தந்நலம் கருதாமல் பிறர் நலம் கருதி அர்ப்பணிப்பு உணர்வோடு பொது மக்களின் தேவை அறிந்து செய்யும் புனிதமான தொழிலே தாதியர் தொழிலாகும். மருத்துவர்களுக்கு வலது கையாக இருந்து அவர்களின் சிகிச்சைப் பணிகளில் உதவி செய்பவர்களாகவும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பாதுகாவலராகவும் தாதியர்கள் (Nurse) இருக்கின்றனர். சிகிச்சைக்கு வரும் நோயாளிக்கு அன்பும் அரவணைப்பும் கொடுத்து அவர்கள் தேவையை நிறைவேற்றுபவர்களே தாதியர் ஆவர். சிகிச்சை என்பது ஒரு பகுதி மட்டுமே, அதன் மறுபகுதி அவர்களுக்கு மன ஆறுதலான வார்த்தைகளைச் சொல்வதுடன் அவர்களோடு நட்போடு பழகுவது. அன்னைக்கு அடுத்தபடியாக அன்பாகவும் அரவணைப்பாகவும் அருவருப்பு இன்றியும் நம்மைப் பார்த்துக் கொள்ளும் இன்னோர் உயிர் – தாதி.
மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, சமுதாய அவலங்களை வெறுத்து எதிலும் தன்னை முன்னிலைப்படுத்தாது, வறியவர்கள் மீதும், அடித்தட்டு மக்கள் மீதும் அன்பை பொழிந்து, ஆண்டவன் தனக்கு இட்ட கட்டளையாக தாதியத் தொழிலை தேர்ந்தெடுத்துக்கொண்டு, தாதியர்களுக்கென சமுதாயத்தில் மதிப்பை உருவாக்கியவர்தான் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
நாடு முழுவதும் இன்று கொரோனா நோய்த் தொற்றின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், முகக்கவசம் அணிவதும், கைகளை சுத்தமாகக் கழுவுவதும் கொரோனா தொற்றை தடுத்து நிறுத்தும் என தினம் தினம் வலியுறுத்தி வரும் நிலையில் இதை நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னவர் புளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் என்பதை லண்டனிலுள்ள அவரது அருங்காட்சியகத்தில் உள்ள புகைப்படங்கள் பறைசாற்றுகின்றன. மனித குலத்துக்கு அவர் செய்த சேவைகளையெல்லாம் விவரிக்கிறது இந்நூல்.