Artham (அர்த்தம்)

bossmvforever
உண்மைக் கதைகள்
4.6 out of 5 (14 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

அர்த்தம்

M.வசந்தி

லண்டன் மேனர் பார்க்கில் உள்ள ஸ்ரீ மகாலெட்சுமி கோயில். “சிந்தூர அருண விக்ரஹாம்… லலிதா சகஸ்ர நாமம்” மனதில் சொல்லி முடித்து, கைகூப்பி, அந்த லஷ்மி நாராயணரையும் தாயாரையும் வணங்கி, மனதில் இருந்த இறுக்கம் தளர்ந்து, பிரகாரம் சுற்றுகையில்…

மீண்டும் மனதில் அதே கேள்வி. அவர் என்னிடம் எதையோ மறைக்கிறார். என்னிடம் சொல்ல என்ன தயக்கம். நான் என்ன வேற்று ஆளா? என்னவோ மழுப்புற மாதிரி இருக்கே? என்னவாக இருக்கும்?

அந்த பழைய இறுக்கம் மீண்டும்… அட என்னடா இது… என்று நினைத்துக் கொண்டே, கோயிலை விட்டு வெளியே வந்து, East Ham High Street-ல் நடக்கையில், எதிரே வருபவர்கள் யாரும் கண்ணுக்கு தெரியவில்லை. மூளையும் இயங்கவில்லை. மனம் முழுதும் அதே கேள்வி… அதே குழப்பம். என்ன நடந்து கொண்டிருக்கிறது. ஒருவரின் அருகாமை, எவ்வளவு சந்தோஷம் தரமுடியுமென்பதும், அருகில் இல்லாமல் மனதில் எழும் கேள்விகள் எவ்வளவு குழப்பம் ஏற்படுத்தும் என்பதையும் உணர முடிந்தது.

இதுவரை ஒரு அழைப்பு கூட இல்லை. வாட்சப் செய்தியும் வரவில்லை. சரி, நாமாவது மெசேஸ் அனுப்புவோம் என ரோட்டில் நடந்து கொண்டே, போனை எடுத்து மெசேஸ் அனுப்பிவிட்டு, நிமிர்கையில்…

எதிரில் ஆறடியில் கறுத்த நிறமுடன், அடர்ந்த சுருட்டை மயிருடன், தடித்த உதட்டில் ஏளன புன்னகையுடன், ஸ்கூட்டியில் வழிமறித்தபடி, நின்றான் கல்லூரி பருவ கறுப்பின பையன்.

யார் இவன்? ஒருவேளை போன் திருடனாக இருக்குமோ? நேற்றுதானே பக்கத்து ரோட்டில் போன் பறித்து ஓடியதாக சொன்னார்கள். அவன்தான் இவனா? கேள்விப்பட்ட கதைகள் அனைத்தும் கண்முன் விரிய, மனம் படபடத்தது. சட்டென விலகி நடந்தேன். திடீரென அவன் அருகில் வந்து கழுத்தில் கைவைத்து, தாலிசரடை இழுக்கவும், வாய் தானாக உதவி கேட்டு கத்த, கண் இமைக்கும் நேரத்தில் ரோட்டில் தள்ளிவிட்டான்.

விழுந்த வேகத்தில் நெற்றியில் காயம். மூக்கிலிருந்து ரத்தம் வழிய, தலை சுற்ற தொடங்க, கடவுளே… இப்ப மயக்கம் மட்டும் வந்திட கூடாது. அதிர்ச்சியிலிருந்து மீளாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கத்தினேன். “Please… Somebody Help…”

என் கழுத்தில் உள்ள தாலி சரடை அறுப்பதிலேயே குறியாக இருந்தான் அவன். 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் எனை நோக்கி வர, எனக்கு சிறிது தைரியம் வந்தது. எழுந்து ஓடினேன். தாலி சரடு பாதி அவன் கையில் இருக்க, மீதி என் தலைமுடியில் சிக்கிக் கொண்டிருந்தது. ரத்தம் வழிய எப்படியும் தப்பிவிட வேண்டுமென ஓட ஆரம்பித்த எனக்கு அருகில் ஒரு கார் வரவும் அதை நோக்கி இன்னும் தைரியமுடன் ஓடினேன்.

கார் வரவும், பின்சீட்டில் இருந்த பெண்ணை பார்த்ததும், உயிர் சுவாசம் கிடைக்கப் பெற்று, வறண்டு போன தொண்டையுடன், “Call the Police…” என கத்த,.. என்னை கண்டுகொள்ளாமல் கார் வேகமெடுத்து மறைந்தது.

அதிர்ச்சியுடன் எதிரே வந்த பெரியவரிடம், ஓட முயற்சிக்க, மீண்டும் அந்த திருடன் எதிரே வந்து நின்றான். Where is Half Chain? என கேட்டுவிட்டு, தலைமுடியில் சிக்கி இருந்த மீதி சரடையும் இழுத்து எடுத்துக் கொண்டு ஓடினான்.

வலியும் வேதனையும் கண்களில் நீராய் திரண்டு நிற்க, ஓரிருவர் ஓடிவந்தனர். நடந்தது என்னவென்று விசாரித்தனர்.

பல் உதட்டில் குத்தி, ரத்தம் வழிய, நா வறண்டு பேச முடியாவிட்டாலும், நடுக்கத்துடன் நடந்ததை சொன்னேன். கேட்டவர்கள் “உங்கள் போனிலிருந்தே போலீஸை அழையுங்கள். அதுதான் நல்லது” என்ற அறிவுரையுடன் தங்களின் சகமனித அக்கறையை நிறுத்திக் கொண்டார்கள்.

துக்கம் தாளவில்லை. இது என் நாடு இல்லை… இவர்கள் என் மனிதர்கள் இல்லை. குரல் நடுங்க மொபைலை எடுத்து, அவசர போலீசுக்கு அழைத்து, தகவல் சொன்னேன். போலீசும் ஆம்புலன்சும் வந்து கொண்டு இருக்கிறார்கள் என சொல்லவும், சுற்றி நின்றவர்கள் விலகத் தொடங்கினர்.

ரோட்டில் தனியாக நின்ற எனக்கு மீண்டும் திருடனை பற்றிய பயம். மீண்டும் வருவானா? மனசுக்குள் உதறல் எடுத்தது? இங்கே திருடர்கள் நகைக்காக கொலை செய்வது சர்வ சாதாரணம். கை, கால்களில் இருக்கும் மிச்ச நகைகளும் என் பயத்தை அதிகப்படுத்தியது. வந்த மயக்கத்தையும் பொருட்படுத்தாமல் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

எதிரே வேகமாக வந்த கார் என்னருகே நின்றது. பயத்துடன் பார்க்க, காரிலிருந்து என் மகன் இறங்கினான். என் கோலத்தை பார்த்து பதறினான். என் மகனின் வார்த்தைகள் மட்டுமே எனக்கு ஆறுதல் தந்தது. அப்படியே மயங்கி தரையில் அமர்ந்தேன்.

அப்போது, சைரன் ஓசையுடன் போலீஸ் கார் வந்தது, இரண்டு வெள்ளை இன போலீஸார் இறங்கினர். உலகம் முழுக்க போலீஸ் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்களோ. குற்றம் முடிந்தபின்தான் அந்த இடத்திற்கு வருகிறார்கள்.

அதில் ஒரு போலீஸ் நோட், பேனாவுடன் அருகில் வந்தார். நிதானமாக ATM மெஷினில் பணம் எடுப்பதுபோல விசாரணையை ஆரம்பித்தார். எனக்கு ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் இருந்தது.

லண்டனில் இன்ஜினியர் மாப்பிள்ளை என்றதும், வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. என் அறிவுக்கும் லண்டன்தான் சரியான இடம் என தீர்மானித்தனர். 18 வருடங்கள் லண்டன் பழகி போயிருந்தது. ஆனால், மனிதர்கள் இன்னமும் அந்நியமாகத்தான் இருந்தனர். தொழில் நுட்பம் வளர்ந்திருந்த அளவிற்கு மனிதம் இல்லை.

அரைமணி நேரம் விசாரணை. டெம்ப்லேட் கேள்விகள். என்ன நடந்தது? எங்கு நடந்தது? திருடனின் அடையாளம்… எத்தனை சவரன் சரடு? இப்படியாக… அத்தனை தகவலையும் போனில் முதலில் பேசிய பெண் போலீசிடமே சொல்லியாகி விட்டது. மெயின் ரோட்டில் இருக்கும் 360 டிகிரி கேமரா Footage பார்த்தாலே திருடியவனை பிடித்திருக்கலாம். தாலிசரடை பறிகொடுத்ததை விட, இவர்கள் கேள்விக்கு பதில் சொல்வதே என்னை மேலும் பலவீனமாக்கியது.

இப்போதெல்லாம் லண்டனில் நான் வாழுமிடத்தில், தமிழர்களின் தாலிசரடை அறுப்பது என்பது சர்வசாதாரண நிகழ்வாகி விட்டது. அதுவும் பெருமாள் கோவிலுக்கு வரும் பெண்களின் கழுத்தை கவனித்து, நிச்சயமாக தங்கத்தாலி செயினை அறுத்து, முடியவில்லை என்றால் அவர்களின் கழுத்தை அறுத்து, செயினை கொண்டு செல்வது, இங்கே அடிக்கடி நடக்கிறது. யாரை நொந்து கொள்வது? விதியை தவிர,

போலீஸ் தன் வேலையை முடித்த திருப்தியுடன், கம்ப்ளைண்ட் ரெபரென்ஸ் எண்ணை கொடுத்துவிட்டு, ஆம்புலன்ஸ் வர நேரமாகும். நீங்களே ஹாஸ்பிட்டல் போயிடுங்க என கூறி கிளம்பினர்.

அவசர சிகிச்சை பிரிவில், இரண்டு மணி நேரத்தில் முதலுதவி. சி.டி. ஸ்கேன் உட்பட அனைத்தும் முடிந்து டாக்டரின் அழைப்புக்காக காத்திருக்கையில் உச்சபட்ச அதிர்ச்சி.

எதிர்வரிசையில் கடைசி சேரில் அதே திருடன் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி, கையை பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். அதே ஏளனப் பார்வை. பயத்தில் எனக்கு இதயம் சில்லிட்டது. எப்படியாவது போலீசிடம் இதை தெரியப்படுத்த வேண்டும் என தோன்ற, அவன் என்னை பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு. சமயோஜிதமாக அவனை என் போனில் அவன் அறியா வண்ணம் போட்டோ எடுத்துக் கொண்டேன். செக்யூரிட்டியிடம் சென்றேன். போலீஸை கூப்பிடு என்றார். போலீஸை கூப்பிட்டேன். இதோ வருகிறேன் என்றார்கள். இந்த இடைவெளியில் அவன் அந்த இடத்தை விட்டும் போயிருந்தான்.

நான்கு மணி நேரம் காத்திருந்தும், போலீஸ் வராததால், வீட்டுக்கு சென்றேன். என்னதான் நடக்கிறது எனக்கு. அவரைப்பற்றிய கேள்விகள் மீண்டும் என்னை சூழத் தொடங்கின.

பையனிடம் கேட்டேன். “அப்பாவுக்கு போன் பண்ணுனியா?”

”அவர் மொபைல் நாட் ரீச்சபிள்ல இருக்கும்மா…” என்றான்.

ஏன்? என்னதான் ஆச்சு இவருக்கு? மனம் மீண்டும் கேள்விகளின் சுழலில் சிக்கிக் கொண்டது. இருட்டு குகைக்குள் பயணம் செய்வது போல, மீண்டும் மீண்டுமே… நேரம் கடந்தது. வெறுமையான விடை தெரியாத கேள்விகளால்.

மொபைல் ரிங் ஆக, திடுக்கிட்டு, சுயநினைவுக்கு வந்தேன். அவர் அசிஸ்டென்ட்டிடமிருந்து. மனம் திக் திக்கென்றது. போனை எடுத்தேன்.

“மேடம். நீங்க ஏன் இன்னும் வரல… காலையில உங்களுடன் பேசும் போதே, சாருக்கு லேசா நெஞ்சுவலி வந்துவிட்டது. அதான் உங்களிடம் சரியாக பேச முடியாமல் போனை வைத்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் Unconscious ஆகிவிட்டார். நீங்க Newham General Hospital வந்துடுங்க மேடம். உங்களுக்காக காத்திருக்கிறேன்,” என அவர் ஏதோ சொல்லிக்கொண்டே போக, நான் மயக்கத்திற்கு போனேன்.

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...