JUNE 10th - JULY 10th
யாருடா நீங்கல்லாம்?
முனைவர் நடராஜன் ஸ்ரீதர்
(natarajanarticles@gmail.com)
இந்தக் கதைக்குள் நுழையும் முன் என்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். நான் ஒரு பன்னாட்டு வணிக கம்பெனியில் மேலாளராகப் பணி செய்து கொண்டிருக்கும், எதிர்கால எலான் மஸ்க் என என்னையே பெருமை பாடிக்கொள்ளும் ப்ரௌடு 90ஸ் கிட்.
என் கேபினில் ப்ளேசிபோ எபக்ட் புத்தகங்களும், இலுமினாட்டி புத்தகங்களும், சஹாரா டெசர்ட் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வாங்கிய டிகிரி சர்டிபிகேட்டும், ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழக அமைதி விருதும், நைஜீரியா விண்வெளி கழகத்தின் பிஹெச்டி பட்டமும், அறைச்சுவர்களை அலங்கரித்தன. இவையெல்லாம் நானே கஷ்டபட்டு வாங்கியவை.
எமது நிறுவனத்திற்கு வரும் இணைய வழியிலான ஆர்டர்களைத் தரம் பிரித்து எந்தந்த பிரிவில் பொருள்கள் உள்ளதோ அந்தந்த பிரிவிற்குக் கட்டளை அனுப்பி வைப்பதும், பிறகு முறையாக அப்பொருட்கள் பேக் செய்யப்பட்டு எனது அனுமதி பெற்றபின் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பதுமான வேலை என்னுடையது.
அன்று வெள்ளிகிழமை மாலை. எனது பிரிவின் ஆர்டர்களைச் சரி பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஆர்டர் வித்தியாசமாகப் பட்டது. அதன் முகவரி இதுவரை நான் பார்த்திராத வகையில் ஏதோ புது எழுத்துக்களில் எழுதப்பட்டு இருந்தது. சில சமயங்களில் இவ்வாறு போலியான முகவரிகளில் இருந்து ஆர்டர்கள் வரும். அவற்றையெல்லாம் எமது மீத்திறன் கணினியின் நுண்ணறிவு ஆய்வு செய்து போலி ஆர்டர்களைக் கணித்து வடிகட்டி விடும். ஆயினும் இந்த முகவரி எவ்வாறு கணினியின் நுண்ணறிவையும் மீறி வந்தது என்று யோசித்துக்கொண்டே அம்முகவரியை ஆராய்ந்தேன். மேலும் சில குறியீடுகளும் விசித்திர எண்களும் தெரிந்தன.
சரி என்னதான் அதில் கேட்டு இருக்கிறார்கள் என்று அந்த ஆர்டரின் இணைப்பைத் திறத்து பார்த்தபோது எனக்கு மேலும் குழப்பமே எஞ்சியது. முகவரி சங்கேத வரிகளில் அர்த்தமே பிடிபடக் கூடியதாக இல்லாமல் இருந்தது. கோசிபியம் ஹிர்சுட்டம், கோசிபியம் ஹெர்பேசியம், ஒரிசா அரிஸ்டாட்டா பிளாங்கோ, ஒரிசா கம்யூனிசிமா, அசாடிராக்டா இண்டிகா, தலா 100 கிலோ, லித்தியம் கோபால்ட் ஆக்சைடு 250 , ஹெச்டூஓ 300 லிட்டர் போத்தல்கள் என்று எழுதியிருந்தது.
"இதெல்லாம் என்ன ஆர்டர், இந்த ஐட்டம்லாம் நம்ம கம்பெனியில இருக்கா என்ன? போனமுறை இப்படித்தான் ஒரு ஆர்டரை ஃபேக்ன்னு நெனைச்சு கேன்சல் செஞ்சதுக்கு அந்த எம்டி செருப்ப கடிச்ச நாய் மாதிரி கத்தினான். இப்போ என்ன பண்ணலாம்?"
என்று எனக்குள் பேசிக்கொண்டு இவையெல்லாம் பற்றி கூகுளில் தேடினேன்.
"பார்ரா, பருத்திக்கொட்டை, வேப்ப விதை, நெல்லு விதை, தண்ணிக்கேன், பேட்டரி, இதைத்தான் இப்படி எழுதீருக்கானுக..யாரு இந்த கிருக்கனுக?"
சிரித்துக்கொண்டேன். மீண்டும் குழப்பம்
" எங்க கம்பெனிக்காரனுக பல்லு விளக்குற ப்ரஷ்ஷயே பல மடங்கு லாபத்துல தான் விப்பானுக. ஆனா ஆர்டர் போட்ருக்க இந்த ஐட்டமெல்லாம் நேரில் கடையில வாங்குறதைக் காட்டிலும் கிட்டத்தட்ட பத்து பதினைந்து மடங்கு விலை அதிகமாவே இருக்கும். இதையும் மீறி ஒருத்தன் இதை வாங்க விரும்புறான்னா ஏன்? அதுமட்டுமல்லாமல் 250 பேட்டரி ஒருத்தனுக்கு எதுக்கு? இவனுக யாரு ? தீவிரவாதிகளா இருப்பானுகளோ? எங்க கம்பெனியியில வாங்குற 250 பேட்டரி வச்சு ஆராய்ச்சி ஏதும் பண்ணப்போறானுகளா.. அவ்ளோலாம் நாங்க வொர்த் இல்லையே"
குழப்பத்துடன் இது குறித்து யோசித்துக் கொண்டிருந்த போதே இந்த ஆர்டர் ரத்து செய்யப்பட்டு விட்டதாக செய்தி வந்தது.
மீண்டும் சிறிது நேரத்தில் அதே போன்று தானிய விதைகளும், தண்ணீரும், பேட்டரிகளும் கேட்டு அதே ஆர்டர். பெறுநர் பெயர் ஒபுசோ கீம்ரு என்று இருந்தது. முகவரி வானவில் சாலை, அரும்பட்டி என்று இருந்தது. அரும்பட்டி எங்கள் அலுவலகத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தள்ளியிருக்கிற ஒரு கிராமம். இம்முறை இந்த ஆர்டருக்கான மொத்தத்தொகையும் முற்றிலுமாக எங்களுக்கு முன்பணமாக செலுத்தப்பட்டிருந்தது. மீண்டும் என் மனதில் குழப்பம். "
"கம்ப்யூடரில் யாராச்சும் ஹேக்கர்கள் வந்துட்டானுகளா? ஏன் இப்பிடி வித்தியாசமா, குறிப்பிட்ட ஒரே ஆர்டர் வெவ்வேறு பேரில், வெவ்வேறு முகவரிகளில் வருதே, " என்று யோசித்துக்கொண்டே முழுப்பணமும் வந்தபடியால் அந்த ஆர்டரை ஏற்றுக்கொண்டேன். இரவிற்குள் இந்த பொருட்கள் வாடிக்கையாளருக்குக் கொண்டு சேர்ப்பதற்கு வேனில் ஏற்றப்பட்டு விடும்.
மறுநாள் தான் எங்கள் கம்பெனி ஊழியர்கள் இந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சென்று சேர்ப்பர். நான் வேலையை முடித்துக்கொண்டு சோர்வுடன் எனது அறைக்குள் வந்து படுத்து கண்ணயர்ந்து விட்டேன். இரவு ஒரு மணி இருக்கும் எனக்கு உறக்கம் தடைபட்டு விட்டது.
"அய்யோ கம்ப்யூடர ஹேக் பண்ணீருந்தா என் ப்ரௌசிங் ஹிஸ்டரி எல்லாம் பார்த்திருப்பானுகளே"
அந்த ஆர்டரையே நினைத்து மனம் குழம்பியது. அதன் பிறகும் தூக்கமில்லை. "இந்த குக்கிராமத்தில் இவ்வளவு பெரும் பொருட்களின் தேவை என்ன? அதுவும் எங்க மட்டி கம்பெனியில ஏன் இவ்ளோ ஆர்டர் கொடுக்குறானுக. எதுவும் மிகப்பெரும் நாசகாரச் செயலாக இருந்தால் அதை தடுத்து நிறுத்தனும்." என்று என் மனது "துரைசிங்கம், நீங்க இப்போவே சார்ஜ் எடுத்துக்கோங்க" ன்னு சொல்லப்பட்ட சிங்கம் சூர்யாவாக புறப்பட்டது . இதை நானே டெலிவரிக்கு எடுத்துச் சென்றால் என்ன என்று யோசித்து, அதுதான் சரி என்று எனக்குள் தீர்க்கமாக முடிவு எடுத்துக்கொண்டு விடியும் வரை காத்திருந்தேன். அந்த பார்சல் செல்லும் முகவரி எமது அலுவலக எல்லையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் மட்டுமே இருந்ததால் பொருட்கள் ஏற்றிய வாகனம் காலையில்தான் புறப்படும். காலை 7 மணிக்கெல்லாம் எழுந்து வேக வேகமாக அலுவலகத்திற்கு காரில் சென்றேன். கம்பெனியில் என் ஜூனியர் வேகமாக வந்து என்னை வரவேற்றார்.
"சார் என்ன இவ்ளோ சீக்கிரத்துல?"
"யோவ், அந்த அரும்பட்டி பார்சல் கிளம்பிருச்சா யா?"
"இல்ல சார். காலையில 9 மணிக்கு டிரைவர் வருவாரு. எல்லாம் சரி பார்த்துட்டு காலையில ஒன்பதரை மணிக்கு வண்டி புறப்படும் சார்"
"வழக்கமா இதுதான் நேரமாய்யா?"
"ரொம்ப தூரமா இருந்தா 9 மணிக்குள்ள அனுப்பிடுவோம். இது 30 கிலோமீட்டருக்கு பக்கம் தான் இருக்கிறதால அரை மணி நேரம் லேட்டா வண்டி போகுது சார். "
"சரி நீ எல்லாத்தையும் சரி பாத்திட்டியா"
" ஆமா சார் சரி பார்த்துட்டேன். டிரைவர் வந்தவுடனே அனுப்பிடலாம் சார்"
" சரி, வண்டி சாவியை எனட்ட கொடு, நான் இதெல்லாம் டெலிவரி கொடுத்துட்டு வர்றேன்"
" சார் என்ன சார், நீங்க போயி டெலிவரி போறேன்னு சொல்றீங்க."
" ஆமாய்யா நம்ம நிர்வாகம் எப்படி இருக்குன்னு ஒரு சோதனை செய்து பார்க்க எனக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு. அதுக்காக நான் டெலிவரி போறேன்யா"
" சார் நீங்க தனியா தான் போறீங்களா? கூட வேணும்னா டிரைவரை அனுப்புறேன் சார்"
" பரவாயில்ல ஒரே ஒரு டெலிவரி தானே நானே போயிட்டு வந்துடறேன்"
வண்டியை அதன் நிறுத்ததில் இருந்து வெளியே எடுத்து டெலிவரி முகவரியை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டேன்.
நகரத்தின் நெடுஞ்சாலை முடிந்து , வாகனம் கிராமப் பகுதியின் மோசமான செம்மண் சாலைகளைக் கடந்து கொண்டிருந்தது. அரும்பட்டி எல்லை வரை தான் எனது ஜிபிஎஸ் காட்டியது. அதைத் தாண்டி வானவில் சாலை என்பது காட்டப்படவேயில்லை. ஒருவேளை அங்குள்ள சிறிய சாலையாக இருக்கலாம் எண்ணிக் கொண்டு வாகனத்தை கிராமத்திற்குள் செலுத்தினேன். வாகனத்தை சற்று ஓரமாக நிறுத்தி அங்கு சென்று கொண்டிருந்த ஒரு சிறுவனை கைகாட்டி நிறுத்தினேன்.
" தம்பி, இங்க வானவில் ரோடு அப்படின்னு ஏதாவது இருக்கா தம்பி"
அந்தப் பையன் சலிப்போடு திரும்பினான்.
"நீங்க பாட்டுக்கு ஹாரன் அடிச்சுட்டே வந்து காருக்குள்ள நின்னு அட்ரஸ் கேட்டா சொல்லீருவாங்களா. இறங்கி வந்து கேளுங்க பாஸூ"
வண்டியை விட்டு இறங்கும் போது என் ஷூ செம்மண்ணில் பதிவதை உணர்ந்தேன்.
அந்தப் பையன் என்னை மேலும் கீழும் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.
" இந்த ரோட பாருங்க. இங்க ரோடே கிடையாது. இதுல வானவில் ரோடு வேறயா? "
"இல்ல தம்பி. இந்த அட்ரஸ் ல தான் ஒரு பொருள் டெலிவரி செய்ய கேட்டிருக்காங்க"
"சார், உங்க கம்பெனிய யாரோ நல்லா ஏமாத்தி இருக்கானுங்க. இந்த ஊருக்கு தனித்தனியா தெருப்பேருல்லாம் கிடையாது. "
வாரயிறுதியை நிம்மதியாகக் கழிக்காமல் இப்படி இந்த கிராமத்தில் தவறான முகவரிக்கு வந்து அவமானப்பட்டு விட்டதாய் என் மனம் என்னை சபித்தது.
திடீரென்று எனது வாகனத்தில் இருந்த எங்கள் அலுவலக தொலைபேசி ஒலித்தது. "ஹலோ அரும்பட்டி போற டெலிவரி வண்டியா? ஏப்பா இன்னும் ஆர்டர கஸ்டமர் கிட்ட கொடுக்கலையா? கஸ்டமர் போன் பண்ணி கேட்கிறாங்க? நீங்க எங்க இருக்கீங்க?"
நான் என்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், "சார் கஸ்டமர் போன் நம்பர் சரியா குடுங்க சார். அவங்க அட்ரஸ கண்டு பிடிக்க முடியல" என்றேன்.
"கஸ்டமரே கான்பரன்ஸ் கால் லைன்ல இருக்காங்க. அவங்க கூட கனெக்ட் பண்றோம். அவங்க அட்ரஸ சரியா வாங்கிக்கங்க"
சில வினாடிகள் தாமதத்திற்கு பின் மறுமுனை கரகர குரலில் ஆரம்பித்தது.
"பொருட்களை ஏற்றி வரும் வாகனம் எங்கே இருக்கிறது"
அவர்கள் பேசும் தொனியை வித்தியாசமாக இருந்தது நான் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
" சார் நாங்க அரும்பட்டி கிராமத்துக்கு உள்ள வந்துட்டேன். ஆனா வானவில் தெருன்னு ஒன்னு இல்லைன்னு சொல்றாங்க சார். சரியான அட்ரஸ் கொடுத்தீங்கன்னா நான் வந்து பொருட்களை கொடுத்துட்டுப் போயிடுறேன்" என்றேன்
"எங்களது முகவரி நீங்கள் நிற்கும் இடத்தில் இருந்து கிழக்கு திசையில் சரியாக ஒரு கிலோ மீட்டர்கள் பயணித்தால், வலதுபுறம் ஒரு சிறு சாலை இறங்கும். அச்சாலையில் உங்கள் வாகனத்தை சற்று சிரமத்துடன் செலுத்தினால் ஒரு கொட்டகை போன்ற அமைப்பு இருக்கும். அதன் முன்னால் வாருங்கள்."
இந்த தமிழ் நடை மற்றும் இவர்களின் நிதானமான பேச்சும் எனக்குப் புதிதாக இருந்தது. நான் அவர்கள் சொன்ன திசையில் எனது வாகனத்தைச் செலுத்தினேன்.
எனது வாகனம் ஒருவழியாக ஒரு விசாலமான வாகன நிறுத்தம் போன்ற இடத்திற்கு முன் நின்றது. இந்த குக்கிராமத்தில் இந்த ஷெட் எவ்வாறு வந்தது என்று எனக்குப் புரியவில்லை.
வண்டியிலிருந்து இறங்கி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேன். ஏதாவது வித்தியாசமாக சூழல் இருக்கிறதா என்று நோட்டமிட்டேன். ஏதும் அவ்வாறு இல்லை என்று உறுதி செய்து கொண்ட பிறகு, என் பாதுகாப்பிற்கு என் கம்பெனி வழங்கிய எனது கைத்துப்பாக்கியை வாகனத்திலிருந்து எடுத்து என் இடுப்பில் சொருகிக் கொண்டு அந்த ஷெட்டை நோக்கி நடந்தேன்.
அந்த ஷெட் ஒரு ஆள் நுழையும் வண்ணம் ஆரம்பித்து அகலமாக விரிந்து நீண்டிருந்து. அந்த கூடத்தின் உள்ளே விசித்திரமாக பல கருவிகளும் டிஸ்ப்ளேக்களும் காணப்பட்டன. அந்த விசாலமான ஷெட்டுக்குள் இரண்டு உருவங்கள் நின்றிருந்தது. ஒன்று சற்று பெரியதாக கன்னத்தில் குழி வைத்ததாக நின்றிருந்தது. மற்றொன்று அதே உருவத்தில் சற்று குள்ளமாக நின்றிருந்தது. அவர்களுக்கு அருகில் மிகப்பெரியதாய் முட்டை வடிவில் ஏதோ விசித்திர வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இவர்கள் சாதாரணமானவர்கள் போல் தெரியவில்லை. எனது இதயம் பலமாக அடித்துக் கொண்டது. யார் இவர்கள்? எதற்காக வந்துள்ளார்கள்? எமது அலுவலகத்தில் உள்ள பொருட்கள் எதற்கு இவர்களுக்குத் தேவை? இந்த பொருட்களை இவர்களிடம் எவ்வாறு கொடுப்பது? என்பது போன்ற கேள்விகளை மனம் வைக்கத் துவங்கியது.
நான் தயங்கித் தயங்கி அவர்கள் அருகில் சென்று "வணக்கம் சார் டெலிவரிக்கு வந்துருக்கேன்" என்றேன்.
"ம், உங்கள் வாகனத்தை விட்டு விட்டு செல்லுங்கள். கூடிய விரைவில் அவை திரும்ப உங்களுக்கு கிடைக்கும்" என்று பக்கத்திலிருந்த ஸ்பீக்கர் போன்ற கருவி வாயிலாகக் குரல் கேட்டது.
"எனனாது வண்டியை விட்டு போறதா? அதெல்லாம் முடியாது. அந்த பொருளையெல்லாம் நீங்களே இறக்கி எடுத்துக்கோங்க. வண்டியை கொடுத்துடுங்க நான் கிளம்புறேன்"
அங்கு இருந்து எந்த பதிலும் வரவில்லை.
"யோவ் பதில் பேசுங்கய்யா. நீங்கல்லாம் யாரு? எதுக்கு வந்து இருக்கீங்க? ஆமா இந்த பேட்டரி, விதை, தண்ணி எல்லாம் வச்சு என்ன பண்ண போறீங்க? தீவிரவாத கும்பலா, இல்ல திருடனுகளா நீங்க? என் கையில துப்பாக்கி இருக்கு. ரெண்டு பேரையும் சூட் பண்றதுக்குள்ள பதில் சொல்லுங்க."
அந்த பெரிய உருவம் என்னிடம் திரும்பி பேசத் தொடங்கியது. அந்த பேச்சு, ஏதோ பழைய மிக்ஸியில் ஜல்லிக்கற்களைப் போட்டு ஓட விட்டது போல் கரகரவென்று கேட்டது. நான் எதுவுமே புரியாதவனாய் முழிக்க எனக்கு பக்கத்தில் இன்னொரு உருவம் வந்து எனக்கு ஹெட்போன் போன்ற ஒரு கருவியை மாட்டி விட்டுச் சென்றது. இப்போது என்னால் அந்த உருவம் பேசுவதை எனது மொழியிலேயே கேட்க முடிந்தது.
"நாங்கள் இங்கிருந்து 58 ஒளி ஆண்டு தொலைவிலுள்ள ஒமேசா கிரகத்தில் இருந்து வந்திருக்கிறோம் நண்பரே. எங்கள் கிரகத்தில் அறிவார்ந்த உயிரினங்கள் பல்வேறு விஷயங்களைச் செய்து வருகிறோம். உங்கள் கிரகத்தில் உள்ள இவ்விதைகள் மற்றும் நீர் எங்கள் கிரகத்தில் பயிர்கள் உருவாக்கத் தேவை. அதோ உள்ள வாகன நிறுத்தம் போன்ற அமைப்பு எங்களது விண்வெளிக் கப்பல் தொகுப்புகள். எங்களது விண்வெளிக் கப்பல்களில் சில, மேலே கிளம்ப சிறிது அதிக மின்சாரம் தேவை. அதற்குத்தான் இந்த 250 பேட்டரிகள். இப்போது நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பது ஒரு மொழிபெயர்ப்புக் கருவி. இந்தக் கருவியின் மூலம் உங்கள் மொழியில் நீங்கள் பேசுவது எங்களுக்கும், நாங்கள் பேசுவது உங்கள் மொழியில் உங்களுக்கும் கேட்கும்." இலக்கண சுத்தமாய் அழகிய தமிழில் அந்த வார்த்தைகள் ஹெட்போன் வாயிலாகக் கேட்டன.
அப்போது இடைநிறுத்தி சிறிய உருவம் ஆரம்பித்தது.
"நாங்கள் தரையிறங்கிய இந்த முகவரியைத் தான் கொடுக்க நினைத்தோம். எனினும் ஒரு சிறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முகவரி என்ற இடத்தில் எங்கள் கிரகத்தின் உண்மையான முகவரியைக் கொடுத்து விட்டோம். பிறகு தான் தெரிந்தது நாங்கள் தவறு செய்துள்ளோம் என்று. மீண்டும் அந்த பொருட்களை இந்த விலாசத்திற்கு தருவிக்குமாறு மாற்றி அனுப்பினோம்."
"அதெல்லாம் சரி எங்க ஆபீஸ்ல தான் இதெல்லாம் கிடைக்கும்னு உங்களுக்கு யார் சொன்னா? "
" எங்கள் ஆட்களில் சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் உங்கள் அலுவலகத்தில் இத்தகைய பொருட்கள் மொத்தமாக கிடைக்கும் என்று தெரிந்து கொண்டோம். மேலும் உங்கள் அலுவலகத்திலேயே எங்கள் ஆட்கள் இருவர் வேலை பார்த்துக்கொண்டுதான் உள்ளார்கள். அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் எங்களோடு இணைந்து கொள்வார்கள்."
எனக்கு சற்று தலை சுற்றிவிட்டு நிதானத்திற்கு வந்தது. இத்தனை நாள் நான் படித்த வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய விஷயங்கள் எல்லாம் நேரில் நடப்பதைப் பார்த்ததும் என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் இவர்கள் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எனது வேனையும் பொருட்களையும் திருட வந்த திருடர்கள் என்று தான் எனக்குத் தோன்றியது.
அதே நேரத்தில் பின்னணியில் ஒரு வாகனம் வந்து நின்றது. அதில் என்னுடைய அலுவலகத்தைச் சேர்ந்த, எனது ஜூனியர் மற்றும் என் அலுவலக ட்ரைவர்களில் ஒருவன் ஆகியோர் வந்து இறங்கினார்கள். என்னைக் காப்பாற்ற என் கம்பெனி உடனே ஆள் அனுப்பியதை நினைத்து பெருமையாய் இருந்தது.
"இதோ வந்துட்டாங்கள்ள எங்காளுங்க.. வாங்கய்யா வாங்க , இங்க பாத்தீங்களா வித்தியாசமா ஏதோ நடக்குது. வேற கிரகத்திலிருந்து வந்திருக்காங்களாம்யா. வாங்க எல்லாரும் இந்த கிருக்கனுகளோட நின்னு போட்டோ எடுத்துக்கலாம். இருங்கடா மாக்கானுகளா உங்கள வச்சே எங்க கம்பெனிய மார்க்கெடிங் பண்றேன் பாருங்க"
போட்டோ எடுக்க என் போனைத் தேடுகையில் தான் உரைத்தது. போனை வேனிலேயே மறந்து விட்டுவிட்டேன்.
"சாரி சார் , எங்கள மன்னிச்சிடுங்க நாங்களும் இவங்க கூட கிளம்புறோம். நாங்களும் இவங்க கூட்டத்தை சேர்ந்தவங்க தான் சார்." என்றான் என் ஜூனியர்
"அடப்பாவிகளா நீங்களுமாய்யா.. அப்போ நெசமாலுமே நீங்க ஏலியன் தானாய்யா"
"ஆமா சார்" என்றனர் கோரஸாக
"யோவ் இதுல என்னை ஏன்யா இழத்து விட்டீங்க?"
.
"நீங்க தானே சார் உங்க ஆபீஸ் முழுசும் நிறையா டிகிரி சர்டிபிகேட்டு தொங்க விட்ருக்கீங்க. டாக்டர், எகனாமிஸ்ட், சயின்டிஸ்ட், எஞ்சினியர்னு பல பேர தூக்கின்னு போக ப்ளான் வச்சிருந்தோம். ஆனா நீங்க எல்லா படிப்பும் படிச்ச வித்தகாரரு சாரே. அதனால தான் தனித்தனியா எக்பர்ட்டுகள தூக்கறதுக்கு பதிலா மொத்தமா உங்கள தூக்கிட்டோம்" என் கேள்விக்கு பதிலாய் ஜூனியர் பேசினான்.
"யோவ், அதெல்லாம் உண்மையில் நெனச்சுக்கிட்டு இருக்கியா? அதெல்லாம் நான் வாங்குனதுன்னு சொன்னதுக்கு அர்த்தம் அதை நான் காசு குடுத்து வாங்கினதுய்யா. இதே மாதிரி உனக்கு கூட 4 சர்டிபிகேட் நான் வாங்கி தாரேன்ய்யா. சகாரா பாலைவனத்துல ஏதுய்யா மீன்வளத்துறை? நைஜீரியாவுல ராக்கெட் சயின்ஸ் எங்கய்யா சொல்லித்தாராங்க? படுத்தாதீங்கய்யா.. என்னைய விடுங்கய்யா யோவ்"
"சரி இவனை என்ன செய்யலாம்" என்றது பெரிய உருவம்.
"நமது ரகசியமெல்லாம் தெரிஞ்சிகிட்டாப்ள. நம்ம ப்ளானெல்லாம் லீக் பண்ணீருவாப்ள.. இவர நம்ம ஒமேசாவுக்கே கொண்டு போயிடலாம் கரூபு" என்றான் என் ஜூனியர்.
"ஹலோ, ஜி, என்னை கேட்காம முடிவு எடுக்குறீங்க. யோவ் எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலை ஜி, என்னை விட்ருங்க ஜி"
என்னை குண்டுக்கட்டாகத்தூக்கி சிலிண்டர் போன்ற ஒரு இயந்திரத்தில் தள்ளினான் என் ஜூனியர்..
" அடேய் உனக்கு பிரியாணிலாம் வாங்கி தந்திருக்கேன்டா.. ஏன்டா இப்படி"
"அதுக்கு தான் பாஸ் உங்கள கார்கோ ஷிப்ல ஏத்தாம பேசஞ்சர் வெகிக்கிள் ல பத்தரமா ஏத்துறேன். "
"டேய், ஜூனியர்"
எனது சப்தத்தை காதில் வாங்காமல் அதன் கதவுகளை இழுத்துத் தள்ளினான்.
எனது வாகனம் கரகரவென சத்தத்திற்கு பிறகு திடீரென வேகமாக ஆடியது. சிறிது மௌனத்திற்கு பிறகு மீண்டும் வேகமாக ஆடியது. பிறகு எந்த குமுறலும் இல்லாமல் நிசப்தமானது. இப்போது மீண்டும் கதவு திறந்து கொண்டது. வெளியிலிருந்து வரும் வெளிச்சத்தில் எனது ஜூனியர் நின்றுகொண்டிருந்தான். அதற்குள் வேறு கிரகம் வந்துவிட்டதா என்ன? என்ற பரபரப்பும் பதட்டமும் என்னைத் தொற்றிக் கொண்டது.
"டேய் ஜூனியர் எங்கடா என்னய கொண்டு வந்திருக்கீங்க? வேற கிரகத்துக்கு போயிட்டானா? ஆமா நீ எப்படி அதுக்குள்ள இங்க வந்த?"
"கிழிச்ச, யோவ் மேனேஜர் நீ சரியான பிராடுய்யா.. நீ கொடுத்த பேட்டரிகள வச்சு சார்ஜ் செஞ்சா எங்க பேசஞ்சர் வெகிக்கிள் கூட ஆன் ஆகலய்யா.. எத்தனையோ பிளானட்ல போயி யாரு யாரையோ தூக்கீருக்கோம்.. எது எதையோ கடத்தீருக்கோம். உன்ன மாதிரி ஒரு பிராடையும், உன் கம்பெனி மாதிரி ஒரு டுபாக்கூரையும் பிரபஞ்சத்துல எங்கையுமே பார்த்ததில்லய்யா"
"ஆமா இந்த பேட்டரியில ஏதுமே சரியில்லையா. எங்க கம்பெனி சொந்த தயாரிப்பு டா ஜூனியர்"
"யோவ் உனக்கு பாவம் பார்த்து பேசஞ்சர் வெகிக்கிள்ல அனுப்புனா உன் பிராடு தனத்தால எல்லாமே சொதப்பீருச்சு. இந்த கார்கோ ஷிப்ல ஏறி இந்த மூட்டைகளோட மூட்டையா எங்க கிரகத்துக்குப் போ" என்று சொல்லி என்னை உள்ளே தள்ளி போகையில் என் கை எதார்த்தமாக என் இடுப்பகுதியில் இருந்த துப்பாக்கியின் மீது உரசியது.
"அடடா, இத மறந்துட்டோமேடா, இருடா ஜூனியர் உனக்கு இன்னைக்கு இருக்கு கச்சேரி" என்று நினைத்துக்கொண்டே எனது இடதுபுறம் திரும்பி என் காலர் சட்டையைப் பிடித்திருந்த அவன் கையை விடுவித்து அவன் மூக்கில் ஒரு பஞ்ச் வைத்து இடுப்பில் ஒரு கிக் விட்டதும் அவன் நிலைகுலைந்தான். அவன் சுதாரிப்பதற்குள் எனது துப்பாக்கியை அவனை நோக்கி நீட்டினேன்.
"என்னை வெளியில விடறியா, இல்ல புல்லட்ட டேஸ்ட் பண்றியா"
அவன் திடுக்கிட்டான்.
"ஏதும் விளையாட்டுத்தனமா செஞ்சு உசுர விட்றாத.. இந்த கன்ல இருக்க 6 புல்லட்டுக்கும் கம்பெனிக்கு எப்படி கணக்கு காட்டனும்னு எனக்குத் தெரியும்"
சட்டென முகம் மாறி வெடித்து சிரித்தான். என் பக்கத்தில் வந்து குண்டுக்கட்டாய் தூக்கினான்.
"டேய் சுட்ருவேன். விளையாடாத"
என்னைத் தூக்கி கார்கோவில் வீசுகையில் துப்பாக்கியை அவனை நோக்கி அழுத்தினேன்.
"போச்சுடா, இதுவும் கம்பெனி துப்பாக்கி போல.. சத்தம் தான் வருது"
என் ஜூனியர் கதவை ஓங்கி அடைத்தது மட்டும் எனக்குத் தெரிந்தது. சிறிது வேகமாக இந்த வாகனம் குலுங்கியது. ஒரு எனது பாதத்திற்கு கீழ் ஏதோ நழுவுவது போல் தோன்றியது. கண்ணை மூடித் திறக்கையில் எனது நேரம் குறைந்து பின் நின்று விட்டதை உணர்ந்தேன்.
இப்போது கூட இந்த கடிதம் அங்கிருந்துதான் எழுதுகிறேன். இங்கும் பூமியிலிருந்து வந்த அறிவாளி ஜந்துன்னு சொல்லி எனக்கு சகல வசதிகளும் செய்து தந்திருக்கிறார்கள். கடிதம் கிடைக்கப் பெற்றவுடன் எனது முகவரிக்குப் பதில் எழுதுங்கள்.
#243
தற்போதைய தரவரிசை
60,957
புள்ளிகள்
Reader Points 1,790
Editor Points : 59,167
36 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 5 (36 ரேட்டிங்க்ஸ்)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
VIJAYATHITHAN
nathanparthi
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்