வாழ்க்கை பயணம்

கற்பனை
4.8 out of 5 (20 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

வாழ்க்கைப் பயணம்

இன்னும் பதினைந்து நாட்கள்தான். எனக்குத் திருமணமாம்!
இரண்டு வருடங்களுக்கு முன்பு, காதலித்தவனை நம்பி வீட்டை விட்டுச் சென்று முடித்த எனது முதல் திருமணம் என் நினைவுக்கு வந்தது.
தந்தை இல்லாமல் தனியாக என்னையும் எனது தங்கையையும் சிரமப்பட்டு வளர்த்த எனது தாயை ஏமாற்றி வீட்டை விட்டுச் சென்று, அவனைத் திருமணம் செய்து, ஒரே மாதத்தில் அவனது சுயரூபம் அறிந்து அரை உயிராகத் திரும்பிய என்னை மீண்டும் அரவணைத்து, இவ்வளவு நாளும் சிறு சொல்கூட சொல்லாமல் எனக்கு ஆறுதலாக இருந்த தாயின் ஆசைக்காக விருப்பம் இல்லாமல் இந்த திருமணத்திற்கு சம்மதம் கூறினேன்.

எனது தங்கையும் காதலித்து திருமணம் செய்து கொண்டவள்தான். அவள் காதலைப் பற்றி எனது அன்னையிடம் சொன்ன போது அந்தப் பையனைப் பற்றி முழுதாக விசாரித்தே அவளுக்கு திருமணம் செய்து வைத்தார். என் தங்கை திருமணத்திற்கு துணிகள் எடுக்கும்போதும், நகைகள் மற்றும் பண்ட பாத்திரங்கள் வாங்கும் போதும் அவர் முகத்தில் இருந்த சந்தோசத்தைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப் பட்டேன். என்னுடைய அம்மாவுக்கு நான் கொடுக்க வேண்டிய நியாயமான சந்தோசத்தையும் நிம்மதியையும் கொடுக்கவில்லையென மறுகினேன்.
என் தங்கை திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் கருவுற்றாள். அவளின் மாமியார் மற்றும் மாமனாரால் அவளைக் கவனிக்க முடியவில்லையென, எங்களது வீட்டிற்கே அழைத்து வந்து பிள்ளைக்கு ஆறு மாதம் ஆகும்வரை அவளை சீராட்டி அனுப்பி வைத்தார்.
காலையில் வேலைக்குச் செல்லும் முன் காலை மற்று மதிய உணவு செய்து வைத்து, இடையில் குடிக்க பழச்சாறையும் தயாரித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு செல்வார்.

எனக்கு சிறு சிறு உதவிகள் மட்டுமே செய்யத் தெரிந்தது. பிள்ளைப்பேறு பார்ப்பதென்பது எளிதா என்ன?
அதுபோக வீடு சுத்தம் செய்தல் மற்றும் பாத்திரங்களைத் துலக்கும் வேலையை மட்டுமே செய்வேன்.
என் அம்மாவோவேலை முடிந்தும் வந்து பம்பரமாக இரவு உணவையும் தயார் செய்வார். குழந்தை பிறந்ததும் குழந்தையின் சிரிப்பில் இன்னும் பத்து வயது குறைந்தார் போன்று உற்சாகமாக வேலை செய்தார்.
அவர் சிறு பிள்ளைப் போல் உற்சாகமாக இயங்குவதைப் பார்த்த என்னுள் பிரமிப்பு அதிகமாகியது. ஒரு தாய் தன் மகளுக்காகவும் மகளின் நலனுக்காகவும் இந்த அளவுக்கு உடலை வருத்துவாரா? அதுவும் சிறிதும் களைப்பின்றி... அத்தகைய தாயின் மன சந்தோஷத்திற்காகவே இரண்டாம் திருமணத்திற்கு சம்மதித்தேன்.
எனக்கு தாலி கட்டப் போகும் மணவாளனுக்கு என்னை பற்றி முழுதாக கூறிய பின்பே திருமணத்திற்கு முழு மனதாக சம்மதித்தேன். தென்காசியில் இருக்கும் திருமலைக் குமரன் கோவிலில் வைத்து திருமணம் உறுதி செய்யப்பட்டது. திருமணம் என்றால் என்ன? அதற்கு பின் என்ன நடக்கும் என்று அறியாதவள் அல்ல நான்.
என்னைப் பற்றி அனைத்தையும் மணமகனிடம் கூறினாலும், திருமண நாள் நெருங்க நெருங்க வயிற்றில் புளியைக் கரைத்தது என்னவோ நிஜம். மணவளானாக வரப்போகிறவன் எப்படியிருப்பானோ என்னவோ? சூடு கண்ட பூனையாயிற்றே நான். முதல் முதலாய் பட்ட அடி மிகுந்த பலகீனத்தை உண்டு பண்ணியிருந்தது என்னுள்.
இடையிடையில் மாப்பிள்ளையிடமிருந்து அழைப்பு வந்தாலும் கேட்பதற்கு மட்டும் பதிலளித்து விட்டு அமைதியாகி விடுவேன். அவரின் முகத்தைப் பார்த்து நேரடியாக பேசினால் மட்டுமே அவரின் மனதில் நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று புரிந்து கொள்ள முடியும் எனத் தோன்றியது. ஒரு கயவனை நம்பி ஏமாந்த பின்பே மனிதர்களை எடைப் போடும் அறிவு வந்தது.

வாழ்க்கை என்னும் புத்தகம் சில பாடங்களை உச்சந்தலையில் ஆணி அடித்தாற் போன்று வலிக்க வலிக்க கற்றுக் கொடுக்கிறது. அதற்கு கூலியாக சந்தோஷத்தையும் நம்மிடமிருந்து பறித்துவிடுகிறது. கணக்கு வழக்கில் எவ்வளவு கறாராக இருக்கிறது, கல்நெஞ்சம் படைத்த வாழ்க்கை.
ம்ம்ம்... இப்போது என் கதைக்கு வருவோம், நாளை எனது திருமணம். இன்று மாப்பிள்ளையின் வீட்டில் இருந்து என்னை அழைத்துச் செல்ல வருவார்கள். இனி இந்த வீடு எனக்கு சொந்தமில்லை. என்னை தனியாக வளர்த்த எனது தாய் இனி தனிமையில் வாடுவார். அவருக்கு உடல்நலம் சரியில்லை என்றாலும் தொலைபேசியில் மட்டுமே என்னவென விசாரிக்க முடியும். தலைவலி என படுத்தாலும் ஒரு டீ கூட என்னால் போட்டுக் குடுக்க முடியாது.
இது பெண் குழந்தைகளை மட்டும் பெற்ற பெற்றவருக்கே சாபம். அதிலும் கணவன் இல்லாமல் தனியாக அரும்பாடுபட்டு பெண் குழந்தைகளை வளர்த்து திருமணம் செய்து கொடுத்த தாய்க்கு மனதில் நிம்மதி இருந்தாலும் வீட்டின் வெறுமையில் மனம் நொறுங்கி விடுவர். எப்பொழுது மகள் தன் வீட்டுக்கு வருவாள் என்று, ஒவ்வொரு நொடியும் ஏங்கிக் கொண்டிருப்பார்.
திருமணம் நடக்கும் ஊர் வெகு தொலைவில் இருப்பதால் எனது நாத்தனார் குடும்பம் மட்டுமே அழைத்து செல்ல வந்தது. மாப்பிள்ளையின் தங்கை செய்யும் முறைகளை முடித்து என்னை அழைத்து சென்றார்.
வீட்டின் வாசற்படியைத் தாண்டும் நேரத்தில் கண்கள் கலங்கியது. பிரிவின் ஆரம்பம் நெஞ்சை அறுத்தது. மீண்டும் இந்த வீட்டிற்குள் என்னால் எனது அன்னைக்கு மட்டும் மகளாக நுழையமுடியாதே என்று நெஞ்சம் விம்மியது.
ஆழ்கிணற்றில் சுரக்கும் வெந்நீராக கண்களில் நீர் சுரந்தது. துடைக்க துடைக்க வெந்நீர் கொதித்து பொங்குவது போல் கண்ணில் கண்ணீர் பொங்கி வழிந்தது.

பெண்களின் வாழ்வு முறையே இப்படி தானே, ஒரு இடத்தில் விதை போட்டு தளிர வைத்து அதை செடியாக வளர்ந்த பின்பு பிடுங்கி வேறு இடத்தில் நட்டு வைத்து விட்டு அதனையும் திருவிழாவாக கொண்டாடுவார்கள். வளர்ந்த இடத்திற்கும் நடப்போகும் இடத்திற்கும் சிறிது சம்மந்தம் இருக்காது. அந்த மண்வளம், அங்கு இருக்கும் சீதோஷ்ணநிலை இவை அனைத்தையும் அந்த செடி ஏற்றுக்கொண்டு அதுக்குத் தகுந்தாற் போல் தனது வளர்ச்சியை மாற்றிக் கொள்வது போல், புகுந்த வீட்டில் இருக்கும் உறவுகளுக்கு ஏற்றார் போல் நானும் எனது பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மூன்று மணி நேர இடைவெளியில் மணமகனின் வீட்டை அடைந்தோம். பூஜை அறையில் விளக்கேற்றி ஒரு இடத்தில் ஜமுக்காளம் விரித்து என்னை அமர வைத்தனர். என்னை ஒரு அதிசய பொருள் போல் அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தது ஒரு வித கூச்சத்தைக் கொடுத்தது.
புது பெண்ணைப் பார்க்க நினைக்கும் அவர்கள் ஆசை தவறு கிடையாது. ஆனால் அந்த பெண்ணின் மனநிலையை ஒருவரும் எண்ணிப் பார்க்க மாட்டார்களோ என்று சடுதியில் தோன்றியது. இந்த சிந்தனையிலும் என்னைப் பார்த்து சிரிப்பவர்களைப் பார்த்து நானும் உதட்டை இழுத்து வைத்து சிரித்தேன்.
இல்லையென்றால் நாலு பேர் நாலு விதமாக பேசுவார்களே இந்தப் பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லையோ என்று...

எனது துணைக்கு எனது அத்தை மட்டும் கூட வந்திருந்தார். அப்பா இறந்ததும் மகனை இழந்து இரண்டு பெண்களை ஒற்றைப் பெண்மனியாக வளர்க்கும் என் தாயைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், இருந்த சொத்து அனைத்தையும் தாத்தா ஊதாரித் தனமாக செலவழித்து விட, பத்துப் பைசாக் கூட தராத அவரின் சொந்தத்தை துறந்து, தனியாகவே வளர்ந்த எங்களுக்கு பக்கத்து வீட்டு அத்தையும் அவர்களது குடும்பத்தையும் தவிர வேறெந்த சொந்தமும் இல்லை.
அதனால் அவர் மட்டுமே என் துணைக்கு வந்திருந்தார். இரவு எட்டு மணியானதும் உண்டுவிட்டு நாங்கள் இருவரும் எங்களுக்கு கொடுக்கப்பட்ட அறையில் உறங்கச் சென்று விட்டோம்.
அதிகாலை இரண்டு மணியளவில் குளிக்க அனுப்பினார்கள். கார்த்திகை மாத குளிரில் வெந்நீர் கொடுத்தது மட்டும் சிறு ஆறுதல்.
மூன்று மணியளவில் அழகு கலை நிபுணர் வந்து என்னை அழகு படுத்துகிறேன் என்று, மண்டையில் ஒரு கொண்டையிட்டு, முகத்தில் பல விதமான சுண்ணாம்புகளை அடித்து, கண்ணில் தார் கொண்டு ரோடு போட்டு, இல்லாத என் இடுப்பைச் சுற்றி ஆயிரம் பின்களை வைத்து, அந்த எட்டு முழ சேலையை சுற்றி, தனது கடமை முடிந்ததென அவர் என்னை விடும்போது, முழுதாக நான்கு மணி நேரம் ஓடியிருந்தது.

பிறகு அருகில் இருக்கும் மண்டபத்திற்கு சென்று ஐயர் கூறிய அனைத்தையும் செய்து முடித்து தாலியைக் கட்ட மட்டும் இலஞ்சி குமாரசுவாமி ஆலயம் சென்றோம். அன்றைக்கென்று பார்த்து ஆறு திருமணம். பொதுவாக கோவில் என்று சென்றாலே உள்ளே காற்று இருக்காது. அதும் சேலை கட்டி பூ வைத்து கூட்டத்தின் நடுவே சென்றால் சொல்லவும் வேண்டுமோ ஏற்படும் கசகசப்பைப் பற்றி...
எங்களின் முறை வரவும் எங்களின் திருமணம் முருகப் பெருமானின் முன்பு சிறப்பாக நடை பெற்றது. அதுவரை உடனிருந்த எனது நாத்தனார் அவரது அண்ணன் கையில் என்னை ஒப்படைத்து விட்டு என்னமும் செய்து கொள்ளுங்கள் என்று ஒதுங்கி விட்டார். திருமணம் முடிந்ததும் மறு திருமணம் ஜோடியாக பார்ப்பது சிறந்தது என்று அடுத்த ஜோடியின் திருமணத்தையும் கண்டு களித்தோம்.
வெளிக் காற்றை நான் சுவாசிக்கும் பொழுது, எனது முகத்தில் நான்கு மணி நேரம் அரும்பாடு பட்டு போட்ட சுண்ணாம்புக் கரைசல் வேர்வையில் கரைந்து ஒழுகிக் கொண்டிருந்தது.
மீண்டும் மண்டபத்திற்கு செல்லலாம் என அனைவரும் கோவிலை விட்டுக் கிளம்பினோம். தாலி கட்டும் வரையில் ஒரு இடைவெளியுடன் இருந்தவர் அதன் பின்பு என்னிடம் கணவரின் உரிமையை எடுத்துக் கொண்டார்.
அதாவது தோளின் மீது கை போடுவது, உரிமையாக கையைப் பற்றுவது, என்னுடன் சகஜமாக பேசுவது என்று இருந்தார். அவரின் செய்கை என்னையும் அந்த தொடுதலை சகஜமாக ஏற்றுக் கொள்ள வைத்தது.
என்னுடன் சகஜமாக பேசிக் கொண்டே வந்தார். நானும் கூச்சம் விட்டு எனது கூட்டை விட்டு சிறிது சிறிதாக வெளியில் வந்தேன். அந்த நேரத்தில் அவரின் தொலைபேசிக்கு என் கழுத்தில் தாலி கட்டிய படம் செய்தியாக புலனத்தில் வந்தது.

அதைக் கண்டு, "என் வாழ்க்கையோட சிரிப்பு இன்னையோட முடிஞ்சு போச்சு. இப்ப இருக்க சிரிப்பு எனக்கு இனி வருமா?" என்று கூறினார்.

பெண்களுக்கே என்று இருக்கும் இயல்பான குணம் ஒன்று, தன்னை உரிமை என்று நினைக்கும் ஒருவரிடம் எந்த தடங்கலும் இன்றி துடுக்குத்தனமாக பேசுவது. நானும் தாலி கட்டிய இந்த ஒரு மணி நேரத்தில் அவரிடம் இலகுவாக பேசிய நினைவில், "இந்த மாதிரி புலம்ப வேண்டியது நானு, நீங்க இல்லை." என்று சொல்லி வக்கணையாக வாங்கி கட்டிக் கொண்டேன்.

********

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...