ஹெல்மெட்

த்ரில்லர்
5 out of 5 (816 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

என் டிவிஎஸ் அப்பாச்சியில், ராமமூர்த்தி நகரின் பாலத்திற்கு அடியில் புகுந்து கேஆர்புரம் ரோட்டுக்கு வந்த போது எதிர் திசையில் வந்த லாரி நிலை தடுமாறி சாலைக்கு வெளியே வந்து என் வண்டியில் மோதியது . நான் ஒருபுறமும் டூவீலர் ஒருபுறமும் தூக்கி வீசப்பட்டோம். என் ஹெல்மெட் ஒருபுறம் நசுங்கி தலைக்குள் நெருக்குவது போலிருந்தது.

போன வாரம்தான் சாலையின் ஓரத்தில் விற்பவனிடம் இந்த ஹெல்மெட்டை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன் . கம்பெனி ஹெல்மெட்டை விட நன்றாக உழைக்குமென்றான் . தலையிலிருந்து காதிற்கு வழிகிற ரத்தத்தின் சூடு அதை பொய்யென உரைத்தது .

பத்து நிமிடம் முன்பாகத்தான் என் பையன் ருத்ரனை பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு வந்தேன் . டாடா காண்பிக்கும் போது ஏதோ அவன் சொன்னது வாகன நெரிசலில் காதில் கேட்க வில்லை . ஹெல்மட்டை கழட்டச் சொல்லி சைகை செய்தான் .

கழட்டி விட்டு கேட்கையில் இன்று நீங்கள் என்னை கூப்பிட நீங்கள் வர முடியுமா என்றான் . இல்லை வேலை இருக்கும் , அம்மா வருவாள் என்றேன் . முகத்தை சுருக்கி "ஜிம்னாஸ்டிக் கிளாஸ் இருப்பதால் அரை மணி நேரம் தாமதமாக அம்மாவை பிக்கப் பண்ண சொல்லிவிடுங்கள்" என்றான் .

சரிடா என்று சிரித்து வானத்தில் பறக்கும் மஞ்சள் பறவை அழகாக இருப்பதாக காண்பித்தேன். அதை பார்த்து ஐயென்று கத்தி கன்னத்தில் குழிவிழ சிரித்தான் .

நான் வருகிறேன் என்று சொல்லி கிளம்பும் பொது , உங்களுக்கு இந்த ஊதா நிற ஹெல்மெட் நன்றாக இல்லை மாற்றி விடுங்கள் அப்பா என்று சொன்னான் . சரிடா , எனக்கு லேட்டாயிடுச்சி என்று சொல்லி கிளம்பினேன் .

வண்டியை நிறுத்தி காவ்யாவிற்கு கால் செய்ய நேரமில்லை . வண்டியில் போகும்போதே அவளுக்கு தெரிவிக்க ஆப்பிள் போனின் சிறி மூலம் கால் செய்யுமாறு கட்டளையிட்டேன் . அது போனை அன்லாக் செய்யுமாறு பதில் உரைத்தது . கோபத்தில் கண்ணாபிண்ணாவென்று சிறியை திட்டினேன் . வார்த்தைகளை அனுமானம் செய்ய இயலவில்லை என சாந்தமாக முடித்து கொண்டது .

இன்று மேனேஜர் சீக்கிரம் வரச் சொல்லியிருந்தார் . நேற்று சொன்ன வேலையை முடிக்கவில்லை . இது அவருக்கு தெரியாது . இன்றைய ஆபிஸ் ஸ்கிரம் காலில் என்ன ஸ்டேட்டஸ் சொல்வது என யோசித்துக்கொண்டே சென்றேன் . அதனால்தான் நானும் லாரியை சரியாக கவனிக்க வில்லையோ என்னவோ .

மக்கள் அதற்குள் கூடி விட்டார்கள் . லாரி டிரைவர் வழக்கம் போல இறங்கி ஓடி விட்டான் என்று பேசிக் கொண்டாரகள் . யாரோ அசைவு இருக்கிறது , உயிர் உள்ளது என்று சொல்வது கேட்டது . நான் பேச முயற்சித்தேன் . மூளை கட்டளையிடுவதை வாய் நிறைவேற்ற முடியவில்லை . யாரோ தூரத்தில் விழுந்துக் கிடந்த என் போனை எடுத்து எமெர்ஜென்சி காலில் என் மனைவி காவ்யாவிற்கு கால் செய்தார்கள் . மறுமுனையில் காவ்யாவின் கதறல் துல்லியமாக கேட்டது .

ஐந்து மணிக்கு எழுந்து பாத்திரம் கழுவி , சமைத்து , துணிகளை மெஷினில் போட்டுவிட்டு , ருத்ரனை எழுப்பி குளிப்பாட்டி , எங்கள் இரண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்து வைத்து , கிளப்பி விட்டுவிட்டு இப்பொழுதான் வந்து சோபாவில் உட்கார்ந்து இருப்பாள் . பாவம் உடைந்து போயிருப்பாள் .

ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது . ஹாஸ்பிடல் பெயரை காவ்யாவிற்கு சொன்னார்கள். ருத்ரனை பள்ளிக்கு போய் அவனையும் கூட்டி கொண்டு வந்தால் பரவாயில்லை . பரபரப்பின் நொடிகளில் அவளுக்கு யோசிக்க தெரியாது .

நாங்கள் கல்லூரியில் காதலித்து , வேலை கிடைத்தவுடன் பெற்றோரை எதிர்த்து , நண்பர்கள் சூழ கோயிலில் திருமணம் செய்தவர்கள் . அதிலிருந்து ஐந்து வருடமாக பெற்றோரோடு பேச்சு வார்த்தையில்லை . குழந்தை பிறந்த போது கூட அவர்கள் பார்க்க வர விரும்ப வில்லை . சமுதாயத்தின் அழுகிய எண்ணங்கள் அவர்கள் கால்களில் சங்கிலியாக பிணைத்து இருந்தது . நானும் காவ்யாவும் மிகுந்த சிரமப்பட்டு வளர்த்தாலும் அதில் ஒரு வித சந்தோஷமும் திருப்தியும் இருந்தது . பெங்களூரு நகரில் தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் வீடு எடுத்து கொண்டது கொஞ்சம் உதவியாக இருந்தது . பக்கத்துக்கு வீடுகளுக்கு ருத்ரன்தான் செல்லப்பிள்ளை .

எனக்கு தலை வலி அதிகமாகியது .இருட்டிக் கொண்டு வந்தது . ஒவ்வொரு நொடியும் கொஞ்சம் கொஞ்சமாக உன்னை விட்டு தூரமாக செல்வது போல் தோன்றுகிறது காவ்யா . காற்றில் கைகளால் துழாவி கொண்டிருப்பது மாதிரி உணர்ந்தேன் . என்னைப்பிரிந்து உன்னால் வாழ முடியுமா காவ்யா ?

காவ்யாவிற்கு நானும் ருத்ரனும்தான் உலகமே . விருப்பட்டே தன் திறைமைகளை மறந்து விட்டு எங்களின் சிறு உலகத்திற்குள்ளே அவளை குறுக்கி கொண்டாள் . ஒவ்வொரு விஷயமாக எங்களுக்கு பார்த்து பார்த்து செய்வாள் . பாசத்தில் ராட்சசி .அதன் இன்னொரு வெளிப்பாடே சிறு சிறு விஷயத்தில் கூடகோபம் . பெரும்பாலான நேரங்கள் அவளை புரிந்து கொண்டாலும் , சில நேரம் பதிலுக்கு கத்தி விடுவேன் .காலையில் கூட அவளோடு சிறு வாக்கு வாதம் . நான் இன்னும் பொறுமையாக இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது

" ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளிகள் வேண்டும். சில சமயம் காலத்தின் இடைவெளி. சில சமயம் தூரத்தின் இடைவெளி " ஜே ஜே சில குறிப்புகளில் சுந்தர ராமசாமி சொல்வது புரிந்தது போல் இருந்தது . அது மைக்ரோ , நேனோ நொடிகளாக இருந்தாலும் கூட.

கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகள் தப்பத் தொடங்கியது . நான் யார் என்பதை மூளையின் நியூரான்களுக்கு நினைவூட்டி கொண்டே இருப்பது அயற்சியாக இருந்தது . செவிலியரின் பேச்சுகள் ஒலி ரீங்காரங்களாக வந்து அடைந்தது . அது படிப்படியாக ருத்ரனின் சிரிப்பொலியாகி புது வடிவாக மாறியது . புலன்களை நெறிப்படுத்த முயற்சி செய்து தோல்வி அடைந்தேன் .

ஆம்புலன்ஸ் ஆஸ்பத்திரியை அடைந்தது . காவ்யாவின் அழுகை மட்டும் எனக்கு தனியே கேட்டது . என்னை ஸ்ட்ரெச்சரில் வெளியே கொண்டுவந்து ஆஸ்பத்திரியின் ஒரு அறையை அடைந்த பொது மருத்துவர் ஒருவர் அவசரமாக வந்து என்னை பரிசோதித்தார் . பத்து நிமிடம் முன்பாகவே இறந்து விட்டதாக தெரிவித்தார் . காவ்யா எழுப்பிய அழுகை ஓலம் ஆஸ்பத்திரி முழுவதும் கேட்டிருக்கும் . அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்ததாக சுற்றியிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள் .

இல்லை இல்லை நான் இறக்க வில்லை . இன்னும் உயிர் இருக்கிறது என்னை காப்பாற்றுங்கள் என்று கதற வேண்டும் போலிருந்தது . ஆனால் முடியவில்லை . காவ்யா என் அருகில் வா . என்னைப் பார் .

"விடைபெறும் விபரம் அறிந்திருந்தால் சந்திப்பின் சாத்தியத்தை அழித்திருப்பேன் " என்ற சாய் இந்துவின் கவிதை வரிகள் மின்னலென உடலில் வெட்டியது . உடல் அசைந்ததும் செவிலி ஒருத்தி பக்கத்தில் வந்தது மருத்துவ நெடியில் புரிந்தது . ஆனால் ஒன்றும் செய்யவில்லை

மயக்கத்தில் விழுந்த காவ்யாவின் முகத்தில் யாரோ தண்ணி அடித்தார்கள் .

அடித்த தண்ணீரில் தூக்கம் களைந்து பதறி எழுந்தேன் . மணி என்ன என்று கோபத்தோடு ருத்ரனிடம் கேட்டேன் . மணி ஏழு ஆகப்போகிறது அம்மா உங்களை எழுப்ப சொன்னாள் என்று சிரித்தான் . மணி ஆச்சு இன்னும் கிளம்ப வில்லை என்று காவ்யா திட்டி கொண்டிருந்தாள் . எழுந்து பதில் பேசாமல் அவசரம் அவசரமா குளித்து , உடை மாற்றிக்கொண்டே உணவு உண்டு வெளியில் வந்தேன் . மதிய உணவை மறந்து வந்து விட்டதாக காவ்யா ஓடிவந்து வந்து கொண்டிருந்தாள் .

ருத்ரனை வண்டியில் முன்னே உட்கார வைத்து கிளம்பினேன் . போகும் வழியில் ருத்ரன் வானத்தில் பறந்த மஞ்சள் நிற ஏரோபிளேன் அழகாக இருப்பதாக சிலாகித்து பேசிக்கொண்டே வந்தான் . நான் திடுக்கிட்டேன் . வேண்டுமென்றே அவன் சொல்வதை காதில் வாங்கி கொள்ள வில்லை .

பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு , சரி வருகிறேன் என்று கிளம்பும் போது , சட்டையை பிடித்து இழுத்தான் . என்னடா என்று அவசரமாக திரும்பினேன் . அருகே வந்து ரகசியமாக " இந்த ஊதா கலர் ஹெல்மெட் உங்களுக்கு நல்லா இல்லை அப்பா . மாற்றி விடுங்கள்" என்று காதில் கிசுகிசுத்தான் . செய்வதறியாது நின்று கொண்டிருந்தேன் .

அதே நொடி , ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் மஹாதேவபுரத்தில் உள்ள பெட்ரோல் ஸ்டேஷனில் , ஒரு லாரி டிரைவர் பெட்ரோல் போட்டு முடித்து , தனது பேண்ட் பாக்கட்டிலிருந்து ஒரு விஷ்கி பாட்டிலை துழாவி எடுத்து கொண்டிருந்தது எனக்குத் தெரிய வாய்ப்பில்லை !!!

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...