்றி காற்று வீசிக்கொண்டாள்.

சிதர் மரப் பூவைபோல இயற்கையாகவே மஞ்சள் நிறம் கொண்டிருந்த அவள், நெருப்பணையில் கிடந்து கிடந்தே கருத்துப் போயிருந்தாள். புகை, மிளகாய், காந்தலினால் அவள் கண்கள் மங்குவது தெரியாமல் மங்கிக்கொண்டு வந்தன.

எனினும், அந்தத் தொழிலில் அலுப்போ சலிப்போ கொண்டதில்லை. வெறுப்புடன் சமைத்தால் விருப்பமுடன் உண்ண இயலாது என்பது அவள் பண்பாட்டில் ஊறிய வழக்கம். நட்சத்திர விலாஸ்களில் கிடைக்காத கைப்பக்குவம் தான் இங்கு ஆதாரசுருதியாக இருந்தது. அதற்கு மண்பாண்டங்கள், செக்கு, அம்மி, விறகு அடுப்புகள் என மக்களால் புறக்கணிக்கப்பட்டவையே இங்கு ஜீவனாய் இருந்தன. வேறு சிந்தனை இடைப்பட்டால்கூட அவள்கை அனிச்சையாய் இயங்கக்கூடியது. மீன்கள் கரையாதிருக்க வலிக்காததுபோல் அதை பிரட்டிவிட்டாள். உப்பு, புளி, மிளகாய், இஞ்சி, பூண்டு, மஞ்சள் எனச் சேர்த்து அரைத்த விழுதை அதில் கலந்து அதற்கான ’கல்யாணத்தை’ நேர்த்தியாகச் செய்தாள். வேறு பெண்களும் இந்தத் தொழில் நிமித்தமாய் அவரவர் அடுப்பருகே வந்து அமர்ந்தனர். அதன் பின் அக்னியாகம் தொடங்கிவிட்டது!

இந்த அருவிக்குச் சுற்றுலா வருபவர்கள், பிடித்த மீன்களை அவர்களே வாங்கி வந்து கொடுத்து, சமைத்துத் தரச் சொல்லிச் சாப்பிட்டுவிட்டுக் கூலிகொடுத்துச் செல்வது வழக்கம். அவ்விதம் சமைத்துத் தரும் பெண்களில் முனீஸ்வரியும் ஒருத்தி. இங்கு அடுப்பு அணையாமல் எரிந்தால், வீட்டில் அடுப்பு சற்று நேரமாவது எரிந்து அணையும். சீஸனுக்கு களை கட்டும் இந்தத் தொழில், கோடைகாலத்தில் ஈரமின்றி வயிற்றைக் காயப்போட்டுவிடும்!

ஆர்டர் கொடுத்த கஸ்டமர்கள் அருவியில் குளித்துவிட்டு வந்திருந்தனர். முனீஸ்வரி சமைத்ததைச் சுடச் சுட இறக்கினாள். வடித்து வைத்திருந்த சோற்றைத் தட்டுகளில் மேவி, அதன் மீது மீன் குழம்பை ஊற்றிப் பரிமாறினாள். அவர்கள் சாப்பிட்டுவிட்டுப் பாராட்ட வேண்டும் என்பதுகூட இல்லை. முகக் குறிப்புகளிலேயே உணர்ந்து, தன் வெம்மை தணிந்து கொள்வாள். குழந்தை முதல் பெரியவர்வரை பொருந்திப்போகிற காரத் திட்டம் அவளுக்கு அத்துப்படி. அவள் வைத்த குழம்பைத் தொட்டுப் பொட்டுவைத்தால், அது நிற்கும்!

வருடத்தில் ஒரு முறையோ வாழ்வில் ஒரு முறையோ இங்கு வருபவர்கள் தாம் அதிகம். அதில் பலரும் அவள் கைமணம் அறியாதவர்கள். எனினும், அவளை நம்புகிறவர்களைப் பூரணமாய் திருப்திபடுத்தும் நிம்மதி அவளுக்கிருந்தது.

வேலையில் ஆழ்ந்துபோன நேரம் அவளுடைய மகள் புனிதா, கைக்கெட்டாத தூரத்திற்கு விளையாடச் சென்றிருந்தாள். ஏழாம் வகுப்புப் படிக்கும் சிறுமி. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சக பிள்ளைகளோடு அருவிக் கரையைச் சுற்றக் கிளம்பியிருந்தாள். எல்லா நேரமும் இழுத்துப் பிடிக்க முடிவதில்லை. எல்லாவற்றையும் அதன் போக்கில் விட்டுப் பிடிக்க வேண்டியதிருந்தது. எனினும், அவள் மனச் சக்தியாலேயே இயக்கிக்கொண்டிருந்தாள். வேலைக்கு ஒத்தாசை செய்யத் தன் அருகில் அவளைச் சேர்க்கவில்லை. இந்தத் தொழில் அவளையும் தொற்றிக்கொள்ளுமோ என்கிற கலக்கம்தான் காரணம்! அவள் முகத்தில் தன்னையே தரிசித்தாள்.

மகளுக்கும் வாய்த்த சிதர் மரப் பூ நிறமாவது மங்காதிருக்க, சுற்றித் திரியும் அவளை, மனச் சக்தியால் தன் உள்ளங்கைக்குள் மூடிவைத்திருந்தாள்.

‘முனீஸ்வரி’ என்ற பெயர் அருள் மிக்கதென அவளுடைய பாட்டி அடிக்கடி சொல்லியிருக்கிறாள்… எனினும், அவளுடைய மனோ சக்தியால் இயக்க முடியாததென ஒன்று இருந்தது… கணவன் லட்சுமணன் ரூபத்தில்!

அவள் வேலை செய்யும் இடத்தில் ஒத்தாசை செய்யும் பாவனையில் கூடவே அமர்ந்திருப்பான்.

கஸ்டமர்களில், இவள் சமைத்த மீன் உணவை ருசித்துவிட்டு,

“ஆ… பிரமாதம். இவ்ளோ டேஸ்ட்… வீட்ல சான்ஸே இல்லை ” எனச் சிலாகித்துப் பாராட்டும் நபரைக் கணித்துக்கொள்வான். அவர் சாப்பிட்டுமுடித்து முனீஸ்வரியிடம் கூலி கொடுத்துவிட்டு, நகரும்போது இவனும் நைஸாக அவரை அடியொற்றி நடப்பான்.

“சாரே… ஒரு நூறு ரூபாய்”

“எதுக்கு..?”

“நாங்க ரொம்ப கஷ்ட ஜீவனம்… நான் வேற மருந்துகுடிக்கிற ஆளுங்க…” எனத் தாடியைச் சொறிந்தபடி கெஞ்சலாகப் பார்ப்பான். அவர் ஐம்பது ரூபாயாவது கொடுத்துவிட்டுத் தான் நகர வேண்டியதிருக்கும்.

அவன் திரும்பிவரும்போது, முனீஸ்வரி கத்துவாள்.

“இப்படி எச்ச நக்கிப் பொழைக்க வெக்கமா இல்லையா? ” அவன் இவளின் குறுக்குவாகில் எட்டி உதைப்பான். விழுந்து எரியும் நெருப்பு விளிம்புவரை உருள்வாள்.

அருகில் போட்டியாகத் தொழில் செய்யும் பெண் ஓடிவந்து தூக்கிவிடுவாள்.

”முனீ அவனே குடிகாரன்னு தெரியுமில்ல… எதுக்கு வார்த்தையை உடறே… நீ உன் வேலையைப் பாரு… அவன் தன் வேலையைப் பார்க்கட்டும்…” எனச் சமாதானம் பேசுவாள்.

முனீஸ்வரி, குடிப்பதற்குப் பணம் தருவதில்லை என்பதால் அவன் பல வியூகங்களை வகுத்தான். அவனே ஆர்டர் பிடித்து கஸ்டமர்களை அழைத்து வருவான். அவர்களிடம் தன் மனைவி என்பதை மறைத்து,

“அந்தப் பொம்பள் நல்லா சமைக்கும்… சுத்த பத்தமா இருக்கும்… குழம்பு வாசனையே எச்சில் ஊறவைக்கும்… அட ரேட்டும் ரொம்ப கம்மிதாங்க…” எனப் பேச்சிலேயே கவர்ந்து விடுபவன், தொடர்ந்து,

”எனக்கு நீங்களா பார்த்து ஏதாவது செஞ்சா போதும்” என்று தணிவாகப் பேசி, குறிப்பிட்ட கமிஷன் வாங்கிவிடுவான்.

கஸ்டமர்களிலேயே குடிகாரக் குழுக்கள் வருவதுண்டு. அந்த ஜோதியில் அவன் சுலபமாய் ஐக்கியமாகிவிடுவான். ஒருமுறை ஒருவன் மீனை ருசித்தபடியே, “வாவ்… மீன் முள் எவ்வளவு கூர்மையா இருக்கு…” என்றபடி முனீஸ்வரியை ஓரக் கண்ணால் அளந்தான். அதை அ றிந்தோ அறியாமலோ அவனிடமே மதுவை யாசகம் பெற்று குடித்துக்கொண்டிருந்தான் லட்சுமணன். அதைக் கண்டு அவள் மனம் கசந்துபோனாள்.

ஒருநாள் மீன் கண்டம் போலவே இருக்கிற இறைச்சியைக் கொண்டுவந்து அவளிடம் நீட்டினான்.

“இதை எனக்குச் சமைச்சுக் கொடு”

“என்ன கறி இது..?”

சற்று சுணங்கியவன், “ப்ச்… இது நல்ல கறி தான்… நோய்ங்கிற அண்ட சராசரத்தையே சாய்ச்சுருமாம்… சாரைப் பாம்புக் கறி… தலையை வெட்டி எறிஞ்சாச்சு… ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிஞ்சுவிட்டாப்போதும் கவிச்சி வாடை வராது… இந்தப் பெண்களுக்கு வர்ற வெள்ளைப்படுதல் நோயெல்லாம்…”

“த்தூ… மானங்கெட்ட காசி… தூக்கி எறி முதல்ல… இந்தக் கருமத்தையெல்லாம் நா கைலகூடத் தொடமாட்ட”

“எலேய்… கண்டவனுக்கெல்லாம் சமைச்சு தர்ற… எனக்கு மாட்டன்னு சொல்றே… நான் புருஷனா… இல்ல…”

தொழில்செய்யும் இடத்தில் இத்தகைய பேச்சைக் கேட்டு அவள் கலவரமடைந்தாள்.

“வெச்சுட்டுப் போ… சமைச்சுத் தொலையறேன்…” என்றவள் முதன்முறையாக முழுக்க முழுக்க வெறுப்போடவே சமைத்துவைத்தாள். அன்று முதல் அவன் ஒரு பாம்பாகவே அவள் கண்ணுக்குத் தென்படத் தொடங்கினான். போதையேறிவிட்டால் நடனமாடுவான். அது பேயாட்டமாய் இருக்கும்.

அவனைத் திருத்த அவள் வகுத்த வியூகங்களும் கொஞ்ச நஞ்சமில்லை.

ராத்திரி நேரம் அவன், அவளை நெருங்கும்போது,

“தோ பார்… முதல்ல தண்ணி போடுறத விடுவியாம்… பெறகுதான் இதுக்கெல்லாம் வருவேன்”

என்று நூதனமாய் நிழல் போராட்டம் நடத்தினாள்.

ஆனால் அவளைவிட மது காமம் மடு மலை என விரிந்துகொண்டே போவதைத் திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

சிலகாலமாக அவன் உடல்நலம் பாதிப்படைந்தது. அவனால் தேடி வந்து இரையெடுக்க முடியாததால் குகையில் அடங்கினான். இதற்கு முன்பே உடல்நலம் பாதிக்கப்பட்டு மீண்டும் அவன் உயிர்த்தெழுந்திருக்கிறான். பலமுறை நிலைமை மோசமானதையடுத்து, அவனை பெருந்துறை சேனடேரியத்திற்கு அழைத்துச் சென்றாள்.

அவனைப் பரிசோதித்து முடித்ததும் அறையை விட்டு வெளியே வந்த டாக்டர் முனீஸ்வரியிடம் கூறினார்.

“கல்லீரல் பாதிச்சிருக்கு… காசநோயும் அட்டாக் ஆகியிருக்கு இனிமேல் குடித்தால் பிழைக்க மாட்டார்…”

அதைக் கேட்டதும் அவளுக்குத் தலைசுற்றுவது போலிருந்தது. வாழ்க்கைச் சாலையின் மிக அபாயமான கொண்டை ஊசி வளைவில் பயணிப்பது போலிருந்தது. அப்படியே சுற்றுச் சுவரைப் பிடித்துக்கொண்டாள்.

இந்த முப்பத்தாறு வயதிலேயே விதவைக்கோலம் பூணுவதா… என் மகள் தந்தையை இழந்து நிற்பதா… என நினைத்தபோது, துக்கம் தொண்டையை அடைத்தது. ஏனோ பெற்றோர் முன்னோர் நினைவெல்லாம் வந்து கண்களில் நீர் திரளவைத்தது.

‘அவனை சாகவிடக் கூடாது. இனி மதுவைக் கையில்கூடத் தொட விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என மனதுக்குள் உறுதியாகச் சங்கற்பம் செய்துகொண்டாள்.

அவளை வீட்டிற்கு அழைத்து வந்ததும் சட்டென அவன் கால்களைப் பிடித்துக்கொண்டு அழுதாள். “சாமி சாமியா இருப்ப… இனிக் குடிக்காதே… இந்தக் குடும்பத்துக்கு ஆம்பளை துணை வேணும்…” எனக் கைகூப்பிக் கேட்டுக்கொண்டாள். அவன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நின்றான்.

அதற்குப் பின் அவன் வீட்டோடு ஓய்வாக இருக்க நேர்ந்தது. சீஸன் குறைந்துவிட்டதால் அந்தப் பகுதியில் வேலையும் குறைந்துகொண்டேவந்தது. அதனால் முன்புபோல் அவனால் அலைந்து திரிந்து குடிப்பதற்குப் பணம் திரட்ட முடியவில்லை. அவன் எவ்வளவு கேட்டும் அவள் பணம் தரவில்லை. மேலும், அதைப் பயன்படுத்திக்கொண்ட முனீஸ்வரி, அவனுக்கு ஊட்டச் சத்துமிக்க காய் கனிகளை வாங்கிக் கொடுத்தாள். காசநோய் தீருமென்று வித விதமான கருவாடுகளைத் தேடி வாங்கிவந்து வறுத்துக்கொடுத்தாள். வேலையில்லாத பொழுது அவன் கூடவே இருந்தாள். ‘நலம் விசாரிக்க’ வந்த குடிகாரத் தோழர்களை அண்ட விடாமல் விரட்டினாள்.

தினமும் இரவு அவன் குடிநினைவில் தாளமுடியாமல் கத்தினாலும், அவள் கண்டுகொள்ளவில்லை.

இவ்விதமாக ஒட்டிய தோலாக இருந்த அவன் உடல், மெல்ல மெல்ல சதை துளிர்க்கத் தொடங்கியது. அவள் முகம் நம்பிக்கையில் ஒளிர்ந்தது. இனிமேல்தான் அவனை இன்னும் கவனமாய்ப் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மனதிற்குள் அலாரம் அடித்தது. குடித்ததை மறக்கவைத்து அவன் உயிரைத் தக்கவைக்கும் போரில் ஒவ்வொரு கணமும் முக்கியம் என நினைத்துக்கொண்டாள்.

அடுத்துவந்த ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகண நாள். வழக்கம்போல் விளையாடச் சென்ற மகளை இழுத்துப் பிடித்து நிறுத்தினாள். “புனிதா இன்னிக்கு எப்படியும் சமைக்கிற வேலை வரும். நான் அதையும் பார்க்கணுமில்ல… கொஞ்ச நேரம் அப்பாவைப் பார்த்துக்க. நான் சீக்கிரம் வந்துவிடுவேன்…” என்று சொல்லிவிட்டு அருவிக்கரைக்குச் சென்றாள்.

அன்று வேலை குறைவு; மழை அதிகம். அன்று கிரகண நாள் என்பதால் கூட்டம் வந்தபோதும் இறைச்சி சாப்பிடுபவர்கள் குறைவாகவே இருந்தனர். சீக்கிரமே சமைத்துக் கொடுத்து வேலையை முடித்தாள். அடுப்பை அணைத்துவிட்டு மீதமிருந்த சோற்றுப் பருக்கைகளை எடுத்துச் சென்று, அருகே ஓடிய ஆற்றுக்குள் வீசினாள். மீன்கள் பாய்ந்து வந்து அதைச் சாப்பிட்டன. உயிரற்ற மீன்களைப் பார்த்துப் பார்த்து வெதும்பும் அவள், உயிருள்ள மீன்களை இவ்விதமாய்ப் பார்த்துவிட்டுத்தான் அன்றைய பணியை முடிப்பாள். தன்னையே உணவாய் தந்து பலரின் பசி தணிக்கும் அந்த உயிர்களுடனான ஜீவநட்பு அது. வானதீர்த்தம் நின்றதும், ஆற்றில் படகுகளின் பவனி தொடங்கியிருந்தது. அவள் வீட்டை நோக்கி நடந்தாள். வானம் வெளுத்திருந்தது. ஆங்காங்கே மழை சகதியாய் தேங்கி நின்றது. காற்றில் குளிர் இழைந்திருந்தது.

தன் வீட்டை நெருங்கியவள், அந்த முனகல் சத்தம் கேட்டு சட்டென்று நின்றாள். அந்தக் குடிசையின் ஓலை விலகிய சந்து வழியாகப் பார்த்தாள்.

புனிதாவை இறுக்கி அணைத்திருந்தான் லட்சுமணன். முனீஸ்வரி, தீயை மிதித்ததுபோல் அரண்டு போனாள். சந்திர கிரகணப் பொழுதில் ஒரு பெரிய பாம்பு மெல்ல மெல்ல நிலவை விழுங்குவதாகக் கிராமத்தில் பாட்டியும் அக்கம்பக்கத்தினரும் கூறக் கேட்டிருக்கிறாள். அதை நம்பியிருக்கவில்லை. ஆனால், நேரில் இப்போது கண்முன் நிலவை விழுங்கும் பாம்பாகத் தெரிந்தான். அப்படியே விக்கித்து நின்று நெஞ்சில் கைவைத்துக்கொண்டாள். பிறகு நடந்துசென்று கீற்றுக் கதவைத் திறந்தாள்.

இவள் வரும் அரவத்தை உணர்ந்து சட்டென இரையை விடும் பாம்புபோல் அவளை விலக்கியவன், உடனே சுதாரித்துப் பேசத் தொடங்கினான்.

”ஏய்… எ… என்ன நீ… வெளிய சுத்தப்போறேன்னு அடம்புடிக்கிற… காலம் எப்படிக் கெட்டுக் கிடக்கு தெரியுமா?” என்றபடி வாசல்புறம் நடந்து, அங்கிருந்த மகோகனி மரத்தருகே கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து தலையைக் கவிழ்த்துக்கொண்டான்.

முனீஸ்வரி உள்ளே சென்று புனிதாவை ஏறிட்டாள்.

“என்ன இதெல்லாம்”

“அப்பா ஏன் இப்படி மாறினார்னு தெரியல… கண்ட இடத்திலயெல்லாம் தொடறார்… இது தப்பில்லைனு சொல்றார்… முதல்ல ஆடக்கத்துத் தரேன்னு சொன்னார்… ஆடிட்டிருக்கும்போது திடீர்னு கட்டிப் பிடிச்சு… எனக்கு… எனக்கு ரொம்ப பயம்மா இருக்கும்மா…” என்றாள் குரல் தழுதழுக்க.

முனீஸ்வரி அவளை அணைத்துக்கொண்டாள்.

“பயப்படாதே நானிருக்கேன்… இதையெல்லாம் யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்… இனி நீ என் கூடவே இரு… ம்…”

அவள் ஆமோதிப்பாய்த் தலையசைத்தாள். முனீஸ்வரி தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்தியவள் கண்ணில் பளபளத்த ஈரத்தை மொத்தக் கண்ணீரையும் துடைப்பது போல் துடைத்துக்கொண்டாள். பிறகு அவளைவிட்டு விட்டு, நிதானமாய் வெளியே வந்து லட்சுமணனை நோக்கி நடந்தாள். காலடியோசை கேட்டு அவன் நிமிர்ந்தான்.

முனீஸ்வரி, தன் கையிலிருந்த பணத்தை அவனிடம் நீட்டியபடி சொன்னாள்:

“இந்தா… வாங்கிட்டுப் போய்க் குடி...!”

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...