ஜெபிக்கவும், வேதம் வாசிக்கவும் துடிக்கும் உங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
நூற்றைம்பது அதிகாரங்கள் கொண்ட சங்கீத புத்தகத்தில் முழு வேதாகமத்தின் சாராம்சமும் அடங்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.
சங்கீத புத்தகத்தை படிக்கும்போது, துதி, ஜெபம், சரித்திரம், தீர்க்கதரிசனம், விஞ்ஞானம், ஆலோசனை, புலம்பல், சந்தோஷம், ஆசீர்வாதம் போன்ற தலைப்புகளில் அநேக அதிகாரங்களும், வசனங்களும் இருப்பதை கவனிக்கலாம்.
மனிதனுடைய ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கேற்ப ஆலோசனைகளும் உதாரண சம்பவங்களும் சங்கீதங்களில் இருப்பது நமக்கு மிகவும் பிரயோஜனமாய் இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக தேவனுடைய சித்தத்தை குறித்தும், நாம் நடக்க வேண்டிய வழிகளை குறித்தும் அறுமையான பாடல் நயத்துடன் பல வசனங்களை நாம் படிக்கலாம்.
இந்த வசனங்களில் வரும் பழைய ஏற்பாட்டு சட்ட திட்டங்கள் ஒவ்வொன்றையும் புதிய ஏற்பாட்டு சட்ட திட்டங்களோடு ஒப்பிட்டு தியானித்தால் இரண்டிற்க்கும் உள்ள வித்தியாசங்களை நன்கு அறியலாம். உதாரணத்திற்கு பழைய ஏற்பாட்டில் சத்துருக்களை தண்டியும் என்று ஜெபித்திருப்பார்கள். ஆனால் புதிய ஏற்பாட்டிலோ நம்முடைய சத்துருக்களை சிநேகிக்கவும் அவர்களுக்காக ஜெபிக்கவும் வேண்டும் (மத் 5:44). இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
சங்கீத ஆசிரியர்கள் தங்களுடைய ஜெபங்களையும் கூட பாடல்களாக எழுதியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வசனங்களின் தொகுப்பே இந்த புத்தகம். இந்த புத்தகத்திலுள்ள வசனங்களை ஜெபத்துடன் தியானித்தால் உங்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும். முடிந்த அளவு வாயை திறந்து சத்தமாக வாசித்து பழகுங்கள்.
கர்த்தர் தாமே உங்களுடைய ஜெப தியானத்தை ஆசீர்வதித்து தம்முடைய திரு உள்ளத்தை உங்களுக்கு வெளிப்படுத்துவாராக! ஆமேன்.