அம்மா

rajasekaran
பெண்மையக் கதைகள்
5 out of 5 (1 )

இருளையும் வெளிச்சத்தையும் தன்னில் கரைத்துக் கொண்ட வானமகள் கருநீல நிறத்தில் தன்னை போர்வையால் போர்த்தியபடி தூங்க ஆயத்தமாக , பனித்துளிகள் கிடைத்த இடங்களெல்லாம் தன்னை அமர்த்திக் கொண்டு நீர்த்திவலைகளாய் மாற்ற தனக்கான நேரத்தை எதிர்பார்த்து இருக்க , வான்மகளின் அழகை ரசித்தபடி இருந்த கதிரவன் கனத்த இதயத்துடன் மலைகளின் பின்னால் மறைந்து போவதை நினைத்து வருத்தப்படுக் கொண்டே கதிரவன் மெல்ல மறைய ஆரம்பித்தான்.....

இதுவரை இயற்கை வெளிச்சத்தில் குளிர் காய்ந்து கொண்டிருந்த அந்த நகரம், மெல்ல மெல்ல செயற்கை வெளிச்சத்திற்கு மாற தன்னை தயார்படுத்த துவங்கின.

இரையை தேடி அலைந்த பறவைகள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்புவதை போல, தங்கள் குடும்பத்திற்காக தங்களை வருத்திக் கொண்ட பகல் வேலைநேர மக்கள் விரைவாய் வீடுகளுக்கு செல்ல ஆரம்பிக்க, இரவு பணிக்காக செல்லும் மக்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.

வசந்த் அன்றைய பணிகளை முடித்து விட்டு எழுந்தான்.

வசந்தின் தந்தை இறக்கும் போது அவனுக்கு ஒரு வயதுதான் இருக்கும். தந்தையின் முகம் நினைவில்லை. பின்னர் போட்டோவில் பார்த்து தெரிந்து கொண்டான்.

அப்பொழுது இருந்து அம்மாதான் இவனை கஷ்டப்பட்டு படிக்க வைத்தாள். அவளின் உலகமே இவனாகிப் போனான்.

சிறுவயது முதலே அம்மாவின் கஷ்டங்களை பார்த்து வளர்ந்ததால் இவனுக்கும் அம்மாவே உலகமாகிப் போனாள்.

வசந்தை பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் போதே, வசந்த் பைக்கில் ஏறி அமர்ந்து தன் வீட்டை நோக்கி செலுத்த தொடங்கினான்.

வேலை முடிந்து வீட்டினுள் சோர்வாய் நுழைந்த வசந்த்தை

" அப்பா " என அழைத்தவாறு வசந்த்தின் காலை கட்டிக் கொண்டார்கள் வாசுவும் , ஸ்ருதியும்.


இருவருக்கும் முத்தமிட்டபடி அழைத்து வந்து ஷோபாவில் அமர வைத்தான் வசந்த்.


" சொல்லுங்க. அப்பாகிட்ட என்ன காரியம் ஆகணும் " என்றான் சந்தேகமாய்.


" அதெல்லாம் ஒண்ணுமில்லையே. பச்ச்.. " என சொல்லிவிட்டு தன் வாயை மூடிக் கொண்டாள் ஐந்தாவது படிக்கும் ஸ்ருதி.


" சும்மா சொல்லுங்க " என்றான் வசந்த்.


" அது ஒண்ணுமில்லப்பா... அது.... வந்து.... நீ சொல்லுக்கா " என்றபடி தனது அக்காவைப் பார்த்தான் மூன்றாவது படிக்கும் வாசு.


" அது வந்துப்பா..... " என ஸ்ருதி சொல்ல ஆரம்பிக்கும் முன்


" என்ன... அப்பா வந்தவுடனே தொண தொணன்னு பேச்சு. போங்க போய் படிங்க. அப்பா பேஸ் வாஸ் பண்ணிட்டு வரட்டும் " என வசந்தத்தின் மனைவி யசோதா இருவரையும் அதட்ட , இருவரும் ஒன்றும் பேசாமல் அவனிடமிருந்து விலகி சென்று புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தனர்.


வசந்த் சிரித்துக் கொண்டே குளியலறையை நோக்கி போனான்.

குளித்து விட்டு தன் அம்மாவை பார்க்க, அம்மாவின் அறையை நோக்கி நடந்தான்.


வசந்த் தன் அம்மாவின் அறையின் கதவை திறந்து உள்ளே நுழைய, அதை கவனித்த அவன் தாய் பார்வதி


" வாப்பா. இப்போதான் வேலை விட்டு வந்தியா " என கேட்டவாறு படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள்.


" ஆமாம்மா. இப்போ உங்களுக்கு உடம்பு எப்படி இருக்குமா " எனக் கேட்டவனை பார்த்து


" முன்னவிட இப்போ தேவலம்பா " என்றாள் முனகியபடி


" மாத்திரை எல்லாம் கரெட்டா சாப்பிடறியாம்மா "


" சாப்புடறேன்பா "


" சரிம்மா. படுத்துக்கோ. நான் ஹால்ல இருக்கேன். எதாவது வேணும்மின்னா கூப்பிடு " என்றவாறு நகர முயன்றவனை


" ஏம்பா வசந்த் " என அழைத்தாள் பார்வதி.


" என்னம்மா " என்றபடி திரும்பினான் வசந்த்.

அவனிடம் ஏதோ சொல்ல நினைத்தவள், முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு

" ஒண்ணுமில்ல போப்பா " என்றவளின் கண் கலங்குவதை கவனித்தான் வசந்த்.

பார்வதியின் அருகில் வந்து அமர்ந்து


" என்னமா சொல்லு " என்றான் பார்வதியின் கைகளை பிடித்தபடி


" ஒண்ணுமில்லபா.... அம்மாவாலா முன்ன மாதிரி எந்திரிச்சி நடக்க முடியலை. அதுக்கு.... " என வார்த்தையை இழுத்தாள் பார்வதி.


" அதுக்கு " நெற்றியை சுருக்கினான் வசந்த்.


பார்வதியின் வாயிலிருந்து வார்த்தைகள் வர தடுமாற, கண்களில் இருந்து எந்த தடையும் இன்றி கண்ணீர் வந்தது.


" ஏம்மா. அழுகுற. என்னாச்சி " என பதட்டத்துடன் பார்வதியின் கண்ணீரை துடைத்தவன்


" ஏம்மா. யசோதா ஏதாவது சொன்னாளா " எனக் கேட்டவுடன், பார்வதி பதட்டத்துடன்


" அவ என்னை என்னபா சொல்லபோறா. ...... " என்றவாறு சற்று இடைவெளி விட்டு பார்வதியே தொடர்ந்தாள்


" எனக்குதான் அப்போ அப்போ முடியாம போயிருது. அப்போ அவதான் வந்து பாத்துக்குறா. அவள் எப்பவும் என்னை கோபமா பேசவே மாட்டா. என்னை பெத்த அம்மாவ கவனிச்சுக்குறா . அவளையும் , குழந்தைகளையும் பத்திரமா பாத்துக்கோ. நீயும் வேலைக்கு போயிட்டு வர்றப்ப பாத்து பத்திரமா வா. அப்புறம். அம்மாவுக்கு " என ஏதோ சொல்ல தடுமாற


" அம்மா. நீ ஒண்ணும் பேசாம படும்மா " என சொல்லியவாறு பார்வதியை படுக்க வைத்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தான் வசந்த்.


பிள்ளைகள் இருவரும் வசந்த்தை பார்த்தவுடன் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.


இதை கவனித்துவிட்ட வசந்த் இருவரையும் கையசைத்து அழைத்தான். இருவரும் திரும்பி கிச்சனை ஒருமுறை பார்த்துவிட்டு வசந்த்தை நோக்கி ஓடி வந்தார்கள்.


" சொல்லுங்க. என்ன நடந்தது " என்றான் இருவரையும் பார்த்து.


" நாங்க ஸ்கூல் விட்டுட்டு வந்தோமா. எங்களை பாட்டி கூப்பிட்டாங்க. நானும் ஸ்ருதியும் பாட்டி ரூமுக்குள்ள போயி பாட்டிகிட்ட பேசிட்டு இருந்தோமா " எனச் சொல்லிவிட்டு வாசு நிறுத்த, ஸ்ருதி தொடர்ந்தாள்.


" பாட்டி அழுதாங்க. நான் ஏன் பாட்டி அழுகுறன்னு கேட்டேன். அதுக்கு பாட்டி சொல்றாங்க. அவங்க நம்மள விட்டுட்டு எங்கோ போறாங்களாம். அதுனால எங்களை பத்திரமா இருக்கனும். நல்லா சாப்பிடனும். அப்பா அம்மா பேச்ச கேட்டு நடக்கனும். வாசுவும் நானும் சண்ட போடமா இருக்கனும். இப்படி சொல்லிட்டே அழுதாங்களா. நானும் வாசுவும் பாட்டியோட கண்ணீரை துடைச்சி விட்டோமா . அப்புறம்.... " என ஸ்ருதி யோசிக்க, வாசு தொடர்ந்தான்.


பிள்ளைகள் சொல்வதை பொறுமையாக கேட்டான் வசந்த்.


" அப்புறம். அம்மா வந்து எங்களை திட்டி அங்கிருந்து வெளியே துரத்தி விட்டுட்டு. பாட்டியோட சண்ட போடுச்சிபா அம்மா " என சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிச்சனில் இருந்து கையில் காபி டம்ளரோடு வெளிப்பட்டாள் யசோதா.


மூவருக்கும் காபியை கொடுத்துவிட்டு, மற்றொரு டம்ளரை பார்வதிக்கு கொடுத்துவிட்டு வந்து வசந்த்தின் அருகில் அமர்ந்தாள் யசோதா.


" யசோதா. அம்மாகிட்ட சண்ட போட்டியா " என கோபத்தோடு வசந்த் கேட்க.

சந்தேகத்தோடு குழந்தைகள் இருவரையும் பார்த்தபடி


" என்ன. உங்க குழந்தைகள் வத்தி வச்சிருச்சிட்டாங்களா. இவங்க சொல்றத நம்பாதீங்க " என்றாள் யசோதா.


" விஷயத்தை சொல்லு " என்றான் வசந்த் அதே கோபத்தோடு.

ஆனால் யசோதா நினாத்துடன்


" ரெண்டும் பேரும் யூனிபார்ம் கூட மாத்தாம அவங்க பாட்டி கூட பேசிட்டு இருந்தாங்க. அதான் அவங்கள போயிட்டு துணிமாத்துங்கன்னு துரத்தி விட்டேன். அவங்ககிட்ட சாப்பிட ஏதாவது வேணுமான்னு கேட்டேன். அதெல்லாம் வேண்டாம். நீயும் வசந்த்தும் எப்பவுமே சண்ட போடக் கூடாது. புள்ளைங்களை பத்திரமா பாத்துக்கோ. அப்படி இப்படின்னு ஏதேதோ பேசுனாங்க. எனக்கு ஒருமாதிரியா ஆயிடுச்சு. இப்படி எல்லாம் பேசிட்டு இருந்தீங்கன்னா . உங்க மகன் வந்தா சொல்லிருவேன்னு சொல்லிட்டு வெளியே வந்துட்டேன். இத பாத்துட்டுதான் இவங்க இப்படி சொல்றாங்க " என்றாள் யசோதா.


" ஏன் அம்மா இப்படி பேசுறாங்க. நம்மகிட்டயேயும் இப்படிதான் பேசினாங்க " என நினைத்தவாறே எழுந்து பார்வதியின் அறைக்கு வசந்த் செல்ல , யசோதாவும் பின் தொடர்ந்தாள்.


அங்கே கட்டிலில் மல்லாந்து படுத்தபடி தன் மார்பின் மீது வசந்த்தின் குடும்ப போட்டோவை வைத்து தன் இரு கைகளால் இறுக அணைத்தபடி தன் மூச்சை நிறுத்தியிருந்தாள் பார்வதி...

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...