ஒரு கேள்வி!

கற்பனை
2 out of 5 (1 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

அபிராமி, ஜெனிபர்...இவர்கள்தான், நம் கதையின் பாத்திரங்கள். அபிராமி; வயது, 21 தான். தனியார் பள்ளி ஆசிரியை; யதார்த்த குணம் கொண்டவள்; செய்யும் தொழில் எதுவாகினும், அதில் அர்ப்பணிப்பு உணர்வு இருக்க வேண்டும் என, கருதுபவள். மனசாட்சிப்படி நடக்க வேண்டுமென, தனக்குள் ஒரு கட்டுப்பாட்டு வளையத்தை வகுத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பவள்.

அவளது பால்ய காலத்து சிநேகிதி தான் ஜெனிபர்; விவரம் அறிந்த வயதில் இருந்தே, அரசுப்பணி மீது, அலாதி பிரியம் கொண்டவள். எப்படியாகிலும், போட்டித் தேர்வெழுதி, ஏதாவது ஒரு அரசுத்துறையில் இணைந்து வேண்டும் என, விடாது முயற்சி செய்து வருபவள். பொது அறிவு, நாட்டு நடப்பு, வரலாறு என, தினமும் எதையாவது ஒன்றை படித்துக் கொண்டே இருப்பதால், அவளுக்கும் சமுதாயத்தின் மீது கொஞ்சம் அக்கறை அதிகம்.

ஒரு சனிக்கிழமை; விடுமுறை என்பதால், இருவரும், அழகு சாதனப் பொருட்கள வாங்க கடைத்தெருவுக்கு சென்றனர். வழியோரம் இருந்த மண்டபத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த ‘பேனர்’, ஜெனிபரின் கவனத்தை ஈர்த்தது.

அவளின் மனம் கவர்ந்த ஒரு பேச்சாளரின் ஆளுயர புகைப்படம் அந்த பேனரின் பாதியளவை ஆக்கிரமித்திருக்க, ‘‘அடுத்த நாள் மாலை, 6:00 மணிக்கு, அவரது சிறப்பு சொற்பொழிவு நடக்க உள்ளது’’ என்ற தகவல் அச்சிடப்பட்டிருந்தது. ஆர்வமிகுதியில், ‘‘ஏய்; அபி...நாளைக்கு சாயங்காலம் வந்துரலாம்டி. அவர் பேச்சை கேட்டுப்பாரு. செமையா பேசுவாரு. வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களை, நிறைய எடுத்துக்காட்டுடன் சொல்லுவாரு’’ என அபிராமியின் தோளை உலுக்கினாள் ஜெனிபர்.

‘‘சரி ஜெனி...நாளைக்கு லீவு நாள் தானே; வந்துருவோம்,’’ என ஆமோதித்த அபிராமி, ‘‘உனக்கு அவரை தெரியுமா...? என கேட்டாள்.

‘‘அவரு எழுதின, ஒரு புத்தகத்தை படிச்சுட்டு, அவரோட மெயிலுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினேன்; அவரும் பதில் அனுப்பினாரு. உங்க ஊருக்கு வர்றப்போ, வாய்ப்பிருந்த சந்திக்கலாம் சகோதரின்னு கூட, ‘மெசேஜ்’ பண்ணியிருந்தாரு. இருடி... அவரு போன் நம்பர் கூட என்கிட்ட இருக்கு; இப்பவே போன் பண்றேன்; வாய்ப்பு கிடைச்சா அவரை சந்திக்கலாம்,’’ என பரபரப்பாய், அலைபேசியில் எண்களை தேடினாள்.

‘‘ஏன்டி...இவ்வளவு பரபரப்பாக இருக்க; அவரு என்ன அப்படிப்பட்ட பெரிய பேச்சாளரா?’’ என அபிராமி கேட்க, கொஞ்சம் டென்ஷன் ஆன, ஜெனிபர் ‘‘அட...ஆமாண்டி. அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்ங்க இருக்காங்க. அவரோட, பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம்ல போய் பாரு. எத்தனை பேரு அவரை ‘பாலோ’ பண்றாங்கன்னு தெரியும்,’’ என அநியாயத்துக்கு ஆதரவாய் பேசினாள் ஜெனிபர்.

‘‘இதோ நம்பர் கிடைச்சுடுச்சு’’ என்ற ஜெனிபர் ‘டயல்’ செய்ய, ஒரே ரிங்கில் எதிர்முனையில் பேசிய பேச்சாளர், ‘‘ஹலோ...யாரு’’ என்றார். ‘வரம் கேட்ட கடவுள் நேரில் வந்தது’ போன்ற படபடப்பு ஜெனிபர் முகத்தில்.

அதை காட்டிக் கொள்ளாமல். ‘‘வணக்கம் சார். நான்,ஜெனிபர். உங்களோட அதிதீவிர ரசிகை’’ என, தன்னை சுருக்கமாய் அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘‘நாளைக்கு எங்க ஊர்ல, நீங்க கலந்துக்கற ‘மீட்டிங்’ நடக்குது; பேனர்ல பார்த்தேன். உங்கள சந்திச்சு பேச முடியுமா சார். என் ப்ரெண்டு ஒருத்தியும் இருக்கா; உங்ககிட்ட பேசணும்னு ஆசைபடறா’’ என, தயங்கி, தயங்கி சொன்னாள்.

‘‘உங்க அன்புக்கு ரொம்ப நன்றி சகோதரி; கண்டிப்பா சந்திக்கலாம்; கூட்டம் முடிஞ்சதும், நான் அங்கே தான் இருப்பேன்; வாங்க...’’ என்றார் அந்த பேச்சாளர்.

தலைகால் புரியவில்லை, ஜெனிபருக்கு; அவ்வளவு சந்தோஷம். லட்சக்கணக்கில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிற ஒரு பேச்சாளர், தன்னை பார்க்க ஒத்துக் கொண்டாரே...என, உள்ளூர மகிழ்ந்தாள்.

இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

மறுநாள் விடிந்தது; எப்போது மாலை நேரம் வரும் என காத்திருந்தாள் ஜெனிபர். கூட்டம் நடக்க இருந்த மண்டபத்துக்கு சென்ற ஜெனிபரும், அபிராமியும், இரண்டாம் வரிசையில் இடம் கிடைக்க அமர்ந்துக் கொண்டனர்.

அந்த பேச்சாளர் மேடையேறி, ‘மைக்’ பிடித்து, ‘‘அனைவருக்கும் வணக்கம்’’ என்ற ஒத்தை வார்த்தையை மட்டும் தான் உதிர்த்தார். அரங்கில் எழும்பிய கை தட்டலும், விசில் சப்தமும் அடங்க, சில நிமிடம் பிடித்தது.

பேச்சை துவக்கினார், அந்த பேச்சாளர். அரங்கமே அமைதியானது; குண்டூசி தரையில் விழுந்தால் கூட சப்தம் கேட்கும் அளவுக்கு, அத்தனை அமைதியாக அவரது பேச்சை கவனித்தனர் மக்கள். கிட்டதட்ட, இரண்டு மணி நேரம்...சொற்பொழிவு முடிந்தது; ஏதோ ஒரு ஆத்மதிருப்தி அடைந்தவர்களாய் மக்கள் வெளியேறினர்.

ஜெனிபரும், அபிராமியும் அவரை சந்தித்தனர். பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

‘‘சொல்லுங்க சகோதரி...என்கிட்ட ஏதாவது கேட்கணுமா?’’ என்றார் அந்த பேச்சாளர்.

‘‘ஆமாங்க சார். கேட்கணும்...’’ என்றாள் அபிராமி.

‘‘கேளுங்க...’’ என கேள்வியை எதிர்கொள்ள தயாரானார் அந்த பேச்சாளர்.

‘‘சார்...நீங்க எத்தனை வருஷமா, இந்த மாதிரி சொற்பொழிவு நடத்தறீங்க?’’

‘‘ம்ம்ம்...42 வருஷமா நடத்தறேன் மா. இப்ப எனக்கு வயது, 72; என், 30 வயசுல இருந்து, சொற்பொழிவு நடத்தறேன். எனக்கு முன்னாடி என் அப்பா, இப்படி தான் சொற்பொழிவு நடத்திட்டு இருந்தாரு. அவரும், ஒரு 40 வருஷம் நடத்தியிருப்பாரு,’’

‘‘ரொம்ப சந்தோஷம் சார். என்ன மாதிரியான விஷயங்களையெல்லாம் சொல்லுவீங்க’’

‘‘சண்டை, சச்சரவு, போட்டி, பொறாமை, அடிதடி, வெட்டுக்குத்துன்னு எதுவும் இல்லாம, நாடு அமைதியா இருக்கணும். அதுக்கு ஒவ்வொருத்தரும், நல்ல மனுஷங்களா இருக்கணும். அவங்க அவங்களுக்கு பிடிச்ச கடவுளை தினமும் வணங்கணும்; மனசாட்சிக்கு பயப்படணும். மத்தவங்களுக்கு கெடுதல் நினைக்க கூடாது; அடுத்தவங்க சொத்தை அபகரிக்க கூடாது. துரோகம் நினைக்க கூடாது...இந்த மாதிரி விஷயங்களை பத்தி பேசுவேன்’’

‘‘ஜாதி, மதம், இனம்ங்கற பேதம் இல்லாம ராமாயணம், மகாபாராதம், பைபிள், குரான்னு எல்லா மதம் சார்ந்த புத்தகங்கள், சங்க கால இலக்கியங்கள்ல இருந்து நிறைய கருத்துக்களை எடுத்து, அதை மக்கள்கிட்ட சொல்லுவேன். அதேமாதிரி, புத்தர், காந்தி, பாரதியார், திருவள்ளுர்ன்னு, சமுதாயத்தை சீர்த்திருத்த வந்த பெரியவங்க, என்ன சொல்லிட்டு போனாங்களோ...அதையும் சொல்லுவேன்...’’

‘‘ரொம்ப மகிழ்ச்சிங்க சார். உங்க அப்பாவும் இதையே தான் செய்துட்டு இருந்தாருங்களா சார்,’’

‘‘ஆமா சகோதரி. எங்களோட பேச்சு மக்கள் மத்தியில் ரொம்ப பிரபலமானதால, முழு நேர தொழிலாக்கிட்டோம். இந்த மாதிரி கூட்டம் ஏற்பாடு பண்றவங்க பணம் தருவாங்க. சொந்த வீடு, காருன்னு, ஏதோ கொஞ்சம் சொத்து சேர்த்திருக்கோம்,’’

‘‘நல்லதுங்க சார். கடைசியா ஒரே ஒரு கேள்வி?’’

‘‘ம்ம்ம். தாராளமா கேளுங்க; இதுல என்ன தயக்கம்’’

‘‘கிட்டதட்ட, 80 வருஷம்; ரெண்டு, மூனு தலைமுறையை சேர்ந்தவங்க உங்களோட சொற்பொழிவை தொடர்ந்து கேட்டுகிட்டு இருக்காங்க; இனியும் கேட்ப்பாங்க. ஒவ்வொரு முறை, ஒவ்வொரு இடத்துக்கு போறப்பவும், சொன்ன விஷயத்தை தானே திரும்ப, திரும்ப சொல்லுவீங்க?’’

‘‘ஆமாம்’’

‘‘நீங்க சொன்ன விஷயங்க மக்கள் மனசுல பதிஞ்சிருந்தாலோ, நீங்க சொன்ன அறிவுரைகளை மக்கள் கேட்டு நடந்திருந்தாலோ, நல்லதொரு அமைதியான சமுதாயம் அமைஞ்சிருக்கும்; நாட்டில் அமைதி நிலவியிருக்கும்; போட்டி, பொறாமை, அடுத்தவங்க சொத்தை அபகரிக்கிறதுன்னு...இதெல்லாம் இல்லாம போயிருக்கும் தானே சார்?

‘‘ஆமா ஆமா’’

‘‘ஆனா, அப்படி எதுவும் பெரியளவு மாற்றம் வந்ததா தெரியலையே சார். நீங்களும், 40 வருஷமா பேசின விஷயத்தையே தான் திரும்ப திரும்ப பேசிட்டு இருக்கீங்க; மக்களும் கேட்டுக்கிட்டே தான் இருக்காங்க. அப்படின்னா, நீங்க சொன்னது அவங்களுக்கு புரியலையா? இல்லைன்னா, அவங்களுக்கு புரியற மாதிரி நீங்க சொல்லலையா?

இந்த கேள்வியை சிறிதும் எதிர்பாராத அந்த பேச்சாளர், என்ன சொல்வதென தெரியாமல் விழித்தார். ‘‘அது...அது வந்து; போதும்மா! என்னோட பிழைப்புல மண்ணை போட்டுடாதீங்க’’ என, சொன்னவர் விருட்டென எழுந்து நடையை கட்டினார்.

‘‘என்னடி...இப்படி கேள்வி கேட்டு, அவரை சங்கடப்படுத்திட்டியே?’’ என, முகம் வாடினாள் ஜெனிபர்.

‘‘அவரை சங்கடப்படுத்தணும்ன்னு என் நோக்கமில்ல ஜெனி. யதார்த்தத்தை புரிஞ்சுக்கோ. ஒவ்வொரு மனுஷனும் நல்லவனா, அடுத்தவனுக்கு கெடுதல் நினைக்காதவனா இருக்கறது, அவனவன் மனசு சார்ந்த விஷயம். அடுத்தவங்க சொல்லித்தான் கேட்கணும்னு இல்ல. நாம, பள்ளிக்கூடம் போறது, கோவிலுக்கு போறது, தாத்தா, பாட்டிக்கிட்ட கதை கேட்கிறது, அப்பா, அம்மாகிட்ட திட்டு வாங்கறது எல்லாமே நம்மளை நல் வழிப்படுத்தறதுக்குதான். இதை முதல்ல புரிஞ்சுக்கணும். அடுத்தவங்க சொல்ற புத்திமதியை கேட்கணும்; ஆனா, கேட்டுக்கிட்டே இருந்தோம்னா, நாம எப்ப திருந்தறது,’’ என்றாள் அபிராமி.

ஜெனிபர் முகத்தில் ஒரு வித தெளிவு பிறந்தது.

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...