அச்சடித்த புத்தகவடிவில், எழுத்தாளர் சாந்திபிகா (சி.வி. ராஜன்) கடந்த 50 ஆண்டுகளில் எழுதிப் பிரசுரம் கண்ட 19 சிறுகதைகளும் 3 குறு நாவல்களும் கொண்ட மொத்தத் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. இதிலுள்ள பெரும்பான்மையான சிறுகதைகள் 1976-2001 கால கட்டத்தில் பிரபல தமிழ் பத்திரிகைகளான ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், மங்கையர் மலர், சாவி இவற்றில் பிரசுரமானவை. அப்போது அப்பத்திரிகைகளில் வந்திருந்த படங்களையும் இதில் காணலாம்.
இதே சிறுகதைகளின் தொகுப்பும், மற்ற குறுநாவல்களும் தனித் தனி மின் நூல்களாக ஏற்கனவே வெவ்வேறு தலைப்புகளில் அமேஸான் கிண்டிலில் பிரசுரமாகியிருக்கின்றன.
ஒரு எழுத்தாளரின் ஐம்பதாண்டு எழுத்து அனுபவத்தின் பரிணாம வளர்ச்சியை நீங்கள் இந்த நூல் வழி ரசித்து அனுபவிக்க இயலும்.
இதிலுள்ள பெரும்பான்மையான கதைகளும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல், ஒழுக்க, தார்மிக நெறிகள், கட்டுப்பாடுகள், சுகதுக்கங்கள், பலங்கள், பலவீனங்கள், சபலங்கள் இவற்றைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளன.
சாந்தீபிகாவின் ஆதரிச எழுத்தாளரான லா.ச.ராவின் தாக்கம் இந்தக் கதைகளில் ஓரளவு காணக்கிடைக்கும் -- லா ச ராவின் எழுத்தின் பாணியும், வீரியமும், வார்த்தை ஜாலங்களும் வேறுவிதம் என்றாலும்.
இத்தொகுப்பில் உள்ள கதைகளில் ...
கிராமத்து வைதிக சாஸ்திரிகளின் கதை முதல், கம்பியூட்டர் ஸாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் இளைஞன் கதை வரை உண்டு. உலகைத் துறந்த சன்னியாசியின் கதை முதல், தீவிரமான காதல் கதை வரை உண்டு. நக்கலும் நகைச்சுவையும் கொண்ட கதைகளிலிருந்து, ஆழமாய் ஆன்மிகத்தைத் தொடும் கதைகளும், தாம்பத்திய உளவியலை அலசும் கதைகளும் உண்டு.
இக்கதைகள் எல்லாமே ஸ்டோரிடெல் நிறுவனத்தாரால் ஒலி நூல்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன.