JUNE 10th - JULY 10th
குட்டிச்சாத்தான்- சிறுகதை- கவிஜி
**************************************************
அவசரம் தான் இங்கே எல்லாவற்றையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
திரன் வழக்கம் போல வாழ்க்கையின் எல்லைக்கோட்டில் அவனுக்கான வேகத்தில் காரோட்டி சென்று விட்டான்.
மெய்மறந்த புதன்கிழமை. பொண்ணு கிடைச்சா கூட புதன் கிடைக்காதாம். கண்களை காலண்டரில் இருந்து எடுத்தபோது... கதவை நெஞ்சோடு ஒட்டிக் கொண்டே... உள்ளே நகரும் விசையை பஞ்சு மாதிரி தாங்கி பிடித்த ஆபீசின் 'பிரியம்' கண்களை சுழற்றி "சார் கூப்பிடறார்" என்றாள். இதுவரை மூணு வாட்டி கூப்டுடாராம்.. என்றவள் விசையை விட்டு விட்டது... இசை நகர்ந்தது போல.
அப்போது தான் திக்கென பேண்ட் பாக்கெட்டில் தொட்டு தடவி.. அந்த தடவலிலேயே எதுவோ சரி இல்லை என்று புரிந்தான்.
இன்னும் வேகம் கூட... இன்னும் சுருங்கிய நெற்றியில் யாரோதான் தானோ என்பது போல நெற்றி வியர்வையை துடைத்து கொண்டிருக்க... அதற்குள் ஓர் அனிச்சை செயலை போல இடது கை... பாக்கெட்டில் இருந்து அலைபேசியை வெளியே எடுத்து விட்டிருந்தது.
"என்ன கருமம் இது.. ?" தானாகவே முனங்கினான்.
தொண்டைக்குள் உருவம் இல்லாத உருளை கடகடவென உருண்டு அடிவயிற்றில் சுளீர் என்ற வலியைக் கொட்டியது.
இடது கை நடுங்குவதை வலது கை செய்வதறியாமல் பார்த்தது.
முதலில் மேனேஜர் அறைக்கு செல்வதா....இல்லை வீட்டுக்கு ஓடுவதா.... இதுவரை எத்தனை அழைப்புகள்.. குறுஞ்செய்திகள்...வாட்சப்... வகையறாக்கள்... லாக் பண்ணி தான் இருக்கிறது என்றாலும்... ஓர் ஆரம்பம் அற்ற அரக்க பரக்க... அவன் அறையில் சுழல ஆரம்பித்தது. சூடா கையில் இருந்த அலைபேசி சினுங்க.. பார்த்துக் கொண்டே ஆன் பண்ணினான். வீட்டு எண்ணில் இருந்து அழைப்பு.
"போனை மாத்தி எடுத்துக்கிட்டு போயிட்டீங்க..." என்றாள் மனைவி.
"ஓ... சரி.. நான் வர்றேன்..... எந்த கா....."
அதற்குள் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்து விட்ட மேனேஜர்... ஒரு முறை முறைத்து விட்டு.. "வா,,,, பேங்க்ல ஒரு வேலை" என்று பரபரவென நடக்க... வேறு வழி இல்லாமல் பின்னால் குறுகுறுவென நடக்க ஆரம்பித்தான் திரன். அலைபேசி எப்போது கட் ஆனது என்று இப்போது யோசிக்க முடியவில்லை.
காரில் ஓரத்தில் இருந்தவன்... கவனத்தின் அருகே இருந்தான். மேனேஜர் வேற இடையிடையே என்னென்னவோ பேசுகிறான். கொஞ்சம் அமைதியா வாடா என்பது போன்ற பார்வை. போனை கையில் பிடித்தபடியே எடை பார்த்தான்.
தொடுதிரைக்கு வெளிச்சம் பாய்ச்சினான். அந்த போனும் லாக் ஆகி தான் இருந்தது.
தன் மொபைல் தன் கையில் இல்லை என்பதே எத்தனை பதற்றமாக இருக்கிறது. அப்படித்தானே அவளுக்கும் இருக்கும். சரி என்ன பதற்றம்.. என்ன ரகசியம் இருக்கிறது. ஒருவரின் மொபைலை ஒருவர் திறக்க கூடாது என்ற நாகரீகம் கூடவா இல்லாமல் போகும். ஒருவேளை புள்ளி அளவு சந்தேகம்... அல்லது கியூரியாஸிட்டி அல்லது எதுவோ ஒரு இழவு... திறந்து பார்க்க தோணுச்சுனா... அது எப்படி திறந்து பார்க்க முடியும்.. லாக் நம்பர் தெரியாது தான. ஒருவேளை தெரிஞ்சிருந்தா... சொற்களற்ற மௌனத்தில் முன்னும் பின்னும் ஊர்ந்து கொண்டிருக்கும் நம நமப்பை எதைக்கொண்டும் அடைக்க முடியவில்லை.
தேநீர் குடித்தது கூட நினைவில் இல்லை. உண்மையில் மறந்தது கூட நினைப்பில் இல்லை.
கையில் இருந்த மனைவியின் மொபைல்... காதாட்டி வெவ்வே காட்டியது போல தெரிந்தது. எடுத்து உற்று பார்த்தான். கண்ணாடி வழியே கோடு கோடாய் குவிந்திருந்த இண்டிகேசனில்... நிறைய குறுஞ்செய்திகள்... கால்கள் வந்ததற்கான தடயங்கள் மூக்கு நீட்டி கிடந்தன. எடை பார்த்துக் கொண்டே சுற்றி சுற்றி பார்த்தான். இரவில் மூஞ்சி கிட்ட வைத்துக் கொண்டு அவள் முணுக் முணுக் என்று சிரிக்கும் காட்சிகள்... எல்லாம் ஒரு கணம் வந்து வந்து சொரண்டின.
"சே ச்சே... அதெல்லாம் தப்பு...!" என்று தனக்குத் தானே தலை ஆட்டி கொண்டான்.
ஆனாலும்.. அன்றொரு நாள் என் போனை எதுக்கு எடுக்கிற என்று காரணமே இல்லாம சண்டைக்கு வந்தாளே... அது எதுக்கு. ஆர்வத்தின் சலம்பல் அவனை அங்கே அரூப தன்மையோடு நடக்க வைத்துக் கொண்டிருந்தது. தான் அமர்ந்தே இருக்க... தனக்குள் இருக்கும் தான்... நடந்து நடந்து நடந்து நடந்து குணா கமலை போல அந்த அறையை சுற்றுவது போன்ற பிரமை.
இடது பக்கம் மேலேயிருந்து கீழறக்கி.. அப்புறம் முன்னோக்கி L ஷேப்பில் கோடிடுப்பாள் தானே... இழுத்து பார்த்தான். ம்ஹும்.. அது திறக்கவில்லை. யோசித்துக் கொண்டிருக்கும் போதே R என்ற பெயரில் அழைப்பு. என்ன இது. யாரா இருக்கும். பார்த்துக் கொண்டே இருந்தான். சுற்றில் மூச்சை பிடித்துக் கொண்டு கதறிய காலின் கடைசி நொடியை பற்றி... அட்டன் செய்து "ஹெலோ..." என்றான் அடி தொண்டையில்.
எதிர் முனையில் கசகசவென எதுவோ பேச்சு. பின் கட்டாகி விட்டது.
என்ன இது என்பது போல அலைபேசியை தூக்கி... பார்த்துக் கொண்டே யோசித்தான். என்னவோ தப்பாக இருப்பதாக மீண்டும் மீண்டும் சிந்தனையை திரித்தான். அதென்ன பேர் R...? பாத்ரூமுக்குள் அலைபேசியை கொண்டு போகும் போதே... ஏதோ வில்லங்கம் இருக்குன்னு தெரியும். சந்தேகம்னு சொல்ல முடியாது. ஆனாலும்... இந்த காலத்துல யாரையும் நம்ப முடியாதுதான... யோசித்தவனுக்கு தன் மொபைலின் நினைவு... குட்டி சவப்பெட்டியை சுமக்க வைத்தது. உள்ளே போக முடியாவிட்டாலும்.. வாட்சப் செய்தி மொபைலின் நெற்றி மீது புளிச் புளிச் என்று ஒளி உமிழ்ந்து ஒற்றை கண் அடிக்குமே.....பார்த்தால்.... என்னாவது. திருடனுக்கு ரெண்டு தேள் கொட்டினாற் போன்று இருந்தது. உருவம் இல்லாத குட்டி சாத்தானை சுமந்து கொண்டிருப்பது போலவே ஒரு பாரம்.
தொண்டைக்குள் கொரோனா கவ்வல். முழுங்கவும் முடியாத துப்பவும் முடியாத ஒவ்வாமை. அப்படி ஒரு சிக்கல் நிறைந்த தினமாக இன்று.
எத்தனை நாட்களாக இது நடக்கிறதோ... அல்லது... இப்போது தான் ஆரம்பித்திருக்கிறதோ.. தான் இப்போதெல்லாம் வேலை வேலை என்று கிடப்பது கூட காரணமாக இருக்கலாம். சரி... எதிர் முனையை கேள்வி கேட்கும் முன் உன் முனையை மழுங்காமல் வைத்துக் கொள்ளல் தானே முறை. ஒருவேளை குறுஞ்செய்திகளில் குத்திட்டு நீ மாட்டிக் கொண்டால் என்னாவது. பகல் முழுக்க எழவெடுத்த மேனேஜர் பேங்க் பேங்க்காய் சுற்ற விட்டதில்... எல்லாமே கை மீறி கொண்டிருக்கிறது. எத்தனை கால் வந்ததோ. போன் பண்ணி எடுக்காதே என்றால் குறிப்பு கொடுத்தது போல ஆகி விடும். அவள் போன் பண்ணி எந்த காலையும் எடுக்க வேண்டாம் என்று சொல்லவே இல்லையே... அப்படி என்றால்... அதுதான் சகஜமாக இல்லை.
மொபைல் போன் சுற்றிலும் கொரோனா பூச்சிகள் சுழலுவது போன்று தோன்றியது. குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது இது தானா.
வீட்டுக்குள் நுழையும் போதே... "என் மொபைல தூக்கிட்டு போயிட்டீங்க..." என்று அழாத குறையாத அம்மு ஓடி வந்து பிடுங்கி போனாள்.
திக்கென்று பார்வையை சுழற்றிய திரன்.. அப்போ.... என்று வேகமாய் மனைவியை பார்த்தான். அவள் சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டே டிவி சீரியலில் மூழ்கி அமர்ந்திருந்தாள். அப்படி என்றால் பகல் முழுக்க மகளின் போனை வைத்துக் கொண்டு மனைவியின் போன் என்று புலம்பிக் கொண்டிருந்திருக்கிறான். நினைத்தாலே சீ என்றிருந்தது. தன்னையே நொந்து கொண்டான். ஆனாலும்... நிகழ்ந்ததின் வழியே நிகழாதது குறித்து நினைத்ததெல்லாம் நிகழக்கூடிய சாத்தியத்தில் இருக்கிறது தானே.
சட்டென பாதத்தில் பூனை விழித்துக் கொள்ள... பதுங்கல்... காரணமே இன்றி அங்கே நிகழ்ந்தது.
அவன் அறைக்குள் நுழைகையில்... தொட்டால் திறக்கும் அண்டாகா குகை போல அமைதியாய் டேபிளில் அமர்ந்திருந்தது அவன் மொபைல். எது எப்படியோ என்று மொபைலை திறந்து வேக வேகமாய் பரிசோதித்தால்... வந்தது வந்தபடி இருந்தது. வந்தது எல்லாமே வகையாய் மாட்டிக் கொள்வது தான். ஐயோ வம்பே வேண்டாம்.... என்று படபடவென அழித்தான். அவன் கண்கள் அனிச்சையாய் ஹாலில் அமர்ந்திருக்கும் மனைவி மீது போய் போய் வந்தது. தேடி பிடித்து சில எண்களை அழித்தான். கசமுசா புகைப்படங்களை அழித்தான். சில பெயர்களை தூக்கினான். கிட்டத்தட்ட அந்த மொபைலை முழுக்க சுத்தம் செய்தான். எதுக்கு வம்பு என்பது போல ஒரு இனம் புரியாத நிம்மதியை தக்க வைத்துக் கொள்ள விரும்பினான். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல ஒரு நிம்மதி பெருமூச்சு. பகல் முழுக்க பட்ட பாட்டை ஒரு குழி தோண்டி புதைத்து விட்டு தப்பித்துக் கொண்டது போன்ற ஆசுவாசம்.
"பண்ணின காரியத்துக்கு இன்னைக்கு முழுக்க ஆன்லைன் கிளாஸ்ல என் மொபைல தான் அம்மு யூஸ் பண்ணினா. அப்பிடி என்ன யோசனை...." சப்பாத்தியோடு திட்டும்.
மொபைல் மாறிய விஷயம் தெரிந்ததுமே.... "அய்யயோ ஒருவேளை நம்ம மொபைலை தூக்கிட்டு போயிருந்தா.... என்னாகி இருக்கும்..!?" என்று யோசித்த மனைவி அப்போதே தன் மொபைலை "சுத்தம்" செய்து விட்டதை ஒரு கணம் நினைத்துக் கொண்டாள். அப்பாடா என்பது போன்ற பாதுகாப்பு வளையத்தில் தன்னை உணர்ந்தாள். மடியில் கனமில்லை... வழியில் பயமில்லை என்று இப்போது சோபா மீது கிடக்கும் தன் மொபைலை கெத்தாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டவளுக்கு தன்னளவில் எதுவோ சமமாகி விட்டது
சப்பாத்தியில் என்ன ருசி என்றே உணரவில்லை. பகல் முழுக்க இருந்த சுமை இறங்கிய மாதிரி ஒரு சுவை...உணர்ந்த திரனுக்கு... வைத்திருந்தது மகள் போன் என்ற நினைப்பில்... அதுவும் இடையே வந்த அந்த R கால் குறித்த யோசனையில்... கூடுதல் பாரம் கிறுகிறுவென ஏறிக் கொண்டு தான் இருந்தது.
யாரா இருக்கும்...?
அதே நேரம் உள்ளே அறையில் 10த் படிக்கும் அம்முவிற்கு R முனையில் இருந்து வந்த வாட்சப் செய்தி... "என்னப்பா.... உங்கப்பா போனை எடுக்கறார்" என்றிருந்தது.
வேக வேகமாய் பதில் அடித்துக் கொண்டிருந்தாள் அம்மு. "டோன்ட் மெசேஜ் டில் ஐ டெல் யு..."
கவிஜி
#698
தற்போதைய தரவரிசை
53,483
புள்ளிகள்
Reader Points 150
Editor Points : 53,333
3 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 5 (3 ரேட்டிங்க்ஸ்)
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
jaynavin16
Pavalamani Pragasam
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்