அநேக ஆசிர்வாதங்களுடன்

Vinitharajen
கற்பனை
4.9 out of 5 (34 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

“அநேக ஆசிர்வாதங்களுடன்”


‘அன்புள்ள சிற்பிக்கு,’ என்று எழுத ஆரம்பித்தது… அப்போது தான் மை நிரப்பிய பேனா.


பேனாவை இயக்கும் விரலுக்கு சுமார் எழுபத்தைந்து வயதிருக்கலாம்.


மகள் அனுப்பிய புது கைப்பேசியை, தன்னுடன் தொடர்பு படுத்தி கொள்ளமுடியாத முதுமையின் இயலாமையினால்… இதோ கடிதம்.


“நாங்கள் இருவரும் நலம், உங்கள் நால்வரின் நலமறிய ஆவல்” என்ற கையெழுத்து.., நீலநிற மையில் ஒவ்வொன்றும் மணி மணியாய் அடுத்த வரிக்கு உருண்டோடியது.


”இன்னிக்கு நாங்க இரண்டு பேரும் சாப்பிட்டு முடிக்கவே நேரமாச்சு சிற்பி, பரவாயில்லனு தான் பத்து மணியானா கூட உனக்கு எழுதிடனும்னு தோணுச்சு”.


ஆவல் அசைப்போட்டது அனுபவங்களை, கடிதத்தை நிரப்ப!

“போன தடவை நீங்க வந்தப்ப, நித்திலன் வாங்கி வச்ச நெல்லிக் கன்னு நல்லா பிடிச்சுக்கிச்சு… மாப்பிள்ளைட்ட சொல்லிடும்மா”.


“காய் வர ஆரமிச்சதும் நாங்க சாப்பிட்டு தண்ணி குடிக்கிறப்ப, நீங்க வந்திருந்த அந்த ஒரு வாரம் போல இனிச்சுது.”


சிறு புன்னகையிலேயே ஏழுநிற வளையல் எட்டிப்பார்த்தது.


“ஒரு வாரம் போனதே தெரியல. என்ன, நேரமே பத்தல பிள்ளைகளோட கடைகன்னிக்கு போய்ட்டு வரதுக்கு. ஐஸ்கிரீம் வாங்கி தர சொன்னான் துகிலன், அம்மா அப்பாவுக்கு தெரியாம வாங்கிக்கலாம் னு சொல்றான். இப்படி பண்றது இது தான் முதல் தடவையானு பேச்சு வாக்குல கேட்டேன்.. இல்லையே நான் நிறைய தடவை தெரியாம பண்ணிருக்கேன் னு சகஜமா என்கிட்ட சொன்னான். இப்படி தெரியாம எதுவும் பண்ணகூடாது னு அவனுக்கு சொல்லிருக்கேன். கொஞ்சம் கவனமா எடுத்து சொல்லும்மா. இல்லைனா இதே பழக்கமாயிடும்.”


“பிள்ளைங்க என்ன பண்றாங்க ஏது பண்றாங்கனு நம்ம தான் கவனிச்சு சரி பண்ணனும் மா சிற்பி்.”


நம் பிள்ளைகளை வழிநடத்த, நம் வீட்டு பெரியவர்களை தவிர வேறு யார் நமக்கு சிறந்த ஆசிரியராக இருக்க முடியும்?!.


“நம்ம சுடரி என்னமா வரையிரா, முயற்சி பண்ணா நல்லா கொண்டு வரலாம். பாக்குறத அப்படியே தத்ரூபமா வரையிறா. திறமசாலி!. அடுத்த மாசம் ஏதோ போட்டி இருக்காமே, அதுக்கு வரையறதுக்கு யோசனை பண்ணி வச்சுருக்கேன்னு ஒரு விஷயம் சொன்னா, பிரமிச்சு போயிட்டேன் மா. ஏழு வயசுல என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு ரசனை?! அதை அவ விவரிக்கிற விதம், அசந்து போய்ட்டேன்.”


“ வருஷா வருஷம் தேசிய அளவில ஓவியப் போட்டிக்கு, தஞ்சாவூர் கலைக்கூடத்துல வைக்கிற ஓவியத்துல இருந்து தேர்வு பண்ணி அனுப்புறாங்க. இந்த தடவை சுடரியோட ஓவியத்தையும் வைக்கலாம், நீ என்னமா சொல்ற?”


“துகிலனுக்கு கூட புத்தகம் னா ரொம்ப இஷ்டமாமே, என் வயசுக்கு நான் படிக்காத புத்தகம் எல்லாம் பண்ணிரண்டு வயசுல புத்தகத்தோட பேரு தெரிஞ்சாலே ஆச்சரியம். ஆனா, துகி ஆழமா புத்தகத்த புரிஞ்சுக்கிறான்.”


“எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு மா சிற்பி பிள்ளைங்கள பத்தி நினைக்கிறப்போ. போன புதன்கிழமை பம்புசெட்டுக்காரங்க குடும்பத்தோட வந்துருந்தாங்க. ஒரே பிள்ளைங்கள பத்தின பேச்சு தான். அவரு பேத்தி பேரன பத்தி பேசிட்டு இருந்தாரு. அப்போ நம்ம சுடரி, துகிலனோட குறும்பு தான் நினைப்புக்கு வந்தது. வாழ்க்கைல ஒரு கட்டத்துல பிள்ளைங்க தான் நமக்கு எல்லாமுமா மாறிப் போறாங்க.” என்று அவர்கள் குறும்புகளை எண்ணி….


இதயத்திடம் கொஞ்சம் சிரிக்க சொன்னது முதுமை, சொன்னதை கேட்டது இதழ்களும்.


சட்டென, இதழ்கள் சுருங்கவும் இதயமும் சுருங்கி…


என்ன நினைப்போ என்னவோ கையெழுத்தை போல கண்ணீர் துளியும் மணி மணியாய் உருண்டன கன்னத்தில்.


கடிதத்தில் பட்டு உடைந்த ஓரிரண்டு கண்ணீர் துளிகளில் மிச்சமிருந்த வார்த்தைகள் சிற்பிக்கு புரியாமல் போகாது.


காற்றாடி செய்த மாயம், கடிதத்தில் கண்ணீர் காணாமல் போனது.


துடைத்துக் கொண்ட விரல்கள் மீண்டும் மடங்கின பேனாவிற்காக!


“நான் வாங்கி தந்த தெனாலி ராமன் காமிக்ஸ் புத்தகம் சுடரிக்கும் துகிலனுக்கும் புடிச்சிருந்ததா? இன்னிக்கு கூட புத்தக கண்காட்சி போட்ருக்கான் நம்ம டவுன்ஹால்ல. நான் எனக்கும் பிள்ளைங்களுக்கும் நல்லதா கொஞ்சம் வாங்கிட்டு வந்துருக்கேன்”.


“நித்திலன் லைப்ரரி சம்பந்தமா ஒருத்தர பார்க்க சொல்லி விலாசம் குடுத்தாரு.. பார்த்துட்டும் வந்துட்டேன். லைப்ரரி வைக்க உரிமம் வாங்கனுமாம். ஏற்பாடு பண்ண உதவி பண்றதா சொல்லி இருக்காரு. நம்ம வீட்டு பக்கத்துலயே லைப்ரரி வைக்க இடம் போதுமானதா இருக்கு, வந்து பார்க்க சொல்லிருக்கேன். அப்புறம் வேலைய ஆரமிச்சுக்கலாம் னு பேசிருக்கோம்.”


“மாப்பிள்ளை எனக்கு பெரிய உதவி பண்ணிருக்காரு, நித்திலனுக்கும் நான் லைப்ரரி வைக்கிறதுல சந்தோஷம் தான் போல. நான் கூட இப்ப இருக்குற நவீன உலகத்துல யாரு லைப்ரரிக்கு வர போறாங்கனு சொல்லி யோசிப்பாரோனு நினைச்சேன். புத்தகம் படிக்கிறவங்களுக்கு கண்டிப்பா உபயோகமா தான் இருக்கும்… நீங்க பண்ணுங்கனு அனுசரனையா பேசுனது எனக்கு மனசுக்கு நிறைவா இருந்துச்சு மா.”


“நீ வாங்கி அனுப்புன ஃபோன் இன்னும் எனக்கு பரிட்சயப்படல. மாடில வாடகைக்கு இருக்காங்கல்ல அந்த வீட்டு பையன்கிட்ட கேட்ருகேன் சொல்லி தரச் சொல்லி.. வயசாயிருச்சுல..! சின்ன எழுத்தெல்லாம் கண்ண சுருக்கி பாத்தா தான் தெரியுது. அதுவும் ஃபோன்லனா ரொம்பவே கஷ்டமா இருக்கு. எனக்கென்னமோ மனசுல இருக்குறத கடுதாசியா எழுதும் போது தான் திருப்தியா இருக்கு சிற்பி. ஆனா, கண்டிப்பா ஃபோன் உபயோகப்படுத்த கத்துக்கிட்டு கூப்புடுறேன்.”


என்னதான் பழமையை விரும்பினாலும்.. வயதிற்கேற்ற இயலாமையை புறந்தள்ளி, பிள்ளைகளுக்காக புதுமையையும் வரவேற்றுக் கொள்ளும் முதுமை விவேகமானது! சில நேரங்களில் விசித்திரமானதும் கூட!!

“வீடு சுத்தம் பண்ண ஆள் வர சொல்லி இருந்தேன், போன வாரமே எல்லாம் முடிச்சு பெய்ன்ட் கலர் கூட மாத்தியாச்சு.”


“அப்ப உன்னோட பழைய பெட்டில, ஸ்டாம்ப் சேர்த்து வப்பியே அந்த நோட்டு.. ஸ்கூல் குரூப் ஃபோட்டோ, நீ தேடிட்டு இருந்த செர்ட்டிஃபிகேட் இருந்துச்சு. எடுத்து வச்சுருக்கேன்.. அடுத்த தடவை வரும்போது மறக்காம எடுத்துட்டு போம்மா.” என்று அவர்களின் வருகையை ஆவலுடன், தான் எதிர்ப்பார்ப்பதை கூட பட்டும் படாமல் கிசுகிசுத்தது விரல்கள்.

“துகிலன் பிறந்தநாளுக்கு வர்ற மாதிரி இருந்தா நல்லா இருக்கும். அவனுக்கு பிடிச்சதா எதுவும் வாங்கி பரிசா குடுக்கனும்.”

"சுடரிக்கும் தஞ்சாவூர் பெயின்டிங் பண்றதுக்கு கோல்ட் ஃபாயில் கிடைக்குமானு தேடிட்டு இருந்தா.. பெரிய கடைவீதில சொல்லி வச்சுருக்கேன், வந்ததும் வாங்கிக்கலாம்."

ஏக்கமும் தயக்கமும் ஒருசேர…


“பார்த்து மாச கணக்கு ஆகுது.. எப்போ வருவீங்க சிற்பி மறுபடியும்?!”.


கேள்வி ஒன்றிலேயே, பதில் பலநூறை எதிர்பார்த்து… பல கேள்விகளை அந்த எழுபத்தைந்து வயது விரல் கேட்காமலேயே நீண்டது.


“நம்ம தூத்தூர் ஐயாவோட வீட்ல, வர்ற வாரம் விருந்துக்கு ஏற்பாடு பன்னிருக்காங்க…தூத்தூர் திருவிழாவாம். அவருக்கு உதவுமேனு எழுநூறூவா அனுப்பி வச்சிருக்கேன். நமக்கு நிறைய செஞ்சிருக்காரு. நாங்க போய்ட்டு வந்து அடுத்த கடுதாசில விவரம் எழுதுறேன்.”


“ஃபுல் செக்கப் போய்ட்டு வந்தோம், முடிச்சுட்டு வர தான் நேரமாயிடுச்சு. அசதியா இருக்கு மா... முன்ன மாதிரி இல்ல உடம்பு. உடம்புல ஒன்னும் பெரிய பிரச்சனை ஒன்னும் இல்லையாம் மா சிற்பி, எனக்கு கண்ணுதான் முன்ன விட பாயின்ட் கூடிப்போச்சாம். கண்ணாடி மாத்துறதுக்கு சொல்லிட்டு வந்துருக்கேன். அடுத்த வாரம் கிடச்சுடும்”


கவலையுடன் கண்ணாடியை கலட்டி துடைத்தப்பின் மறுபடி பேனாவை பற்றியது விரல்கள்.


“அப்புறம், சொல்ல மறந்துட்டேன் பாரு.நேத்து காலாற நடந்துட்டு வரலாம்னு இரண்டு பேரும் கிளம்புனோம்..வழியில உன் கூட படிச்ச பொண்ணு…”

“ம் ம் ம்…” எழுதும் விரல் ஒரு நிமிடம் தாடையை உரசியது.


அற்புத விளக்கை தேய்த்ததும் பூதம் எட்டிப்பார்த்த கதையாய், மூளையின் மூலையில் ஒளிந்து இருந்த அந்த பெயர் வந்து விழுந்தது.


“ஆங்ங்…”, “கனியும் வீட்டுகாரரையும் பாத்தோம். கேட்டதா சொன்னாங்க. அடுத்த தடவை நீங்க வரும்போது வந்து பாக்குறேனு சொன்னாங்க…இனிமே வீட்டுக்கு அடிக்கடி வர்றதா சொல்லிருக்காங்க.”


இப்படி அனைத்தையும் கொட்டியப் பிறகும்…


மகளுக்கு எழுதும் போது ஏனோ பேனா மை வத்துவதே இல்லை. ஆனால் இன்லான்ட் கவரில் இடம் பத்தாமல்,


“உடம்ப பாத்துக்கோங்கமா… மற்றவை நேரில்.”


காத்திருப்பு காதலுக்கு மட்டுமல்ல காலம் போன கடைசியில் இருப்பவர்களுக்கும் வலி தான்.


அநேக ஆசிர்வாதங்களுடன்,

அட


அநேக ஆசிர்வாதங்களுடன் எழுதியது.. அம்மாவா?! அப்பாவா?! என்று எழுதி முடிப்பதற்குள், முதுமைக்கான அசதியில் விரல்கள் உறைந்தன…. பேனா மை உறையாமலேயே காத்திருந்தது.


நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...