அவள்

vishnuagri19
பெண்மையக் கதைகள்
5 out of 5 (7 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

மற்றவர்களைப் போல சுதந்திரமாக சுற்றி திரிய முடியவில்லை என்று பலமுறை அவள் நினைத்ததுண்டு. முகநூலிலோ, சமூக வலைத்தளங்களிலோ வரும் நகைச்சுவை அவளுக்கு இப்போதெல்லாம் சுவையை கொடுப்பதில்லை.


பறவையாய் நான்கு திசைகளிலும் சுற்றி திரிய வேண்டும் என்று நினைத்த அந்த மனதுக்கு கிடைத்தது என்னவோ நாலு சுவர் தான். அது தான் அவள் உலகம். அதைத் தாண்டி வெளியில் சென்று வீடு திரும்புகையில் ஒவ்வொரு முறையும் நரகத்தைக் கடந்து சொர்க்கவாசலை அடைவது போல, வீட்டு வாசலை அடைவாள்.


"அவ எதுக்குகாக யாருக்கு பாரமா இன்னும் இந்த ஒலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கா. எங்காச்சு போய் தொலைய வேண்டி தானே?" என்று ஒவ்வொரு நாளும் அவள் அம்மாவே அவளை கரித்துக்கொட்டுவதைப் பொறுக்காமல், தனியே கந்துவட்டிக்கு கடனை வாங்கி தன்னுடைய குழந்தையுடன் வேறொரு ஊரில் இடுகாட்டு தெருவிலுள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வந்து சேர்ந்தாள்.


அந்த ஊரில் உள்ள ஒவ்வொருவரும் இறந்தபின் இவள் வீட்டைத் தாண்டி தான் சுடுகாட்டிற்கு செல்ல வேண்டும். நரகத்திற்கு போகும் முன் சொர்கத்தை தாண்டி தான் போவார்கள் என்று சிறு வயதில் பாட்டி கூறியது நினைவுக்கு வருகிறது. அந்த வீட்டின் நிலமையினையும், அமைவிடத்தையும் பார்த்து ஒருபோதும் சொர்க்கம் என்று சொல்ல முடியாது. நரகமென்று கூட சொல்ல முடியாத அளவிற்கு தான் இருந்தது அவள் குடியிருந்த வீடு.


காலை எழுந்தால் சுப்ரபாதம் பாடும் அவள் வீட்டில் இப்போதெல்லாம் காலையில் எழுந்தாலே கொட்டு மேள சத்தம் தான் கேட்கிறது. வாரம் ஒரு முறை தவறாமல் அந்த சத்தம் கேட்கும் போதெல்லாம், தவறாது கதவை அடைத்து, தவறுதலாக குழந்தையின் காதையும் அடைப்பாள், அவளுக்கு காது கேட்காது என்பதை மறந்து.


9 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டும். தவறினால் சம்பளத்தில் பிடித்தம் எல்லாம் இல்லை, ஒரேடியாக ஆளையே மாற்றி விடுவார்கள். அருகிலிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் குழந்தைகளின் டிபன் பாக்ஸை கழுவுவது, எல்லா ஆசிரியர்களுக்கும் டீ வைத்துக் கொடுப்பது, பள்ளி வாகனங்களை சுத்தம் செய்வது, சில நேரங்களில் 100 ரூபாய் அதிகம் வாங்கிக்கொண்டு கழிவறைகளைக் கூட சுத்தம் செய்வது கூட நடக்கும். இதெல்லாமே வெளியில் தெரியும் வேலைகள். இது தவிர, அவர்கள் என்ன வேலை சொன்னாலும் செய்ய வேண்டும் என்று ஒரு எழுதப்படாத சட்டமும் உள்ளது. அவளைப் பொருத்தவரை வேலை செய்தால் வாடகை கொடுப்பதற்காகவாது பணம் கிடைக்கும். அங்கு வேலைப் பார்ப்பவர்கள் யாருக்குமே தெரியாது, இவள் முதுகலைப் பட்டம் படித்தவள் என்று. அந்த ஊரைப் பொருத்தவரை இவள் எங்கிருந்தோ வீட்டை விட்டு ஓடிவந்து பஞ்சம் பிழைக்க வந்தவள் தான்.


26 வயதுள்ள இவளிடம் ஒரு சில சமயம் அப்பள்ளியிலுள்ள ஆசிரியர்களே கூட தவறாக நடக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் இவள் சன்மானம் போனாலும் இந்த விஷயத்தில் தன்மானம் போய்விடக்கூடாது என்று உறுதியாக இருந்தாள். ஒருநாள் பள்ளியில் வேலை முடிய இரவு 8 மணி ஆனது. பள்ளி தலைமையாசிரியர் இவளிடம் தவறாக நடக்க முயற்ச்சிக்கவே, இவள் அங்கிருந்து தப்பி ஓடி வீட்டிற்கு வந்தடைந்தாள். அடுத்த நாள் ஆசிரியருக்கு பதில் இவள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டாள்.


இப்போது வீட்டில் தன் குழந்தையுடன் அடுத்து என்ன என்று செய்வதறியாமல் ஒரு சுழலில் மாட்டிக்கொண்ட சிறு மரத்துண்டு போல விதியிடம் மாட்டி சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறாள். இவள் யாரென்று பார்ப்ப்பதற்கு முன் இவளின் குழந்தையைப் பற்றி இங்கு தெரிந்துக்கொள்வது அவசியமாகிறது.


பிறக்கும் போதே காது மற்றும் வாய் இரண்டுமே செயலற்று போயிருந்தது. முதல் தாரம் இறந்த பின்பு இவளுக்கு அவனோடு கலியாணம் முடித்து வைத்தார்கள். ஆனால் இவளுக்கு தான், தான் இரண்டாம் தாரம் என்றும் தெரியாது, அவனுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பதும் தெரியாது. வேளாண்மைப் படிப்பில் டெல்லியில் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் சென்றவளுக்கு வீட்டிற்கு வந்தவுடன் திருமணம் நிச்சயமானது. அதனால், இந்த திருமணத்திலேயே உடன்பாடு இல்லாதவளாக தான் இருந்து வந்தாள்.


என்னென்னவோ அவளிடம் உண்மையை மறைத்து அவனிடம் அவள் கழுத்தை நீட்ட வைத்துவிட்டார்கள். அவ்வளவு தான் ஒரு வேலை முடிந்தது என்று அத்துடன் அத்தும்விட்டார்கள் அவள் வீட்டில். கல்யாணம் ஆனவுடன் கோவிலைத் தவிர எந்தவொரு இடத்திற்கும் அவனும் அவளைக் கூட்டிச்செல்லவில்லை. அவளும் அவனிடம் எதிர்பார்க்கவில்லை. பிறந்த வீட்டிற்கு கூட குழந்தை பிறந்தவுடன் ஒரு தடவைக்கூட செல்லவில்லை. அவர்களும் பார்க்க வரவில்லை.


தினம் தினம் வீட்டிற்கு வந்து தன்னுடைய மூத்த மகளிடம் மட்டும் பாசத்தை பொழிவது, மனைவியிடம் கோவத்தைக் காட்டுவது என்பதையே வாடிக்கையாக வைத்திருந்தான் அவள் கணவன். அவன் தினமும் குடித்து வருவதால், ஒரு கட்டத்தில் வீடு அடுப்பெரிவதற்கு கூட நாதியற்று போனது. வீட்டில் அவளும் அவள் குழந்தையும் பட்டினி கிடந்தாலும், தன் மூத்த மகளுக்கு மட்டும் ரொட்டி வாங்கி வந்து கொடுப்பான்.


ஒருநாள் ஒரு தகவல்.

"உம் புருசன் குடிச்சுபுட்டு லாரி மேல வண்டிய விட்டான். ஆஸபத்திரியில சாக கிடக்கிறான். சீக்கிரம் வா" என்று.


இவள் சென்று பார்ப்பதற்குள், அவன் இவளை விட்டு சென்று விட்டான்.


அவன் தம்பிகள் வந்து இறுதி சடங்கினை முடித்து வைத்தார்கள். கூடவே அவளுடனான உறவையும் முடித்து வைத்தார்கள். அவனது மூத்த மகளையும் அழைத்துச் சென்று, சொத்தையும் எடுத்துக்கொண்டார்கள்.


ஆதரவின்றி தவித்த இவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதலான தன் குழந்தையுடன் தன் தாய் வீட்டிற்கு சென்றாள். அங்கேயும் இவள் குழந்தையை குத்திக்காட்டி இவளை ஒது்ககி வைத்தனர். கணவன் செய்யும் கொடுமைகளை கூட பொறுத்துக்கொள்ளலாம், ஆனால் அவள் தம்பியின் தம்பதியினர் கொடுக்கும் மனஉளைச்சல்களை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவளுக்கு தாயும் துணை வராது போனதால், பிறந்து வளர்ந்து வீட்டிலேயே நிராகரிக்கப்பட்டு நிராதரவாக இருந்தாள்.


இதற்கு மேல் வீட்டை விட்டல்ல, ஊரை விட்டே செல்வது தான் வழி என்று தாயிடம், 'நான் போகிறேன். வாழ!' என்று மூன்று வார்த்தையில் ஒரு கடிதம் எழுதிவிட்டு காலை மூன்று மணிக்கு கிளம்பி விட்டாள். இப்போது குழந்தையைப் பார்த்துக்கொண்டே நிகழ்ந்த சம்பவங்களை அசை போட்டுக்கொண்டிருக்கிறாள்.


"யாருமா வீட்ல?" என்று வெளியில் ஒரு சத்தம் கேட்டது.


"சொல்லுங்க!"


"டேஷன் வரைக்கும் வா. உன் மேல ஸ்கூல்ல இருந்து கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க"


"நான் எதும் பண்ணலையே!"


"அதெல்லாம் அங்க வந்து சொல்லு" என்று உடனடியாக அந்த அதிகாரி அவளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.


தன் மகளுடன் காவல் நிலைய இருக்கையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்துக் கொண்டிருந்தாள். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்கு வந்தவுடன், ஓங்கி இவள் தலையிலேயே ஒரு அடி அடித்தார்.


"எவ்ளோடி எடுத்த?" என்று தன்னுடைய கையால் அவளது ஜடையினை ஒரு இரும்பு பிடி பிடித்து கேட்டார்.


"நா எதும் எடுக்கல. என்ன விட்ருங்க சார்" என்று வழியால் அவள் கதற, உடனே அவள் மகள் காவல் நிலையத்திலிருந்து வேகமாக வெளியில் ஓடினாள்.


சிறிது நேரம் கழித்து, காவல் நிலையம் முழுவதும் ஒரு கூட்டம் கூடியது. அவள் வீட்டின் அருகிலிருக்கும் ஆண்கள் எல்லாரும் காவல் நிலையத்திற்கு வந்து விட்டார்கள்.


"சாமி, அந்த பொண்ணு எங்க ஏரியா பொண்ணு தான், ரொம்ப நாளா எங்ளுக்கு பழக்கம். எந்த தப்பும் பண்ணிருக்காது" என்று அதிகாரியிடம் பேசிப் பார்த்தனர்.


"ஓ! உங்க ஆளு தானா. இவ நேத்து நைட்டு கேஷ் கவுண்டர்ல இருந்து ரெண்டு லட்சம் திருடிருக்கா. அத சார் பாத்து கேக்க போனப்ப, அவர கீழ தள்ளி விட்டுட்டு ஓடிருக்கா. அந்த பணத்த நீ தரியா?" என்று அந்த காவல் அதிகாரி கேட்டார்.


பல நாட்களாக பறை அடித்து, சேர்த்து வைத்திருந்த பணத்தை ஆளுக்கு ஒரு பங்கு போட்டு, "இதுல அம்பதனாயிரம் இருக்கு சாமி. இத வச்சிக்கோங்க. திருப்பி மிச்ச பணத்த எப்படியாச்சு இன்னும் ஒரு மாசத்துல கொடுத்தறோம் சாமி" என்று கெஞ்சவே, எப்.ஐ.ஆர் கூட போடாத காவல் அதிகாரி, தலைமை ஆசிரியரிடம் சென்று தனியாக பேசினார்.

சிறிது நேரம் கழித்து வந்து,


"இதுல மாட்டுனா பத்து வருசம் வரைக்கும் உள்ள வைக்கலாம். ஏதோ போனா போவுதுனு சார் உங்களுக்கெல்லாம் பெரிய மனசு பண்ணி மூனு லட்சம் மட்டும் கேக்குறாரு. ரெண்டு நாள்ல கொடுத்துட்டு கூட்டிட்டு போங்க" என்றார்.


தன்மானத்தோடு தைரியத்தை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவளுக்கு அன்று நேர்மையோ பணமோ ஒரு பொருட்டாக தெரியவில்லை. தன் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு விஷயம் மட்டும்தான் மனதில் நிலையாக நின்றது.

அதனால், உடனே அவள் மன்றாடி ஒரு மாத காலம் அவகாசம் கேட்கவே, கடைசியாக இறங்கி வந்து அவளை விடுவித்தனர்.


"ஏய், ஒரு மாசத்துல பணம் வரல. நா வருவேன்" என்று காவல் அதிகாரி இறுதியாக எச்சரித்தார்.


சிறுது நாள் கழித்து, அந்த தலைமை ஆசிரியர் நன்னடத்தை சரியில்லாத காரணத்தால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவர் குறித்து மாலாஃபைடு நோட்டிஸூம் மற்ற பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அவரால் வாங்கிய பொருளுக்கு இ.எம்.ஐ கூட வங்கியில் செலுத்த முடியவில்லை. மூன்று வருடத்தில் வங்கி அவரது வீட்டை ஏலத்திற்கு விட முடிவு செய்தது.


இதனை தவிர்த்து இறுதி வாய்ப்பு கேட்க உடனடியாக வங்கிக்கு விரைந்தார் தலைமை ஆசிரியர்.


"மேம், ரெண்டு நாள் டைம் கொடுங்க மேம். புல் அமௌண்டும் செட்டில் பண்ணிடறேன் மேம்".


அந்த வங்கி அதிகாரி எந்தவித பதிலும் சொல்லாமல், அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.


ஒரு நிமிடம் மின்சாரம் பாய்ந்தவராய் தலைமை ஆசிரியர் திகைத்து நின்றார்.


"நீயா?"


"மேடம் நீங்களா?"

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...