கடன்கார காதல்

vanisha79
காதல்
4.9 out of 5 (157 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

கடன்கார காதல்!

சவுதியின் ரியாட் விமான நிலையத்தில் காபியை அருந்தியபடி தனது விமானத்துக்கான அழைப்புக்காகக் காத்திருந்தான் மன்மதன். அவனோடு சேர்ந்துப் பயணிக்கப் போகும் வேலையிடத்து நண்பன் கார்மேகமும் அவனருகே அமர்ந்திருந்தான்.

“ஏன்டா ‘ப்ளேக் க்ளவுட்’, எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடந்துடுமாடா? பால் சொம்ப தூக்கிக்கிட்டு ஜல் ஜல்னு சலங்கை சத்தத்தோட ‘அத்தான் என்னத்தான்’னு என்னைக் கொஞ்சறதுக்குன்னு ஒருத்தி வருவாளாடா?” என அடிக்கடி கேட்கும் அதே கேள்வியை மறுபடியும் கேட்டான் மன்மதன்.

அவனை ஏற இறங்கப் பார்த்த கார்மேகம்,

“உனக்குப் போய் யார்டா மன்மதன்னு பேரு வச்சது! அந்தக் காமதேவனோட பேர இந்த கர்மம் புடிச்சவனுக்கு வச்சி விட்ருக்காங்க! வயசு முப்பத்தஞ்சாச்சி! இன்னும் வாழ்க்கைய கற்பனைலயே வாழ்ந்துட்டு இருக்க!” எனத் திட்டினான்.

“நான் என்னடா மச்சான் செய்ய! ஊர சுத்திக் கடன் வாங்கிட்டு எங்கப்பன் செத்துப் போய்ட்டான்! சொத்துபத்த புள்ளைங்களுக்கு எழுதி வைக்கறாங்களோ இல்லையோ, கடனையும், பரம்பரை வியாதியையும் நமக்கு சொத்தாக் குடுத்துடறாங்க! அதையெல்லாம் அடச்சி, முழுகிப் போக இருந்த வீட்டை மீட்டெடுத்து, தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணி வச்சு, அவ புள்ளைக்கு காது குத்தி மொட்டைப் போட்டு, இப்போத்தான் நான் ஒரு நிலைக்கு வந்திருக்கேன்! இனிதான் எனக்கான அஞ்சலையத் தேடிக் கண்டுப்புடிக்கனும்”

“யாருக்குடா கடன் இல்ல! நாடே கடன் வாங்கித்தான் பொழப்ப நடத்துது! அதுக்குன்னு காலாகாலத்துல நடக்க வேண்டியது நடக்க வேணாமா? ரோட்டுல போய் நின்னு, கடன் இல்லாதவன் எவனோ என்னைக் கல்லால அடிங்கடான்னு சவால் விடேன்! ஒத்தக் கல்லு உன் மேல விழாது! அவனுங்களாம் கல்யாணம் பண்ணலியா, பொண்டாட்டியக் கொஞ்சலையா இல்லப் புள்ளக் குட்டியப் பெக்கலியா!” எனப் படபடத்தான் கார்மேகம்.

“எவன் எப்படியோ புள்ள பெக்கட்டும்டா! என் புள்ள கடங்காரன் பெத்தப் புள்ளயா இருக்கக் கூடாது! எப்போ வட்டிக்காரன் வீட்டுக்குள்ள வந்து திங்கற தட்ட புடுங்குவான்னு பயந்து வாழ்ந்ததுலாம் என்னோட போகட்டும்டா”

“என்னமோ போடா! உன்னை நெனைச்சா ஒரு பக்கம் பெருமையாவும் இருக்கு, இன்னொரு பக்கம் வேதனையாவும் இருக்கு! மூத்த மகனா மட்டும் பொறக்கவே கூடாதுடா டேய்! சாபம்டா அது!”

மன்மதனும் கார்மேகமும் சவுதியில் உள்ள பால் மாவு தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். மொத்த விடுப்பையும் சேகரித்து வைத்தால், வருடத்திற்கு இரு முறை இந்தியாவுக்குப் போய் இரண்டு வாரம் இருந்து விட்டு வர முடியும். இவர்கள் நிறுவனம் கொடுத்திருக்கும் ஹாஸ்டலில் தங்கி வேலைப் பார்ப்பதால், சொந்தங்களை தங்களோடு வைத்துக் கொள்ளவும் முடியாது! இவனாவது மனைவி என ஒருத்தி இல்லாமல், கற்பனையில் வாழ்கிறான். மற்றவர்கள் மனைவி இருந்தும் கற்பனையிலும், அலைப்பேசியிலும்தான் குடும்பம் நடத்துகிறார்கள்.

தொலைப்பேசியில் மதனின் அம்மா,

“அய்யா மதனு! உனக்குப் பொண்ணு ஒன்னுப் பார்த்து வச்சிருக்கேன் சாமி! நீ வந்ததும் ஒரு எட்டுப் போய் பார்த்துட்டு, புடிச்சிருந்தா, பூ வச்சிட்டு வந்துடலாம்டா ராசா” எனச் சொல்லி இருந்தார்.

கடனை அடைத்ததில் இருந்து பல தடவை இப்படி பெண் பார்க்கவெனப் போயிருக்கிறார்கள். வெளிநாட்டில் வேலை செய்யும் மாப்பிள்ளை வேண்டாம், வயது அதிகமாக இருக்கிறதே, சொந்த வீடு இருந்தாலும் சொத்து அவ்வளவாகத் தேறவில்லையே, கார் இல்லையா, முகம் கிழடுத் தட்டியது போல் இருக்கிறதே, ஜாதி ஒன்றானாலும் பிரிவு வேறாயிற்றே எனப் பல காரணங்களுக்காக இவனை நிராகரித்திருந்தார்கள் பெண் வீட்டினர்.

“உனக்குன்னு ஒருத்தி இதுக்கு மேலயா ராசா பொறக்கப் போறா! எங்கயொ ஒளிஞ்சு வெளையாடறா! சீக்கிரம் வந்துடுவா பாரேன்!” எனத் துக்கத்தைக் காட்டாமல் சிரிக்கப் போராடும் மகனைச் சமாதானப்படுத்துவார் வேதலெட்சுமி.

அம்மாவின் நச்சரிப்புக்காகத்தான் இந்த முறை கிளம்பி இருந்தான் மன்மதன். வழக்கம் போல இதுவும் சரிப்படவில்லை என்றால், ஆத்துக்காரன் ஆவதை மறந்து விட்டு ஆன்மீகக்காரன் ஆகலாம் என முடிவெடுத்திருந்தான் இவன். மங்கையில் மூழ்கினால் மட்டுமா இன்பம்!! சிவனை நினைத்து கங்கையில் மூழ்கினாலும் இன்பம்தான்!

விமானத்தில் ஏற அழைப்பு வர, இருவரும் தாய் நாட்டைக் காணும் ஆவலிலும், தாயின் கை மணத்தை அனுபவிக்கப் போகும் ஆசையிலும் சந்தோசமாகப் புறப்பட்டார்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

மதுரைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கிராமத்தில்தான் இவர்கள் பார்க்கப் போன பெண்ணின் வீடு இருந்தது. வழியில் தெரிந்த ஒரு கோயிலைப் பார்த்து, வாடகைக் காரை நிறுத்தும்படி சொன்னார் மதனின் அம்மா.

“என்னம்மா?”

“இதாச்சும் தகையனும்னு வேண்டிட்டுப் போலாம்டா ராசா”

“ஆமாண்ணா! வா, வா! போய் ஒரு வேண்டுதலப் போடுவோம்” என காரிலிருந்து இறங்கினாள் மதனின் தங்கை மீனா.

மடியில் அமர்ந்திருந்த மூன்று வயது மருமகனைத் தூக்கிக் கொண்டு பெண்கள் இருவரின் பின்னால் நடந்தான் மதன். எங்கிருந்தோ ஒரு பெண் குழந்தை ஓடி வந்து இவனின் காலைக் கட்டிக் கொண்டாள். குனிந்துப் பார்த்துப் புன்னகைத்தவன்,

“என்னடா குட்டி?” எனக் கேட்டான்.

“தம்பி பாப்பா அழகா இருக்கானே! குடேன்! நான் தூக்கிக்கறேன்”

கருப்பாய் இருந்தாலும் களையாய் இருந்தாள் அந்தக் குட்டிப் பெண். குழந்தைக்காக கையைத் தூக்கியபடி, கன்னம் குழிய புன்னகைத்தவளைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.

அவள் வளர்த்திக்கு முட்டிப் போட்டு அமர்ந்தவன், மருமகனை அவள் அருகே காட்டினான்.

“நீங்க தூக்குனா தம்பிப் பாப்பா விழுந்துடுவாங்க! அதனால என் கிட்டவே இருக்கட்டும்! நீங்க உம்மா மட்டும் குடுத்துக்குங்க” என்றான் இவன்.

ஆசையாய் சின்னவனுக்கு முத்தமிட்டவள்,

“அக்கா வீட்டுக்கு வரியா? முட்டாயி தரேன்!” என அழைத்தாள்.

“சின்னு!” என அழைத்தப்படியே அவர்கள் அருகில் வந்து நின்றாள் ஒரு பெண்.

“அம்மா! தம்பிப் பாப்பாமா! அழகா இருக்கான்ல!”

முட்டிப் போட்டுக் கீழே அமர்ந்திருந்தவனைப் பார்த்த அந்தப் பெண்,

“யாருங்க?” எனக் கேள்வியாய் கேட்டாள்.

“இந்த ஊருல குலசாமின்னு ஒருத்தர் வீட்டுக்கு வந்திருக்கோம்” என்றபடியே எழுந்து நின்றான் மதன்.

“எங்கப்பாருதான்! ஓ!! என் தங்கச்சியப் பார்க்க வந்தவங்களா!” எனக் கேட்டவளுக்கு முகம் மலர்ந்துப் போனது.

“வாங்க! வாங்க! வீட்டுல எல்லாம் உங்களுக்காகத்தான் காத்திட்டு இருக்காங்க! நாங்க ரெண்டு பேர் மட்டும் எல்லாம் நல்லபடி நடக்கனும்னு வேண்டிக்க வந்தோம்!” என்றவள் குனிந்து தன் மகளைத் தூக்கிக் கொண்டாள்.

“நான் போய், நீங்களாம் வந்துட்டீங்கன்னு சொல்லறேன்! நீங்க நல்லா சாமிய கும்பிட்டு வாங்க!” என்றவள் கிளம்ப முற்பட்டாள்.

“நில்லும்மா! பொண்ணு வீடா நீ! எங்க கூடவே வந்திடேன் கண்ணு! வீட்ட வேற தேடிப் புடிச்சு போறதுக்குள்ள நல்ல நேரம் ஓடிடும்” என்றார் வேதலெட்சுமி.

கொஞ்சம் தயங்கியவள், பின் சரியென்று ஒத்துக் கொண்டாள். முன்னிருக்கையில் மருமகனோடு அமர்ந்த மதனுடன்தான் அமர்வேன் எனச் சின்னு அடம் பிடிக்க, தர்மசங்கடமாக நெளிந்தாள் இவள்.

“இருக்கட்டும்ங்க! இவன் கூட வெளையாடிட்டே வரனும்னு நெனைக்கறா! விடுங்க, நான் பார்த்துக்கறேன்” எனத் தன்னுடன் இரு குழந்தைகளையும் அமர்த்திக் கொண்டான் மதன்.

வழி நெடுக, வளவளவெனப் பேசிக் கொண்டே வந்தாள் சின்னவள்.

“இதான் மொதோ மொறை காருல ஏறுறேன் தெரியுமா! ஜில்லுன்னு நல்லா இருக்கு!” என மதனிடம் சொன்னவள், பின்னால் திரும்பிப் பார்த்து,

“ஆமாதானம்மா?” எனக் கேட்டாள்.

“ஆமா!”

சின்னவனின் கன்னம் தடவி முத்தமிட்டவள்,

“ம்மா! எப்போமா இந்த மாதிரி ஒரு தம்பிப் பாப்பா தருவ? கேக்கறப்பலாம் முறைக்கற, இல்ல அடிக்கற! சீக்கிரம் குடுமா! எனக்கு வெளாடா ஆளில்லாம சோகமா இருக்குத் தெரியுமா” என ஆரம்பித்தாள்.

“ஏய் வாய மூடுடி சின்னு! அம்மா அப்பிப்புடுவேன்” எனச் சிடுசிடுத்தாள் இவள்.

காரில் இருந்த மற்றவர்களுக்குத் தாய் மகளின் சம்பாஷனைச் சிரிப்பை வரவழைத்தது.

பின்னால் அமர்ந்திருந்த பெண்கள் மூவரும் சகஜமாகப் பேசியபடி வந்தார்கள். தன் தங்கையைப் பற்றி வானளவப் புகழ்ந்தபடி வந்தாள் அந்தப் பெண்.

“என் தங்கச்சி கருவாட்டுக் குழம்பு வச்சானா, ஊருக்கே மணக்கும்னா பார்த்துக்கோங்க” என அவள் சொல்ல,

“ஐயே! பொய் சொல்லாதம்மா! நெதம் நீதானே சமைக்கற! சித்தி திங்க மட்டும்தானே செய்யுது” எனப் போட்டுக் கொடுத்தாள் சின்னு.

அவள் அம்மா அசடு வழிய, முன்னால் அமர்ந்திருந்த மதனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“அது வந்து… சித்தி சமைச்சப்போ நீ தூங்கிட்டு இருந்தடி!” என ஒருவாறு சமாளித்தாள் அம்மாக்காரி.

“எங்க சித்தி சுடற வடைய சாப்பிடவே முடியாது!” என ஆரம்பித்து வைத்தாள் சின்னு.

சுவாரசியமாக,

“ஏன்?” எனக் கேட்டான் மதன்.

“சின்னு!!!” எனப் பின்னாலிருந்து மிரட்டினாள் அம்மாக்காரி.

“சின்னு!!! இப்படின்னு அம்மா கூப்டா, நான் வாயத் தொறக்கக் கூடாதுன்னு அர்த்தம். இல்லைனா அடிச்சுடும் அம்மா”

“அடிக்காம நான் பார்த்துக்கறேன்! நீங்க சொல்லுங்க!” என ஊக்கினாள் மீனா.

“ஏன்னா சித்தி படபடன்னு வாயால மட்டும்தான் வடை சுடுவா! அம்மாயி அப்படித்தான் சொல்லும்” எனப் போட்டுடைத்தாள் குட்டி.

அடக்கமாட்டாமல் வாய் விட்டு நகைத்தான் மன்மதன். அதற்குள் பெண் வீடு வந்திருந்தது.

“ட்ரைவர் அண்ணா! பச்ச பெயிண்ட் அடிச்ச வீடுதான் எங்களது!” எனக் காட்டிக் கொடுத்தவள், இவர்களிடம்,

“சின்னு சொன்னத மனசுல எடுத்துக்காதீங்க! தங்கச்சி ரொம்ப நல்லவ! உங்க மகனையும் உங்களயும் நல்லாப் பார்த்துக்குவா” என்றபடி காரிலிருந்து இறங்கினாள் அம்மாக்காரி.

வரவேற்க வாசலுக்கு வந்த சொந்தங்களில் ஒரு பெருசு,

“அடி வெளங்காத சிறுக்கி! உன்னை யாருடி இவங்க கூட ஒய்யாரமா ஊர்வலம் வரச் சொன்னது? நல்லக் காரியம் பேச வரப்ப, தாலியத்த மூளி, மூலையில முடங்கிக் கிடக்காம, முன்ன முன்ன வந்து நிக்கற?” எனச் சத்தம் போட்டார்.

கண்கள் கலங்கிப் போக, பட்டென சின்னுவைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடி விட்டாள் அவள்.

தங்களுடன் சிரித்துப் பேசியபடி வந்தவள், கண் கலங்க உள்ளே ஓடியதில் இவர்கள் மூவருக்குமே மனது கனத்து விட்டது.

“ஆத்தா! சும்மா இருக்க மாட்ட நீ!” எனக் கடிந்துக் கொண்ட பெண்ணின் தந்தை, இவர்களை உள்ளே வரவேற்றார்.

இரு அறைகள் கொண்டு சின்ன ஓட்டு வீடு அது! இவர்கள் அமர தரையில் பாய் விரித்து வைத்தார்கள். மருமகனை மடியில் அமர்த்திக் கொண்டான் மதன். இவர்களுக்கு கேசரியும், காபியும் வந்தது.

ஓடி வந்து மதனின் இன்னொரு பக்கம் அமர்ந்துக் கொண்டாள் சின்னு!

“எங்கம்மா செஞ்ச கேசரி! எப்படி இருக்கு? தம்பி பாப்பாக்கு குடுங்க” எனக் கிசுகிசுத்தாள்.

“உனக்கு?” என இவனும் கிசுகிசுத்தான்.

“கொஞ்சம்தான் செஞ்சாங்களாம்! அம்மா சட்டிய வழிச்சப்போ கொஞ்சமா என் வாயில வச்சா!”

தனக்கு வந்த மொத்தக் கேசரியையும் சின்னவளுக்கு ஊட்டி விட்டான் மதன்.

“உங்களுக்கு?”

“எனக்கு வயிறு நெறைஞ்சுடுச்சு”

இதைப் பார்த்தப் பெண்ணின் தாய்,

“ஏய் சின்னு!” எனக் குரல் கொடுக்க,

“இருக்கட்டும்ங்க! குழந்தைதானே!” எனச் சொன்னார் வேதலெட்சுமி.

“தரகர் ரெண்டு பொண்ணுங்கன்னு மட்டும்தான் சொன்னாரு! வேற விஷயம் எதயும் சரியா சொல்லல! ஜாதகம் பொருந்தி வரவும், வயசு வித்தியாசம் ரொம்ப இருந்தாலும், என் பையனுக்குக் கல்யாணம் நடந்தா போதும்னு நெனைச்சிக்கிட்டு எதையும் ஆழமா நானும் கேட்டுக்கல. சொல்லுங்கம்மா! பெரிய பொண்ணு விதவையா?” எனப் பட்டென உடைத்துக் கேட்டார் வேதலெட்சுமி.

“ஆமாங்க! சொந்தத்துலதான் கட்டிக் குடுத்தோம்! கொஞ்சம் சூதாட்டப் பழக்கம் இருந்துச்சுங்க அவனுக்கு. கல்யாணம் கட்டுனா சரியாப் போகும்னு கட்டி வச்சோம்! ஊரெல்லாம் கடன வாங்கிட்டு, அதக் கட்ட முடியாம கொழுத்திக்கிட்டு செத்துட்டான். அவன் செத்தும் கடன்காரனுங்க எம்மவள விடல. கம்பெனில வேலைப் பார்த்து, வீட்டுல துணி தைக்கற வெபாரமும் பார்த்துக் கடனக் கட்டி முடிச்சிட்டா! தங்கச்சிக்கு கொஞ்சம் நகை நட்டு சேர்த்து வச்சிருக்கா! சின்னவளுக்கு முடிச்சிட்டா, கால முச்சோடும் பெரியவள நாங்க வச்சுப் பார்த்துப்போம்” எனப் பெருமூச்சுடன் சொன்னார் பெண்ணின் அம்மா.

“இனி அந்தக் கவலை உங்களுக்கு வேணா! அவளயும் என் சின்னுவையும் நாங்க வச்சிப் பார்த்துக்கறோம்! எனக்குக் கட்டிக் குடுத்துடுங்க” என்றான் மதன்.

ஊசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்குப் பேரமைதி அங்கே!

அதிர்ச்சியாக எல்லோரும் வேதலெட்சுமியைப் பார்த்தார்கள்.

“கடன் சுமை என்னன்னு எனக்கும் தெரியுங்க! சின்ன வயசுலயே தாலியத்துப் போனா, என்னென்ன கஸ்டம் வரும்னு அனுபவப் பாடமா படிச்சவ நானு! என் மகன் முடிவுல எனக்குப் பூரணச் சம்மதம்” எனச் சிரித்த முகமாகச் சொன்னார் அவர்.

உள்ளே தட்டென பாத்திரம் விழும் சத்தமும், ஒரு பெண்ணின் குமுறி அழும் ஓசையும் கேட்டது.

“எனக்கு ஒரு மண்ணும் வேணா! தங்கச்சியக் கட்டிக்கிட்டுப் போக சொல்லுங்க!” எனத் தேம்பியபடி குரல் கொடுத்தாள் பெண்.

பட்டுச் சேலை அணிந்திருந்த சின்னப் பெண் ஒருத்தி அறையிலிருந்து மெல்ல வெளியே வந்தாள். நேராக மதனின் அருகே வந்தவள்,

“கையைக் குடுங்க மாமா! எங்கக்கா இப்படியே இருந்துடுவாளோன்னு எத்தனை நாள் தவிச்சிருக்கேன்! இப்போத்தான் நிம்மதியா இருக்கு எனக்கு! இந்தக் கல்யாணம் கண்டிப்பா நடக்கும்! நான் நடத்தி வைப்பேன்” என்றாள் தங்கைக்காரி.

உள்ளே மீண்டும் இன்னொரு பாத்திரம் விழும் ஓசைக் கேட்டது.

“டேய் அண்ணா! நீ சம்பாதிக்கற பணமெல்லாம் இனி பாத்திரம் வாங்கறதுக்குத்தான் செலவாகும் போல! அண்ணி டெரர் பீஸா இருக்காங்களே!” எனக் கிசுகிசுத்தாள் மீனா.

“சவுதில இருந்து வந்ததும், நானே பாத்திரக் கடை வச்சிடவா?” என யோசிக்க ஆரம்பித்தான் மதன்.

அன்று அவர்களுக்கு முதலிரவு. பால், பழம் இல்லை. ஊதுபத்தி மணமில்லை. அல்வா வைக்கவில்லை. ஆர்ப்பாட்டமில்லா முதலிரவு அது.

உள்ளே கட்டிலில் மதன் படுத்திருக்க, அவன் அருகே தூங்கிக் கொண்டிருந்தாள் சின்னு! அமைதியாய் உள்ளே வந்து இன்னொரு பக்கம் அமர்ந்துக் கொண்டாள் மைவிழி. பெற்றவர்களின் மிரட்டல், தங்கையின் வற்புறுத்தல், சின்னுவின் அழுகை என இவளை எல்லோரும் பாடாய்ப் படுத்திதான் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்திருந்தார்கள்.

“’இங்க் ஐ’” என மெல்லியக் குரலில் அழைத்தான் மதன்.

“ஆங்!! என்ன சொன்னீங்க?”

“மைவிழின்னு இங்கிலீசுல கூப்பிட்டேன்”

“ஓஹோ!”

எழுந்து வந்து அவள் அருகே அமர்ந்துக் கொண்டான் இவன்.

“கடன் அன்பை முறிக்கும்னு சொல்வாங்க தெரியுமா?” எனச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இவன் கேட்க,

“தெரியும்” என்றாள் இவள்.

“ஆனா நம்ம விஷயத்துல கடன் அன்பை இறுக்கிடுச்சுத் தெரியுமா!”

புரியாமல் இவள் பார்க்க,

“உன்னைப் பரிதாபப்பட்டுக் கட்டிக்கிட்டேன்னு நீ நெனைச்சிருப்ப! ஆனா உண்மை அது இல்ல விழி! உன்னை நான் ரொம்ப பெருமையா, மரியாதையாப் பார்க்கறேன்! ஆம்பள நானே கடனக் கட்டி முடிக்க என்ன பாடுபட்டேன் தெரியுமா! ஆனா நீ, ஒத்தை மனுசியா பேயா உழைச்சு தலை நிமிர்ந்து நின்னிருக்க! என்ன பொண்ணுடா சாமின்னுதான் தோணுச்சு உன்னைப் பத்தி தெரிஞ்சதும்! கல்யாணம் பண்ணனும், பேர் சொல்லப் புள்ளப் பெத்துக்கனும்னு சராசரி மனுஷனாதான் யோசிச்சேன். என்னைப் போலவே முள் பாதையைத் தாண்டிதான் நீயும் வந்திருக்கன்னு தெரிஞ்சதும், இப்போ அந்த பாதத்துக்கு செருப்பா இருக்கனும்னு தோணிடுச்சு விழி!”

அமைதியாய் அமர்ந்திருந்தவள், மெல்ல அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“எல்லாப் பொண்ணுங்க போலவும் எனக்கும் கலர் கலரா கல்யாணக் கனவு இருந்துச்சு! ஆனா, நான் கட்டிக்கிட்ட மனுஷன் என் கனவைப் குரங்குக் கையில கெடைச்சப் பூமாலைப் போல பிச்சுப் போட்டுட்டான். சின்ன வயசுலயே நெஞ்சுல பலமான அடி வாங்கிட்டேன்! கல்யாணம், காதல் இது மேலெல்லாம் வெறுப்பு வந்திடுச்சு! பணம் சம்பாரிக்கனும், என் மகள நல்லபடியா வளர்த்து விடனும்னு தான் வாழ்ந்துட்டு இருக்கேன்! பட்டுப் போன மரம் நான்! இதுல பாசம் வேணும்னா கொஞ்சமா துளிர்க்கும்! நேசம் துளிர்க்குமான்னு தெரியலைங்க! அதனாலத்தான் கல்யாணம் வேணாம்னு நின்னேன். நீங்க புடிச்சப் பிடிவாதத்துல என்னைக் குண்டுக் கட்டாத் தூக்கிட்டு வந்து இங்கப் போட்டுட்டாங்க”

“விழி! பாசம்னு கோட்ட மட்டும் நீ போடு! அதுல நேசத்த ரோடாப் போட்டு, காதல தாரா ஊத்தி, குழந்தைக் குட்டின்னு ஹைவே போட்டு நம்ம குடும்பத்த நான் கரையேத்திடறேன்” என்றவனின் கூற்றில் மெல்லியப் புன்னகை வந்தது இவளுக்கு.

“விழி! என்னைப் புருஷனா ஏத்துக்க கண்டிப்பா டைம் எடுக்கும் உனக்கு! இப்போவே எல்லாத்தையும் நடத்திக்கனுங்கற அளவுக்கு காஞ்சிப் போய் கிடந்தாலும், உனக்காக கண்டிப்பா நான் வெய்ட் பண்ணுவேன்! இத்தனை வருஷம் கல்யாணம் ஆகாத பேச்சலரா இருந்தேன்! இன்னும் கொஞ்ச நாளைக்குக் கல்யாணம் ஆகியும் பேச்சலரா இருந்துட்டுப் போறேன்!” என்றவன்,

“விழி!!” எனக் கெஞ்சலாக அழைத்தான்.

“ஹ்ம்ம்!”

“ஒரே ஒரு முத்தம் மட்டும் குடுத்துக்கவா?”

இவள் முறைப்பாய் பார்க்க,

“இல்லடி! மன்மதன்னு பேரு வச்சிக்கிட்டு இத்தனை வருஷத்துல ஒரு முத்தம் கூட யாருக்கும் குடுத்தது இல்லைன்னு வெளிய தெரிஞ்சா உன் புருசனுக்குத்தானே அவமானம்? அதான் கேட்டேன்” என்றான்.

“போயா போய் படு!” எனப் பத்தி விட்டாள் அவனை.

சின்னுவின் ஒரு புறம் இவனும், மறு புறம் இவளும் படுத்துக் கொண்டார்கள்.

நடு இரவில், நெஞ்சில் பாரமாய் எதுவோ அழுத்த, மெல்லக் கண் விழித்தான் மதன். அவன் நெஞ்சில் தலை வைத்துப் படுத்திருந்தாள் விழி.

“என்னடி?” கிசுகிசுப்பாய் அவன் கேட்க,

“மன்மதன்னு பேரு வச்சிக்கிட்டு, ஒருத்தியக் கூட இது வரைக்கும் கட்டிப் புடிச்சது இல்லைன்னு என் புருஷன யாரும் கேவலமாச் சொல்லிடக் கூடாதுல! அதான், கட்டிக்கிட்டேன்!” என்றவள், சுகமாய் உறங்கிப் போனாள்.

புன்னகையுடன் இவனும் உறங்கிப் போனான்.

காலம் மெல்ல இருவரையும் இணைத்து வைக்கும்! கடனால் இணைந்தவர்கள், காதலால் பின்னிப் பிணைந்துக் கொள்வார்கள். இவர்கள் காதல் கடன் போடும் வட்டி மட்டும் சுமையாகாமல் சுகமாய் குட்டிப் போடும்!

முற்றும்.

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...