தென் இந்திய திருச்சபையின் வரலாறு மிகவும் கவர்ச்சிகரமான ஒன்று. ஒன்றோடொன்று சேரக்கூடாத சபைகள் ஒன்று பட்டதை இந்த ஒருமைப்பாட்டில் காண்கிறோம் மேலும், எவர்கள் இத்தகைய ஒருமைப்பாட்டுக்கு எதிராயிருந்தனரோ அவர்களில் பெரும்பான்மையோர் ஒருமைப்பாட்டுக்காகப் போராட முற்பட்டனரென்பதை அறியும் பொழுது இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே ஆவியானவரைக் கொண்டு இவ்வாறு நடப்பித்துள்ளாரென்பதைத் தெளிவுறக் காண்கிறோம். பேராயர் ஆளுகை முறையுள்ள சபைகளும் பேராயர் ஆளுகை முறை இல்லாத சபைகளும் ஒருமைப்பட்ட அற்புத செயலைத்தான் தென் இந்திய திருச்சபை ஒருமைப்பாடு நிரூபித்துக் காட்டுகிறது. தென் இந்திய திருச்சபையின் முதல் இருபத்தைந்து ஆண்டு காலம் ஒருமைப்பாட்டின் மூலம் எத்தகைய அரிய செயல்கள் சாதிக்க முடியுமென்பதை எடுத்துக்காட்டி விட்டது. இத்தகைய சிறப்பு வரலாற்றை எழுதுவதற்கு என்னை அழைத்து வழி நடத்திய ஆண்டவரை நான் துதிக்கிறேன்.