அருபியாம் ஆண்டவரின் பரிசுத்த நாமத்திலும், மனிதனின் மனதை அறிகிற கிறிஸ்துவின் நாமத்தினாலே கிறிஸ்தவ அன்பின் வாழ்த்துக்கள். கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கத்தின் சார்பாக "உற்று நோக்கு" என்ற கருத்தின் கீழ் அழிவின் விளிம்பில் உள்ள பழைய கிறிஸ்தவ புத்தகங்களை கிறிஸ்தவ மக்கள் வாழ்வியலிலும், ஆன்மீகத்திலும் வளர்ந்து பெருக புத்தாக்கம் செய்து வெளிவிடுகிறோம். அந்த வரிசையில் இந்த புத்தகம் ஐந்தாவதது. அருள் திரு சத்திய சாமுவேல் எனும் ஐயர் 1950ல் தனது சீரிய சிந்தையாலும், ஊழிய அனுபவங்களாலும் வரும் இளம் குருக்களுக்கு தனது அனுபவ கல்வியை ஏட்டில் செதுக்கி பல நூற்பாக்களை வெளியிட்டார். அதில் இந்த உளவியல் புத்தகமும் ஒன்று. இந்த புத்தகத்தின் பெயர் மனோதத்துவமும், சபை ஊழியமும் என்பதே. புத்தகத்தில் உள்ள ஐயரின் அறிவுரைப்படியே இக்காலத்தில் இதற்கு வழங்கப்படும் பெயரான உளவியல் என்ற புதுபெயருடன், சிந்தனையை தூண்டி விட வரும் இந்த நூல் இளம் குருவானவர்களுக்கு மட்டுமல்லாது, சபையில் ஊழியம் செய்யும் அனைவர்க்கும் படிக்க ஏற்றது. நாம் நம் மனதில் அறிவியலும், இறையியலும் ஒன்று பட முடியாது என்ற நினைக்கும் இடங்களில் இரண்டும் ஒன்றே என்று இரு புறமும் நின்று ஆசிரியர் விளக்குகிறார். பெண்கள் பற்றிய கருத்துக்கள் தற்போதைய காலகட்டதில் முற்போக்காக காணப்பட்டாலும் அவர் இருந்த காலத்தில் இந்த முற்போக்கு சிந்தனை சபையினுள் இருக்க வேண்டும் என்று நினைத்தது அக்காலத்தில் ஐயரின் மனதில் ஓடிய மனவோட்டத்தையும், சபை அனுபவத்தையும் பிரதிபலிக்கிறது. சபை மக்கள், சபை ஊழியத்தில் இருப்போர் என்று அனைவர்க்கும் இந்த நூல் மிகுந்த பலனை கொடுக்கும். சத்திய சாமுவேல் ஐயர் எழுதிய உளவியலும், சபை ஊழியமும் என்ற இப்புத்தகத்தை அறிந்து, புரிந்து தேவ சபையை கட்டுவோமாக.