முற்பகல் செய்யின்...

பெண்மையக் கதைகள்
5 out of 5 (5 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

"அம்மா உனக்கு வேண்டியதையெல்லாம் மறக்காம எடுத்து வச்சிக்க... அங்க தேவையில்லைன்னு நினைக்கிறதை உன்னோட செல்ப்ல பத்திரமா எடுத்து வச்சிட்டுப் போ...ஒரு மாசத்துக்குத் தேவையான மருந்து மாத்திரையெல்லாம் வாங்கித் தந்துட்டேன்... அதையெல்லாம் மறக்காம எடுத்துக்க... இது தீர்ந்ததும் சீனுக்கிட்டச் சொல்லி வாங்கிக்க..." என்றான் காசி - லட்சுமியின் மூத்த மகன்.

"சரிப்பா..." என்றபடி நூல் சேலையை கட்டப்பையில் திணித்தாள் லட்சுமி.

"அப்புறம்... சீனு பொண்டாட்டி அப்படி இப்படித்தான் இருப்பா... இவளை மாதிரி அவ பாக்கலைன்னுட்டு சண்டை கிண்டை போட்டுடாதே... அவ என்ன சொன்னாலும் சரின்னு சொல்லிட்டு இருக்கப் பழகிக்க... அதுதான் நல்லது... புரியுதா...?"

"சரிப்பா..."

"ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவைதான் செக்கப்புக்குப் போகணும்... சும்மா... அங்க பிடிச்சிக்கிச்சு இங்க பிடிச்சிக்கிச்சுன்னு சொல்லிக்கிட்டு அடிக்கடி ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போகச் சொல்லி நிக்காதே... அவன் டென்சன் பார்ட்டி...கடுப்பாயிடுவான்... சரியா..?"

"சரிப்பா..."

"அத்தை... அங்க வெஸ்டர்ன் டாய்லெட்தான் இருக்கும்... அதை எப்படி யூஸ் பண்ணனும்ன்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டு அது மாதிரிச் செய்யுங்க... இங்க மாதிரி வெளிய தெருவ போகல்லாம் இடமிருக்காது... வீட்டுக்குள்ளதான் எல்லாமே... அதனால அதை நாறடிச்சிடாதீங்க... நீங்க போனான்னு மட்டுமில்ல.... எப்பவுமே நீங்களே அதைக் கிளீன் பண்ணி சுத்தமா வச்சிக்குங்க... அவங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போயிருவாங்க... நீங்கதானே வீட்டுல இருப்பீங்க..." என்றபடி வந்தாள் மருமகள் ரமா.

"சரித்தா... பாத்துக்கிறேன்..."

"அங்க போயிட்டு அண்ணன் வீட்டுல அப்படி இருந்தேன்... இப்படி இருந்தேன்னு இந்த வீட்டுப் பெருமை பேசிக்கிட்டு இருக்காதே... அவங்க என்ன சொல்றாங்களோ அதைக் கேட்டுக்கிட்டு இருக்கப் பழகிக்க... நீ ஏதாவது சொல்லப் போயி அதுவே பெரிய பிரச்சினையாகவும் வாய்ப்பிருக்கு... புரியுதா நான் சொல்றது..?"

"புரியுதுப்பா..."

"ஆமா... சொல்லும் போது புரியுது புரியுதுன்னுட்டு அங்க போயித் தேவையில்லாமப் பிரச்சினையை இழுத்து வச்சிடாதீங்க... வயசான காலத்துல என்ன பேசுறோம்... என்ன பண்ணுறோம்ன்னு புரியிறதில்லை.. அங்க போயி இவரு சொன்ன மாதிரி நடந்துக்கங்க... அவங்க என்ன சொன்னாலும் சரி சரின்னு போகக் கத்துக்கங்க... ஏன்னா அங்க ஆறு மாசம் நீங்க இருக்கணும்... "

"சரித்தா..."

"அப்பா... அப்பத்தா எங்கே கிளம்புறாங்க...?" கேட்டபடி வந்தாள் பனிரெண்டு வயதான பேத்தி ஸ்ரீதாரிணி.

"அப்பத்தா சித்தப்பா வீட்டுக்குப் போறாங்க..."

"சித்தப்பா வீட்டுக்கா...? அப்ப இங்க இனிமே வரமாட்டாங்களா...?"

"வருவாங்க... ஆறு மாசம் அங்க இருந்துட்டு அப்புறமா இங்க வருவாங்க...."

"ஆறு மாசமா... நோ... அப்பத்தா இங்கயே இருக்கட்டும்... " என்றவள் லெட்சுமியைப் பார்த்து "ப்ளீஸ் அப்பத்தா... நீங்க சித்தப்பா வீட்டுக்குப் போவேண்டாம்... இங்கயே இருங்க... இங்க உங்களுக்கு என்ன பிரச்சினை..? யாராவது ஏதாவது சொன்னாங்களா..?" என்றாள்.

"ஏய் தாரு... பெரிய மனுசி மாதிரிப் பேசிக்கிட்டு... இது பெரியவங்க எடுத்த முடிவு... இங்க ஆறு மாசம்... அங்க ஆறு மாசம்தான்... வயசுக்கு மீறிக் கேள்வி கேட்டுக்கிட்டு... போ அங்கிட்டு..." கத்தினாள் ரமா.

காசி ஒன்றும் பேசாமல் எழுந்து சென்றான்.

வெட்சுமிக்கு அருகில் அமர்ந்த ஸ்ரீதாரிணி கண்ணைக் கசக்கினாள்.

தன்னுடைய உடைமைகளை எடுத்து வைத்த கட்டப்பையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு பேத்தியை இழுத்து அணைத்து சேலைத் தலைப்பால் அவளின் முகத்தைத் துடைத்து, "செல்லக்குட்டியில்ல... என்னோட சீதையில்ல... இங்கேரு நீ என்ன சின்னப்பிள்ளையா... இப்பப் பெரிய மனுசியில்லயா... அழக்கூடாதுடி செல்லம்... அப்பத்தா எங்கே போகப்போறேன்... சித்தப்பா வீட்டுக்குத்தானே... போன்ல பேசுவோம்... அதான் இப்ப முகம் பார்த்துப் பேசுறியல்ல அப்புடிப் பேசுவோம்... ஆறு மாசம்தானே... வேகமா ஓடிரும்... அப்புறம் அப்பத்தா உங்கிட்ட வந்திருவேனாம்... சரியா..." எனக் கொஞ்சினாள் லெட்சுமி.

"போ அப்பத்தா... நீ ஏன் அங்க போயி எதுக்கு ஆறு மாசம் இருக்கணும்... அவங்களைப் போய் பார்த்துட்டு வந்துட வேண்டியதுதானே... இங்க இருக்கதுல உனக்கென்ன பிரச்சினை...?"

"ஒரு பிரச்சினையும் இல்லடி... சரி வா... வெளியில போவோம்..." என பேத்தியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே நின்ற வேப்பமரத்தடிக்குக் கூட்டி வந்து "இது உங்க அப்பாக்களோட முடிவும்மா... அதுல அப்பத்தா என்ன செய்ய முடியும் சொல்லு..?" என்றபோது லெட்சுமிக்குக் கண் கலங்கியது.

"என்ன முடிவு இது..? பாசத்தைப் பங்கு போடுவாங்களா..?" பொட்டில் அடித்தாற்போல் கேட்டாள் ஸ்ரீதாரிணி.

"ம்... பங்குதான் போடுறாக... என்ன செய்ய... உங்கய்யா செத்த வீட்டுக்குள்ள ஒருத்தனே என்னை வச்சிக்க முடியாதுன்னு நீ ஆறு மாசம்... நான் ஆறு மாசம்ன்னு அங்காளி பங்காளிய வச்சிப் பேசி முடிச்சிட்டானுங்க... நான் என்ன சொல்ல முடியும்... உங்கய்யா இருக்கவரைக்கும் நான் மகாராணி... இப்ப உங்கப்பனுகளுக்கு தேவையில்லாத ஒரு பொருள்... அதான் நீ வச்சிக்க.... நீ வச்சிக்கன்னு மாறி மாறிக் கூறு போட்டு இந்த முடிவுக்கு வந்திருக்கானுக...." கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

"அழாதீங்க அப்பத்தா..." என்றபடி லெட்சுமியின் கண்ணைத் துடைத்து விட்டாள் ஸ்ரீதாரிணி.

"ம்... அழலடி... நீ நல்லாப் படிக்கணும்... நல்ல புள்ளைன்னு பேரெடுக்கணும் சரியா..?" என்றபடி அவளை அணைத்துக் கொண்டாள் லட்சுமி.

"ம்... நீங்க இங்க இல்லைன்னா எனக்கிட்ட ஸ்கூல்ல நடந்ததெல்லாம் யாரும் கேக்க மாட்டாங்க அப்பத்தா... நீங்க சொல்ற மாதிரி கதையெல்லாம் சொல்ல மாட்டாங்க... தலை குளிச்சாத் தொடச்சி விட மாட்டாங்க... எல்லாத்துக்கும் அம்மா என்னையத் திட்டிக்கிட்டே இருப்பாங்க... நீங்க இல்லைன்னா எனக்கு ரொம்பவே போரடிக்கும் அப்பத்தா..."

"பெரிய புள்ளையாயிட்டே... இனி உன்னோட வேலையை நீயே பாத்துக்க... எதுக்கு எல்லாத்துக்கும் அடுத்தவங்க வேணுன்னு நினைக்கிறே... தலைக்குக் குளிச்சதும் வெயில்ல நின்னு முடிய நல்லா விரிச்சிவிட்டியன்னா சட்டுன்னு காஞ்சிரும்... எனக்கு உங்க ஸ்கூலுக்கதையெல்லாம் போன்ல சொல்லு... அப்பத்தா கேட்டுக்கிறேன்..."

"ம்... போங்கப்பத்தா..." மீண்டும் அழுதாள்.

"ஏய் செல்லக்குட்டி... என்ன இது...? ச்சீய்ய்ய்ய்... அழக்கூடாது... இங்க பாரு நான் அழறேன்னா பாத்தியா... ஞாயமாப் பாத்தா உங்கப்பனுகளைப் பெத்ததுக்கு நாந்தான் அழணும்... பொத்திப் பொத்தி வளர்த்ததுக்கு இப்ப நாந்தான் வாய் விட்டு அழணும்... உங்கய்யா சாகும் முன்னே சாகாததுக்கு எந்தலையெழுத்தை நினச்சி நாந்தான் அழணும்... கஞ்சிக்காக இங்கயும் அங்கயும் மாறி மாறி திரியப் போற இந்த வாழ்க்கையை நினைச்சி நாந்தான் அழணும்... என்னோட விதியை நினைச்சி நாந்தான் அழணும்... என்னோட செல்லம் நீ அழக்கூடாதுடி... செல்லமுல்ல சிரி..."

"ம்... போ அப்பத்தா" எனக் கண்ணீரோடு புன்னகை காட்டிய ஸ்ரீதாரிணி, லட்சுமியைக் கட்டிக் கொண்டாள்.

"அம்மா... போலாமா... உன்னையக் கொண்டே விட்டுட்டு நான் உடனே திரும்பணும்... நாளைக்கு ஆபிஸ்க்குப் போகணும்.. லீவெல்லாம் எடுக்க முடியாது..."

"ம்... போவோம்..."

"செல்வத்தோட ஆட்டோவுக்குப் போன் பண்ணுறேன்... அதுல பஸ்ஸ்டாண்ட் போயிருவோம்... தண்ணிப் பாட்டில் எடுத்து வச்சிக்க.... நல்ல வெயில் வேற.... ஏதாவது சாப்பிடுறதுன்னா சாப்பிட்டுக்க... போற வழியில ஏதாவது உருப்படாத ரோட்டோர ஹோட்டல்ல நிப்பாட்டுவான்... அவன் ஒவ்வொண்ணும் யானை விலை... குதிரை விலை சொல்லுவான்... அங்க சாப்பிட்டா உனக்கு ஒத்துக்காது... ஒண்ணு இல்ல ரெண்டு பாட்டில் தண்ணி பிடிச்சிப் போட்டுக்க... போகயில பிஸ்கட் இல்லாட்டி பன் வேணுன்னா வாங்கி வச்சிக்கலாம்... சரியா..?"

"சரிப்பா..."

"அப்பா நானும் வரவா..?"

"இந்த வெயில்ல நீ எதுக்கு... அதுவும் பஸ்ல..."

"அப்பத்தா கூட..."

"அதெல்லாம் ஒண்ணும் போவேண்டாம்... எழுத வேண்டியதை எழுது... படிக்க வேண்டியதைப் படி..." கத்தினாள் ரமா.

தன் கணவனின் போட்டோ முன் நின்று வணங்கிய லட்சுமி, 'முகஞ்சுழிக்காம ஆயிரம் பேருக்குச் சாப்பாடு போடுவா எம் பொண்டாட்டின்னு பெருமை பேசுவீங்களே... இப்ப அடுத்த வேளை சோத்துக்கு என்னைய விரட்டி அடிக்கிறானுங்க... பாத்தியளா. நீ செத்து நானிருந்தா என்னைய கவனிக்க மாட்டானுங்க... ஆனா நான் செத்து நீயிருந்தா உன்னைய நான் வச்சிக்கிறேன்... நான் வச்சிக்கிறேன்னு ரெண்டு பேரும் சண்டை போடுவானுங்க... ஏன்னா அவனுக அம்மா பிள்ளைன்னு சொல்லுவீங்களே... இப்பப் பாருங்க... என்னைய வச்சிக்கிறதுக்கே சண்டை போடுறானுங்க... நல்லவேளை நீங்க இல்ல... இருந்திருந்தா மொத்தமா உடைஞ்சி போயிருப்பீங்க... காடாறு மாசம் வீடாறு மாசங்கிற மாதிரி இந்த உடம்புல உசுரு இருக்க வரைக்கும் இங்கயும் அங்கயுமா அலைய விடப் போறானுங்க... நீங்க இல்லாத இந்தப் பூமியில நான் அல்லாடப் போறேங்க... என்னைய இப்படி சாப்பாட்டுக்கு அலைய விடாம சீக்கிரம் கூட்டிக்கங்க...' என மனசுக்குள் கணவனிடம் சொல்லி, கண்ணீரை சேலைத் தலைப்பால் துடைத்து, பேத்திக்கு முத்தம் இட்டு... அவளிடம் முத்தம் வாங்கி... மருமகளிடம் தலையாட்டி மகனுடன் ஆட்டோவில் ஏறிய லட்சுமி பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்த பேத்தியின் முகத்தைப் பார்க்க முடியாமல் தவிர்த்தாள்.

பேருந்து நிலையத்தை நோக்கி ஆட்டோ போய்க் கொண்டிருந்தது, லட்சுமியின் மனசு அழுது கொண்டிருந்தது.

****

வீட்டில்-

"அப்பா... இனி ஆறு மாசத்துக்குப் பிரச்சினையில்லை..." சத்தமாகச் சொல்லியபடி சோபாவில் அமர்ந்தாள் ரமா.

"ஆமாம்மா... அப்பத்தாவால என்ன பிரச்சினை வந்துச்சு... எல்லா வேலையையும் அதுதானே இழுத்துப் போட்டுப் பாத்துச்சு... எதுக்குச் சித்தப்பாவோட இந்த டீலுக்கு ஒத்துக்கிட்டீங்க... அப்பத்தா இங்க இருந்தா என்னாயிறப் போகுது... அதுசரி அப்பத்தாவுக்கு ரெண்டு பிள்ளைங்க... இங்கேயும் அங்கேயுமாவாச்சும் வச்சிக்கிறேன்னு பேசியிருக்கீங்க... உங்களுக்கு நான் மட்டும்தானே இருக்கேன்... என்னையக் கட்டிக் கொடுத்துட்டு யார் கூடப் போயி வயசான காலத்துல தங்குவீங்க...." எனக் கேட்டுவிட்டு அம்மாவின் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்தாள் ஸ்ரீதாரிணி, ரமா பதில் பேசாமல் விக்கித்துப் போய் அமர்ந்திருந்தாள்.

****

அதே நேரம் சீனு வீட்டில்-

"இன்னைக்கு உங்கம்மாவை இங்க கூட்டிக்கிட்டு வாறேன்னு உங்கண்ணன் போன் பண்ணினாருல்ல... கிளம்பிட்டு போன் பண்ணுனாரா..? இனி ஆறு மாசத்துக்கு நாம நல்லது கெட்டது எதுக்கும் போக முடியாது. எங்கம்மா வீட்டுல போயி ரெண்டு நாளைக்கித் தங்கலாம்ன்னாலும் இனி முடியாது... கஷ்டம்... சனியன்..." எனச் சொன்ன மனைவியை ஒன்றும் சொல்லாது 'கிளம்பிட்டுப் பண்ணுவாரு... நான் போன் பண்ணிக் கேக்கலை... நாம என்ன செய்றது... ஆறு மாசம் அங்க... ஆறு மாசம் இங்கன்னு எல்லாரும் சேர்ந்துதானே முடிவு பண்ணியிருக்கோம்... எத்தனை வருசத்துக்கு இந்தத் தொல்லையோ யாரு கண்டா..." என்றபடி வெளியில் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் சீனு.

இவர்கள் பேசுவதைப் பார்த்த அவர்களின் பத்து வயதுப் பையன் திவாகர், "நான்லாம் பெரியவனாயி... கல்யாணம் பண்ணிட்டா... உங்களை அனாதை இல்லத்துல விட்டுருவேன்... அப்பத்தாவை மாதிரி மாத்தி மாத்தி வச்சிக்க எனக்கு யாரிருக்கா...?" என்றான் டிவி பார்த்தபடி...

பேருந்து மதுரை நோக்கி விரைந்து கொண்டிருந்தது...

லெட்சுமிக்குத் தன் மகன்கள் வருடக் கணக்கில் பால் குடித்த மார்பகத்தில் வலியெடுக்க ஆரம்பித்தது. நெஞ்சைத் தடவியபடி பேருந்தின் முன்பக்கம் பார்த்தாள், அங்கே எழுதியிருந்த 'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்...' என்ற குறள் ஆங்காங்கே அழிந்திருந்தது.

-'பரிவை' சே.குமார்.

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...