மீண்டு(ம்)

கற்பனை
4.9 out of 5 (69 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

அந்த கிராமத்தில் உள்ள ஒரே குளத்தின் முழு அளவு வரையில் தண்ணீர் இருக்க, சுவாத்தியமான காற்று ஒன்று அதன் மேற்பரப்பில் உரசிக்கொண்டு செல்ல குளத்தின் நீர் சற்றே ஆடியது ஒரு கூச்சத்தை ஒத்தே இருந்தது. இந்த நிகழ்வின் போது நீரில் இரு நிலவு போலான வட்ட பிம்பங்கள் தென்பட்டன.

ஊர், குறிப்பாக குளக்கரை தெரு முழுவதும் அடங்கி இருக்கும் தருவாயில் முந்தைய நாள் ரோட்டில் பரப்பிவிடப்பட்ட உளுந்தினை மழைக்கு முன்பாக அள்ளிக்கொண்டு செல்வதற்காக வந்த மாரியப்பன் இரு வட்ட பிம்பங்களைப் பார்த்தபடி,

”வானில் இரு நிலவுகளா?”

என்ற கேள்வியுடன் மேலே தலை உயர்த்தி பார்க்கும் முன்பே அதில் ஒன்று சட்டென மறைந்துவிட்டது. சற்று குழப்பத்துடன் மறைந்த நிலவை ஒத்த பிம்பத்தின் திசையில் அமைந்துள்ள கோவிலினை தலை உயர்த்தி பார்க்க அதன் கோபுரத்தில் உள்ள மின்விளக்குகள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து அணைக்கப்பட்டன.

சில சமயங்களில் வழக்கமான ஒன்று நமக்கு குழப்பத்தை(யும்), ஆச்சரியத்தை(யும்) தருவதுண்டு. இதற்கேற்ப மாரியப்பன் மடத்தனம் கலந்த ஆச்சரியத்துடன் தூக்க கலக்கத்தில் குளக்கரையில் நடந்தபடியே ரோட்டினைக் கட்டியணைத்தது போல சாய்ந்தபடி வளர்ந்திருக்கும் வேப்பமரத்திலிருந்து ஒரு குச்சியை உடைத்து பற்களால் கடித்தான். அதன் ஒரு நுனியினைப் பட்டையாக்கி அதே கோபுரத்தின் உச்சியினை ஒருவிதமாக பார்த்துக் கொண்டே இருக்க, சட்டென ஒரு ’தவில் இசை’ செவிப்பறை கிழியும்படி அதிக சத்தத்தில் ஒலித்தது. மாரியப்பன் அதிர்ந்து வாயில் இருந்த குச்சியை எடுத்தான். வேப்பமரத்தில் கட்டப்பட்டிருந்த கோவிலுக்கு சொந்தமான குழாய் ஒலிப்பெருக்கி மாரியை தூக்கக் கலக்கத்திலிருந்து கலைத்துவிட்டது.

வாயில் வெப்பங்குச்சியை ஒரு பாங்காக வைத்துக் கொண்டு தலையில் அழுக்குத் துண்டு ஒன்றைக் கட்டியபடி உளுந்தினை அள்ளி மாட்டுவண்டியில் ஏற்ற ஆரம்பித்தான் மாரி.

கோவில் விளக்குகள் சீக்கிரமாகவே அணைக்கப்பட்டுவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால் இன்னும் விடியற்காலை என்று உறுதி செய்வதற்கான சிறிய அளவிலான வெளிச்சம் கூட வரவில்லை.

வானம் மேலும் இருண்டது. சுமார் அரைமணி நேரம் ஆகியும் உளுந்து ஏற்றுமதி முடிந்தபாடில்லை.

மாரி உளுந்தை வாரி முடிப்பதற்குள் ’மாரி’ வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ரோட்டில் கிடந்த குப்பைகளுடன் சேர்த்தே வாரி வண்டியில் போட்டான்.

தெரு முழுவதும் இருண்டு இருக்க, சட்டென மாரியின் முகத்தில் ஒரு மஞ்சள் வெளிச்சம் பட, மாரி திரும்பிப் பார்த்தான். அங்கு அவன் முன் உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் ஒன்று திறக்கப்பட்ட நிலையில் இருக்க உள்ளே மஞ்சள் பல்பு ஒன்று ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.

ஜன்னலுக்கு உள்ளே இருந்து,

“என்ன மாரி? காலைல காய வச்ச உளுந்த பொழுதோட எடுக்குறது இல்லையா? உங்க அப்பன் ஊருல இல்லாததுனால தப்பிச்ச!”

என்று ஒரு ஆண் குரல் மட்டும் கம்பீரமாகக் கேட்டது. மாரி இளித்துக்கொண்டே நிற்க, அந்த ஜன்னல் கம்பிகளுக்கு இடையே நரைத்த தாடியை விரல்களால் சரி செய்து, நெற்றியில் பொட்டு வைத்துவிட்டு நாராயணன் (வயது 58) தன் காக்கி சட்டை ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டார். ஜன்னல் வழியே மேகத்தை எட்டிப் பார்க்க, எங்கோ இடி விழும் சத்தம் கேட்டது. சத்தம் முழுவதுமாக ஓய்வதற்குள்ளாக அந்த அறையின் ஒற்றை மஞ்சள் பல்பு சட்டென அணைந்து விட்டது.

ஜன்னலுக்குள் அடுத்த நிமிடமே பாதி உருகிய மெழுகு ஒன்று ஏற்றப்பட, அதன் அலைபாயும் வெளிச்சத்தில் நாராயணனின் முகம் தெரிந்தது. மெழுகு காற்றில் அணையாதபடி ஏந்திக் கொண்டு மெல்ல நகர்ந்த அவர் ஒரு இடத்தில் நின்றார்.

ஏதோ காலில் தடுக்க, சற்று மெழுகுவர்த்தியைக் கீழே இறக்க, சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒருவன் கால் நீட்ட இடமில்லாதபடி சுருக்கிக்கொண்டு வாயை பிளந்தபடி படுத்துக் கொண்டிருந்தான். அது நாராயணனின் இரண்டாவது மகன் வெங்கடேசன். வெங்கடேசனின் உறக்கம் கெடாதபடி மேலும் நகர்ந்தார் அவர். அங்கு குருவியை சுற்றி அதன் குஞ்சுகள் சூழ்ந்திருப்பது போல, நாராயணனின் மகள்களான சுஜாதா, பத்மா இருவரும் அம்மாவை (வள்ளியை) போட்டி போட்டுக்கொண்டு கட்டியணைத்தபடி படுத்துக் கொண்டிருக்க, அருகில் ஒய்யாரமாக சுரேஷ் (நாராயணனின் மூன்றாம் மகன்) கனவின் தாக்கத்தால் தூக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தான்.

அனைவரையும் கடந்து வந்த அவர், வள்ளியை மட்டும் மெல்ல தொட, வள்ளி சட்டென விழித்துக் கொண்டு மகள்களுக்கு எந்தவித தொந்தரவுமில்லாதபடி எழுந்தார்.

அது மண் வீடு தான். அதில் ஒரு குறுகிய சமையலறை, ஒரு அரைகுறை சதுர வடிவில் ஒரு அறை, பின்னர் ஒரு திண்ணை. ஆனால் தோட்டம் என்னவோ பெரிய அளவிலே இருக்கும்.

கையில் கொஞ்சம் மட்டுமே மிச்சமிருக்கும் மெழுகினை ஏந்தி தன் மண் வீட்டை முற்றிலுமாக வலம் வந்து ஆய்வு செய்தார். இது அவரின் வழக்கம். வள்ளி சமையலறைக்குள் இருக்க, வாசல் கதவைத் திறந்தார் நாராயணன்.

அங்கு மழையில் உளுந்தை சாக்குப்பை கொண்டு மூடிக் கொண்டிருக்கும் மாரியை வீட்டிற்குள் அழைத்தார். பின் திண்ணையைப் பார்த்து சற்று உறைந்து நின்றார். அங்கு அவர் கண்ட காட்சி, மூத்த மகன் ரமேஷ் மண் சுவற்றில் சாய்ந்துக் கொண்டு தலைமாட்டில் கையினை முட்டு கொடுத்தபடி உறங்கிக் கொண்டிருந்ததே.

அங்கு கையில் காபி – யுடன் வந்த வள்ளி ரமேஷ் – ஐப் பார்த்து “வேலைக்காக இவன் அலையுறத பாத்தா மனசு கஷ்டமா இருக்கு. உங்களுக்கு சொல்ல கூடாதுன்னுதான் இருந்தேன் நேத்தி எங்கயோ லோடு ஏத்துற வேலைக்கு போயிட்டு கேட்டுட்டு வந்துருக்கான்.” இப்படி வள்ளி கூற,

“மாரி இங்க வா... காபி குடி” என்று அவர் கூறிவிட்டு, “இன்னிக்கு என்ன நாள் தெரியுமா?”

வள்ளி அமைதியாக நிற்க, “அவன அந்த கணக்குபுள்ளய போயி பாக்க சொல்லு. வேலைக்கு போகனும் தான். ஆனா அதுக்குன்னு போட்டு உடம்ப அலட்டிக்க தேவையில்ல. என்னால இன்னும் பத்து குடும்பத்த கூட காப்பாத்த முடியும்.”

இடி மிக அருகிலேயே எங்கேயோ விழுந்தது. வெங்கடேசன் எழுந்து வெளியே வந்து அப்பாவிற்கு குடை ஒன்றை கொடுத்துவிட்டு “அப்பா இன்னிக்கு பெரியசெவலைகிட்ட ஒரு கோவிலுல வேலை கேட்டு போறேன்.” என்று தயங்கி நின்றான். பல தையல்கள் போடப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு ஜோல்னா பையில் கையை விட்டு பத்து ரூபாய் எடுத்துக் கொடுக்க, அவன் நன்றி என்பதற்கு பதிலாக மெல்லிய புன்னகையுடன் தோட்டத்திற்கு சென்றான்.

பேய் படங்களில் கேட்கும் சிறப்பு சப்தங்களை ஒத்து இருக்கும் நாராயணனின் மிதிவண்டி எழுப்பும் ஓசைகள். அவர் பூட்டைத் திறந்து ஒரு மிதி மிதித்துவிட்டால் அது தான் அந்த தெருவிற்கே அலாரம்.

தன் ஜோல்னா பையை மாட்டிக்கொண்டு சைக்கிளில் ஏறினார். பெடலின் மீது கால் வைத்து, வள்ளியை ஒருமுறை பார்த்து, “இப்போவாச்சும் நியாபகம் வந்துதா இன்னிக்கு என்ன நாளுன்னு?”

வள்ளி, வாசல் மொழுகிக் கொண்டிருக்க, ஒன்றும் புரியாமல் அமைதியாக நின்றார். எதுவும் பேசாமல் கோவில் கோபுரத்தைப் பார்த்து கும்பிட்டுவிட்டு மாரியிடம்,

“மாரி வேலைய முடிச்சிட்டு சரியா 3 மணிக்கு மணிக்கூண்டு கிட்ட வா.” – என்று புறப்பட்டார்.

வழியில் பலர் நாராயணனுக்கு காலை வணக்கம் ஒன்று போட்டுவிட்டு தபால் பற்றி விசாரிப்பதுண்டு. ஆனால் அன்று மழை காரணமாக அது குறைவே. திண்ணையில் இருந்த மாட்டுத் தீவன மூட்டையினை ஒற்றை ஆளாக நகர்த்திக் கொண்டிருந்தார் மங்கம்மா. வேகமாக மூட்டையைப் போட்டுவிட்டு

“ஐயா.... ஐயா” என்றபடி ஓடி வந்தார் மழையில்.

”என் புள்ள பணம் அனுப்புறேன்னு சொன்னான்....”

”எதுவும் வரல மங்கம்மா.... இன்னிக்கு பையில வேணா பாக்குறேன்.” - என்று பதில் கூறிவிட்டு தபால் நிலையம் செல்லும் வழியில் ஒரு பிரதான சாலையில் நின்றார் நாராயணன். அங்கு கம்பத்திற்கு அருகே ஒரு ‘இந்திய தபால் துறை’ என்று அச்சடிக்கப்பட்ட ஒரு தபால் பை இருந்தது.

அதனை எடுத்துக்கொண்டு தபால் நிலையம் வந்தடைந்தார்.

வீட்டில் இருந்து புறப்பட்டான் வெங்கடேசன். நெற்றி முழுவதுமாக விபூதி குங்குமம் அடித்துக்கொண்டு அப்பா கொடுத்த பத்து ரூபாயில் அம்மாவிற்கு தேவையான பொருட்களின் லிஸ்டினைக் கேட்டுக்கொண்டு கால்நடையாகவே சென்றான். சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் அவன் நடந்தாக வேண்டும், வேலைக்கு அல்ல; வேலை கேட்பதற்கு.

ரமேஷ் – க்கு இன்னும் ஒரு சில மாதங்களில் திருமணம். தன் வழக்கமான வேலை தேடும் முயற்சியில் நேற்று போட்டுக்கொண்ட அதே உடையின் மீது பக்கத்து வீட்டுக்காரர் வாங்கி வந்த அத்தர் - ஐத் தடவிக்கொண்டு நடந்தான் கொட்டும் மழையில்.

அப்போது “அம்மா... இன்னியோட அப்பா ரிட்டையர் ஆகுறார் – ல மா?”

என்று கேட்க, சுஜாதா, பத்மா, சுரேஷ் மற்றும் வள்ளி நால்வரும் அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தில் மூழ்கினர்.

தலையில் அடித்துக்கொண்டு ”அதான்... அப்பா இன்னிக்கு என்ன நாள்னு தெரியுமானு கேட்டாரா?”

”அம்மா இன்னிக்கு நான் சமைக்குறேன்... எப்படியும் போஸ்ட் ஆபீஸுலிருந்து எல்லாரும் வருவாங்க வீட்டுக்கு” – என்றாள் சுஜாதா புன்னகையுடன்.

”அண்ணா நீ வரும் போது ஸ்வீட்டு ஸ்நாக்ஸ் - லாம் வாங்கிட்டு வா... அப்புறம் இரு.... நான் லிஸ்டு தர்றேன். அதெலாம் வாங்கிட்டு வா.”

என்று அண்ணனுக்கு வேலை இல்லை என்பதை மறந்த நிலையில் ஓடோடி உள்ளே சென்றாள்.

இதனைப் பார்த்து ரமேஷ் – ன் கண்கள் கலங்க, வள்ளியும் கண்களைத் துடைத்துக்கொண்டு,

“இருடா”

என்று ரமேஷின் கண்களையும் துடைத்துவிட்டு உள்ளே சென்றார். வீட்டின் ஓரத்தில் மண்ணைத் தோண்டி அதிலிருந்து சில்லரைகளை எடுத்து ரமேஷ் இடம் கொடுத்து,

“இத வச்சிக்கோ. பாண்டி கடைல கணக்குல வாங்கிக்கோ... பாதி உன் செலவுக்கு வச்சிக்கோ”

என்று கூற ரமேஷின் கண்கள் மேலும் கலங்கியது.

”எப்படியும் ஆளுங்க வருவாங்க. ஒரு 10.... இல்ல 20 Chair சொல்லிடு” என்று ஓடி சென்று வீட்டில் இருந்த அனைத்து சில்லரைகளையும் எடுத்துக் கொடுத்துவிட்டார்.

”சீக்கிரமா வாடா...”

கையில் தங்கைகள் கொடுத்த லிஸ்டுடன், அம்மா கொடுத்த பணத்துடன் தன் நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு மழையில் சென்றான்.

”என்னடா நாராயணா இனி காலைல கொட்டுற பனியில எழுந்துருக்க தேவையில்ல... மழையோ காத்தோ பென்ஷன வெச்சிகிட்டு சந்தோஷமா இரு.”

”டேய்... இது உனக்குலாம் தாண்டா சந்தோஷம். இத்தன வருஷமா எத்தன Money Order - உ... எத்தன லெட்டரு.... இனி யாருக்கும் உதவியா இருக்கமுடியாதேன்னு நெனச்சாலே கஷ்டமா இருக்குடா..”

”சரி... நீ இன்னிக்காச்சும் ஆபீஸுலையே உட்காரு.... அத கொடு உன் தபாலையும் சேர்த்து நானே கொடுக்குறேன்.”

”எது? அதலாம் முடியாது. இன்னிக்கு கடைசி நாள் வேற... நான் பாத்துக்குறேன்... உன்னோடதையும் சேர்த்து கொடுடா சொம்பேறிப் பயலே.”

என்று நாராயணன் கூற, இன்னும் ஐந்து வருடங்களில் ரிட்டையர் ஆகப்போகும் கோபால் சிரித்துக்கொண்டு கொட்டும் மழையில் பேசிக்கொண்டிருந்தார். பின் அங்கிருந்து கிளம்பினார் நாராயணன்.

”மங்கம்மா?”

என்று குரல் கேட்டவுடன் ஓடி வந்தாள். மங்கம்மாவிடம்,

“இந்தா உன் புள்ளையால இனி இந்த வீடு உன்னோடது... மொதல்ல இந்த பாக்கிய போயி அந்த கடங்காரங்கிட்ட கொடு.”

என்று கூற, மங்கம்மா பெரும் சிரிப்புடன் Money order ஐ வாங்கிக்கொண்டு,

“என் சாமி.... என் புருஷன் சம்பாதிச்ச இந்த வீட்ட காப்பாதிருச்சு” என்று கத்திக்கொண்டே சென்றார்.

இதனைப் பார்த்துக்கொண்டே நின்ற நாராயணன் கண்ணில் கண்ணீர் வழிந்தது. சற்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டார் அவர். பின்னர் சுதாரித்துக்கொண்டு நகர்ந்தார்.

ஒரு புறம் மதிய நேரம், சென்ற கோவிலில் வெங்கடேசனுக்கு வேலை கிடைத்து விட்டது. அவன் மீண்டும் வீட்டிற்கு புறப்பட துவங்கினான்.

ரமேஷ் வேலை கேட்டு சென்ற இடத்தில் ஏமாற்றமே வழக்கம் போல. ஆனால் கணக்குப்பிள்ளை கைவிடவில்லை. இன்னும் இரண்டே நாட்களில் வேலை நிச்சயம் என்று சத்தியம் செய்திருக்கின்றார் அவர். அப்பாவின் பவர் - ஐ இன்று மேலும் உணர்ந்தான் அவன்.

அப்பாவின் ரிட்டையர்மெண்டு நிகழ்ச்சிக்காக வீட்டில் காத்துக்கொண்டிருக்க, பொருட்களை வாங்கிக்கொண்டு சென்றான் ரமேஷ்.

மாரி மணிக்கூண்டிற்கு அடியில் நாராயணனை சந்தித்தான். “மாரி சாயங்கலாம் வீட்டுக்கு வா.... வரும்போது ஒரு 10 Chair சொல்லிடுடா... அப்புறம் ஒரு Focus light ஒன்னு சொல்லிடு”

”என்ன சாமி விசேஷம்?”

”இன்னியோட ரிட்டையர்மெண்டுடா.”

”ஓ... அசத்திருவோம்.”

அன்று தபால்கள் என்னவோ கம்மிதான். நாராயணன் ஊர் முழுவதுமாக சுற்றி வந்து தன் வாடிக்கையானவர்கள் என அனைவரிடமும் இந்த விஷயத்தைக் கூறி விடை பெற்றார்.

ஒருவழியாக தபால் நிலையம் வந்தடைந்தார். கண்கள் முழுவதுமாக கண்ணீர். நண்பர்கள் அனைவரும் கட்டிப்பிடித்து அழுதனர். அந்த ஒற்றை தபால் பையை மற்றொரு நபரிடம் கொடுக்க மனமில்லாமல் கொடுத்தார்.

”நீ போ. உனக்கு முன்னாடி அங்க இருப்போம். ஒரு சர்ப்ரைஸ் இருக்கு உனக்கு.”

என்று தபால் நிலையமே கோரசாக கூற, அவர் விடைபெற்றார்.

மிதிவண்டியில் ஏதோ யோசனையில் வீடு திரும்ப, அங்கு வீட்டின் முன் கூட்டம் அதிகமாக இருந்தது.

”இந்த வள்ளிக்கு இதுதான் வேலை. நம்ம கேட்ட அப்போ தெரியாதுன்னு நடிச்சிட்டு இப்போ பாரு ஊரையே கூட்டியிருக்கா”

”ஒரு வேல இந்த மாரி பய பண்ண வேலையா இருக்குமோ?”

என்று மேலும் நகர்ந்தார். ஊர் கூடியிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அருகில் வர வர ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து அவர் வேகமாக வந்து பார்த்தார்.

”சாமி... அந்த பாவிப்பசங்க நீங்க கடன திரும்ப கொடுக்கலன்னு வீட்ட இடிச்சிட்டு போயிடானுங்க சாமி.”

”மாடசாமி நான்லாம் தடுக்க போனோம் சாமி... அடிச்சிபுட்டானுங்க..”

என்று அந்த தெரு மக்கள் அனைவரும் கதறினர். நாராயணனின் கண் முன் அவரின் உயிர் (வீடு) தரைமட்டமாக இருந்தது. கண்களில் கண்ணீர் வழிந்தோட, கூட்டட்த்தை விலக்கிப் பார்த்தார்.

கூட்டை இழந்த குருவிக் குஞ்சுகள் போல ஒருவருக்கொருவர் கட்டியபடி அழுதுக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள் – வள்ளி, மகன்கள், மகள்கள்.

”அப்பா” என்று மகன்கள் மற்றும் மகள்கள் கட்டிப்பிடிக்க, வள்ளி பேசுவதற்கு வார்த்தையில்லாமல் நின்றார்.

”நாராயணா?” என்று கோபால் கத்திக்கொண்டே வந்தார். வீட்டைப் பார்க்காமல் அவர்,

”விஷயம் தெரியுமா?”

”கவர்மெண்ட்டு இன்னும் உனக்கு ரெண்டு வருஷம் ஏத்திதாங்கடா..... ஆமாடா இனிமே 60 ல தான் ரிட்டையர்மெண்ட்டாம்.... நீ காலைல கெளம்பிடலாம்.... அது மட்டுமில்ல.... உனக்கு சம்பளமும் ஏத்திட்ட்ட்.....”

என்று சட்டென நிறுத்தி அதிர்ந்து போனார் வீட்டைப் பார்த்து.

ஒரு HORN சத்தம் கேட்டது.

பின்னால் வந்தது மாரியின் தலைமையில் Chair - உம் Focus Light - உம்.

கோபால் சட்டைப்பையில் இருந்தது ஒரு தபால்.

- சேஷா. வ

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...