கனவு நனவாகிய பொழுதுகள்

பெண்மையக் கதைகள்
4.7 out of 5 (7 )

‘கனவு’ நனவாகிய பொழுதுகள்… (சிறுகதை)

பூபதி பெரியசாமி

மின்சார வசதி இல்லாத கருப்பம்பட்டி கிராமம்… இரவு 8.00 மணி… இருளில், மேகத்தைக் கிழித்துக்கொண்டு, ஆகாயவிமானம் ஒன்று மேலே பறந்து கொண்டிருந்தது. வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்த கிராமத்துச் சிறுவர்கள், வானை அன்னாந்து பார்த்து கைதட்டி மகிழ்ந்து ஆராவரித்தனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்து ஆசையுடன் வெளியே ஓடிவந்தான்(ள்) சத்யா.

“ஏய்... எங்க ஓடற. ஆணாப் பொறந்த கழுத… கொஞ்சம் கொஞ்சமா பொட்டப்புள்ள மாதிரி மாறிட்டே. ஊர்ல எல்லாரும் என்னைக் காறித் துப்புறானுங்க. ஒரு ‘அலி’ய வீட்டுக்குள வச்சிருக்கேயேன்னு. நாக்கப் பிடுங்கிட்டு சாகலாம்னு இருக்கு. உள்ளே போ. பெரிய ஆம்பள மாதிரி ஓடற. திமிருபிடிச்ச நாயே…” அப்பா மாரியின் அதட்டலுக்குப் பயந்து உள்ளே ஓடினாள்(ன்) சத்யா.

“நான் என்னம்மா தப்பு செய்தேன். அப்பா அப்பவும் கேவலமாப் பேசறார்” பெத்த தாய் ஆராயியிடம் சத்யா புலம்பியது, மாரியின் காதில் விழுந்தது.

“என்னங்கடி ரெண்டு பேரும் முணுமுணுக்கறீங்க..?” மீண்டும் மாரியின் அதட்டல் பலமாகக் கேட்டது.

“பாழாப்போன சாரயத்தக் குடிச்சிட்டுவந்து, நம்மகிட்ட வீரத்தைக் காட்டறதே இவனுக்குப் பொழப்பாப் போச்சு. இவனெல்லாம் ஒரு ஆம்பளைன்னு சொல்லித் திரியறான். ‘திருநங்கை’ன்னு ஒரு காரணத்த வச்சி, நல்லாப் படிச்சிட்டிருந்த புள்ளைய ஸ்கூல விட்டு நிறுத்திட்டே. அவ, அங்க போனாலாவது கொஞ்ச நேரம் நிம்மதியா இருப்பா…” புலம்பிக்கொண்டே அவன் குளித்து அவிழ்த்துப்போட்ட துணிகளைத் துவைத்துக் கொடியில் காய வைத்தாள் ஆராயி.

அப்போது நீண்ட நேரமாக, தோட்டத்தில் கட்டிவைத்திருந்த பசு சத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தது.

“ஏய்… செவிட்டு முண்டங்களா…! பசுமாடு கத்தறது காதுல விழல. அதுக்கு தண்ணிகிண்ணி காட்டனீங்களா..? இல்லையா..?” மீண்டும் மாரியின் குரல் கேட்டது.

“இன்னைக்கோ நாளைக்கோ கன்று போடப்போற செனமாடு சத்தம் போடும்னு, இந்த மனுஷனுக்குத் தெரியாதா…? குடிச்சிட்டா ஏதாவது பிரச்சனை செய்யறதே பொழப்பாப் போச்சு…” புலம்பிக்கொண்டே மிச்சமீதி வேலைகளை முடித்துக் கண்ணயர்ந்தாள் ஆராயி.

மறு நாள் விடிந்தது…. வாசல் தெளித்துவிட்டு, தோட்டத்துக்குச் சென்ற ஆராயி, பதற்றமாய் ஓடி வந்து கணவனை எழுப்பினாள்.

“என்னங்க…! பசு கன்னு போட்டுடுத்துங்க. அதுக்குத்தான் ராத்திரி முழுதும் கத்திக்கிட்டே இருந்திருக்கு….” ஆராயி போட்ட சத்தத்தில், எழுந்து தோட்டத்துக்கு ஓடி வந்தாள் சத்யா. ஈன்ற கன்றை அரவணைப்பாய் நாவால் நக்கி, சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது அந்தப் பசு. ஆசையாய் ஓடி வந்த மாரியின் முகம் இறுக்கமானது.

“ச்சே... இதுவும் கெடாவாப் போச்சே. இதவச்சி என்ன செய்யறது. எப்படியும் பொட்ட குட்டியாப் போடும். இனத்த விருத்தி செய்யலாம்னு கனவு கண்டேனே. எனக்கு பொறந்ததும் ‘அலி’யாப் போச்சு. இந்தப் பசுவும் இப்படிப் பண்ணிடுச்சே சனியன்...” கோவமாய்ச் சாட்டையை எடுத்துப் பசுவை அடிக்க ஆரம்பித்தான். ஆராயியும், சத்யாவும் செய்வதறியாது அவனை இழுத்துக் கீழே தள்ளினர்.

“தோ பாருய்யா… இனி ஒரு அடி ‘அது’மேல விழுந்ததுன்னா… உன்ன என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. கன்னுபோட்டு ஒரு நாள்கூட ஆகால. பச்ச உசிரு. அதைப்போய் இப்படி அடிக்கறியே. நீயெல்லாம் ஒரு மனுஷனா..? த்தூதூ… காலத்துக்கும் உன் கூட பெரிய இழவாப்போச்சு….” என்று ஆராயி கதற ஆரம்பித்ததும்… பதில் ஏதும் பேசாமல், துண்டை எடுத்துத் தோளில் போட்டு வேகமாக வெளியே நடந்தான் மாரி.

அன்று மாலை… “ஏய்… ஆராயி உன் புருஷன் குடிச்சிட்டு சாராயக் கடை வாசல்லயே கிடக்கானாமாம். போய் என்னன்னு பாத்து தூக்கி வாடி…” பக்கத்து வீட்டுப் பாட்டி சொன்னது காதில் விழுந்தது. வாழ்க்கையையே வெறுத்துப் போயிருந்தவள் வேண்டா வெறுப்பாக சென்று பார்த்தாள். அதிகக் குடியால், மோசமான நிலையில் இருந்த அவனை மருத்துவமனையில் சேர்த்தாள்.

ஒரு வாரம் போனது…. திடீரென, தெருவே பரபரப்பானது. மருத்துவமனையின் சடல வண்டியில், மாரியின் உடலோடு கீழே இறந்கினாள் ஆராயி. வீட்டைச் சுற்றிலும் ஒரே கூட்டம்; சடலமாய் கிடந்த தந்தையின் உடல் அருகே சென்ற சத்யாவுக்கு அழத் தோனவேயில்லை. உறவினர்கள் ஒன்று கூடிப் பேசினர்.

“மாரிக்குப் பொறந்த ஒத்தையும் ‘அலி’யாப் போச்சு. இத எப்படிப்பா கொள்ளி வைக்க அனுமதிக்க முடியும். இது நம்ம பழக்கத்தில இல்லையேப்பா. பங்காளி உறவினர் பையன் ஒருத்தன தயார் பண்ணுங்க. காரியம் எல்லாம் முடிஞ்சதும் கொள்ளி வச்சவனுக்கு, இருக்கற நிலத்துல கால் காணிய எழுதிடலாம்….” சாவுக்கு வந்திருந்த உறவினர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.

அப்போது சத்யாவுக்கு ஆறுதல் சொல்ல வந்திருந்த, அவளது உடற்கல்வி ஆசிரியை சுமதி, குறுக்கிட்டு... “ஐயா..! இறந்தவரோட ‘வாரிசு’ சத்யா இருக்கும்போது, அவ கொள்ளி வைக்கறதுதானே முறை. ஏன்… ‘அரவாணி’ அது இதுன்னு அசிங்கமாப் பேசறீங்க. பாவம் அவங்க. இந்த நிலையில, இருக்கற கொஞ்ச நிலத்தக் கூறு போட்டுப் பிடுங்கறது நியாயமா…? சத்யாவே அவங்க அப்பாவுக்குக் கொள்ளி வைக்கட்டும்…” என்றார்.

“ஏம்மா…! எங்க ஊரு விஷயத்துல தலையிடறதுக்கு நீங்க யாரு..?. வந்த வேலையப் பார்த்துட்டுப் போறதப் பாரு. நாங்க முடிவு எடுத்தா எடுத்ததுதான்…” ‘நாட்டாமை’ என்ற போர்வையில், ஒரு பெரியவர் சுமதியை அடக்க முயற்சித்தார். அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஆராயி, ஆவேசத்துடன் எழுந்து வந்தாள்.

“அந்த அம்மா சொல்றதுல என்னய்யா தப்பு இருக்கு. அரவாணியாப் பொறந்துட்டா கொள்ளிவைக்கக் கூடாதுன்னு எந்த சட்டத்துல எழுதி இருக்கு. இப்போ நான் மாரியோட மனைவியா சொல்றேன். யார் வந்து தடுத்தாலும், நான் பெத்ததுதான் அவருக்குக் கொள்ளி வைக்கும்…” ஆராயி எடுத்த தீர்க்க முடிவால், ஊர் எதிர்ப்பையும் மீறி தந்தைக்குக் கொள்ளி வைத்தாள் சத்யா. ஊர்க்கட்டுப்பாட்டை மீறிய இருவரையும், ஊரை விட்டு ஒதுக்கி வைத்து பஞ்சாயத்து. வீட்டு மூலையில் சோகமே உருவாயிருந்த, தாயைப் பார்த்ததும் சத்யாவுக்கு அழுகை பீறிட்டது.

“அறுத்துட்ட பொம்பளன்னுகூடப் பார்க்காம ஊரைவிட்டு் ஒதுக்கி வச்சிட்டானுங்க. ரெண்டுங்கெட்டானா இருக்குற உன்ன வச்சிக்கிட்டு நான் என்ன செய்யப்போறேன்னு தெரியல….” மனசுக்குள் பொருமினாள் ஆராயி.

அப்போது… “அம்மா…! “என்ற குரல் கேட்டு வெளியே வந்தாள் சத்யா. அவளது உடற்கல்வி ஆசிரியை சுமதி வீட்டு வாசலில் நின்றிருந்தார். உள்ளே அழைத்துச் சென்று, நாற்காலியை எடுத்துப் போட்டாள் சத்யா.

“அம்மா… நான் சொல்றதக் கேளுங்க. சத்யா படிப்பைத் தொடரட்டும். நல்லாப் படிக்கற புள்ள. அவளைப் படிக்க வச்சி கொண்டுவருவது என்னோட பொறுப்பு. நீங்க என்னோடப் புறப்படுங்க. உங்களுக்கு ஒரு வீடு பாத்து ஏதேனும் வேலையும் வாங்கித்தறேன். கவலைய விடுங்க. உங்களுக்கு நான் இருக்கேன்...” என்றார் சுமதி.

“இப்போ நாங்க இருக்குற நிலையில, என்ன செய்யப்போறேன்னே தெரியல. இதுல நீங்க வேற ஏதேதோ சொல்றீங்க…” சற்று நேரம் யோசித்த ஆராயி முகத்தில், ஒரு தெளிவு பிறந்தது. இருவரும் சுமதியோடு ஊரைவிட்டுப் புறப்பட்டனர்.

ஒரு சிறிய வீடு பார்த்து, அருகில் உள்ள வீடுகளுக்கு பத்துப்பாத்திரம் தேய்க்கும் வேலைக்கு, ஆராயியை ஏற்பாடு செய்தார் சுமதி.

ஒரு வாரம் கடந்தது… சத்யா மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தாள். பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. வகுப்புகள் முடிந்ததும்… சத்யாவை விளையாட்டுத் திடலுக்கு அழைத்து வந்தார் சுமதி.

“சத்யா… நான் சொல்றத கவனமாக் கேளு; உன் அகன்ற தோளுக்கும், திடமான கால்களுக்கும் நீ பளு தூக்கும் போட்டியில் கவனம் செலுத்து. தினமும் பயிற்சி செய். நிச்சயம் அதுல நல்லா வருவே. அரவாணின்னு அலட்சியப் படுத்தும் இந்த சமூகத்துல… நீ எதையாவது சாதிக்கணும். உன் திறமைய நம்பு. வெற்றி நிச்சயம்...” சுமதியின் வார்த்தைகள், அவளுக்கு முழுநம்பிக்கை தந்தது.

மறுநாள் முதல்….தினமும் காலையும் மாலையும் திடலில் கடுமையான பயிற்சி மேற்கொண்டு வந்தாள்.

‘ஒரு திருநங்கைக்கு இதெல்லாம் தேவையா. இந்த சுமதிக்கு ஏன் இந்த வீண்வேல…?’ பள்ளியில் பலரும் பலவிதமாய்ப் பேசினர்.

ஆனால், அனைவரும் வியக்கும்படி, மாநில அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் முதல் பரிசைப் பெற்று வந்தாள் சத்யா. பின்னர், தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகி, அதிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்திய சத்யாவின் வீட்டை, அனைத்து ஊடக நிரூபர்களும், முற்றுகையிட்டனர்.

மறுநாள்… அனைத்து செய்தித்தாள்களும் தலைப்புச் செய்தியாய்… “தங்க மங்கை திருநங்கை” என்ற தலைப்பில் சத்யாவின் சாதனை வெளியாகியிருந்தது.

ஆண்டுகள் கடந்தன… சத்யாவின் சாதனைகளும் தொடர்ந்தன. மேல்நிலைக் கல்வியில் அறிவியல் பாடம் தேர்வு செய்து முதல் மதிப்பெண் பெற்ற சத்யாவுக்கு, அவள் விரும்பிய, ‘வானூர்தி’ பட்டப் படிப்பில் இடம் கிடைத்து.

அரசின் ஊக்கத்தொகையும்… சுமதியின் ஆலோசனையும் கல்லூரிப் படிப்புக்கு உதவியாக இருந்தது. அப்போது, நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட சத்யா, மீண்டும் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றாள். அதன் பின்னர் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும், தொடர்ந்து நான்குமுறை தங்கம் வென்று, புதிய சாதனையைப் படைத்தாள்.

வெற்றியுடன், ஊர் திரும்பிய சத்யாவை… ஊடகங்கள் நேர் கானல் செய்தன. “தொடர்ந்து நான்கு முறை தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளீர்களே… இது எப்படிச் சாத்தியம்…?” என்ற அர்த்தமுள்ள கேள்விக்கு அன்று விடை கிடைத்தது.

“திருநங்கையாப் பொறந்துட்டேன்னு… அசிங்கமாப் பேசிப்பேசி, வீட்டுக்குள்ளயே பொத்திப்பொத்தி வச்சிருந்தார், என் அப்பா மாரி. ஆனால், எனது உடற்கல்வி ஆசிரியை சுமதிதான், என் திறமையைக் கண்டறிந்து, எனக்கு பளு தூக்குதலில் பயிற்சியளித்து் ஊக்குவித்து வந்தார். நான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறை தங்கம் வென்றபோது, அவரிடம் ஆசி வாங்கச் சென்றேன். பதக்கத்தையும் பரிசுத் தொகையையும் அவரிடம் கொடுத்து, என்னை ‘அரவாணி’ன்னு ஒதுக்கித் தள்ளிய, என் கிராமத்துக்கு மின்சார வசதி ஏற்பாடு செய்ய வேண்டினேன். அதற்கு அவர், அதுக்கு இத்தொகை போதாது. நீ இன்னமும் நிறைய போட்டிகளில் வென்று சாதித்தால் பதக்கங்களை ஏலம் விட்டும், பரிசுத்தொகையைக் கொண்டும், உன் கனவை நனவாக்கலாம் என்று அறுவுறுத்தினார். அதன் விளைவே இந்த ஒலிம்பிக் சாதனைகள்…..” என்றாள் சத்யா.

அழகான… அர்த்தமுள்ள சத்யாவின் பேட்டி காண்போரைக் கண்கலங்கச் செய்தது. சத்யாவின் சாதனையைப் பாராட்டி, மத்திய அரசு அவளுக்கு விமான ஓட்டி வேலையை வழங்கியது.

இதுநாள்வரை… இருட்டில் கிடந்த கருப்பம்பட்டி கிராமம்… அன்று, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, விழாக்கோலம் பூண்டிருந்தது. மேளதாளம் முழங்க ஆசிரியை சுமதியுடன் வந்த சத்யாவையும்…ஆராயியையும் வரவேற்ற மக்கள், மூவரையும் ஊருக்குள் அழைத்து வந்தனர்.

மறுநாள் மார்ச் 31… சர்வதேச திருநங்கைகள் தினம்…

சிறுவயதில், வின்னில் பறந்த விமானத்தைப் பார்த்துக் கையசைக்க ஆசைப்பட்ட ‘திருநங்கை’ சத்யா, அன்று… ஒரு விமான ஓட்டியாய் மேலே பறந்து கொண்டிருந்தாள். கருப்பம்பட்டி கிராமச் சிறுவர்கள் வானத்தை அன்னாந்து பார்த்து ஆரவாரித்துக் கையசைத்து மகிழ்ந்தனர். -----------------------------------------------------------------------

பூபதி பெரியசாமி, 23, கோபாலன் கடைவீதி, அய்யங்குட்டிப் பாளையம்,

புதுச்சேரி-605 009. (9789322069)

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...