இந்நூலானது, "முழுமஹாபாரதம்" என்ற இந்தத் தொகுப்பின் முதல் தொகுதி / முதல் நூலாகும். இத்தொகுப்பில் மஹாபாரதத்தின் முதல் பர்வமான ஆதிபர்வத்தில் 1 முதல் 223ம் பகுதிகள் வரை இடம்பெறுகின்றன. ஆதிபர்வம் 236 பகுதிகளைக்கொண்டதாகும். இதில் எஞ்சிய 13 பகுதிகளும் அடுத்த தொகுதியில் இடம்பெறும்.
மஹாபாரதம் ஐந்தாம் வேதம் என்று சொல்லப்படுகிறது. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் செல்யூகஸ் நிகேடரால், சந்திரகுப்த மௌரியனின் அவைக்கு அனுப்பப்பட்ட கிரேக்க பயணி மெகஸ்தனீஸ் மகாபாரதப் பாத்திரமான கிருஷ்ணனைக் குறித்துச் சொல்கிறார். தமிழில் சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து 14:5-7, சிறுபாணாற்றுப்படை 238-241, கலித்தொகை 25, 52, 101, 104, 108 ஆகியவற்றில் மஹாபாரதத்தைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. நளவெண்பா, அல்லி அரசாணி மாலை போன்றவை மஹாபாரதத்தின் துணைக்கதைகளே. வடக்கே கிடைக்கும் சாகுந்தலம் மற்றும் யயாதி போன்றவையும் அவ்வாறே. மஹாபாரதத்தின் மிகப் பழமையான உரை கி.மு.400 காலக்கட்டத்தைச் சார்ந்தது. குப்தர்கள் காலத்தில்தான் அந்தப் பதிப்பு நிறைவை எட்டியிருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. ஒன்றுசேர்ந்த இலியட் மற்றும் ஒடிசியின் அளவைவிட மஹாபாரதம் பத்து மடங்கு பெரியது. அளவிலும், பொருளிலும் உலகத்தில் பெரிய இலக்கிய படைப்பு மகாபாரதமே.
மூலத்திற்கு மிக நெருக்கமான ஆங்கில மொழிபெயர்ப்பென அறிஞர்கள் அறுதியிட்டுக் கூறும் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் படைப்பை மையமாக வைத்துக் கொண்டு, ஆங்கிலத்திலேயே அமைந்த மன்மதநாததத்தர் பதிப்பு, செம்பதிப்பான விவேக்தேவ்ராய் பதிப்பு, தமிழில் கும்பகோணம் பதிப்பு ஆகியவற்றை ஒப்புநோக்கி, பல்வேறு இடங்களில் பல்வேறு அடிக்குறிப்புகளைக் கொடுத்துச் செய்யப்பட்டதே இந்த "முழுமஹாபாரதம்" ஆகும்.