ஊழ் வினை

கற்பனை
4.9 out of 5 (56 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

ஊழ் வினை

ஆண்டவா! உனக்கு கண் இல்லையா!.. நாங்க உனக்கு என்ன பாவம் செஞ்சோம்!.. என் குடும்பத்தை இப்படி நடுத்தெருவுல நிறுத்திட்டியே!.. இரண்டு பச்ச பிள்ளைங்கள வச்சுட்டு இனி என் மக என்ன பண்ண போறாளோ! என்ற கதறல் குழுமியிருந்த அனைவரையும் கலங்க வைத்தது...

தன்னவனின் முன் வழித்தெடுத்து நீவிய கேசத்தில் தழைய தழைய மல்லி பூவுடன், அவளின் படர்ந்த நெற்றியில் பெரிய குங்கும பொட்டுடன் அழகாய் வீற்றிருக்க வேண்டியவளோ , தலைவிரி கோலத்துடன் குங்கும பொட்டு வியர்வை துளிகளில் கரைந்து நெற்றி முழுவதும் விரவியிருந்தபடி அமர்ந்திருந்தாள்...

வருவோரும் போவோரும் சிறிது சிறிது நிமிடம் கட்டியணைத்து அழுது தீர்த்திட, அவள் மிழிகள் மட்டும் ஏனோ தன் முன் படுத்திருந்த நவநீதகிருஷ்ணனை வெறித்து நோக்கியபடி இருந்தது..

"அம்மா அப்பாக்கு ஏன் மாலை போட்டு படுக்க வச்சுருக்காங்க, அப்பா இன்னைக்கு டாட்டா போலானு சொன்னாங்கள்ள,நான் எழுப்புறேன்" என்று பால் மணம் மாறாத மழலை பேசிய படி தன் தந்தையை எழுப்பிட சுற்றியிருந்தோரின் மனம் பாரமாகி பலர் மிழிகள் நிறைந்தது உவர்நீரால்...

"அடியே! ராதா! பாரு டி உன் மவ பேசுறத, இந்த பச்ச மண்ண தவிக்க விட்டுப்போக இந்த பாவி பயலுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ தெரியலையே" என்று கிழாத்திகள் பலர் கூறி அழுக, சுற்றத்தாரின் குரல் இவள் செவிக்குள் நுழைய மூளையானதோ அனுமதி தர மறுத்து கடந்த இரண்டு மாத நினைவுகளை அவளுக்குள் மீண்டும் ஊடுருவைத்தது...

கந்தசஷ்டி கவசம் வீடு முழுவதும் ஒலிக்க, மூலிகை சாம்பிராணி புகையுடன் மங்கலகரமாக வீட்டை வலம் வந்த ராதா இறுதியாய் வீட்டின் பூஜையறையில் வந்து நின்றாள்... என்ன வேண்டும் என்று வேண்டிக் கொண்டாளோ தெரியவில்லை கண்ணீர் துளிகள் ஏனோ சொட்டு நீர் பாசனமாய் கூப்பிய விரல்களில் வழிந்தது...

வீட்டின் நுழைவாயில் சத்தம் காதில் கேட்க, முகத்தைத் துடைத்து அவசரமாய் கதவைத் திறக்க, சிரித்த முகமாய் நவநீதகிருஷ்ணன் நின்றிருந்தான்... உள்ளூர வலியை மறைத்தபடி சிரித்தவள்.. "வாங்க" என்றபடி உள்ளே நுழைய அவனும் பின் தொடர்ந்தான்...

"என்னாச்சு ராதா ஏன் இந்த கலக்கம் உன் குரல்ல"

"ஒன்னுமில்ல" என்றவள் அடுக்களை நுழைந்து காபியை கலக்கினாள்

"ஏய் ராதா இதெல்லாம் நான் எதுக்காக பண்றேன் எல்லாம் நம்ம எதிர்காலம் நல்லா இருக்கனும்னு தான" என்றவனிடம் காபி கோப்பையை நீட்டினாள்…

வாங்கியவன் ஓரம் வைத்து "இப்ப இதுக்கா உன் பின்னாடி வந்தாங்களாம்" என்றவன் சலித்துக் கொள்ள, அவன் மார்போடு சாய்ந்து கொண்டாள்... வாஞ்சையாய் தலையை வருடியவன் "பாப்பா எங்க"

"உங்க பொண்ணு தான போய் பாருங்க நீங்களே" என்றவள் விலகி தன் அன்றாட அலுவல்களை கவனிக்கத் தொடங்கினாள்...

"நிலனிகா தங்கம் எங்க இருக்கீங்க" என்றபடி அறைக்குள் நுழைய சப்தம் மட்டும்‌ வெளிவந்தது... "அப்பா எங்க இருக்கேன்னு பாருங்க" என்று கட்டிலின் அடியில் அமர்ந்தபடி தலையை மட்டும் நீட்டிட,

"அடி தங்கக் கட்டி அங்க என்ன பண்றீங்க" மண்டியிட்டு அமர்ந்தான்

"ஹிஹிஹி" என்று அழகாய் அணில் பற்கள் கொண்டு சிரித்திட மழலையை வெளியே இழுத்து ஆழ்ந்து அணைத்துக் முத்த மாரி பொழிந்தான்...

"அப்பா விடு அப்பா விடு" என்று மகள் அணத்தி எடுக்க, அவன் தொ(ல்)லைபேசியும் அணத்தியது...

"ஓகே டா! ஓகே!" என்றவன் அவளை மீண்டும் முத்தமிட்டு விடுத்து தொலைபேசியை எடுத்துப் பார்த்தான் "வி பார்ட்டி" என்ற பெயராய் அவன் தொடுதிரையில் தெரிய பச்சை நிற பொத்தானைத் தடவி "அஞ்சு நிமிசத்துல வந்துருவேன்" என்றவன் தடாலடியாய் எழுந்திட"அப்பா நானு டாட்டா வரேன் நானும் டாட்டா வரேன்" என செல்ல மகள் சினுங்குவதையும் புறக்கணித்து "ஏங்க சாப்பிட்டு போலாம்ல" என்ற மங்கையவளையும் மதிக்காமல் புல்லட்டை எடுத்துக்கொண்டு புயல் வேகத்தில் கிளம்பினான்..

அவனின் சம்சாரமானவளோ எதையும் வெளிக்காட்டாமல் அழுது கொண்டிருந்த ஆசை மகளை வாரியணைத்து செல்லம் கொஞ்சி சமசரம் செய்து உணவூட்டினாள்...

வீட்டில் இரண்டு மணிநேரம் இருப்பதையே ஒரு வாரமாக செயல்படுத்தினான்.. வீட்டில் உணவும் இல்லை.. உறக்கமும் இல்ல.. இதனால் வெறுமை அவள் மனதில் தடம் பதித்து சிம்மாசமிட்டது..

'என்ன வாழ்க்கை இது பணம் பணம் ஓடிட்டு இருக்காரு கேட்டா நம்ம எதிர்காலம்னு ஏதேதோ சொல்லி வாயடைக்கிறாரு... கடைக்கு எப்பதான் வராரு போராருனு கண்டிப்பா இன்னைக்கு தெரிஞ்சுகிட்டே ஆகனும்'

வீட்டின் அருகாமையில் இருந்த தன் தாயின் வீட்டில் குழந்தையை விட்டுவிட்டு தன்னவனின் கடைக்குச் செல்ல முடிவெடுத்தவள் சரியாக அவன் சென்று ஒருமணி நேரத்தில் ஆட்டோவின் துணையுடன் கடையை அடைந்திருந்தாள்... ஆட்டோவை தூரத்தில் நிறுத்தி கடையை கண்காணித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென காவல்துறை அதிகாரிகள் சிலர் ஒரு மகிழுந்தில் இருந்து இறங்கினர்... நொடிக்குள் அங்கே கூட்டம் கூடியது

பார்த்தவளுக்கு வியர்வை மொட்டுக்கள் பூத்திட "அண்ணா அங்க என்ன கூட்டம்னு மட்டும் பாத்துட்டுவறிங்களா?" என்று கேட்க அமைதியான ஆட்டோ ஓட்டுநரும் சென்றார்.. சுமார் அரைமணி நேர அக்கூட்டம் கலைந்த பின்பே இவரும் வந்திருந்தார்... வந்தவர் அனைத்தையும் அப்படியே ஒபபித்தார்.. பல விடயங்களை சேகரித்தபடி கலங்கிய நயனங்களோடு வீடு வந்து சேர்ந்தாள்...

சுமார் ஆறு மணியளவில் வீட்டை அடைந்த கிருஷ்ணா வழக்கம் போல் நடப்பவை அனைத்தையும் மறைத்து உறவாடிட, ராதாவிற்கோ தான் தெரிந்த கொண்ட உண்மைகளை மனதினுள் பூட்டி வைக்க இயலவில்லை...

"பாப்பா எங்க டா"

"அம்மா வீட்ல"

"நான் இன்னைக்கு சீக்கிரம் வந்துடுவேனு தெரியும்ல ஏன் கொண்டு போய் விட்ட?"

அதுவரை பரபரவென்று பாத்திரத்தை துலக்கியவள் அவன் கூறிய வார்த்தையில் கையிலிருந்த பாத்திரத்தை அப்படியே நழுவவிட்டாள்...

" இன்னைக்கு நீங்க மாமியார் வீட்ல இருப்பீங்கனு நினைச்சு தான் பாப்பாவ அங்க விட்டேங்க"

குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து குளிர்பானம் அருந்தியவனுக்கு தொண்டையை நனைக்க வேண்டிய தண்ணீரோ தலைக்கு ஏறியது போல் இருமினான்... நெஞ்சைக் கல் ஆக்கியவள் அமைதியாய் வேலையைத் தொடர்ந்தாள்...

அவள் வார்த்தைகள் வந்த விதம் அவன் மனதை பிசைந்தது... திருடனுக்கு தேள் கொட்டிய நிலையாய் தன்னிலையறிந்து அமைதி காத்தான்.. இரவு உணவை ரத்து செய்தவன் வெளியே செல்ல மனமின்றி உறங்க எண்ணினான்... அங்கும் நிம்மதியின்றி மொட்டை மாடிக்குச் செல்ல அவளானவளோ கண்ணீர் மல்க கதறிக் கொண்டிருந்தாள்...

அவளின் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டவனுக்கு அப்படியே ஈரக்குலை ஆடிப் போனது...

"நானும் என் பொண்ணும் சாகுறதுதான் சரி.. இப்படி கேவலமான வேலை பாக்குற மனுஷனோட குடும்ப நடத்துனுத நினைச்சு எனக்கு கேவலமா இருக்கு... இத்தனை நாள் இப்படிபட்ட காசுல தான் நானும் என் பொண்ணும் உயிர் பிழைச்சோம்னு நினைக்கும் போது அருவருப்பா இருக்கு... நாங்க செத்தாதான் அந்த மனுஷன் திருந்துவாரு.. இப்பவே போய் என் குழந்தையை கூட்டிட்டு வரப்போறேன் நாளைக்கு எங்களை பிணமாதான் என் புருஷன் பாக்கனும்"

"ராதா" என்று அடித்தொண்டையில் இருந்து கத்தியவன் தன்னவளைச் சேர்ந்தான்.. அவன் அலறலில் தொலைபேசியைத் தவறவிட அது தனித்தனி பாகமாய் பிரிந்து விழுந்தது...

"ஏன்டி இந்த மாதிரி ஏதேதோ உலறிட்டு இருக்க" அவள் தோள்களைக் குலுக்க விரக்தியாய் சிரிப்பை உதிர்த்து அவன் கைகளை உதறிவிட்டாள்...

"இன்னும் என்ன இருக்கு.. நான் கூட நீங்க ராத்திரி பகல்னு பாக்காம உழைக்கிறிங்களேனுதான் கவலை பட்டுட்டு இருந்தேன்... ஆனா நீங்க இவ்ளோ கீழ்தரமா, அதும் சட்டத்துக்கு புறம்பான வேலையெல்லாம் பாப்பீங்கனு நான் கனவுல கூட நினைச்சது இல்ல..."

"நானா" குட்டு வெளிப்பட்டு அவள் முன் புழுவாய் கூனிக் குறுகினான்..

சீமாட்டியின் அனல் கக்கும் பார்வையில் சாம்பலாகிப் போனான்.. கடைக்கு வந்து தெரிந்து கொண்ட மெய்யை விளக்கினாள் பாவையவள்

"சாரி தங்கோ, தப்புதான் தப்புதான்" காப்புக் காய்ச்சிய உள்ளங்கைகளால் அவன் முகத்தையே அடித்து தடிக்க வைத்தான்...

"நிறுத்துங்க! உங்க நாடகத்தை.. சொல்லுங்க! இப்பவாச்சும் இன்னும் என்னவெல்லாம் பண்றீங்க.. போலீஸ் எதுக்கு வந்துச்சு" சட்டையை கோர்த்து பிடித்தாள் தெளிவான மதியுடன் என்ன செய்கிறோம் என்றறிந்தே!...

"அது க...ஞ்...சாவை சட்...டத்துக்கு புறம்பா வித்...துட்டு இருந்...தேன்" சொல்லும் போதே குரல் விம்மி முன்னும் பின்னுமாய் வெளிவந்தது; கூனி குறுகினான்; அவள் முகம் பார்க்க முடியாமல் சுவற்றில் புதைத்தவன் தொடர்ந்தான்..

"வழக்கமா வாங்குற டீலர்கிட்ட வாங்காம வெளியூர்ல இருக்க ஒரு புது பார்ட்டி கிட்ட கஞ்சா வாங்கினேன்.. அது எப்படியோ தெரிஞ்சுகிட்ட உள்ளூர் டீலர் போலீஸ்ல போட்டுக் குடுத்துட்டான்" என்று ஆவேசமாய் பேச எண்ணிய வார்த்தைகளை மென்று முழுங்கினான்

"பாவி! பாவி!" தலைதலையாய் அடித்தவள் "இதெல்லாம் எத்தனை வருஷமா டா செஞ்சுட்டு இருந்த? எத்தனை குடும்பத்தை கெடுத்தியோ எத்தனை பேர் அப்பா,அண்ணன், தம்பி, புருஷன் இல்லாமா வாழுறாங்களோ? இன்னும் வேற எதாச்சும் என்ட இருந்து மறைக்கிறியா? தயவு செஞ்சு சொல்லுடா! சாமிகிட்ட மொத்தமா பாவ மன்னிப்பு கேட்கலாம்.. நம்ம தப்ப உணர்ந்து திருத்திக்கிட்டா கண்டிப்பா சாமி நம்மல தண்டிக்காது"

பயத்தோடு கலந்த அறம் நிறைந்தவள்; ஒழுக்கமே உயிரினும் மேலானாது; தீயவைகளை செய்தால் நிச்சயம் நன்றாக வாழ முடியாது என்று ஆணித்தரமாய் உணர்பவள் அதனால் மனதில் இருந்தவைகளை சலித்தெடுக்காமல் உலறினாள் தலையில் அடித்தபடி...

"அது.. வழக்கம் போல சிகரெட் தான் கடையில வச்சு விக்கிறேன்.. இனி சிகரெட்டை கூட விக்கிறத கூட நிறுத்திடறேன் நீ இப்படி பண்ணாத எனக்கு பயமா இருக்கு ப்ளீஸ்" என்றவனின் அழுகுரலைக் கேட்காமலேயே மாது அவள் மயங்கினாள்..

அள்ளி எடுத்தவன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.. ஒரு வாரம் அங்கேயே பொழுது கழிந்தது… அதீத யோசனை; அதீத கோபம்; அதீத மகிழ்ச்சி என எதுவும் கூடாது என்ற மருத்துவரின் எச்சரிக்கைக்கு பின்பு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள்...

ராதாவின் உடல்நிலை மெல்லத் தேறி வந்தது.. அனைத்தையும் விட்டொழித்தவன் தன் மனநிலையை ஆன்மீகத்தின் பக்கம் திசை திருப்பியிருந்தான்... பல நூறு முறை பல ஆன்மீக சொற்பொழிவைக் கேட்டான்... கிருஷ்ணாவின் புது அவதாரம் ராதாவைக் கூட அசைத்திருந்தது..

திடீரென துயில் கலைந்தவள் போல் நிகழ் காலம் வரவழைத்திருந்தனர் உற்றத்தார்.."அம்மாடி ஒரு வாய் சாப்பிடு புள்ளத்தாச்சி இப்படி இருக்கக்கூடாது வெறும் வயிறா இருக்கக் கூடாதுமா.." அன்னையாக மாறியிருந்த அத்தையை பார்த்தவள் அடிவயிற்றைத் தடவியபடி மீண்டும் நவநீதனை வெறித்தாள்...

நினைவலை மீண்டும் மனதில் அடித்திட அந்த கடைசி நிமிடங்களை எண்ணியவள் அடிநாளத்திலிருந்து "கிருஷ்ணா" என கதறியபடி சரிந்து மூழ்கினாள் அந்நாளின் வைகறை பொழுதிற்கு..

அதிகாலை துயில் கலைந்தவள் பலமுறை மன்றாடி மன்னிப்பு கேட்ட கண்ணாளனை மாதக் கணக்கில் புறம் தள்ளியதை நினைத்து வருந்தினாலும் அவனின் அற்புத மாற்றம் அவளை அன்பானவளாக்கியது..

முகமெல்லாம் பூரிப்புடன் தன்னாளனிடம் மீண்டும் அப்பாவாகப் போகும் ஆனந்தத்தை பகிர்ந்திட ஆசைப் பெருக்கெடுத்தவள் சயனம் கொண்டிருந்தவனின் அருகில் சென்று கேசத்தை வருடிவிட அசைவின்றி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனுக்கு நெற்றி முத்தம் பரிசளித்தாள்... "சாரிடா நான் ஒரு வாரம் பெட்ல இருந்தப்பவே நமக்கு பாப்பா வரப் போறது எனக்குத் தெரியும் ஆனா நான் சொல்லல சாரி"

புரண்டு கூட படுக்கவில்லை என அப்போதும் அவளுக்கு புலப்படவில்லை... ஆசைத்தீர காதல் கணவனிடம் காதல் வார்த்தைப் பேசியவளுக்கோ மெல்ல புரிய ஆரம்பித்தது... உரிமையானவன் உணர்வற்று கிடக்கிறான் என்று‌‌.. ஆனால் பேதையவளோ கருவின் நிலையறிந்து துளியும் அச்சம் கொள்ளாமல் அருகில் இருப்பவரை அழைத்து "கிருஷ்ணா மயங்கிட்டான் ஹாஸ்பெட்டல் போனும் வாங்க" என்றாள்..

"நீ இரு மா நான் பாத்துக்குறேன்" என்ற அண்டை வீட்டார் ஒருவர் கூறி கிருஷ்ணாவை தூக்கினார்.. தானும் வருவதாய் கூறியவளிடம் அவரின் மனைவி "பாப்பா தூங்குறா பாரு… நீ இரு நாங்க பாத்துக்குறோம்"

ராதாவிற்கு மறுத்து பேச மனம் வரவில்லை... அப்படியே அவன் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குள் சென்றமர்ந்தாள்.. திடீரென கிருஷ்ணாவின் அலைபேசி ராகம் பாடிட நினைவூட்டல் என்று காட்டியது தொடு திரை.. எடுத்தவள் என்னவென்று பார்க்க கிருஷ்ணா "அம்மு என் கபோர்ட்ல செகண்ட் செல்ஃப் பாரேன்; அதுல பிங்க் கலர் ஃபைல் இருக்கும்;அதுல உனக்கு ஒரு லெட்டர் இருக்கும்" என்று எழுத்துவடிவில் இருந்தது.. அதை எடுத்து வந்து அமர்ந்தாள்

"அம்மு! இத படிக்கும் போது நிச்சயம் நான் உன் பக்கத்துல இருக்க மாட்டேன்.. இத நீ லேட்டா படிச்சினா நான் நம்ம வீட்ல கூட இருக்கமாட்டேன்... அம்மு! உனக்கு ஒன்னு சொல்லவா எனக்கு கேன்சர் இருக்காம்... நான் என்னைக்காச்சும் தம் அடிச்சோ பான்பராக் போட்டோ ஏன் இன்னும் எத்தனையோ போதை பொருள்களெல்லாம் இருக்கு, அதுல எதாச்சும் யூஸ் பண்ணி பாத்துருக்கியா ஆனா எனக்கு லங் கேன்சர்.. காரணம் கேட்டா நீயே அசந்திடுவ.. நான் ஸ்மோக் பண்ணலைனாலும், புகையை சுவாசிச்சதால வந்ததாம்..

நான் வித்த சிகரெட்ல போதை பொருள் நிறைய சேத்துருக்கேன்.. பீடில கஞ்சா இலையை கூட சுருட்டி வச்சுருக்கேன் இந்த மாதிரி நான் நிறைய வித்துருக்கேன்.. வாங்குனவங்க எல்லாரும் அங்கேயே நின்னு அத யூஸ் பண்ணதால தான் எனக்கு இந்த நிலைமை... ட்ரீட்மெண்ட் எடுத்தாக்கூட காப்பாத்த முடியாதாம்... அதுனாலதான் நான் இந்த முடிவு எடுத்தேன்…

நீ அடிக்கடி சொல்லுவியே அறம்.. இல்லறம் அது நல்லறமா இருக்கனும்னு.. அந்த அறம் தவறி நான் நடந்துகிட்டதால தான் இந்த நிலைமை...

ஆனா என்ன உன் வாழ்க்கையையும் நம்ம பாப்பா வாழ்க்கையையும் சீரழிச்சுட்டேன்.. என்ன மன்னிச்சிடுங்க..எப்ப வேணாலும் சாவ எதிர் பாக்குற எனக்கு, ஏன் நீ என் கூட பேசாம இருக்கும் போது சாகக் கூடாதுனு சோனுச்சு.. அதான் இப்பவே முடிவ தேடிக்கிட்டேன்...

உங்க கூட இனி என்னால இருக்க முடியாதுனு நினைக்கும் போது என்னால தாங்கிக்க முடியலை.. மிஸ் யூ டி; லவ் யூ டி; பாப்பாவ பத்திரமா பாத்துக்கோ; நீங்க சந்தோஷமா வாழனும் இது தான் என் கடைசி ஆசை..

அம்மு! சாகமுடிவெடுத்த பிறகு நான் ஒரு சொற்பொழிவு கேட்டேன் அம்மு அது என்னத் தெரியுமா?

ஊழ்வினை என்பது, நாம் செய்யும் செயல்கள் இவ்வுலகில் மற்றவர்கள் மேல் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதன் விளைவுகளை நாமே துய்க்க, உலகு நமக்குத் திருப்பி அளிப்பது. நாம் உலகிற்கு நல்லது செய்தால் நமக்கு நன்மை விளையும்; உலகிற்குக் கெடுதல் செய்தால், நமக்குக் கெடுதல் விளையும்"

"ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்"

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...