விதை

Swarna
உண்மைக் கதைகள்
5 out of 5 (10 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

விடாமல் அடிக்கும் அலாரத்தை அணைத்து விட்டு மொபைலை எடுத்து மணி பார்க்கிறாள். மணி ஐந்து முப்பது. படாரென எழுந்து வேக வேகமாகக் கிளம்ப ஆரம்பிக்கிறாள். ஐந்து மணிக்கு எழுந்தால் தான் அவசரமில்லாமல் கிளம்பி ஆறரை மணிக்கு வரும் கல்லூரிப் பேருந்தை பிடிக்க முடியும். ஆறரை மணிக்கு பேருந்தில் ஏறினால் தான் எட்டு மணிக்கு போய் சேர முடியும், சென்னைக்கு மிக அருகில் இருக்கும் பொறியியல் கல்லூரிக்கு. அவள் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசியையாக இருக்கிறாள்.

அவசர கதியில் சமைத்து , டப்பாவில் எடுத்துக் கொண்டு, கிளம்பி, படுக்கையறையில் தூங்கி கொண்டிருக்கும் கணவனை எழுப்பினாள்.

“ஏங்க எனக்கு லேட் ஆச்சு . நான் கிளம்பறேன். ஹாட் பாக்ஸ்ல இட்லி இருக்கு. சாம்பார் வெச்சுருக்கேன். வேணும்னா லன்ச்சுக்கு ரைஸ் வச்சுக்கோங்க. இல்ல வெளிய சாப்டுக்கோங்க.”

“ ஹ்ம்ம். போறப்போ லைட்ட ஆஃப் பண்ணிட்டு போ. அப்டியே கதவ சாத்திட்டு போயிடு. நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேன். பை.”

அவளது கணவன் ஐடியில் வேலை செய்கிறான். சில சமயங்களில் இரவெல்லாம் வேலை செய்துவிட்டு பகலில் விடிய விடிய தூங்குவான். அன்றும் அப்படி தான் உறங்கிக் கொண்டிருந்தான். இவள் வேக வேகமாக ஓட்டமும் நடையுமாக நிறுத்ததிற்கு வந்து சேர்ந்தாள். நிறுத்தத்தில் உடன் ஏறும் மாணவ மாணவிகளும் மற்றொரு பேராசிரியையும் இருந்தார்கள். அந்த ஆசிரியையைப் பார்த்து புன்னகைத்தாள்.

“ ஏன் ஸ்வேதா மேம் இப்படி மூச்சு வாங்க வர்றீங்க? தண்ணி வேணுமா ?”

“ இல்ல மேம் தாங்க்ஸ். பஸ் போயிடும்னு வேக வேகமா வந்தேன் மேம். பஸ்ஸ மிஸ் பண்ணிட்டா டவுன் பஸ் பிடிச்சு வர்றதுகுள்ள ரொம்ப கஷ்டம் ஆயிடுது.”

பேசிக்கொண்டிருக்கையில் பேருந்து வந்து, ஏறி தத்தமது இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள். பெரும்பாலானோர் பேருந்தில் உறக்கத்தில் இருந்தார்கள். ஸ்வேதாவோ சிந்தனக்குள் மூழ்கிப் போனாள். அம்மாவின் அறிவுரையை ஏற்று கல்லூரியில் சேர்ந்திருந்தாள் ஸ்வேதா. சென்னையில் வேலை பார்க்கும் வரனாக பார்த்து கல்யாணமும் முடிந்து ஒரு வருடம் ஓடியிருந்தது.

கல்லூரியில் படிக்கும் சமயம், எல்லோரையும் போன்றே இவளும் கனவுகளில் மிதந்தாள். இவள் கனவுகள் சற்று வித்யாசமாக இருந்தன. தன்னால் முடிந்த வரையில் சமுதாயத்திற்கு உதவியாய் இருக்க வேண்டும் என்றும், சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நினைத்திருந்தாள். சராசரியான வாழ்க்கையைப் போல் பணத்தின் பின் செல்லக் கூடாது என்றெல்லாம் எண்ணியிருந்தாள். அதனால் தான் அவள் அம்மா கல்லூரியில் வேலைக்குப் போக சொன்ன உடனே ஒத்துக் கொண்டாள். மாணவ மாணவிகளுக்கு உதவியாய் இருக்கலாம் என, தான் படித்த புத்தகங்களை , அந்த அறிவை பகிர்ந்து கொள்ளலாம் என்றெல்லாம் எண்ணியிருந்தாள். ஆனால் இதெல்லாம் எதுவுமே இல்லாமல், இயந்திரத்தனமாக மாறிய வாழ்க்கையை நினைத்து நொந்து கொண்டாள்.

கல்லூரியை அடைந்து அட்டெண்டென்ஸ் போட ப்ரின்சிபால் அறையை நோக்கி சென்றாள். அங்கே அவளது டிபார்ட்மெண்டில் ஃபைனல் இயர் படிக்கும் மாணவன் , ப்ரின்சிபால் அறை வாசலில் நின்று கொண்டிருந்தான். இவளைப் பார்க்கவும் அவன் தலை குனிந்து கொண்டான். இவளுக்கும் தான் செல்ல வேண்டிய வகுப்பிற்குச் செல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் ஏதும் கேட்காமல் சென்று விட்டாள். வகுப்பிற்குச் சென்று பாடங்களை நடத்தி முடித்து ஸ்டாஃப் ரூமிற்கு வந்தாள்.

“ என்ன ஸ்வேதா மேம். ? என்ன ஆச்சு ? டல்லா இருக்கீங்க? பசங்க எதும் வாலுத்தனம் பன்னாங்களா என்ன ?”

உடன் வேலை செய்யும் கௌரி கேட்டாள்.

“ அதெல்லாம் இல்ல மேம். வர்றோம். பாடம் நடத்துறோம். வேற எதாச்சும் ஜென்ரலா பேசலாம்னு பாத்தா டைம்மே இருக்க மாட்டேங்குது !”

“ ஜென்ரலானா? என்ன பத்தி பேசனும் உங்களுக்கு ?”

“ நான் வாசிச்ச நல்ல புக்க பத்தி கூட பேச முடியலையே.”

“ உங்களுக்கு எதுக்கு மேம் இந்த தேவையில்லாத யோசனை எல்லாம்? வந்தோமா . நடத்தினோமா . தேதி ஒன்னு ஆச்சா சம்பளம் வாங்கினோமானு இல்லாம. எதுக்கு இந்த தேவையில்லாத ஆசை??”

“ மேம், நாம தானே இதெல்லாம் சொல்லி குடுக்கனும். நல்ல மனிதனாக நாம தானே உதவனும் ?”

“ மேம் அது நமக்கு தேவையில்லாத வேல. எனக்கு லேபுக்கு போகனும் . நான் கிளம்பறேன். நீங்க ரொம்ப யோசிக்காம அடுத்த க்ளாஸ்க்கு ரெடி பண்ணுங்க.”

அவள் சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்தாள் ஸ்வேதா .அப்போது எதையோ எடுக்க உள்ளே வந்த லேப் அசிஸ்டெண்ட் ரமேஷ்,

“ ஸ்வேதா மேம். பயங்கர யோசனையில இருக்கீங்க போல.? அங்க காரிடார்ல கௌரி மேமும் லெனின் சாரும் உங்கள பத்தி தான் பேசிட்டு இருக்காங்க. என்ன மேம் ? எதும் ப்ராப்ளமா?”

“ அதெல்லாம் ஒன்னுமில்ல ரமேஷ். ஆமா, ப்ரின்சிபால் ரூம் வாசல்ல ஒரு ஃபைனல் இயர் ஸ்டூடண்ட் நின்னுட்டு இருந்தான்ல. என்ன பிரச்சனைனு தெரியுமா ?”

“ தெரியலையே மேம். ஏதாச்சும் வேண்டாத வேலை பன்னியிருப்பான். அதான் பனிஷ்மெட்டா இருக்கும். நீங்க அவங்க க்ளாஸ்க்கு போகலல்ல ? அந்த க்ளாஸ் ஒரு சேட்டை பிடிச்ச க்ளாஸ் மேம்.”

அப்போது லெனின் உள்ளே வரவும், ரமேஷ் அவரை பார்த்து,

“வாங்க லெனின் சார் குட் மார்னிங்”

“ அங்க பாத்தப்ப சொல்லல்ல . இங்க சொல்றியா ? குட் மார்னிங்க் குட் மார்னிங். ஓடு லேபுக்கு , உங்க மேம் இந்நேரம் போயிருப்பாங்க” லெனின் விரட்டினார்.

இவள் புன்முறுவலுடன் இதை பார்த்து கொண்டிருந்தாள். லெனின் பேராசிரியராக இருக்கிறார். பொதுவாக ஸ்டாஃப்களுக்கு அவரைப் பிடிக்காது. ஆனால் மாணவ மாணவிகளுக்கு அவர் பிடித்தமான ஆசிரியராக இருந்தார். அதனாலோ என்னவோ இவளுக்கும் அவரை பிடித்தே இருந்தது.

“ குட் மார்னிங் சார் லீவ் முடிஞ்சு எப்போ ஜாயின் பண்ணீங்க ?”

“ வெரி குட் மார்னிங் மேம் லீவ் இன்னும் முடியல. அட்மின் ஆஃபிஸ்ல ஒரு சின்ன வேலை இருந்தது. சரி அப்டியே டிபார்ட்மெண்ட் போயி எல்லாரையும் பாக்கலாமேனு வந்தேன்.”

“ ஓ . சரி சார். எப்போ ஜாயின் பண்ண போறீங்க?”

“ இன்னும் ஒரு வாரத்துல ஜாயின் பண்றேன். ஆமா. கௌரி மேம் கிட்ட என்ன சொன்னீங்க ? “

“ ஏன் சார் ? என்ன சொன்னாங்க ?” அவளது மேசையில் இருக்கும் புத்தகங்களை அடுக்கிக் கொண்டே கேட்டாள்.

“ நீங்க வருத்த பட்டீங்கனு சொன்னாங்க.”

“ அது உண்மை தான் சார். டீச்சர்ஸ் தான் ஒரு ஸ்டூடண்ட்ட ஒரு நல்ல மனிதனா உருவாக்க முடியும்னு புத்தகங்கள்ல்ல படிச்சுட்டு , அதுக்கு எதுவுமே பண்ணாம வெறுமனே பாடம் மட்டுமே எடுக்க வருத்தமா இருக்கு சார். அதான் அவங்க கிட்ட சொன்னேன். கௌரி மேம், அதெல்லாம் தேவையில்லாத வேலைனு சொல்லிட்டு போயிட்டாங்க.” சொல்லிவிட்டு புன்னகைக்கிறாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த லெனின் புன்னகைத்துக் கொண்டே

“ மேம். உங்களை பார்க்கிறப்போ ஒரு பதினெட்டு இருபது வருஷங்களுக்கு முந்தி என்ன பாக்கற மாதிரியே இருக்கு. நானும் ஜாயின் பன்ன புதுசுல இப்படிதான் இருந்தேன். அதுனாலையே என்ன ஸ்டாஃப் யாருக்கும் பிடிக்காது. ஆனா ஸ்டூடண்ட்ஸ்க்கு கொஞ்சம் பிடிச்சது. நீங்க நல்லது சொன்னா அறுபதுல பத்து பேராச்சும் கேப்பான். நல்லது பண்ணனும்னு நினைக்கிறீங்க. தயங்காம பண்ணுங்க. நீங்க வேலைக்கு ஜாயின் பண்ணி ரெண்டு வருஷம் கூட ஆகல இல்ல மேம். போகப் போக நீங்களே எப்படி டைம் ஒதுக்கி இதெல்லாம் பசங்களுக்கு சொல்லனும்னு கத்துப்பீங்க.”

அவர் பேசுவதையே கேட்டு கொண்டிருந்தாள். அவரே மேலும் தொடர்ந்தார்

“ ஆனா ஒன்னு மேம், இந்த எண்ணத்த மட்டும் எப்பவுமே மாத்திக்காதிங்க. இந்த கௌரி மேம் மாதிரி , இதெல்லாம் தேவையில்லைனு சொல்ல நிறைய ஆளுங்க வந்துட்டேதான் இருப்பாங்க. நீங்க தான் ஸ்ட்றாங்கா இருக்கணும்.”

அவர் நம்பிக்கை விதையை அவளிடம் விதைத்து கொண்டிருந்தார். அதற்குபின்னான நாட்களில் அவள் உற்சாகமாகவே காணபட்டாள். மூன்று தினங்களுக்கு பிறகு , ஒரு கோப்பில் கையெழுத்து வாங்க ப்ரின்சிபால் அறைக்கு சென்ற போது அன்று நின்று கொண்டிருந்த ஃபைனல் இயர் மாணவன் இன்றும் அங்கே நின்று கொண்டிருப்பதைக் கண்டாள். அவனிடம் பேசலனாள்.

“ தம்பி. இங்க வா. உன் பேரு என்ன? ஃபைனல் இயர் தானே நீ ?”

“ யெஸ் மேம். என் பேரு கோபி மேம்.”

“ முனு நாள் முன்ன, உன்ன இங்க பாத்தேன். இன்னும் இங்க இருக்க ? என்ன ப்ராப்ளம்? ஏதும் பனிஷ்மெண்ட்டா என்ன ?”

“ இல்ல மேம். பனிஷ்மெண்ட் எல்லாம் இல்ல.”

அவன் தயங்கினான். அவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்த காரிடாரில் மாணவர்களும் ஆசிரியர்களும் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தார்கள். என்ன பிரச்சனை என அவன் சொல்லத் தயங்குவது அதனால் இருக்கலாம் என ஸ்வேதா நினைத்தாள்.. ஸ்டாஃப் ரூமிற்கு வர சொன்னாலும் வேறு பேராசியர்கள் இருப்பார்கள். அதனால், அவனைத் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் லேபிற்கு வரச் சொன்னாள். அவனும் லேபிற்கு வந்தான்.

“ சொல்லு கோபி. என்ன ப்ராப்ளம்? “

“ மேம் .. அது வந்து…”

அவன் இன்னும் தயங்கினான். அவனை சமாதனம் செய்து பேச வைக்க முயன்றாள் ஸ்வேதா.

“ இப்படி தயங்கினா எப்படி ? நீ சொன்னா தான் என்னால எதாச்சும் பன்ன முடியுமானு பாக்கலாம்.”

அவன் தலை கவிழ்ந்து பேசத் தொடங்கினான்.

“ மேம், எங்க அப்பா இறந்துட்டார். நாலு மாசம் ஆச்சு. அவர் இறந்த அப்பறம் கொஞ்சம் கஷ்டம் ஆயிடுச்சு மேம். இந்த செமஸ்டர் ஃபீஸ் கட்ட முடியல. கரஸ்பாண்டண்ட் , மேனேஜர்னு பாத்து , என் கஷ்டத்த சொன்னேன் மேம். அவங்க ஃபுல் ஃபீஸ் கட்ட வேணாம்னும், இப்போதைக்கு கொஞ்சம் மட்டும் கட்டனும்னு சொல்லிட்டாங்க..

ஆனா , என்னால அதுவே கட்ட முடியாது மேம். எக்ஸாம் எழுத மட்டும் விட்டா கூட பரவாயில்ல. ஆனா ஃபீஸ் கட்டினாதான் எக்ஸாம் எழுத முடியும்னு சொல்லிட்டாங்க மேம். அதான் ப்ரின்சிபால்ல பாத்து, அவரால ஏதாச்சும் ஹெல்ப் பண்ண முடியுமானு கேட்டுட்டு இருக்கேன் மேம்.

எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கச்சி மேம். நான் தான் மூத்த பையன். வீட்ல இப்போ ரொம்ப கஷ்டம். அப்பாக்கு உடம்பு சரியில்லாம இருந்தது, இறந்துடுவார்னு நாங்க நினைக்கல. அவருக்கு ஹாஸ்பிடல் ட்ரீட்மெண்ட்னு ரொம்ப செலவு ஆயிடுச்சு மேம். எப்படியும் நல்லாயிடுவார்னு நினச்சோம். இறந்துட்டார்.”

அவள் பார்க்காதவாறு அவன் கண்களை துடைத்துக் கொண்டான். மேலும் அவனே தொடர்ந்தான்.

“ இப்போ தம்பி தங்கச்சி அம்மானு எல்லாரையும் நான் தான் பாத்துக்கனும் மேம். அதுக்கு இந்த டிகிரி ரொம்ப முக்கியம் மேம். அதான் எக்ஸாம் மட்டுமாச்சும் எழுதனும்னு அலஞ்சுட்டு இருக்கேன் மேம்.”

“ எவ்ளோ ஃபீஸ் கட்டணும் ?”

“ பதினஞ்சாயிரம் மேம். இப்போ இது கட்டிட்டா எக்ஸாமும் க்ளாஸ்சும் அட்டெண்ட் பண்ணலாம் மேம். மீதி ஃபீஸ் கட்டினாத்தாம் டிகிரி சர்டிஃபிகேட் குடுப்பாங்க மேம். அது நான் எப்படியாச்சும் சம்பாரிச்சு. கட்டி வாங்கிப்பேன் மேம்.” நம்பிக்கையாகப் பேசினான்.

“ ஹ்ம்ம். சரி. என் வீட்டு அட்ரெஸ் நோட் பண்ணிக்கோ. ஈவினிங் ஆறு மணி போல வீட்டுக்கு வா. வர முடியும் தான? ஆமா உன் வீடு எங்க இருக்கு ?”

“ என் விடு ஊரப்பாக்கம் மேம்.”

“ தாம்பரத்துல இருந்து ஊரபாக்கம் போறது ஈசி தான்”

அவன் புரியாமல் விழித்தான். எதுக்கு என்பது போல அவளை பார்த்தான்.

“ ஏ டி எம் போய் நான் கேஷ் எடுத்து வைக்கிறேன். நீ வந்து வாங்கிக்கோ. ஆறு மணினா எனக்கு ஈசி. உனக்கு ஓகே தானே?”

“யெஸ் மேம். யெஸ் மேம்.” அவன் குரல் உடைந்தது. ஸ்வேதா வீட்டு விலாசத்தை குடுத்துவிட்டு, அடுத்த வகுப்பிற்குத் தயார் செய்ய ஸ்டாஃப் ரூமிற்குச் சென்று விட்டாள்.

சாயங்காலம் தனது நிறுத்தத்திற்கு முன்பாகவே இறங்கி ஏ டி எம் சென்று பணம் எடுத்துக் கொண்டு, ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். இவளது கைப்பேசி எண்ணையும் அவனுக்கு குடுத்திருந்தாள். கோபி கால் பண்ணி வீட்டிற்கு வரலாமா எனக் கேட்டுவிட்டு , வீட்டிற்கு வந்தான்.

“ வா கோபி. உனக்காகத்தான் வெய்ட் பண்றேன். உக்காரு. காபி சாப்பிடுவ தான. காபி போடறேன். இந்தா தண்ணி குடி.” தண்ணீர் பாட்டிலை நீட்டிக்கொண்டே பேசினாள்.

“ மேம். அதெல்லாம் வேணாம் மேம். உங்களுக்கு எதுக்கு சிரமம்?”

“ அட . இதுல என்ன இருக்கு ? நான் ஈவினிங்ல காபி குடிப்பேன். நீ வருவனு நானும் குடிக்கல. வரேன் இரு.”

அவள் சென்று காபி கோப்பைகளுடன் வந்தாள். அவனிடம் ஒரு கோப்பையை குடுத்து விட்டு, தனது கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து அவனிடம் நீட்டுகிறாள்.

“ ஃபீஸ் கட்டிட்டு மீதி அம்மாட்ட குடு. ஏதோ என்னால முடிஞ்சது,”

இருபதாயிரத்தை நீட்டினாள். அவன் நா தழுதழுத்தான்.

“ மேம் . இது நான் கடனா வாங்கிக்கிறேன் மேம். என்னால முடியறப்போ கண்டிப்பா திருப்பி குடுத்துடுவேன் மேம்.”

“ நீ நல்ல நிலைமைக்கு வந்த அப்றம் யாராச்சும் படிக்க முடியலனு சொன்னா அவங்களுக்கு இந்தக் காச குடுத்துடு. எனக்கு தர வேணாம். ஓகே ?”

“ ரொம்ப தேங்ஸ் மேம்”

அவனது குடும்பத்தை பற்றி தெரிந்து கொண்டாள். சிறிது நேரம் பேசி விட்டு அவன் கிளம்பினான்.

இது நடந்து சில வருடங்கள் ஓடியிருந்தன. அந்த சம்பவத்தை அவள் மறந்தும் போயிருந்தாள். அவளும் தன்னாலான வகையில் மாணவ மாணவிகளுக்கு உதவியாக இருக்க முயன்று கொண்டிந்தாள். பாடங்களுடன் சேர்த்து புத்தகங்களை பற்றியும் பேச ஆரம்பித்திருந்தாள். சில வருடங்களில் ஸ்வேதாவிற்கு குழந்தை பிறந்தது. அவள் வேலையை விட்டு விட்டிருந்தாள் , குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக. யார் சொல்லியும் கேளாமல் தானே குழந்தையை வளர்ப்பது எனவும், அது பள்ளி செல்லும் வரை வேலைக்கு செல்வதில்லை எனவும் முடிவெடுத்திருந்தாள்.

ஒரு நாள் முற்பகல் தனது மகளை உறங்க வைத்துவிட்டு ஸ்வேதா வந்தமர்கையில் அவளது கைப்பேசிக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

“ ஹலோ. ஸ்வேதா மேம்.”

“ ஆமா . நான் ஸ்வேதா தான். நீங்க யாரு ?”

“ மேம். நான் கோபி. என்னை நியாபகம் இருக்கா மேம்.? ஃபைனல் இயர் ஸ்டூடெண்ட் . எனக்கு ஃபீஸ் கட்ட ஹெல்ப் பண்ணீங்கல்ல மேம்.”

“ ஓ . கோபி. நல்லா நியாபகம் இருக்கே. எப்படி இருக்க?”

“ நல்லா இருக்கேன் மேம். நீங்க எப்படி மேம் இருக்கீங்க ? மேம் இன்னும் நீங்க அதே வீட்ல தான் இருக்கீங்களா?”

“ ஆமா கோபி. ஏன் ?”

“ எங்க அம்மாவ உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரலாமா மேம். உங்கள பாக்கனும்னு சொன்னாங்க.”

“ கூட்டிட்டு வா கோபி.”

“ நாங்க ஈவினிங் போல வரலாமா மேம்?”

“ தாராளமா வரலாம். வாங்க.”

அன்று சாயங்காலம் அவளது வீட்டிற்கு கோபியும் அவனது தாயாரும் வந்தார்கள்.. கோபி காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்வதாகவும், அவன் தந்தை மறைந்த சமயத்தில் பட்ட கடன் அனைத்தையும் அடைத்து விட்டதாகவும் , தம்பி தங்கையை நன்றாக படிக்க வைப்பதாகவும் தெரிந்து கொண்டாள். அவர்களும் ஸ்வேதாவின் கணவன் பற்றி கேட்டு தெரிந்து கொண்டார்கள். குழந்தையை கோபியின் அம்மா வாங்கி கொண்டாள். அவனது அம்மா ஸ்வேதாவிடம்,

“ ரொம்ப நன்றிம்மா.” .

“ மேம். உங்கள பாக்கணும்னு ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தாங்க. இன்னிக்கு வந்துட்டோம். மேம் டிகிரி சர்டிஃபிகேட் அடுத்த ஒரு வருஷத்துல எல்லாம் வாங்கிட்டேன் மேம்.” கோபியின் முகத்தில் பெருமிதம்.

“மேம். இந்த ஃபோட்டோ பாருங்களேன்” அவன் காட்டிய புகைப்படத்தில் பதினேழு சிறுவர்களுக்கு நடுவில் கோபி நிற்கிறான். அனைவரும் புன்னகைக்க , அது ஒரு அழகிய புகைப்படமாக இருந்தது. அவனே தொடர்ந்தான்.

“ மேம். இந்த பிள்ளைங்கள நாந்தான் படிக்க வைக்கிறேன் மேம். எல்லாம் கஷ்ட பட்ற குடும்பம். என்னால முடிஞ்ச வரை படிக்க வைக்க முயற்சி பண்றேன் மேம். இவங்கள படிக்க வைக்கனும்னு இன்னும் இன்னும் உழைக்கிறேன் மேம். நான் கேக்காமலே நீங்களா எனக்கு அன்னிக்கு ஹெல்ப் பண்ணீங்க மேம். உதவினு கேட்டு வர்றவங்களுக்காச்சும் உதவற இடத்தில நான் இருக்கணும்னு ஓடிட்டே இருக்கேன் மேம். இன்னும் நல்லா சம்பாரிச்சு இன்னும் நிறைய பிள்ளைங்கள படிக்க வைக்ணும் மேம்.” புன்னகையுடன் கூறிவிட்டு அவள் குழந்தையுடன் விளையாட ஆரம்பித்தான்.

அவள் போட்ட விதை ஒரு ஆல மரமாய் வளர்ந்திருப்பதை பூரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஸ்வேதா !

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...