பசியின் முடிவு

பெண்மையக் கதைகள்
5 out of 5 (4 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

ஒவ்வொரு தினமும் அதிகாலையிலேயே சூரியனை தட்டி எழுப்பும் மாணிக்கம் இன்று சூரியன் உதயமாகி வெகு நேரமாகியும் படுக்கையில் இருந்து எழ முடியாமல் மனம் இல்லாமல் பாயோடு பாயாக சுருண்டு கிடந்தான். அவனது வீட்டில் கடந்த ஒரு மாதமாக அரங்கேறி வரும் தொடர் நிகழ்வுகள் அவன் கண் முன்னே அசைந்தாடின. ஒவ்வொரு நாள் இரவும் கொஞ்சமாவது அரிசி வாங்கி வந்து விடுவார் என காத்திருக்கும் மனைவியும் இரு குழந்தைகளும் அவன் வெறுங்கையுடன் வருவதை கண்டு ஏமாந்து சோர்ந்து போயினர். அவனும் ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுடனேயே தொடர்வான். வேலையும் அரிசியும் இன்றி வெறுங்கையுடன் திரும்பும்போதும் அதே நம்பிக்கையுடனேயே தொடர்வான் நாளை எப்படியாவது கொஞ்சம் வேலையும் காசும் கிடைக்கும் என்று. ஆனாலும் முந்தைய நாள் போலவே வெறுங்கையுடனேயே திரும்பினான். அவன் மனைவி புஷ்பா பக்கத்து வீடுகளிலும் தெரிந்தவர்களிடமும் நாணமின்றி தயைகூர்ந்து வெட்கம் சோகத்தை கண்களில் மறைத்து உதவி கேட்டதால் அவ்வப்போது அவர்கள் வீட்டு அடுப்பு பசியில் பற்றி எரியும். அத்தருவாயில் இரு குழந்தைகளும் அன்னையை கட்டிப்பிடித்துக் கொஞ்சியவாரே சுற்றி சுற்றி வரும். அவனும் தினமும் சோம்பல் இன்றி வெளியே சென்று வேலை செய்த வந்தான். கிடைக்கும் எந்த வேலையையும் முகம் பாராமல் செய்து கொடுப்பான். மரம் வெட்டுவான் குழிபறித்து தருவான். வீடுகளையும் காடுகளையும் சுத்தப்படுத்திக் கொடுப்பான். மரமேறி தேங்காய், நுங்கு வெட்டி தருவான். வயல் வேலைகள் செய்வான். கூலி கூட அதிகம் கேட்க மாட்டான். அவர்கள் மனமுவர்ந்து கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்வான். கிடைக்கும் பணத்தில் அரிசி பருப்பு காய்கறிகள் குழந்தைகள் விரும்பி உண்ணும் தின்பண்டங்கள் வாங்கிக் கொள்வான். சில தருணங்களில் எதிர்பார்ப்பதை விட அதிக கூலி கிடைக்கும்போது மட்டும் மனைவிக்கு பூ வாங்கிக் கொள்வான். அவளுக்கு பூ என்றால் கொள்ளை பிரியம். அதை ஆசையோடு தண்ணீர் தெளித்து இரண்டு மூன்று நாட்களுக்கு வைத்துக்கொள்வாள். இன்று வயிற்றுக்கே ஒன்றுமில்லாத போது இனிப்பும் ?பூவும்?. தந்தை வேலைக்கு சென்றதும் வீட்டிலிருக்கும் எதையாவது சாப்பிட்டுவிட்டு சிலநேரம் சோரும் பல சமயங்களில் உப்பிட்ட நீராகாரமோ முதல்நாள் இரவில் இரவல் பெற்ற வடித்த கஞ்சியோ ஏதும் இல்லை என்றால் வெறும் வயிற்றுடன் பள்ளிக்கு கிளம்பி விடுவார்கள். அக்குழந்தைகள் குடும்ப சூழ்நிலையையும் வியர்வை கண்ணீரையும் அறிந்திருந்தனர். பள்ளிக்கு சென்றால் மதிய உணவு நிச்சயம். இதனாலேயே தவறாமல் பள்ளிக்கு சென்றனர். கையோடு எடுத்துச் செல்லும் சிறு டப்பாவில் இரவுக்கான உணவை பத்திரப்படுத்தி தயங்கியபடி வீட்டுக்கு எடுத்து வருவர். சில நாட்களாக குழந்தைகளிடம் தாய் வெட்கத்துடன் சொல்லி அனுப்புவாள் இன்னைக்கு ரெண்டு டப்பா வைச்சிருக்கேன். பள்ளி விட்டு வரும் போது இரண்டு டப்பாக்களும் வயிறு நிறைந்து காணப்படும். அப் புண்ணியத்தில் ஒரு வேளை இரவு உணவு கொஞ்சம் கிடைத்தது. அம்மாவின் கழுத்தை கட்டிப்பிடித்து கொஞ்சி விளையாடுவதற்கு அவர்களுக்குள் தினமும் பெரும் போரே நடக்கும். அவ்வாறான ஒரு நேரத்தில் மகள் லட்சுமி அம்மாவின் கழுத்தில் தொங்கிய படியே" அம்மா அம்மா நாம பேசாம ஆடா பொறந்து இருக்கலாம்" என்றாள்.அம்மா சிரித்தவாறு "ஏண்டா தங்கம்" "தெனைக்கும் நினைக்கும் போதெல்லாம் சாப்பாடு " இல்லம்மா. என கழுத்தோடு கைகள் அனைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். "அம்மாண்டி செல்லம்" என மகளை அனைத்து கண்ணீரை மறைத்து முத்தமிட்டாள். மாணிக்கம் அவனது முன்னோர்களிடம் இருந்து எப்படி உழைப்பது என்பதை மட்டுமே கற்றுக் கொண்டான். அவர்களிடம் இருந்து பெற வயல்வெளியோ நிலமோ ஏதுமில்லை.கடந்த ஒரு வாரமாக அவனது குடும்பம் பரிதாபத்துக்குரிய பட்டினியில் சிக்கி வெளியே வர முடியாத பின்னல்களுடன் சிக்கிக்கொண்டது. தன்னிடம் எஞ்சி நிற்கும் மானம் மரியாதை எல்லாம் வீசி எறிந்துவிட்டு கையேந்தலாமோ! என்ற எண்ணம் அவனை கேள்வி கேட்டது. பிச்சைக்காரர்கள் பற்றி இதற்கு முன் அதிகம் சிந்திக்காத அவனால் அவர்களின் நிலையையும் உணர்வுகளையும் இப்போதெல்லாம் எளிதாக உணர முடிந்தது. அவ்வாறு செய்தால் தமது வறுமையை மக்கள் அறிந்து கொள்வார்கள் உடல் கூசும்படி செய்துவிடுவார்கள் என எண்ணி அந் நினைவை புறந்தள்ளினான். கடந்த ஐந்தாறு நாட்களாக மாணிக்கம் மனமும் உடம்பும் தளர்ந்து படுத்த படுக்கையானான். கை கால்களை குறுக்கியப்படி முனகியவாறே பாயிலேயே கந்தல் துணிப் போல ஓர் மூலையில் கிடந்தான். கணவனுக்கு கொடுப்பதற்கு மனைவியிடம் ஏதும் இல்லை. ஏதாவது ஆகாரம் கொடுத்தால் தானே உடல் தேற. பள்ளியில் இருந்து குழந்தைகள் கொண்டுவரும் உணவும் அவன் தொண்டையை விட்டு கீழே இறங்க மறுத்தது. மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்தாள். அவன் உடலைத் தேற்ற ஆதாரத் தேவையான பணம் அவளிடம் இல்லை. புரண்டு படுக்க கூட தெம்பில்லாமல் முனகிக்கொண்டே கிடந்தான். இன்று விடிந்து வெகுநேரம் ஆகியும் மனைவியையும் குழந்தைகளையும் பார்க்க மனமில்லாமல் அமைதியாக இருந்தான். வீடு அமைதியாக இருந்தது. போர்வையில் உள்ள துவாரங்கள் வழியே மனைவியையும் குழந்தைகளையும் விரும்பி நோட்டமிட்டான். அவன் மனைவி பேசுவது மெல்ல அவன் காதில் விழுந்தது. குழந்தைகளை அழைத்து அவள் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை தூங்கிட்டு இருக்காங்க சத்தம் போடாம சீக்கிரமா ஸ்கூலுக்கு போங்க என அவசர அவசரமாக அனுப்பி வைத்தாள். அவ்வேளையில் மாணிக்கத்தின் வயிற்றில் இருந்து சுறந்த ஒன்று அப்படியே அதில் அவனை மூழ்க்கடிப்பதை போலவும் கூரிய ஆயுதத்தால் அவன் உடல் ஆழமாக கிழிக்கப்படுவதைப் போலவும் உணர்ந்தான். இப்போது வீட்டில் இருப்பது அவனும் அவன் மனைவி புஷ்பா மட்டுமே. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவன் மனைவியோடு இருந்த சந்தோஷ நிமிடங்கள் அவன் நினைவில் மிதந்து வந்தன. அவளை அள்ளி அணைத்து, துவாரத்தின் வழியே மனைவி காண அவன் கண்கள் அலைபாய்ந்தது. வாசலில் ஏதோ ஒரு சிந்தனையில் புஷ்பா வறண்ட வானத்தையே வெறித்துப் பார்த்துக் பார்த்துக்கொண்டிருந்தது மங்கலாக தெரிந்தது. அப்போது சிறிது நேரத்தில் வாசல் அருகே வந்த ஒருவனுடன் அவள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்தான். அவனை அவள் வீட்டிற்கு வரும்படி அழைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டான். அவனை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ரகசியமாக உள்ளே அழைத்ததையும் அவன் வாசலில் விட்ட செருப்பை ஓரமாக எடுத்து மறைத்து வைத்ததையும் கண்டான்.எந்த ஆணுடனும் அதிகம் பேசும் சுபாவம் இல்லாத மனைவி இன்று வாசலில் காத்திருந்து ஒருவனை உள்ளே அழைத்து வந்தது அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏதோ விபரீதத்திற்காண சாயலோ என நினைத்த அவன் மனம் மெல்ல நடுங்கத் தொடங்கியது. மிகவும் சோர்வுற்றிருந்த அவனால் படுக்கையிலிருந்து எழவோ குரல் கொடுக்கவோ முடியாமல் மன பலத்தையும் மெல்ல இழந்து சுருண்டு கிடந்தான். வந்தவன் அவளிடம் "வீட்ல அவரும் குழந்தைகளும்" வீட்ல இல்ல வேற யாராவது"? "இல்ல இல்ல உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது." "சாயந்திரம் வர வீடு அமைதியா இருக்கும். கவல வேண்டாம். அன்னைக்கு உங்க மதிப்பு தெரியாம அவமான படுத்திட்டேன். மன்னிச்சுக்கோங்க". இருண்ட கண்களின் மங்கலான பார்வையினாலும் வந்தவன் குரலில் இருந்தும் அவன் யார் என்பதை மாணிக் கத்தால் யூகிக்க முடியவில்லை. மேலும் புஷ்பா தொடர்ந்தாள். 'இன்னைக்கு உங்க தயவையையும் வாழ்க்கையோட அர்த்தங்களையும் புரிஞ்சுகிட்டேன். கற்பு மனசாட்சி மானத்தை விட இந்த உலகத்திலேயே பசி ரொம்ப பெருசுன்னு புரிஞ்சுகிட்டேன்".அது அது உங்க விருப்பம். தயங்கவோ மறுக்கவோ மாட்டேன். இதை நீங்க நல்லா புரிஞ்சுகிட்டா நீங்க நினைக்கும்போதெல்லாம் இங்க வரலாம். மனசு நெறஞ்சா பணத்தை கொடுத்துட்டு போலாம்". அவன் மனைவி உணர்வற்ற நிலையில் அவனை வீட்டில் கூரையினால் தடுக்கப்பட்ட பகுதிக்கு அழைத்து சென்றாள். அவனால் எழுந்து மண்டியிடவோ முறையிடவோ முடியவில்லை. அவனிடம் பலம் சிறிதும் இல்லை. கண்களை இறுக்க மூடி படுக்கையிலேயே உயிரோடு கிடந்தான். பக்கத்து தடுக்கிலிருந்து வளையல்கள் குலுங்கி அழும் அலறல் ஓசையும் இடுக்கு வழியாக நீர் சொரிந்த இரு கண்களும் அவனை நோக்கி பாய்ந்து வருவதை உணர்ந்தான்.

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...