சுற்றியிருக்கும் எல்லாமுமே கதையால் எழுதப்படக் கூடியதுதான். கூலிவேலை செய்பவனின் தீர்க்கப்படாத கண்ணீர், எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் விதவைப்பெண்ணின் மறுமணம், திமிர் பிடித்த மனைவியால் பிரிக்கப்பட்டக் குழந்தை, வாங்கிய கடனால் தற்கொலை செய்த ஏழை, கால் வயிற்று பருக்கைக்காக ஏமாற்றும் பிச்சைக்காரன், நாள்தோறும் தவறாமல் எதற்கோ காத்திருப்பதுபோல் தினமும் காக்காச்சோறு வைக்கும் பாட்டி, மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் தாத்தாவின் சவரப்பெட்டி என தொடரும் ஒவ்வொரு வாழ்க்கைக்குள்ளும் மறைந்துக்கிடக்கிறது ஏராளமான கண்ணீரும், மகிழ்ச்சியும், அவமானமும், ஏமாற்றமும். ஆண்டுகள் கடந்து எழுதிய கதைகள் இவை. பார்த்ததை, ரசித்ததை, அழுததை, கற்பனையில் விழுந்ததை புத்தக கோப்பையில் துளி சிந்தாமல் பத்திரப் படுத்தி இருக்கின்றேன்.