JUNE 10th - JULY 10th
நட்பு என்பது யாதெனில்...
குணா..
நம்பினவர்களை ஏமாற்றலாமா? ரொம்ப நாளாகவே எனக்கு இந்த சந்தேகம். என் பெயர் குணசேகரன். சுருக்கமா குணா. சின்ன வயதில் ரொம்ப வறுமை. அப்பா சரியில்லை. இன்னொரு பெண்ணை சேர்த்துக்கொண்டு சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அவளிடம் கொடுத்துவிட்டு, குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அம்மாவை அடிப்பார். அம்மா பல வீடுகளில் வேலை செய்து கஷ்டப்பட்டாங்க. சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டம். அதனால் நியாயம், தர்மம் இதையெல்லாம் பெரிதாக நினைப்பது இல்லை. எப்படியாவது வாழ்க்கையில் மேல வரணும், நான் படும் கஷ்டம் என் குழந்தைகள் படக் கூடாது என்ற வெறி. ஏமாற ஒருவன் இருக்கிறானென்றால் ஏமாற்ற ஒருவன் இருந்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். மத்தவங்களை ஏமாற்றியது பற்றி கவலைப்படவில்லை. சரவணனை ஏமாற்றியது மட்டும் என் மனதில் உறுத்திகொண்டே இருக்கிறது. பள்ளி காலத்திலிருந்து நண்பன். எனக்கு எவ்வளவோ செய்திருக்கிறான். அப்படிப்பட்டவனை பல முறை அவனுக்கு தெரியாது என்ற நம்பிக்கையில் ஏமாற்றி இருக்கிறேன். ஒரு ஆத்திரத்தில் போன் முறை இதுவே கடைசி என்று நினைத்து அவனுக்கு தெரிந்தாலும் பரவாயில்லை என்று ஏமாற்றிவிட்டு ஓடினேன். நினைத்தது நடக்காமல் இதோ மறுபடி சரவணனிடம் வேலை தேடி வந்திருக்கிறேன்.
சரவணன்..
நம்பினவர்கள் ஏமாற்றும் போது மறுபடி அவர்களை நம்பலாமா? சின்ன வயதில் இருந்தே எனக்கு இந்த குழப்பம். நான் சரவணன். பிறந்தது, வளர்ந்தது, இப்பொது தொழில் செய்வது எல்லாமே திருப்பூர். மனைவி ப்ரியா. கோவையில் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் என்னுடன் படித்தவள். மூன்று வயதில் ஒரு மகள் ‘வெண்ணிலா’. சொந்தமாக ஒரு ’ரெடிமேட் ஆடைகள்’ தைத்து விற்கும் நிறுவனம் நடத்துகிறேன். வியாபாரம், குடும்பம் எல்லாம் நல்லபடியாக அமைந்தாலும் என் மனதில் ஒரு குறை. என் பால்ய நண்பன் குணா. பள்ளிக்கால நட்பு என்பது எப்பவுமே மனதுக்கு நெருக்கமானது. அதிலும் நமக்கு சில பேரை ஏன் பிடித்து விடுகிறது, அவர்கள் என்ன செய்தாலும் நம்மால் ஏன் அவர்களை வெறுக்க முடிவதில்லை என்பது தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டது. குணா கடவுளாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டவன். அதனால்தானோ என்னவோ அவனுக்கு உதவி செய்து கொண்டே இருந்தேன். சமயத்தில் என்னையும்கூட ஏமாற்றியிருக்கிறான். ஆயினும் மறுபடி என்னிடம் வரும்போது என்னால் மறுக்க முடிவதில்லை. ஒருவேளை இதற்குப் பெயர்தான் நட்போ என்னவோ?! சில மாதங்கள் முன் என்னிடம் வேலை பார்த்தபோது பொய்க்கணக்கு காட்டி பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி விட்டான். இப்போது என்னிடம் மறுபடி வேலை கேட்டு வந்து வரவேற்பறையில் காத்துக் கொண்டிருக்கிறான்.
குணா...
நானும் சரவணனும் திருப்பூரில் 1990 களில் ஒன்றாக படித்தோம். பக்கத்து வீடு. சரவணனின் அப்பா வாலிபாளைத்தில் மளிகைக்கடை வைத்திருந்தார். பள்ளி விட்டு வந்தவுடன் சரவணன் கடையைப் பார்த்துக்கொள்வான். அவன் அப்பா கடையில் இல்லாத நேரமாக போனால் கமர்கட்டு, தேன்மிட்டாய் என்று ஏதாவது ஒன்றை என் கையில் திணிப்பான். என் வீட்டில் சாப்பாடு இருக்காத நாட்களில் நான் தனியாக பிஸ்கெட், அது இது என்று சாப்பிடும் பொருட்களை சரவணனுக்கு தெரியாமல் எடுத்துக் கொள்வேன். சில சமயம் கல்லாவில் இருந்தும் ஒன்று இரண்டு ரூபாய் அவனுக்கு தெரியாமல் எடுத்துவிடுவதுண்டு. ஒருமுறை ஐந்து ரூபாய் எடுத்து எதிர்பாராத விதமாக அவன் அப்பா கடைக்கு திரும்பி வந்து கல்லாவில் காசு குறைந்திருப்பதை கண்டுபிடித்து சரவணனை சாட்டையால விளாரி விட்டார். நான் நடுவில் விழுந்து தடுக்கப்போய் எனக்கும் நாலு விளாரு. என்னைப் பார்த்து ’நான் சரியா கணக்கு பாக்காம யாருக்கோ அதிகமா மீதிக்காசு கொடுத்துட்டேன் போல, அதனால எனக்கு அடி, நீ ஏண்டா நடுவில் வந்து அடி வாங்குன’ என்று அழுதான். சமாதானப்படுத்துகிற மாதிரி நடித்தேன். மனது சங்கடமாக இருந்தது. அடுத்த நாள் பந்து விளையாடும்போது மைதானத்தில் யாரோ கீழே தவற விட்ட ஐந்து ரூபாய் கிடைத்த மாதிரி அதை எடுத்தேன். அவனையும் கூட்டிக்கொண்டு ரஜினி படத்துக்கு போய் அவனுக்கே செலவு செய்து விட்டேன். .
சரவணன்..
ஏழாவது வகுப்பு என்று நினைக்கிறேன். ஒரு நாள் மாலை அப்பா என்னை கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு பின்பக்கம் மளிகை சாமான்களை பொட்டலமிடும் இடத்திற்கு சென்று விட்டார். போகும் போது ‘சரவணா, கல்லாவில் நூறு ரூபாய் மட்டும் சில்லறையாக வைத்திருக்கிறேன்’ என்று எண்ணிக் கொடுத்து விட்டுப் போனார். சிறிது நேரத்தில் குணா வந்தான். ‘வீட்டில் அப்பா தண்ணி போட்டுட்டு வந்து ரகளை. அம்மா சமைத்து வைத்து இருந்ததெல்லாம் எட்டி உதைத்து நாசம் செய்து விட்டார். சாப்பிட ஒன்றும் இல்லை’ என்றான். பாவமாக இருந்தது. கொஞ்சம் பொரி, கடலை, நாட்டுச்சர்க்கரை கலந்து பொட்டலமாக கொடுத்தேன். கண்ணீரோடு சாப்பிட்டான். ‘ஒரு நிமிஷம் ஒண்ணுக்கடிச்சுட்டு வந்துடறேன்டா’ என்று அவனை கடையில் வைத்து விட்டு பின்பக்கம் போய் வந்தேன். கடைக்கு நிறைய பேர் வர ஆரம்பிக்கவும் அவன் போய் விட்டான். நல்ல வியாபாரம். எல்லா கணக்கையும் நோட்டில் எழுதி வைத்தேன். அப்பா எட்டு மணிக்கு வந்து கணக்கு சரி பார்த்தபோது ஐந்து ரூபாய் குறைவாக இருந்தது. அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை கடையில் விற்பனைக்கு தொங்கிய சாட்டையால் நாலு வீறு வீறிவிட்டார். அப்போது பார்த்து அங்கு வந்த குணா குறுக்கே பாய்ந்து என் மேல் விழ அவன் மேலும் அடி. என்னால் நண்பன் அடி வாங்கிவிட்டானே என்று வருத்தப்பட்டேன். அடுத்த நாள் விளையாடும் போது ‘இங்க பார்றா அஞ்சு ரூபா! யாரோ தவற விட்டுட்டுப் போய்ட்டாங்க போல’ என்று கீழே இருந்து எடுத்தான். முதல் நாள் ஒரு ஆள் அரிசி வாங்கிக்கொண்டு ஐந்து ரூபாய் கொடுத்தார். நோட்டின் எண் இருக்கும் இடத்தில் பேனா மை கறை இருந்ததால் நான் வாங்க மறுத்து பின் அந்த ஆள் ரொம்ப கெஞ்சியபின் வாங்கினதால் நன்றாக ஞாபகம் இருந்தது. அதே நோட்டு! மேலும் ஐந்து நிமிடம் முன் அதே இடத்தில் நான் பந்து பொறுக்கும் போது அங்கு நோட்டு எதுவும் இல்லை! பல சமயங்களில் கடையில் ப்ளம் கேக்குகளின் எண்ணிக்கை குறைந்ததும், ஒரு முறை கடையின் முன்பக்கம் அடுக்கி வைத்திருந்த மூடும் பலகைகளின் பின் இரண்டு ரூபாய் கிடந்ததும் எப்படி என்று பளிச்சென்று புரிந்தது. அவன் கஷ்டத்தை சமாளிக்க உதவி செய்வோம், அதே சமயம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.
குணா..
ஐடிஐ படிச்சேன். ப்ளம்பிங், எலக்டிரிக்கல் வேலை எல்லாம் செய்வேன். திடீரென அம்மா எங்கள் தெருவிலேயே வசித்த பஞ்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த வேணியை கல்யாணம் செய்து வைத்தாள். ஒரே வருடத்தில் ஒரு பெண் ’லட்சுமி’ பிறந்தாள். செலவு அதிகமாகி வருமானம் பற்றவில்லை. ஒரு உள்ளாடை துணி நெய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். கூடவே மாத தவணை சீட்டு திட்டம் ஆரம்பித்தேன். திருப்பூரில் கையில் பணத்தை வைத்துக் கொண்டு அதை முதலீடு செய்ய வழி தெரியாமல், நேரமும் இல்லாமல் இருப்பவர்கள் அதிகம் என்று கண்டு கொண்டேன். நான் யார், என் பிண்ணனி என்ன என்றே பார்க்காமல் வட்டி கிடைத்தால் போதும் என்று பணத்தை கொட்டினார்கள். மகள் லட்சுமியை ஆங்கில வழி கல்வி கற்றுத் தரும் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று வேணி பிடிவாதம் பிடித்தாள். எங்கள் இருவரின் வருமானமும் போதுமானதாக இருக்காது என்று நான் சொல்லியும் கேட்கவில்லை. பள்ளிக் கட்டணம் நாற்பதாயிரம் கேட்டார்கள். என் கையில் அவ்வளவு பணம் இல்லை. பார்த்தேன். ஒரு சீட்டுப் பணம் சந்தா உறுப்பினருக்கு கொடுக்க வேண்டியதை எடுத்துக் கட்டி விட்டேன். சீட்டு ஏலம் எடுத்த ஆள் பணம் கேட்க கொஞ்சநாள் போக்கு காட்டினேன். பொறுத்து பார்த்து விட்டு போலீஸில் புகார் கொடுத்து விட்டான். காவல் நிலையத்துக்கு கூட்டிக் கொண்டு போய் அடி பின்னி விட்டார்கள். பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு செய்தால்தான் விடுவோம் என்றனர். சிறிது நாள் முன்பு சரவணனனின் அப்பா இறந்து போனது தெரிய வந்து அவன்கூட இருந்து உதவினேன். அவன் ஞாபகம் வந்து சரவணன் பெயரைச் சொன்னேன்.
சரவணன்...
பத்தாம் வகுப்பிற்குப் பின் நான் ப்ளஸ் டூ, அவன் ஐடிஐ என்று பிரிந்து பிறகு நான் கோவைக்கு படிக்க சென்று விட்டேன். இன்ஜினியரிங் முடித்து மேலே எம்பிஏ படிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த காலத்தில் என் அப்பா மறைந்து விட்டார். குணா மறுபடி என் வாழ்வில் வந்தான். ஒரு நெசவு நிறுவனத்தில் வேலை செய்வதாக சொன்னான். பதினஞ்சு நாள் கூடவே இருந்து உதவி விட்டுப் போனான். அது திருப்பூரில் ஏற்றுமதி வணிகம் நன்றாக பிரபலமாகியிருந்த நேரம். மளிகைக் கடையை மூடி விட்டு ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து மிகுதியான உடைகளை வாங்கி உள்ளூரில் விற்க ஆரம்பித்தேன். நன்றாகப் போய்க்கொண்டு இருந்தது. மொத்த வியாபாரமாக வாங்கிக் கொள்ள சென்னை, பெங்களூரில் இருந்து எல்லாம் நிறைய முன்பதிவு வந்தது. என் மனைவி ப்ரியா ஒரு எம்பிஏ. அவள் ‘ரிவர்ஸ் இன்டெக்ரேஷன்’ அதாவது ’மறுபக்கத்திலிருந்து ஒருங்கிணைப்பு’ என்ற .வியாபார விஸ்தீரண கோட்பாட்டைப் பற்றி சொன்னாள். ‘நாம் ஒரு பொருளை தயாரித்து விற்கிறோம். அதற்கு நல்ல தேவை இருக்கிறது. நம் வணிகத்தை விஸ்தரிக்க எண்ணினால் நாம் இப்போது தயாரிக்கும் பொருளின் மூலப் பொருளை தயாரிப்பதை எடுத்துக் கொள்ளலாம். அதனால் இரண்டு அனுகூலங்கள். முதல் நிறுவனத்துக்கு தரமான மூலப்பொருள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதிப்படுத்தலாம். இரண்டாவது நிறுவனத்தின் பொருளை முதல் நிறுவனமே வாங்கிக் கொள்ளும். அதன்படி ஒரு ’தையல் நிறுவனம்’ ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தோம். இந்த சமயம் குணா மறுபடி என் வாழ்வில் வந்தான். ஒரு நாள் காவல் நிலையத்திலிருந்து கைபேசியில் அழைப்பு வந்தது. ‘குணசேகரன் என்பவர் சீட்டுப்பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவதாக புகார் வந்திருக்கிறது. விசாரித்ததில் பணத்தை செலவு செய்து விட்டதாக சொல்கிறார். பணத்தை ஏற்பாடு செய்ய தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்றதற்கு உங்கள் பெயர் சொல்கிறார்’ என்றனர். உடனே போனேன். முகமெல்லாம் வீங்கி குணா பெஞ்சில் உட்கார்ந்து இருந்தான். ‘எப்படியாவது காப்பாத்து சரவணா. ஊரை விட்டே போயிடறேன்’ என்றான். குழந்தை படிப்பிற்காக சீட்டுப் பணத்தை கையாடிவிட்டதாக சொன்னான். பணத்தை ஏற்பாடு செய்து குணாவை வெளியே கூட்டி வந்து ஆரம்பிக்க ஆயத்தங்கள் செய்திருந்த தையல் நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டேன். துணி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்த அனுபவம் குணாவுக்கு இருப்பதாக அவன் சொன்னதால் அவன் கொள்முதலையும், உற்பத்தியை ப்ரியாவும் விற்பனையை நானும் பார்த்துக் கொள்வதாக முடிவானது. மூன்று மாதத்தில் இடம் பார்த்து, தையல் இயந்திரங்கள் வாங்கி, வேலைக்கு ஆள் எடுத்து உற்பத்தி ஆரம்பித்து விட்டோம்.
குணா..
புது நிறுவனத்தில் எல்லா வேலையையும் முனைந்து செய்தேன். ஆறே மாதத்தில் லாபம் வர ஆரம்பித்தது. என் உழைப்பால் வளர்ந்த நிறுவனத்தில் என்னை உழைக்கும் பங்குதாரர் ஆக்கினால் நானும் முன்னுக்கு வந்து விடலாம் என ஆசைப்பட்டேன். அதைப்பற்றி அவன் ஒன்றும் சொல்லாததால் வெறுப்பு வந்தது. அப்போது ஒரு தரகரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது ஒரு தகவல் சொன்னார். இப்போதெல்லாம் முதலாளிகள் தரகு கூலியை அதிகமாக்கி மூன்று சதவிகிதம் கொடுத்துவிட்டு இரண்டு சதவிகிதத்தை திருப்பி பணமாக வாங்கிக் கொள்கிறார்கள் என்றார். இடையில் எங்கள் பெங்களூரு தரகர் கிஷன்லால் ’கொஞ்சம் முதலீட்டு பணம் இருந்தால் நூல், துணி போன்றவற்றிற்கு முன்பணம் கொடுத்து பதிவு செய்து வைக்கலாம். வாங்குபவர் கிடைத்த பின் பொருளை கைமாற்றி நல்ல லாபம் பார்க்கலாம். எனக்கு இருக்கும் அனுபவத்திற்கு கொஞ்சம் பணம் ஏற்பாடு செய்தால் அவன் உதவுவதாக சொன்னான். அவனை தரகு சதவிகிதத்தை அதிகப்படுத்தி தரச் சொல்லி கடிதம் எழுத வைத்தேன். கணக்குகள் பிரிவில் எம்டி சரவணன் அனுமதித்ததாக சொல்லி மூன்று மாத தரகு கமிஷன் பணத்தை அவனுக்கு அனுப்ப வைத்தேன். மிகுதி ரூ 2.4 லட்சத்தை அவனிடம் இருந்து வாங்கிக் கொண்டு அவனுக்கு நாற்பதாயிரம் கொடுத்து விட்டேன். திருப்பூரிலயே தரகு வியாபாரம் செய்தால் தெரிந்து விடும் எனவே பெங்களூருக்கு போய்விடுவோம் என்று முடிவு செய்தேன். ஊரை விட்டு புது ஊருக்கு வர வேணி ரொம்ப தயங்கினாள். அந்த சமயத்தில் சரவணன் ஊரில் இல்லை. அவசரமாக செல்ல வேண்டும் என்று அவர்கள்தான் அனுப்புகிறார்கள் என்று பொய் சொல்லி கூட்டிக் கொண்டு வந்து விட்டேன்.
சரவணன்...
ஒரு சமயம் குணா தொடர்ச்சியாக ஒரு வாரமாக வேலைக்கு வரவில்லை. கைபேசி அணைக்கப்பட்டிருந்தது. நான் ஒரு சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு இத்தாலி கிளம்பி விட்டேன். இரண்டு நாள் கழித்து ப்ரியா பதட்டத்துடன் கைபேசியில் அழைத்தாள். எங்களுக்கு பெங்களூரிலிருந்து துணிகளை கொள்முதல் செய்து தரும் தரகர் தன் தரகு சதவிகிதத்தை 1%லிருந்து 3%ஆக உயர்த்தி பில் அனுப்பி இருக்கிறார். என் ஒப்புதல் பெற்றாகி விட்டது என்று குணா ’அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்டி’ல் சொன்னதால் மூன்று மாத தரகுத் தொகை ரூ 3.6 லட்சம் அந்தத் தரகர் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுவிட்டது. இவள் கவனத்துக்கு விஷயம் வந்தவுடன் தரகரை கைபேசியில் அழைத்துப் பேசியபோது அவர் ’இப்போதெல்லாம் மகாராஷ்டிரா, குஜராத் கம்பெனி முதலாளிகள் இந்த மாதிரி தரகர் கமிஷன் மிகுதியாக கொடுத்து பின் அந்த மிகுதியை திருப்பி பணமாக வாங்கிக் கொள்கிறார்கள். இது சகஜமாகி விட்டதால் குணா சொன்னபடி பில் கொடுத்தேன். மிகுதி ரூ2.4 லட்சத்தை குணா வாங்கிக் கொண்டு போய் விட்டார்’ என்று சொல்கிறார் என்றாள். நான் திரும்பி வந்தபோது குணா வீட்டைக் காலி செய்து ஊரை விட்டுப் போய்விட்டதாகத் தெரிந்தது. வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்ததில் விஷயம் கொஞ்சம் விவகாரமானதாக இருப்பதால் புகார் செய்தால் நிறுவனத்தின் பெயர் கெடுவது மட்டுமல்லாமல் வருமான வரி பிரச்னைகளும் வரலாம், இத்தோடு தொலைந்தது என்று விட்டு விடுங்கள் என்று சொன்னார். இப்போதுதான் நல்ல சம்பளம் கொடுக்கிறோமே ஏன் கையாடல் செய்ய வேண்டும்? எனக்கு யோசிக்க யோசிக்க குழப்பம்தான் மிஞ்சியது.
குணா..
ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே பணத்தை முதலீடு செய்து தரகு வியாபாரம் செய்வது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது. விற்பவர்கள் முன்பணம் இல்லாமல் முன்பதிவு செய்ய மறுத்தார்கள். வாங்குபவர்கள் பணம் கொடுக்க தாமதம் செய்தார்கள். சமயத்தில் சரக்குகள் விற்காமல் தங்கி விட எப்போதும் பணத்தேவை இருந்து கொண்டே இருந்தது. இடையில் எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்து சில நாளில் இறந்து போனது.. நூல் லோடு ஏற்றி வந்த லாரி விபத்தாகி சரக்கெல்லாம் நாசமானது. லாரிக்கு போலியான தகுதிச் சான்றிதழ் கொடுத்திருந்ததால் விபத்து காப்பீடு வழங்குவதில் சிக்கலாகி காப்பீட்டுத்தொகை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஒரே பரிவர்த்தனையில் இருபது லட்சம் இழப்பாகி விட்டது. மேலும் முதலீடு செய்ய கையில் பணம் இல்லை. எந்த வியாபாரமும் செய்யாமல் அங்கே இருப்பது கட்டுப்படியாகவில்லை. ஊரை விட்டு போக வேண்டியதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் இருந்தேன். வேணியுடன் தினமும் வீட்டில் சண்டை. ஒரு நாள் ‘திருப்பூருக்கே திரும்பிப் போயிறலாம்யா, நான் ப்ரியா அம்மா கைல கால்ல விழுந்து கேட்கறேன். அவங்க ஏதாவது உதவி கட்டாயம் செய்வார்கள்’ என்று அழுதாள். எனக்கு பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது. ஆனால் வேறு வழி தெரியாமல் திருப்பூருக்கு திரும்பி வந்தோம். இரண்டு நாள் முன் சரவணனின் நிறுவனத்துக்கு வந்தேன். சரவணன் இல்லை. ப்ரியா மேடம்தான் இருந்தார். ‘மன்னிச்சுக்கங்க மேடம். புத்தி கெட்டு பண்ணி விட்டேன். நான் செய்த துரோகத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன். ஏதாவது வேலை போட்டுக் கொடுத்தீங்கன்னா சம்பளத்தில் கழித்து விடுகிறேன்’ என்றேன். ‘பணம் பெரியதில்லைங்க. அவர்கிட்ட நீங்க கேட்டிருந்தா அவரே கொடுத்திருப்பார். அந்த மாதிரி பண்ணியதற்கு ரொம்ப மனசு வருத்தப்பட்டார். அவர் இப்ப ஊரில் இல்லை. இரண்டு நாள் கழித்து வந்து பாருங்க’ என்றார். இதோ வந்து காத்திருக்கிறேன். உள்ளே வரும்படி அழைப்பு வந்தது. சரவணனும் ப்ரியா மேடமும் இருந்தார்கள். சரவணன் என்னை நிமிர்ந்து பார்த்து ஒரு நிமிடம் கழித்து புன்னகைத்தான். ‘ஏன்டா’ என்றான். படக்கென்று கண்களில் கண்ணீர் முட்டியது எனக்கு. ‘சின்ன வயசுல இருந்தே கஷ்டப்பட்டதாலே எப்படியாவது முன்னேறணும்னு வெறி. சரி தப்புன்னு பாக்காம எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன். திரும்பத் திரும்ப அடி. நான் உனக்கு பண்ணுன துரோகத்துக்கு சம்பாதிச்சது எல்லாம் போச்சு. என் குழந்தையை வேற இழந்துட்டேன். என்னை மன்னிச்சு உன் கம்பெனில ஒரு வேலை கொடு. உன்கிட்ட திருடின பணத்தை சம்பளத்துல கழிச்சிக்கோ. எனக்கு உன்னை விட்டா யாரும் இல்லை’ என்றேன். ஒரு நிமிஷம் யோசித்தான். ‘நீ என் கிட்டே வெளிப்படையா கேட்டிருக்கலாம். போகட்டும். நீ என்னோட பால்ய நண்பன். நான் உனக்கு இன்னொரு சந்தர்ப்பம் தருகிறேன். நான் ஒரு ’ஃபேப்ரிக் யூனிட்’ புதுசா போட்டிருக்கேன். எல்லா வேலையையும் பார்த்துக் கொள்ள நம்பகமா ஒரு ஆள் தேடிட்டு இருந்தேன். உன்னை ’மேனேஜரா’ போட்டு அப்பாய்ன்மென்ட் ஆர்டர் வெளிய என் பிஏ கிட்ட தயாரா இருக்கு. நாளைக்கு ஃபேக்டரிக்கு போய் பொறுப்பு எடுத்துக்கொள்’ என்றான். ’சம்பளம் எதுவும் சொல்லவில்லை. ஏற்கனவே ஏமாற்றியதால் குறைவாக கொடுத்தாலும் கேட்க முடியாது. போதவில்லை எனில் மறுபடி வாய்ப்பு கிடைத்தால் என்னால் அதை நிராகரித்து நேர்மையாக இருக்க முடியுமா? சரி, பார்ப்போம் என்ன நடக்கிறதென்று, சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி முடிவெடுப்போம்’ என நினைத்துக் கொண்டே நன்றி சொல்லி வெளியே வந்தேன்.
சரவணன்..
குணா நன்றி சொல்லி வெளியே போனான். ப்ரியா என்னைப் பார்க்க ‘ஜெஃப்ரே ஆர்சரோட ‘கேன் அண்ட் ஏபல்’ நாவல் படித்திருக்கிறாயா? இருவரின் கதை. ஒருவன் பெரிய பணக்காரன். இன்னொருவன் ஏழை. இந்த ஏழை மேல வருவதற்கு பணக்காரன்தான் உதவி செய்வான். அது தெரியாமல் அந்த ஏழை அவனை எதிரியாவே நினைத்து அவனோட வியாபார சாம்ராஜ்யத்தையே அழிப்பான். கடைசியில் தனக்கு முக்கியமான சந்தர்ப்பத்தில் உதவி செய்தது அவன்தான் என தெரிய வரும். குணா சின்ன வயதில் பட்ட கஷ்டங்களை பார்த்திருக்கிறேன். என்னாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணுவேன். என்னால் செய்ய முடிந்து ஆனால் செய்யாமல் விட்டேன் எனில் வாழ்நாள் முழக்க வருத்தப்படுவேன் ப்ரியா. நான் நன்மையையே செய்ய விரும்புகிறேன்’ என்றேன்.
அதற்கு அவள் ‘உன் மனது எனக்குத் தெரியும் சரவணா. நல்லவனாக இரு. அதே சமயம் புத்திசாலியாவும் இரு, தப்பில்லை’ என்றாள்.
‘அதுக்காகத்தானே மறுபடி ஏமாறாத மாதிரி உறுதி செய்து கொள் என்ற உன் யோசனையின் படி குணாவை மேனேஜரா போடும் போதே வேணியை அதே இடத்தில் சரக்கு பொறுப்பாளரா போட்டேன். வேணிக்கு ஏற்கனவே ஒரு ஜவுளி ஆலையில் கிடங்கு பொறுப்பாளராக வேலை செய்த அனுபவம் இருக்கிறது. நூலில் இருந்து துணி வரை ஒரு கிராம் குறையாமல் பார்த்துக் கொள்வாள். அவர்களுக்கு ஃபேக்டரி உள்ளேயே குடியிருப்பு கொடுத்தாகி விட்டது. குட்டிப் பாப்பா லட்சுமியை திருப்பூரிலேயே சிறந்த பள்ளிக்கூடத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தாகி விட்டது. ஆடிட்டிங் புலி அக்கவுன்ட்ஸ் மேனேஜர் சண்முகநாதனை அந்த கம்பெனிக்கு மாத்தியாச்சு. குணாவையும் அவரையும் ’ஒர்க்கிங் பார்ட்னர்ஸ்’ ஆக்கி லாபத்தில் பங்கு தரும் ஆவணங்கள் இப்போ அப்பாய்ன்மெண்ட் ஆர்டருடன் கொடுக்கப்படும். அவன் எவ்வளவு உழைத்து நிறுவனத்துக்கு லாபம் ஈட்டுகிறானோ அதற்கேற்றபடி அவன் ஊதியம் அதிகரிக்கும். நேர்மையாக உழைத்து மேலே வருவதற்கு சந்தர்ப்பம் கொடுப்போம். அதே சமயம் நாம் மறுபடி ஏமாறாமல் இருக்க தவறு நடந்தால் உடனே அபாய சங்கு ஒலிக்கவும் ஏற்பாடு செய்தாகி விட்டது. ஏமாறியவன் மாறி விட்டேன். அவனும் மாறுவான். ஏமாற்றும் வாய்ப்புகளை அடைத்து விட்டால் கொஞ்ச நாளில் நல்லவனாக இருப்பது பழகிவிடும். வாழ்நாள் முழுக்க யாரும் கெட்டவனாக இருப்பதில்லை’ என்றேன்.
ரமேஷ் ரங்கநாதன்
#864
தற்போதைய தரவரிசை
60,050
புள்ளிகள்
Reader Points 50
Editor Points : 60,000
1 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 5 (1 ரேட்டிங்க்ஸ்)
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்