ஓர்மம்

அறிவியல் புனைவு
4.9 out of 5 (17 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

1.

நகரத்திற்கான பாதை நீண்டது. நானும் அப்பாவும் அப்படியான பாதையொன்றில் செல்லும் தொடர்வண்டியில் ஏறியிருந்தோம். உலகத்தின் நம்பிக்கையாக நகரம் காட்சியளிக்கிறது. எங்கள் ஊரின் எல்லா நிறுத்தங்களும் தாண்டும் வரை அப்பா எதுவும் பேசாமல் இருந்தார். தொடர்வண்டியின் சாளரக் கம்பிகளில் நிலை குத்தியிருந்த அவரின் கண்கள் மஞ்சள் நிறத்தில் மூழ்கியிருந்தது. பூனை மீசை அவருக்கு. கனிந்த மூக்கின் பக்கவாட்டில் சாய்ந்து இருந்த கண்ணாடியை சரிசெய்துக் கொண்டவாறே என்னைப் பார்த்தார். நான் கடந்து கொண்டிருக்கும் கருகிய நிலையில் பாதியாய் நிற்கும் கருவேலமரங்களையும் தூரத்துக் கண்மாயையும் பார்த்துக் கொண்டிருந்தேன். சுருங்கி சுருங்கி கோழியின் குடல் அளவுக்கு நீர்த்தடம் சுருங்கும் வரை பார்த்தேன். அப்பா விளித்தார்.


‘மகனே’


உணர்ச்சிப் பெருக்கில் தான் அப்பா அப்படி அழைப்பார். இரண்டு நிலைகள் உண்டு அப்பாவுக்கு. கொண்டாட்டமானது முதல் நிலை. தன்னோடு இருப்பவர்களையும் கொண்டாட்டத்திற்கு அழைத்துச் செல்லும் மொழியும் குரலும் அவருக்குண்டு. அத்தனை துள்ளலான பாசாங்கற்ற மனிதரை நீங்கள் வேறு எங்கும் சந்தித்துவிட முடியாது.

இரண்டாவது நிலை துக்கத்துக்கானது. அழுது புலம்பும் முகமெல்லாம் அப்பாவுக்கு எப்போதும் கிடையாது. அத்தனை மிடுக்கோடும் கர்வத்தோடும் துக்கத்தையே ‘ஆள் மாறி வந்துவிட்டோமோ’ எனச் சந்தேகிக்க செய்யும் தெளிவோடு இருப்பார். துக்கத்தைக் கண்டு அஞ்சுவதை அவர் ஒருபோதும் செய்ததாக நான் பார்த்ததே இல்லை.

இந்த இரண்டு நிலைகளிலும் ஒன்று மட்டும் மாறாது அவர் கையில் இருக்கும் மதுக் குவளை.


அப்பா அழைத்ததும் அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. .


“மகனே, நாளைக்கு நாம் சந்திக்கப் போகும் உலகம் உன்னுடைய பள்ளிப் படிப்பில் நீ அறியாத ஒன்றை உனக்கு சொல்லிக் கொடுக்கக் கூடியது. அதற்கு நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். உன் காதுகளை எப்போதும் திறந்து வைத்துக் கொள். எல்லாவற்றையும் கேட்கவும் புரிந்து கொள்ளவும், ஆராயவும் பழகிக் கொள். எனக்கு உன் மேல் நிறைய நம்பிக்கை இருக்கிறது. அது என் மீதான நம்பிக்கையும் கூட.”


அப்போதைக்கு தலையசைப்பதைத் தவிர்த்து நான் செய்யக் கூடியதும் எதுவும் இல்லை எனத் தோன்றியது. தலையசைத்தேன்.


அப்பா மதுக் குவளை காலியான பிறகு தன் படுக்கையில் சாய்ந்துக் கொண்டார். அவரது தலை என் பக்கம் திரும்பி ஒரு அர்த்தம் நிறைந்த புன்னகையையும் வெறுமையான பார்வையையும் வீசி விட்டு திரும்பிக் கொண்டது. இரண்டையும் ஒரே நேரத்தில் என்னால் பார்க்க முடிந்ததா, அல்லது அவ்வாறாக நான் கற்பனை செய்துக் கொண்டேனா என இப்போதும் எனக்குச் சந்தேகம் இருக்கிறது.


இரவைக் கிழித்தவாறு தொடர்வண்டி முன்னேறிக் கொண்டிருந்தது.


2.


நகரத்தில் நுழையும் தொடர்வண்டி ஒளியையும் இரைச்சலையும் சேர்த்தே கூட்டிக் கொண்டுப் போகிறது. கண் விழித்ததும் அப்பாவின் படுக்கை வெற்றிடமாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. அப்பா அதிகாலையில் எழக் கூடியவர். கழிவறை பக்கம் சென்று பார்த்தேன். எத்தனை மாறினாலும் தொடர்வண்டியின் கழிப்பிடத்தில் மட்டும் உலகம் பாழடைந்தே உறங்கிக் கிடக்கிறது போல.


எங்குச் சென்றார் இவர். அப்பா அந்தப் பெட்டியில் எங்கும் இல்லை என அறிவதற்கு எனக்கு நீண்ட நேரம் தேவைப்படவில்லை.


நகரத்தின் மையத்தை நோக்கிச் செல்லும் அந்தத் தொடர்வண்டியின் மூச்சு அடங்குவதற்கு இன்னும் பத்து நிமிடங்களுக்கு குறைவாகவே உள்ளது.


அப்பாவைத் தொலைத்த கைகளோடும் கண்ணீர் வழியும் முகத்தோடும் ராட்சச இயந்திரத்துக்குள் அநாதையாக நின்றிருந்தேன்.


3.


“உலகத்தின் இன்றைய உன்னத நிலை என்பது இவர் இல்லையெனில் சாத்தியப்பட்டு இருக்காது. மனித வரலாற்றிலேயே இந்த நிறுவனம் செய்திருப்பது மிகப் பெரிய சாதனை. மனிதர்களின் நினைவுத் திறனைச் சேமிப்பதன் வழியாக அவர்களை என்றென்றைக்கும் உயிரோடு வாழச் செய்ய முடியும் என்பது எத்தனை தூரம் நம்பக் கூடியதாக பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கும் எனத் தெரியவில்லை. என்கிட்ட அப்போது சொல்லியிருந்தால் நிச்சயம் நான் சிரித்திருப்பேன். அதைச் சாதித்த குழுவில் இருந்தவரும் இன்றைக்கு அந்நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவரும் ஆன திரு…..”


‘தம்பி’


முதுகிற்குப் பின் இருந்து குரல் கேட்கவும் தொலைகாட்சியில் இருந்து பார்வையைத் திருப்பி பின் நிற்பவரைப் பார்த்தேன். முன்பும் அவரைப் பார்த்திருக்கிறேன். எங்கு என்பது தான் நினைவில்லை.


“தம்பி அப்பா எங்க? நீ மட்டும் தனியா நிற்கிற… “


“அப்பாவைத் தான் அங்கிள் தேடிட்டு இருக்கேன். என்னை உங்களுக்குத் தெரியுமா”


“தெரியும், வா. இங்க இருக்க எல்லோருக்கும் உன்னையும் உங்க அப்பாவையும் தெரியும். முகத்தை மறைச்சுக்கோ” என்னை அவரது நீண்ட சால்வையில் ஒடுக்கி அழைத்துச் சென்றார்.

இன்னமும் அந்தத் தொலைக்காட்சியில் கனைத்துக் கொண்டே இருந்தது இயந்திரக் குரல். அதற்கு ஆர்ப்பரிக்கும் கூட்டமும் ரயில் நிலையம் முழுக்க நிரம்பியிருந்தனர்.


4.


அப்பா தொலைந்து நாற்பத்தெட்டு மணி நேரம் தாண்டி இருக்கும். அப்பா தொலைந்தா போனார். வேறு எந்த வார்த்தையில் சொல்வது. இந்த அறையில் இறுக்கமான கண்களைக் கொண்ட மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள். கண்களை வைத்து மட்டுமே அடையாளம் பார்க்க இயலும். அவர்களின் முக்கால் பகுதி முகம் துணியால் கட்டப்பட்டிருந்தது.


கண்களை அடையாளம் வைப்பது முதலில் எனக்குச் சிக்கலாக இருந்தது. குரலைப் பெரிதாக யாரும் பயன்படுத்துவதில்லை. அப்பா தொடர்வண்டியில் வரும் போது இவர்களைப் பற்றியா பேசிக் கொண்டு வந்தார்.


இங்கு தான் காதுகளைத் திறக்க வேண்டிய அவசியமே இல்லையே. எல்லோரும் கண்களால் மட்டுமே பேசிக் கொள்கின்றனர். நாடகத்தைப் போல. நடிகர்களைப் போல. அவர்கள் வார்த்தைகளைச் சிக்கனமாக உபயோகிக்கின்றனர்.


சாம்பல் புறாவின் நிறத்தையொத்த கண்களோடு ஒரு பெண் இங்கு இருக்கிறாள். எனக்கான காலை உணவை எப்போதும் அவள் தான் கொண்டு வருகிறாள். நான் நினைப்பதைச் சத்தம் போட்டு கேட்கவில்லையெனில் எனக்கு தலையே வெடித்துவிடும் போல இருக்கிறது.


சாப்பிடு என்பதை கண்களால் தட்டைப் பார்த்தவாறு சொன்னாள். முடியாது என்பதை அவள் கண்களை நான் பார்க்காமலே இருந்தது காட்டிக் கொடுத்திருக்கும். என்னவென சந்தேகம் தொக்கி நிற்கும் பார்வைக்குப் பதிலாக, நான் கத்தினேன்.


“எனக்குப் பதில் தெரியாம நான் சாப்பிட மாட்டேன். இங்க என்ன நடக்குது. அப்பா எங்க.. நீங்களா யாரு”


தன் கையைச் சுற்றியிருந்த துணியை அவிழ்த்து என் வாயில் கட்டினாள். நெருக்கத்தில் அவள் வியர்வை மணமும் கூடவே கசிந்தது.


5.


‘மனிதர்கள் ஆக்கத் திறனை இழந்துவிட்டார்கள். அவர்கள் தங்களைப் பரிணமித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. தேங்கி போன மூளையோடு செய்வதற்கு எதுவும் இல்லாத நிலையில், பொய்யாக கட்டமைக்கப்படும் உலகத்தில் தங்கள் நினைவுகளை மட்டுமே கொண்டு பல ஆண்டுகள் வரை வாழ முடியும் என நம்பிக் கொண்டிருக்கின்றனர். அது சாத்தியமே இல்லை. இன்னும் கொஞ்ச வருடத்தில் மக்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ள விண்ணப்பங்களைச் சுமந்து கொண்டு திரிவார்கள். நிறுவனமோ அரசோ அதைப் பொருட்படுத்தாத போது கட்டுப்பாடுகளைக் கடந்து இறந்து போவார்கள். மனித சமுதாயம் அத்தோடு ஒழிந்து போகும்’


அப்பாவா இதை எழுதியது. அடர் புருவத்திற்கு கீழே சம்பந்தமே இல்லாத குழந்தை கண்களைக் கொண்டிருந்தவள் இதை என்னிடம் படிக்கக் கொடுத்தாள்.


அப்பா எதற்காக இத்தனை தூரம் என்னையும் அழைத்து வந்தார். என்னிடம் நாம் தொலைத்த எல்லாவற்றையும் மீட்கப் போகிறோம். இது தான் தனது கடைசி நம்பிக்கை என நட்சத்திரங்கள் ஒளிரும் இரவில் பேசியது இதைப் பற்றி தானா.


6.


அவர்கள் தங்களை அப்பாவின் நண்பர்கள் என அறிமுகம் செய்துக் கொண்டனர். அப்பாவிற்கு அத்தனை நண்பர்கள் இருப்பது அப்போது வரைக்கும் எனக்குத் தெரியாது. அப்பா தொடர்வண்டியில் இருந்து குதித்ததாக நிலையக் காப்பாளன் சொன்னது நம்பும் படியாக இல்லை. அப்படியே குதித்திருந்தாலும் எங்கே அவர். சுற்றிலும் நகரும் இத்தனை குழப்பங்களுக்கும் நான் என்ன பெயர் வைப்பது.


7.


“அப்பா ஏன் ப்பா உங்களுக்கு மது மேல இவ்வளவு காதல்”


“நீ சின்ன வயசாயிருக்கும் போது உன்னைக் கடலுக்குக் கூட்டிட்டுப் போவேன் நியாபகமிருக்கா”


“ஆமா”


“அங்க நிறைய அலைகள் வரும் மகனே. அது கரையோர மணல் மேலயும் பாறைகள் மேலயும் மோதி திரும்பிப் போகும். அது திரும்பும் போது என்னவெல்லாம் இருக்குமோ எல்லாவற்றையும் இழுத்திட்டுப் போகும். இது ஒரு தொடர் இயக்கம். அப்படி என் தலைக்குள்ள தொடர்ந்து அலையடிக்கிற நினைவுகளை ஒருபோதும் என்னால விட முடியறதே இல்லை. அதற்காகவே என்னை நானே மூழ்கடிக்க இந்த மது தேவையாக இருக்குது”


அப்பாவுக்கு நினைவுகளே சாபம்.


8.


நான்கு நாட்கள் கடந்த போது அப்பாவின் இருப்பிடம் உணரப்பட்டதாக செயலி பதில் கொடுத்தது. அப்பாவைத் தேடி நாங்கள் எல்லோரும் புறப்பட்டோம். நாங்கள் என்பது மூவர். தொடர்வண்டி நிலையத்தில் முதல்முறையாக என்னைப் பார்த்தவரும் சாம்பல் நிற கண்கள் கொண்டவளும் நானும் அந்த இடத்திற்கு பயணமானோம். வழியெங்கும் எங்கள் ஊரைப் போலவே வெறும் கருகிய படிமங்களையும் புகையையும் அமிலத்தையும் தவிர நாங்கள் வேறு எதையும் பார்க்கவில்லை.


9.


மழை விடுவதைப் போல இல்லை. அப்பாவின் மஞ்சள் நிறக் கண்கள் இப்போது சிவந்திருந்தது. மிகவும் சுருங்கிப் போயிருந்தார். அடர் இருட்டு விலகாத தளத்தில் கலைக்கப்பட்ட மணல் வீட்டைப் போல சாய்ந்துக் கிடந்தார். தனித்திருந்த அவர் இத்தனை தூரம் எப்படி வந்தார். எங்கிருந்தார். தெரியவில்லை.


என்னைப் பார்த்ததும் நம்பிக்கை துளிர்த்த அவர் கண்களில் புன்னகையும் தெரிந்தது. இரண்டுமே கண்களில் தான் தெரிந்தது.


என்னை அழைத்து வந்தவர் குவளையில் அப்பாவுக்கான மருந்தை நிரப்பி அவருக்குப் புகட்டினார். நடுங்கும் கைகளால் அப்பா அதை வாங்கிக் கொண்டார்.


“எங்க அப்பா போயிருந்தீங்க”


“அவரால் பேச முடியும்னு எனக்குத் தோணலை” அந்த நபர் சொல்லிய போது அப்பா தன் குவளையை வெறித்து பார்த்து கொண்டிருந்தார்.


அப்பாவின் பார்வைக்கு இப்போது எனக்கு விளக்கம் தேவைப்படவில்லை.


10.


“அப்பா நினைவுகள் சந்தோசமானவை தானே”


அப்பா, கடற்கரை மணலைக் கைகளில் அள்ளி, விரல்களில் பற்றியவாறு உள்ளங்கை இடுக்கில் கொஞ்சம் கொஞ்சமாக நழுவவிட்டுக் கொண்டிருந்தார்.


“எல்லா நினைவுகளும் சந்தோசம் தருவதில்லை”


“நினைவுகள் கரையக் கூடியவை. அதை இறுக்கமாக பற்றிக்கொண்டிருக்க எந்த அவசியமும் இல்லை. எதுவும் அதன் இயல்பு திரியும் போது நஞ்சு தான் மகனே”


“நஞ்சுன்னா நம்மைக் கொன்றுரும்ல”


அப்பா தலையசைத்தார்.


“அப்போ இந்த உலகம் சந்தோசமான இடமா மாறாதா”


“அந்த நட்சத்திரம் தான் நமக்கான நம்பிக்கை. அதன் வெளிச்சம் ஒரு நாள் நமக்கும் கிட்டும்"


தூரத்தில் நகரம் இருளத் தொடங்கியது. அப்பாவின் குவளை காலியாக இருந்தது.

*********************************************************************************************************

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...